ஜெ..
எனது கடிதத்தின் சாராம்சத்தை மீண்டும் சொல்லி விடுகிறேன்.
1. நம்மாழ்வார் போன்ற இயற்கை வேளாண்மை முன்னோடிகளின் போராட்டத்தால், இன்று, அரசின் சார்பில் நடத்தப்படும் நிறுவனங்களிலேயே, பூச்சி மருந்தைத் தவிர்க்கும் வேளாண் முறைகள் பரிந்துரைக்கப் படுகின்றன. பஞ்ச காவ்யா என்னும் இயற்கை வேளாண் முறை இடுபொருள் அவர்களின் செயல்பாடுகளில் புகுந்துள்ளது. இது அவர்களின் பங்களிப்பு.
2. இந்தக் காலகட்டத்தில், இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட பொருள்களுக்கு சந்தையும், விலை மதிப்பும் உருவாகியிருக்கிறது. இதுவும் இயற்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வின் காரணமாக உண்டானது. மரபான உழவனுக்கு விற்பனை விலையின் மீது ஒரு செல்வாக்கும் இல்லை. எனது தூரத்து உறவினர்கள், சென்னைக்கு அருகில் ஒரு உணவகம் துவங்கி யிருக்கிறார்கள். அருகிலேயே நிலம் வாங்கி, அவர்கள் உணவகத்துக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் இடுபொருட்களை இயற்கை முறையில் விளைவித்துக் கொள்கிறார்கள். கடந்த 25 ஆண்டுகளில் உருவாகி வந்த விழிப்புணர்வின் வெளிப்பாடு இது.
என்று விற்பனை விலையைத் தீர்மானிப்பதில் உழவன் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறானோ, அன்று, வேளாண்மை லாபமடையும் சாத்தியங்கள் உண்டு. வெற்றிகரமான அமுல் மாதிரி சொல்லும் பாடம் இதுதான்.
3. வேளாண் விலை பொருளுக்கு லாபம் வரவேண்டும் (நிலத்தின் விலையையும் சேர்த்து) எனச் சொல்பவர் விவசாயியின் மனநிலை கொண்டவரல்ல என்கிறீர்கள் – நிலத்தின் விலையை விடுங்கள் – அந்த நிலத்தில் மூன்று போகமும் நெல் விலைந்து, நெல்லுக்கு சரி விலை கிடைத்தால், வருடம் 1.8 லட்சம் கிடைக்கும். அந்த வரும்படியை வைத்துக் கொண்டு எந்த விவசாயி, தன் மகனை விவசாயம் செய்யச் சொல்வார்? எனவே, வேளாண் விலை பொருளுக்கு மிகச் சரியான வரும்படி கிடைக்கும் ஒரு சூழலே, வேளாண்மையைத் தக்கவைக்கும். இதில் ஊகம் எங்கே வந்தது?
4. தண்டபாணியின் தகுதிகளைத் தாங்கள் எடுத்தியம்பியது கண்டேன். எனது நண்பர்களில் பலரும், வேளாண் பல்கலைக் கழகத்தின் பல்வேறு துறைகளின் தலைமைப் பொறுப்பில் இதே அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் சிறுபான்மையினர் எனினும், அவர்களின் சேவை மிக முக்கியமானது – எனது கடிதத்திலும் சுட்டியிருக்கிறேன். ஒரு நிறுவனத்தில் வாங்கும் ஊதியத்திற்கு நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்று வது மிகவும் மேன்மையான விஷயம். ஆனால், அதைவிட உயர்வானது, நிறுவனப்படுத்தப் பட்ட சாங்கியங்களை எதிர்த்து போரிட்டு, தனக்கு உண்மையெனத் தெரியும் கொள்கைகளை நிறுவுவது. அவர்களுக்கு நிறுவனங்கள் அளிக்கும் சௌகர்யங்கள் எதுவும் இருப்பதில்லை. அதை அரசோ, வியாபார நிறுவனங்களோ ஊக்குவிப்பதில்லை. எந்தப் பெரும் நிறுவனப் பின்புலமும், நிலையான வருமானமும் இல்லாமல், தன் தனி அவதானிப்பைக் கொண்டு அவர்கள் பேசும் பேச்சுஅறிவியற்பூர்வமற்றவை போலத் தோன்றலாம். அவர்களின் மொழி பண்படாததாக / எதிர்மறையாக இருக்கலாம். ஆனால், அதை அவர்கள் தன் வாழ்க்கையைப் பணயம் வைத்து உருவாக்குகிறார்கள். அவர்களே புதிய தொழில்முறைகளை மிக முக்கியமாக மக்களுக்குத் தீமை பயக்காத வழிகளை உருவாக்குகிறார்கள். அவ்வகையில், அவர்களின் பங்களிப்பு வருங்காலத்துக்கு மிக முக்கியம். நிறுவனத்தின் தரப்பில் இருந்து பார்ப்பவர்கள் அவர்கள் சொல்வதில் உள்ள நேர்மறை அம்சங்களைப் பார்க்கவும், சரியான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளவும் வேண்டும்.
நன்றி
பாலா
அன்புள்ள பாலா,
நீங்கள் சொல்வதுபோல தண்டபாணி போன்றவர்கள் அமைப்பின் சௌகரியங்களுக்குள் நின்று பணியாற்றுபவர்கள் அல்ல. அவர்களுக்கு அரசமைப்பின் அழுத்தங்களும் அதன் விளைவான ஏமாற்றங்களும் மிக அதிகம். அதைமீறிச்செயல்படும் இலட்சியவாதம் மிகச்சிலரிடமே உள்ளது
ஆனால் அவர்களிடம் மறுதரப்பின் குரலையும் கேட்கும் அறிவியல்நோக்கு உள்ளது. இயற்கைவேளாண்மை என இங்கே சொல்லபப்டுவன மேலோட்டமான மதநம்பிக்கைகள். அவற்றின் கணக்குகளும் வீம்புகளும் நம்பத்தக்கவை அல்ல. இது என் நேரடியான அறிதல். அதில் ஒரு குறைந்தபட்ச அறிவியல்தர்க்கம் இருக்கலாமே என்பது மட்டுமே என் ஆதங்கம்
வேளாண்மை ஒரு நவீனச் சமூகத்தில் பிற லாபமீட்டும் தொழில்களைப்போல இருக்கமுடியாது என்பதே யதார்த்தம். எங்காவது அப்படி இருக்கிறதென்றால் அது கூடுமானவரை உடலுழைப்பை வெளியேற்றி இயந்திரங்களைக்கொண்டு செய்யும்போதுமட்டும்தான் — குமரிமாவட்ட வாழை விவசாயம்போல. இயற்கைவேளாண்மை அப்படி பெரும் லாபம் அளித்து, நிலத்தின் மதிப்பை ஐந்துவருடத்திற்கு ஒருமுறை கூட்டிக்கொண்டு இல்லை
இயற்கைவேளாண்மை ஒரு மோஸ்தராக இருக்கும் வரைத்தான் இயற்கை விளைபொருள் அங்காடிகள் கூடுதல் விலைக்கு விற்கமுடியும். உயர்குடிகளிடம். நாகர்கோயில் போன்ற நகரிலேயே ஒன்றுக்கும் மேல் இயற்கை விளைபொருள் அங்காடிகள் வந்ததுமே விற்பனைச் சரிவுதான் ஏற்பட்டது. கணிசமான அங்காடிகள் ஆரம்ப உற்சாகத்தில் தொடங்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன என்பதே உண்மை
இயற்கைவிவசாயிகள் அனைவரும் தாங்களே அங்காடிகளையும் ஓட்டல்களையும் உருவாக்கமுடியாது. பெரிய அளவில் உற்பத்தி நிகழும்போது வினியோக அமைப்பும் இடைத்தரகர்களும் உருவாகி வருவார்கள். லாபம் அவர்களுக்கும் செல்லும். அது இயற்கை வேளாண்மையால் தீர்க்கப்படும் பிரச்சினை அல்ல.
ஆகவே இயற்கை வேளாண்மைக்கும் விவசாயப்பொருட்களுக்கு சுயமாக விலைவைக்கும் முயற்சியையும் இணைத்துக்கொள்வதெல்லாம் மிகையானது. அது வேறுபிரச்சினை. அரசியல்களத்தில் அணுகவேண்டியது.
உங்கள் வாதங்களில் உள்ள ஓட்டைகளை நீங்கள் புரிந்துகொள்ளச்செய்ய என்னால் ஒருபோதும் முடிந்ததில்லை. நான் சொல்வது இயற்கைவேளாண்மையில் உள்ள அறிவியல்நோக்கற்ற பிடிவாதம் நீண்டகால அளவில் பயனற்ற சோதனைகளாக முடிந்துவிடும் என்பதைப்பற்றி. நிலத்தின் சந்தைவிலை குறித்த விவாதம் அதற்குள் எவ்வகையிலும் வருவதில்லை. இயற்கைவேளாண்மை விளைபொருட்களுக்கு சந்தைவிலையை கூட்டுவதுமில்லை, நிலத்தின் மதிப்பை கூட்டுவதுமில்லை.
ஜெ
முந்தைய கட்டுரைகள்
இயற்கை விவசாயம் கடிதமும் பதிலும்