அன்புள்ள ஜெ
சமீபத்தில் ஒரு மொழியாக்கம் வாசிக்க நேர்ந்தது. சில்வியா பிளாத்தின் ஒரு கவிதை. குறுகலான சில சொற்களால் காட்சிகளையும் உணர்ச்சிகளையும் சொல்வதற்கு முயற்சி கொள்கிற தொடக்கத் தலைமுறை கவிஞர்களில் ஒருவர் அவர். தற்கொலை செய்து கொண்டவர் அவர். அவரது பெரும்பாலான கவிதைகள் பெண் வாழ்க்கையின் கைவிடப் பட்ட தன்மையையும் [கையறு நிலைதானே?] தனிமையையும் காட்டக் கூடியவை. மனச்சிதைவின் சில அம்சங்கள் கொண்டவை.
இந்தக் கவிதையில் பாலுக்காக விடிகாலையில் ஒரு பெண் கணப்பருகே காத்திருக்கிறாள் எனபதே காட்சி. அது குளிர்காலம். மூடுபனி உள்ள நாள் அது . அது சிதிலமாகிக்கிடக்கும் நாளும்கூட என்கிறாள் அவள். செயலற்று ஓய்ந்த கரங்களுடன் அதில் அவள் அமர்ந்திருக்கிறாள். அவளது கணப்பருகே பூனை சோம்பிக் கிடக்கிறது. அவளது ஜன்னல் மேடையில் காலிப்புட்டிகளில் பனியால் உறைந்த நீராவியானது பால் போல படிந்திருக்கிறது. அவளது சன்னலுக்கு வெளியே புதர்காடுகளில் இலையுதிர்காலத்தின் தொடக்கமாக இலைகள் பழுத்து விட்டன. எந்த உன்னதமும் நிகழாத வெற்று நாள் அது . அது எந்த நம்பிக்கைகளுக்கும் இடமில்லாத நாள். வெளியே வில்லாக வளைந்த ரோஜாத் தண்டில் பனித்துளி தயங்குகிறது.
மெதுவாக பொழுது புலர்ந்து உலகம் ஆரம்பிக்கிறது. அந்த பூனை எழுந்து சோம்பல்முறிக்கிறது. அதன் கைநகங்கள் வெளிவருகின்றன. அவள் ஓர் உறுதி எடுக்கிறாள். ‘இன்று நான் என்னை சோதனை செய்யும் கருப்புச் சட்டை அணிந்த அந்த பன்னிருவரை ஏமாற்றம் கொள்ளச் செய்யப் போவதில்லை. இதோ என்னை நோக்கி கிண்டல் செய்யும் இந்த காற்றைக் கண்டு சீற்றம் கொண்டு வழக்கம்போல முஷ்டி தூக்கி காட்டி பொருமப் போவதுமில்லை’
சில்வியா பிளாத்தின் மனத்தின் Paranoid தன்மையை காட்டக்கூடிய தீவிரமான கவிதை இல்லையா? இதிலே இரு வரிகள் கவனிக்க வேண்டியவை. ’எந்த மகத்துவமும் இறங்கியருளவில்லை’ என்கிறாள். அதாவது அப்போது அவள் பிரார்த்தனை செய்திருக்கிறாள். அதன் பின்னர் அந்த சூன்யத்தை அடைந்திருக்கிறாள். glory என்றால் இறையருள் என்றுதான் சாதாரணமாகவே பொருள். descend என்று இறையருள் போன்றவற்றைச் சொல்லவே சாதாரணமாக கையாளுவார்கள்.
அதேபோல பூனை Unsheathe செய்கிறது அந்தச்சொல் ரொம்ப முக்கியமானது. அது வாளை உறையில் இருந்து எடுப்பதற்கான சொல் அது. காலைவிடிந்து உலகம் தொடங்குகிறது என்பதற்கு பூனை நகம் விரிக்கிறது என்று சொல்லும் கூர்மை முக்கியமானது. காலைவிடிந்து தொடங்கும் வாழ்க்கையை அவள் எப்படி பார்க்கிறாள்? அது ஒரு வேட்டை என்று பார்க்கிறாள்.
இந்தக்கவிதையின் மையமான உவமை என்பது ரோஜாத்தண்டுதான். அதை அம்புவிட இறுகி நிற்கக்கூடிய முள்நிறைந்த வில் என்கிறாள். அதில் அம்புக்குப்பதில் இரு பனித்துளிகள்தான் தயங்குகின்றன. poise என்ற சொல்லும் முக்கியமானது. அது அவள் மனநிலையை சுட்டிக்காட்டுகிறது.
அந்த மனநிலைதான் அடுத்தபடியாக நேரடியாகச் சொல்லப்படுகிறது. பன்னிரண்டு பரிசோதகர்கள் என்றால் என்ன என்பதை சொல்லமுடியாது. அது கவிஞருடைய தனிப்பட்ட உலகம். எதுவாகவும் இருக்கலாம். அந்த மனநிலையை மேலே சொன்ன உவமை / இமேஜ் வழியாக அடைந்துவிடலாம்.
ஏன் கவிதையை விளக்குகிறேன் என்றால் இப்படி பலமுறை வாசித்து புரிந்துகொண்டுதான் நான் மொழிபெயர்ப்பினை செய்திருக்கிறேன். கீழே பாருங்கள்
Resolve
Day of mist: day of tarnish
with hands
unserviceable, I wait
for the milk van
the one-eared cat
laps its gray paw
and the coal fire burns
outside, the little hedge leaves are
become quite yellow
a milk-film blurs
the empty bottles on the windowsill
no glory descends
two water drops poise
on the arched green
stem of my neighbor’s rose bush
o bent bow of thorns
the cat unsheathes its claws
the world turns
today
today I will not
disenchant my twelve black-gowned examiners
or bunch my fist
in the wind’s sneer.
— Sylvia Plath, 1955.
தீர்மானம்
========
மூடுபனியின் நாள்:
சிதிலங்களின் நாள்
செயலற்ற கரங்களுடன்
பால்வண்டிக்காக காத்திருக்கிறேன்
சாம்பல் கரங்களை பரப்பி
படுத்திருக்கிறது
ஒற்றைக்காதுப் பூனை
நிலக்கரிக்கணப்பு எரிகிறது
வெளியே சிறு புதர்காட்டில்
இலைகள் பழுத்துவிட்டிருக்கின்றன
ஜன்னல் மேடைமேல் இருக்கும்
காலிப்புட்டிகளை
ஒரு பால்நிறப்பூச்சு மங்கவைத்திருக்கிறது
எந்த மகத்துவமும் இறங்கியருளவில்லை
பக்கத்துவீட்டு ரோஜாவின்
வளைந்த பச்சைத்தண்டு மீது
இரு நீர்த்துளிகள் தயங்குகின்றன
வளைந்திறுகிய
முள் நிறைந்த வில்!
பூனை தன் நகங்களை உறையுருவுகிறது
உலகம் சுழலத்தொடங்குகிறது.
இன்று
இன்று நான் என்
கருப்பாடையணிந்த பன்னிரண்டு பரிசோதகர்களை
மனம்கோணச்செய்யப்போவதில்லை.
காற்றின் ஏளனத்தைக்கண்டு
விரல் சுருட்டிக் காட்டபோவதுமில்லை
சில்வியா பிளாத்
*
இந்தக்கவிதையை http://nagarjunan.blogspot.com/ என்ற வலைப்பூவிலே ஒருவர் மொழிபெயர்த்திருந்தார். உண்மையில் என் சகா ஒருத்தர்தான் அந்த இணைப்பை எனக்கு அனுப்பி வேடிக்கையாக சில வரிகளை எழுதியிருந்தார் அந்த மொழிபெயர்ப்பு கீழே
*
உறுதி
=====
காலைப் பனியில்
உதவாக் கைகளின்
கறையும் படிய
பால்வண்டி நோக்கி
யான் காத்திருக்க
தன் சிமிட்டிப்பாதம்
வறுகும்
ஒருகாதுப் பூனை.
கரியடுப்பும் எரிய
புறத்தே
சிறுகாவற்காட்டு இலையும்
மிகுமஞ்சளாய் வெளிற
ஜன்னல் மீதான
வெற்றுக்குப்பிகளும்
கலங்கத் தோன்றும்
பாலாடை பட்டு.
ஆங்கே
எழுந்தும்
அருளவில்லை
புகழேதும்.
இரு நீர்த்துளியும்
அடுத்தாரின்
ரோஜாப்புதர் பசுங்கணுவில்
வளையச் சழங்கும்.
ஏறிட்ட முள்வில்லே!
பூனையும் தன் நகம் விரிக்கும்.
உலகம் சுழலும்.
இன்று
இன்று
என்னைப் பரீட்சிக்கும்
கறுப்புடைப் பன்னிருவரை
வசீகரிக்காமல்
விடப்போவதில்லை;
சுளிக்கும் வளிமுன்
முஷ்டிமடக்கப் போவதுமில்லை.
சில்வியா பிளாத்
*
இந்த மாதிரி மொழியாக்கத்தின் நோக்கம் என்ன? இந்தமாதிரி உலக இலக்கியங்களை மொழியாக்கம் செய்து இதேமாதிரி எழுத ஆரம்பிப்பதன் தேவை என்ன? எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நீங்கள்தான் சொல்லவேண்டும்
ராம்சந்தர்
[பிகு] கூகிளில் தமிழில் எழுதிப்பார்த்தேன். பிழைகளுக்கு மன்னிக்கவும்
***
அன்புள்ள ராம்,
பிழைகளினால் பல புது அர்த்தங்கள் வந்த கடிதம். முடிந்தவரை திருத்தியமைத்திருக்கிறேன்.
மொத்தம் நான்குமுறை தமிழ் தட்டச்சுக்கான இணைப்பை உங்களுக்கு அனுப்பியிருக்கிறேன். மீண்டும் அனுப்புகிறேன். நீங்கள் இதுவரை தமிழ் எழுத்துருவை இறக்கிக் கொள்ளவில்லை. என்ன காரணம் என்றால் அது ஓர் அலட்சியம். உங்களுக்கு முக்கியமான பலவிஷயங்களை நீங்கள் இறக்க்கிக்கொண்டுதான் இருப்பிர்கள்.
இப்படி சற்றே அலட்சியத்துடன் தமிழ் அறிவுலகத்துக்கு வெளியே நின்றுகொண்டு உதட்டு வளைவில் சின்ன புன்னகையுடன் செய்யப்படும் விமர்சனங்களை அவை சரியாக இருந்தாலும் நான் ஏற்க தயங்குவேன். தமிழில் ஒரு அறிவியக்கம் உள்ளது. அது இப்படி பல கோணங்களில் பல வழிகளில் செயல்படுகிறது. சில பயனுள்ளவை, சில பயனற்றவை. விளைவு என்பது ஒட்டுமொத்தமாகவே நிகழ்கிறது.
நாகார்ஜுனன் தமிழின் விமர்சகர். இலக்கியக் கோட்பாட்டாளர். அவரது இந்த மொழியாக்கம் என் நோக்கில் கவனமில்லாமல் செய்யப்பட்டிருக்கிறது. அவருக்கு இலக்கியத்தை வாழ்க்கையனுபவங்களுடன் இணைத்துக்கொள்ளும் மனப்பயிற்சியும் கற்பனையும் அறவே இல்லை. ஆகவே இலக்கியத்தை அவர் தொழில்நுட்பமாகவே பார்க்கிறார். சிக்கலான தொழில்நுட்பத்துக்காக அவரது அபாரமான அறிவு ஏங்குகிறது.
ஆகவே மொழியை சிக்கலாக ஆக்கிக்கொள்ள முயல்கிறார். மொழிச்சிக்கலே இலக்கியமேன்மை என நினைக்கிறார். அதை பிரச்சாரம்செய்கிறார். கடந்த இருபதாண்டுகளாக அவரது பங்களிப்பு இது. அதன் பலிகடா என்றால் கோணங்கிதான். அது ஒரு சரடாக தமிழில் நிகழ்கிறது. அதுவும் இங்குள்ள ஒரு வழி, அதில் சில வெற்றிகள் பல சரிவுகள் உள்ளன. ஆனால் அது மட்டுமல்ல தமிழ் சிற்றிதழ் அறிவியக்கம். அது உங்கள் புன்னகைக்குரியதும் அல்ல.
இந்தக்கவிதையை மொழிநெசவை நூல்பிரித்துக்கொண்டு எளிமையாக அணுகி அதை வாழ்க்கைத்தருணமாக பார்த்தால் தெரியவரும் அகச்சிக்கல் மேலும் பற்பல மடங்கு பிரம்மாண்டமானது. நீங்கள் சொன்னதுபோல முள்வில்லில் ஒளிர்ந்து நிற்கும் இரு நீர்த்துளி அம்புகள்! அங்கிருந்து சென்று அந்த பன்னிரு சோதகர்கள். கிறித்தவ மதவிசாரணைகளின் வரலாற்றுப் பின்னணியில் நோக்கினால் கொடும் வதையின், சூனியக்காரிவேட்டைகளின், சித்திரம் மனதில் எழுகிறது. சிதிலமாகும் மனதின் எல்லையில்லாத பதற்றத்தையும் சித்திரவதையையும் காட்டும் இக்கவிதை என் இன்றைய காலையையே இருளாக ஆக்கிவிட்டிருக்கிறது.
ஜெ
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 14, 2010