இனிய ஜெயம்,
தஞ்சையில் இருந்து திரும்பியவுடன் முதலாவதாக செய்தது சீமான் மீட்டிங்குக்கு சென்றதுதான். உண்மையில் ஏழு கழுதை வயதாகியும் இன்னமும் நான் ஒரே ஒரு அரசியல் கூட்டத்தைக் கூட நேரில் பார்த்தது கிடையாது. அது எப்படித்தான் குதிர்ந்து வருகிறது என்று ஒரு முறை பார்க்கலாம் என முடிவெடுத்திருந்தேன்,
இரண்டாவதாக இன்றைய தமிழக அரசியல் சூழல். கடந்த கால் நூற்றாண்டாக இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக இதோ உதித்து விட்டேன் என யாராவது கிளம்பி வருவர். மக்கள் மாய்ந்து மாய்ந்து ஓட்டு போடுவார்கள். மூன்றே ஆண்டில் உதித்தவர் என்ன ஆனார் முகவரி எங்கே என்றே தெரியாது. இம்முறை செந்தமிழன் உதித்திருக்கிறார். கடலூரில்தான் களமாடுகிறார்.
ஒருபக்கம் அம்மா. மறுபக்கம் ஐயா. மூன்றாம் பக்கம் மக்கள் நலனுக்காவே இன்னுயிரையும் பொருட்படுத்தாது பொதுச் சேவை செய்துவரும் தலைவர்களின் மக்கள் நலக் கூட்டணி. கட்சிகளுக்கு வெளியில் இயங்கும் சிவில் மனநிலையில் இந்த மூன்று கட்சிகளுமே தற்சமயம் ஃபியூஸ் ஆனவை. இந்த இடைவெளியில் ‘அசால்டாக’ அடித்து ஆடத் துவங்கிவிட்டது நாம் தமிழர் கட்சி. அனைத்து தொகுதியிலும் வேட்பாளரை நிறுத்தும் கட்சிக்கே தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கும் [என நினைக்கிறேன்]. அதற்கான அசைவே ஒரு ’மாஸாக’ முன்னிருத்திவிட்டது நா தக.
அடுத்து கட்சியின் வேட்பாளர்கள் பலரும் படித்தவர்கள் என முன் வைக்கப் படுகிறார்கள். கறை படியாத கரங்களுக்கு சொந்தக்காரர்கள், [அதான் இன்னும் ஆட்சிக்கு வரலையே] உதிக்க வைக்கப்போகும் தமிழ்ப் பொன்னுலகுக்கு ஒரு ப்ரீ பிளான்ட் கையேடு ஒன்று தயாரித்து வைத்திருக்கிறார்கள் [ஜகன் மித்யை நாயகன் போல]. அக்கையேட்டை படித்த; யுவன் யுவதிகள் மக்கள் வசம் கொண்டு சேர்க்கிறார்கள். ’
கட்சித்தலைமை என நம் கவனம் குவியும் சீமான் துவங்கி, களப்பணியாக நம் முகத்துக்கு முன் நிற்கும் இந்த இளைய படை வரை; [அம்மாவிடமோ ஐயாவிடமோ கேப்டனிடமோ தெரியாத] நிச்சயம் ஒரு கவர்ச்சிகரமான கம்பீரம் துலங்குகிறது. இதற்கு மேல் சீமான் முன்னெடுக்கும் அறக் கொதிப்பு ஆவேச தாண்டவம். இவைகள் கூடி மெய்யாகவே நா த க அதற்குரிய கவனத்தை பெற்றுவருகிறது. ஆக புதிய வரலாறு படைக்க எழும் செந்தமிழன் முதன் முறையாக வாக்கு கேட்கும் இக் கூட்டத்தை கண்டே தீருவது என முடிவெடுத்திருந்தேன்.
சிகப்பு கம்பளம் போர்த்திய மேடை. பின்னால் சிவப்பு வண்ண டிஜிட்டல் பேனர். பேனரில் இடதுபுறம் கம்பீரமாக பிரபாகரன். வலதுபுறம் அதே உயர அகல கம்பீரத்தில் சீமான். மையத்தில் மஞ்சள் வண்ண எழுத்துக்கள். மைக் மேடை அருகே எரியும் பிரும்மாண்ட இரட்டை மெழுகுவர்த்தி [நா த க சின்னம்]. நான் சொல்றத நீ கேள் என்ற தோரணையில் இரும்புத்தனமான தோற்றம். கச்சிதமான ஒலி ஒளி அமைப்பு.
இரவு ஏழு மணிக்கு கூட்டம் துவங்கியது. பத்து மணி வரை தம் கட்ட வேண்டி, முன்னாள் இந்நாள் யார் யாரோக்கள் வரிசையாக எழுந்து வந்து மணிக் கணக்காக [சில மணித்துளிகளே ஒதுக்கி இருந்ததால் முக்கியமான சில விஷயங்களை மட்டும்] பேசி அமர்ந்தனர். அதில் ஒருவர் உங்கள்ள எவன்லாம் ஒரு அப்பனுக்குப் பொறந்துருக்கீங்களோ அவன்லாம் நிச்சயம் செந்தமிளனுக்குத்தான் ஓட்டுப் போடுவீங்க என்றார் [சிக்குனாண்டா சீனு].
எதிர்பார்த்த கூட்டம் கூடியதும் மெல்ல அரங்கு சூடு பிடித்தது. முதலில் திராவிடம் என்ற சொல்லின் வேர். அது எப்படி எதற்காக இங்கு வேரூன்றப் பட்டது அதன் பயனாக மழுங்கடிக்கப்பட்ட ”தமிழன்” என்ற இனம் மெல்ல மெல்ல சாகும் தமிழ்.. இவை குறித்து ஒருவர் அனைத்தும் உள்ளங்கை நெல்லிக்கனி போல தெற்றென விளங்கும் வண்ணம் புட்டு புட்டு வைத்தார்.
அடுத்தவர் விருமாண்டித் தேவரில் கண்டெடுத்த முப்பதாயிரம் வருட மரபணுவில் துவங்கி கடந்த கால வரலாற்றில் தமிழர்களின் பொற்காலம் குறித்து நுண் மான் நுழை புலத்துடன் நுழைந்து புறப்பட்டு ’இன்னைக்கி நாசாமா போய் நாறிக் கிடக்கோமே, ஏன்?’ என்று வினவி முடித்தார்.
மூன்றாமவர் முகமதியர். செந்தமிழனை பாசத்துடன் என் மருமகன் என்று விளித்து பேசத் துவங்கினார் முதல் வாக்கியமே ” நாங்க ஏதோ பிரச்சனைய கிளப்பி கவனத்த குவிக்க தனிநாடு கோரிக்கைய எடுக்கல. அதுக்கான தேவை நம்ப கண்ணு முன்னால இருக்கு. ஆனா பாருங்க இப்பக் கூட ஜனநாயக ரீதியான போக்குலதான் நாங்க உங்களைத் தேடி வந்துருக்கோம். . ” எனத் துவங்கி ஏதேதோ பேசினார்.
சரியாக அப்போது கூட்டத்திலிருந்து யாரோ யாரையோ வாழ்க என்று கூவ, அமர்ந்திருந்த செந்தமிழன் வலது கரத்தை முஷ்டிமடக்கி வானத்தில் குத்தினார். அவ்வளவுதான் மொத்தக் கூட்டமும் நாம் தமிழர் என கோரசாகக் கூவி அதே போல முஷ்டி மடக்கி வானத்தில் குத்தினர்,
அடுத்து செந்தமிழன் பேச எழுந்தார். முதலில் மொழியின் வீழ்ச்சி குறித்து பேசினார். பாரதிதாசனின் ரௌத்ரம் பொங்கும் தமிழ்க் கவிதைகளை உணர்ச்சிகரமாக பொழிந்தார். எனக்கே அடடா என் தமிழ் என் தமிழ் என பொங்கத் தோன்றியது. அடுத்து தமிழனின் வீரம் பக்கம் வந்தார்.
”ஆப்டி வெள்ளைக்காரன் நெஞ்சுல கை வெச்சி ஆப்டி ஒரு தள்ளு தள்ளிட்டு சொல்றான். நீ இந்த மண்ணை அடிமை செய்ய வந்த எதிரி. மரணத்தைக் கூட உன் கையால் எனக்களிக்க நான் அனுமதிக்க, மாட்டேன் [கரகோஷம் ஓய கால் மணி நேரம் பிடித்தது] சொல்லீட்டு அவனே தாங் கையால தூக்கு கயித்த மாட்டிக்கிறான். யாரு நம்ம பாட்டன் சின்ன மருது. ”
”எங்க இருந்து பட கொண்டு வந்தானோ, வெள்ளக்காரன அங்க வார அடிச்சிக்கொண்டு போய் விட்டா நம்ம ஆச்சி வேலு நாச்சி”
தொடர்ந்து வந்து பிரபாகரனை தொடும்போது கூட்டம் கை தட்டுவதை நிறுத்தவே இல்லை.
அடுத்து திராவிடத்தால் சீரழித்த தமிழ்நாட்டின் நிலைமைக்கு வந்தார். [காமராஜர் கூட தமிழனா இந்த தமிழ் நாட்ட ஆளல.. இந்தியனாத்தான் இந்த தமிழ் நாட்ட ஆண்டார்] தான் எடுத்திருக்கும் இந்த ஆயுதம் தமிழனின் சொத்து. இது எதற்கும் மண்டி இடாது. நான் என்ன ஆயுதத்தை எடுக்க வேண்டும் என என் எதிரிதான் தீர்மானிக்கிறான். என தொட்டு தொடர்ந்து மலையாலத்தானுக கன்னடக்காரம்மா தெலுங்கனுங்க என்று துவங்கி அனைவரையும் துவைத்து காயப் போட்டார். [பாவம் பெரியார் சாட பார்ப்பனம் மட்டுமே இருந்தது. சீமான் சூப்பர் மேன் அவருக்கு ஏகப்பட்ட எதிரிகள்].
அத்தனை எதிரிகளையும் சாய்க்க இந்த ஒரே ஒரு முறை உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் அன்பு சகோதரனுக்கு வாக்களிக்க சொன்னார். முடித்து வழமை போல முஷ்டி மடித்து நாம் தமிழர் என்றோதி வானம் குத்தினார், கூட்டம் மொத்தமும் ஆர்ப்பரித்து அதையே செய்தது. உண்மையில் எனதிந்த முதல் அனுபவம் ஒரு நிகழ்த்துக் கலையை காண்பது போல, பாட்சா படத்தை முதல் காட்சியில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்தது போல பரவசமாகவே இருந்தது.
கூட்டத்தில் பெரும்பாலானோர் யுவன் யுவதிகள். எதோ ஒரு பெரிய பரவசத்தோடு வெளியேறிக் கொண்டிருந்தனர். காமராஜர் இந்தியனா இருந்து தமிழ் நாட்ட ஆண்டதுல என்ன கொள்ளைல போச்சி அப்டின்னு இங்க வந்த யாரும் எக்காலத்திலும் கேட்கப் போவதில்லை. சின்னமலை நிஜமா அப்படி செய்தாரா என்பது குறித்து யாருக்கும் வினா எழப் போவதில்லை. ஒரு துப்பாக்கி தோட்டாவின் விலை ஐம்பது ரூபாய் என ஒரு சினிமா வசனம் வருகிறது. பிரபாகரன் தனது கால் நூற்றாண்டு அரசியல் வாழ்வில் எத்தனை போர்க்களத்தை சந்தித்திருப்பார். அந்த செலவீனத்தை ஈழம் என்ற பொட்டுக்கடலை அளவு நிலத்தில் வாழும் மக்கள் தந்த வரியைக் கொண்டுதான் முன்னெடுத்தாரா என எவருமே கேட்கப் போவதில்லை. மொழி, இனம், வீரம் ஓட்டு முடிந்தது கதை.
வீட்டுக்கு வந்து இணையத்தை திறந்தேன். உங்களது தினமலர் கட்டுரைகள் கண்டேன். அடப் பாவமே எதுவுமே மாறலையே என்று தோன்றியது. முதன் முறையாக ஓ தமிழகமே என்று நீங்கள் துவங்கி உரையாடும் ஒரு களம். வாசித்தவர்களில் நான் மட்டும்தான் உங்களது உட்கார்ந்து யோசிக்கும்போது தொடரில் வரும் பிராமணர் போல இருக்கிறேன். அவரது சொல்லே என்னுடையதும்
”நேர்ப்பேச்சி வாணாம் நேக்கு பயமாருக்கு”. . . . . . . . . .
கடலூர் சீனு