‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2

பகுதி ஒன்று : சித்திரை

முதற்படைக்களத்தில் எழுந்தவளே, நீ யார்? சொல்! உன் பத்து வலக்கைகளில் முப்புரிவேலும், வாளும், அம்பும், வேலும், ஆழியும், வடமும், கேடயமும், உடுக்கையும், மின்னலும் பொலிகின்றன. கீழ்க்கை அஞ்சலென எழுந்திருக்கிறது. தேவி, உன் இடது கைகளில் அரவம், வில், வல்லயம், மழு, துரட்டி, வடம், மணி, கொடி, கதை ஒளிர்கின்றன. கீழ்க்கை அருளலென கவிந்திருக்கிறது. உன் முகம் முடிவிலாது இதழ்விரியும் தாமரை. உன் விழிகளோ ஆக்கும் கனலும் அழிக்கும் கனலுமென இரு அணையா எரிதல்கள். தேவி, உன் புன்னகையோ  அனைத்தையும் கனவில் மூழ்கடிக்கும் கோடிக்குளிர்நிலவு.

உன்னை சண்டிகை என்று அழைக்கிறேன். முதற்பேரியற்கையின் முகத்திலிருந்து முளைத்தவள் நீ. அன்னமென மாயம் காட்டி இங்கு அமைந்திருக்கும் அலகிலிகள் அனைத்தையும் ஈன்றமையால் அன்னையென்றானவள். அதுவல்ல என்று உணர்ந்து அன்னம்  தானென்று தருக்கியபோது அது நீயே என்று வந்தமைந்தவள். அவையமைந்த வானம். அவையென்றாகிய  ஒளி. நீ மாயையில் முதல்வி. மூவியல்பும் முழுதமைந்த உன்னை நீயே ஒளிர்புன்னகையால் கலைத்து ஆடல்கொண்டவள்.  மூவாயிரம்கோடி முகங்களென்றாகி இங்கு நின்றிருப்பவள்.

தேவி, தொல்பழங்காலத்தில் இப்புவியென்றிருந்த ஏழுபெருந்தீவுகளை ஒன்றென ஆண்ட கசன் என்னும் மங்கலமைந்தன் கனவிலெழுந்த உருவம் நீ. அவனால்  மழைநீர் விழுந்த இளங்களிமண்ணில் மும்முறை அள்ளி உருட்டி உருவளிக்கப்பட்டவள். அவன் மடந்தையின் கைகளால் மலர்சூட்டப்பட்டவள். அவன் வேள்விக்குத் தலைவி என அமர்ந்தவள். அவன் குலத்திற்கு முதல் அன்னை. அவன் தொட்டில்களை மைந்தர்களால் நிறைத்தாய். அவன் வட்டில்களை அன்னத்தால் நிறைத்தாய். அவன் கொட்டில்களை கன்றுகளால் நிறைத்தாய். அவன் தலைமேல் மணிமுடியென அமர்ந்திருந்தவை உனது பொன்னிற பூவடிகள். முப்புரமெரித்த மூவிழியன் உன்னை வணங்கி உன் தாள்களை சென்னிசூடிச் சென்றான் என்கின்றனர் கவிஞர். அவர்கள் வாழ்க! அவர்கள் சொற்களைச் சூடும் என் சித்தம் வெல்க! ஆம், அவ்வாறே ஆகுக!

 

 [ 1 ]

ழ்நிலமாண்ட அசுரகுலத்தின்  முதல்மூதாதையின் பெயர் கசன். பன்னிரு பெருங்கைகளும் ஆறுமுகமும் கொண்டவன் அவன் என்றன அசுரபுராணங்கள். அவன் வழிவந்த ஆயிரத்தெட்டாவது மாமன்னனை தனு என்றழைத்தனர். கருமுகில்குவைகளால் கோட்டையமைக்கப்பட்ட விந்தியமலையின் சரிவிலிருந்த அவன் மாநகர் தானவம்  ஆயிரம் குவைமாடங்கள் எழுந்த அரண்மனைநிரைகள் கொண்டது. அதன் நடுவே அமைந்த அவன் மாளிகைமுகட்டில் அசுரகுலத்தின் எருமைக்கொடி பறந்தது. விண்ணில் சென்ற தேவர்கள் குனிந்து வியந்து நின்று கடந்துசென்றனர் அம்மாநகரை. அவன் குலம் விந்தியமலையில் பன்னிரு மடிப்புகளின் நூற்றெட்டு சரிவுகளிலும் நடுவே விரிந்த ஐம்பத்தாறு தாழ்வரைகளிலும் தழைத்து நிறைந்திருந்தது. அவர்கள் அளித்த திறைச்செல்வத்தால் அவன் கருவூலம் நிறைந்தது. அவர்கள்  வாழ்த்திய சொற்களால் அவன் மூதாதையர் உளம் நிறைந்தனர்.

தானவத்தின் மையத்தில் அமைந்திருந்தது அசுரர்களின் குடிதெய்வமான மங்கலசண்டிகையின் குகைநிலை. உள்ளே கரும்பாறையில் கீறலோவியமென  அன்னை இருபது கைகளுடன் எரிவிழி மலர்ந்து நின்றிருந்தாள்.  அவளை வணங்கி நகரும் கொடியும் செல்வமும் புகழும் பெற்ற தனு தன் குலம்பெருகும் மைந்தரைப் பெறவேண்டுமென்று அவள் குகைக்குள் நாற்பத்தொருநாள் நீர் மட்டும் உண்டு  தனித்துத் தவமிருந்தான்.  குகையிருள் கொழுத்து பருத்தபோது சுவரோவியம் புடைத்தெழுந்தது. அன்னை தோன்றி அவனிடம் “மைந்தா, நீ விரும்புவதென்ன?” என்றாள். “மைந்தன். மூவுலகும் வெல்பவன்” என்றான் தனு. அன்னை அருகே ஓடிய சிறு சுனை ஒன்றைச் சுட்டி “இவனை கொள்க!” என்றாள். அதில் கரியபேருடலுடன் தெரிந்த மைந்தனை நோக்கிய தனு அதிர்ந்து “அன்னையே, இவன் விழியற்றவன்” என்றான். “ஆம், மூவுலகை வெல்பவன் தன்னை நோக்கும் விழியற்றிருப்பான். தன்னுள்ளிருந்து எழும் தன் பாவையால் வெல்லப்படுவான்” என்றாள் மங்கலசண்டிகை.

“அன்னையே, தன்னைவெல்லும் மைந்தனை எனக்கருள்க! விழிகொண்டவனை அருள்க!” என்றான் தனு. “தன்னை வெல்பவன் செல்வதற்கு திசைகள் அற்றவன் என்றறிக!” என்று அன்னை சுனையைத் தொட்டு அலையெழுப்பி அப்பாவையை அழித்து பிறிதொன்று காட்டினாள். அங்கே ஒளிவீசும் மெல்லுடலுடன் எழுந்த மைந்தன் கால்களற்றிருந்தான். சூம்பிய சிறுகைகள் நெஞ்சோடு சேர்த்து வணங்கி தலை கவிழ்ந்திருந்தது. “அன்னையே, இவன் ஆற்றலற்றவன்” என்று தனு கூவினான். “ஆம், இவன் ஆற்றலனைத்தும் விழிகளிலேயே” என்றாள் அன்னை. “அன்னையே, நான் விழைவது இவ்வுலகையும் வெல்பவனை…” என்று தனு தவித்தான்.

“இருவரில் ஒருவரை தெரிவுசெய்க! இத்தருணம் இதோ முடியவிருக்கிறது” என்றாள் மங்கலசண்டிகை. “அன்னையே! அன்னையே!” என்று அவன் கூவினான். “என் செய்வேன்? என் செய்வேன் எந்தையரே?” அன்னையின் உருவம் இருளில் கரையத்தொடங்கியது. தனு “இவனை… கரியோனை கொள்கிறேன். வெல்க என் குடி!” என்றான். “ஆம்” என அன்னையின் அருட்கை எழுந்த கணமே “நில்! தன்னையறியாதவன் வென்றவை நிலைக்கா. மற்றவனை அருள்க! விழியோனை” என்றான். “அருள்கொள்க!” என அன்னை மொழிந்ததுமே “நில்! நில்! உலகை ஆளாதவன் என் குடிபிறந்து பயனென்ன?” என்றான் தனு. நெஞ்சுழன்று “என்ன செய்வேன்? என் தவநிறைவுக்கு என்ன செய்வேன்?” என்று அழுதான். “நீ விழைந்தால் நிகழ் மட்டும் நோக்கும் விழிகளும் இயல்வதை ஆற்றும் தோள்களும் கொண்ட எளிய மைந்தர் நூற்றுவரை உனக்களிக்கிறேன்” என்றாள் அன்னை.  நெஞ்சில் கைவைத்து சற்றுநேரம் எண்ணியபின்  தனு “இல்லை. முடிகொண்டு ஆளும் அசுரர்குடியில் எளியோர் பிறத்தல் இழிவு” என்றான்.

“முடிவுசூழ்க! இதோ இக்கணம் மறைகிறது” என அன்னை உருவழிந்துகொண்டிருந்தாள். கைகள் அலையலையாக ஓய்ந்து மறைந்தன. தோள்கள் கரைந்தழிந்தன.  இதழ்களும் உருவழிந்தன. விழியொளிகள் மட்டும் எஞ்சிய இறுதிக்கணத்தில் சித்தம் துடித்து எழ “இருவரிலும் பாதி… அன்னையே இருவரிலுமே பாதி” என்று தனு கூவினான். கண்மணிகளால் நகைத்து “அவ்வாறே ஆகுக!” என்றருளி அன்னை மறைந்தாள். சுவரோவியம் விழிதீட்டி நின்ற இருள்குகைக்குள் மூச்சிரைக்க கண்ணீருடன் தனு தன்னையுணர்ந்து நின்றான். “அன்னையே!” என்று நெஞ்சில் கைதொட்டு கூவினான். “விடையின்றி வினாகொள்பவரின் தீயுலகைச் சென்றடைந்து மீண்டுள்ளேன். ஆவது அணைக!” என்று நீள்மூச்செறிந்தான்.

அவன் அச்செய்தியை சொன்னதும் அவன் துணைவி ரம்பை திகைத்து வாய்மேல் கைவைத்து சொல்லிழந்தபின் “என்ன சொல்லவருகிறீர்கள் அரசே? என் இரு மைந்தருமே குறையுள்ளவர்களா?” என்று கூவினாள். “இல்லை அரசி, இருவகை நிறையுள்ளவர் அவர்” என்றான் தனு. “விழியற்றவன் ஒருவன். பிறிதொருவன் காலற்றவன்… என் தவம்பொலிந்து மண்நிகழ்பவர்கள் அவர்களா?” என்று ஏங்கி அழுதபடி அவள் சென்று அரண்மனையின் இருள்மூலையில் உடலொடுக்கி அமர்ந்தாள். “இருநிறைகளும் இல்லாத இயல்மைந்தர் நூற்றுவரை அளிக்கிறேன் என்றாள் அன்னை. உண்டுறங்கிப் புணர்ந்து பெற்று முதிர்ந்து மாயும் எளியோர். நான் நிகரற்ற வல்லமைகொண்ட மைந்தர் வேண்டுமென்றேன்” என்றான் தனு. கண்ணீர் வழிய முகம் தூக்கி “அவர்களில் ஒருவர் அமைந்தாலே நிறைந்திருப்பேனே. நான் விழைவது மைந்தனை மட்டுமே. என் தூண்டிலில் வைக்கும் புழுக்களை அல்ல” என்றாள் ரம்பை. “நீ பெண், நான் அரசன்” என்றான் தனு. “நீங்கள் அரசர், நான் அன்னை” என்றாள் அவள்.

“அஞ்சுவதல்ல அசுரர் இயல்பு. என் இரு மைந்தரும் பிறிதென்றிலாது இணைந்து ஒருவரென்றாகி இப்புவி புரக்கட்டும்” என்றான் தனு. “அரசே, எண்ணித் துணிந்திருக்கவேண்டும் இச்செயல். ஓருடலுக்குள் ஈருயிராகி நிற்பவரே மண்ணுளோர். ஈருயிர் ஓருடலாவது தெய்வங்களுக்கும் அரிது” என்றார் அமைச்சர் காமிகர். “ஆம் அறிவேன். ஆனால் நாம் அசுரர். அரிதனைத்தும் ஆற்றுவதற்குரிய ஆற்றல் கொண்டவர்கள். தேவர் வணங்கித்திறக்கும் வாயில்களை தன் தலையால் முட்டித்திறந்தவர்கள் என் முன்னோர்.  என் மைந்தரால் அது இயலும்” என்றான் தனு. “நன்று நிகழ்க!” என்று நீள்மூச்செறிந்தார் அமைச்சர்.

தனு தன் பட்டத்தரசி ரம்பையின் ஒரே பேற்றில் இரு மைந்தரை பெற்றான். கருநிறம் கொண்ட பெருந்தோளன் விழியற்றிருந்தான். அவனுக்கு ரம்பன் என்று பெயரிட்டனர். வெண்ணிறம்கொண்ட மெலிந்தவனை கரம்பன் என்று அழைத்தனர். இளமையிலேயே அவர்களை எப்போதும் அருகருகே உடலொட்டி படுக்கவைத்தனர். ஒருவன் அழுதால் இருவருக்கும் ஊட்டினர். ஒருவன் துயின்றால் பிறிதொருவனையும் துயிலச்செய்தனர். அவர்கள் இருவர் என்பதை அவர்கள் ஒருபோதும் அறியலாகாது என்று தனுவின் ஆணை இருந்தது. எனவே  ஒவ்வொரு சொல்லும் எண்ணிச் சொல்லப்பட்டன. இணைந்து அழுது, இணைந்து உண்டு, இணைந்து ஓடி வளர்ந்தனர்.  தன் உடலின் பிறிதொரு பக்கம் என்றே இன்னொருவனை இருவரும் நினைத்தனர்.   ஒளியென்பது  குரல் என ரம்பன் நம்பினான்.  காலென்பது ஓர் எண்ணம் என்று கரம்பன் நினைத்தான்.

அவர்களை ரம்பகரம்பன் என்று ஒற்றை மானுடனாக அழைத்தனர் அனைவரும். நான்கு கைகளும் நான்கு கால்களும் இருதலைகளும் கொண்டு அசுரகுலமாளப்பிறந்த பேருருவன் அவன் என அவன் எண்ணுமாறு செய்தனர். பறக்கும் குருவியின் இறகை எய்து வீழ்த்தும் விற்திறன் கொண்டிருந்தான்  ரம்பகரம்பன்.  புரவிக்கு நிகராக ஓடவும் யானையை கொம்புபற்றி அழுத்தி நிறுத்தவும் ஆற்றல்கொண்டிருந்தான். நுண்ணியநூல் கற்றான். அவைகளில் எழுந்து சொல்நிறுத்தினான்.  அவன் வெல்லற்கரியதென ஏதுமிருக்கவில்லை. அவன் செயற்கெல்லை என ஒன்றும் துலங்கவில்லை. எளியமானுடருக்கு மேலெழுந்து நின்றிருந்த அசுரமைந்தனை அஞ்சியும் வியந்தும் அடிபணிந்தனர் அனைவரும்.

உளமொன்றான அவர்கள் வளரும்தோறும் ஒற்றையுடலென உருகியிணைந்தனர். ஓருடலுக்கான அசைவு அவர்களில் கூடியபோது நோக்குவோர் விழிகள் அவர்களின் சித்தங்களை மாற்றியமைத்தன. ஆண்டுகள் சென்றபின்  தானவத்தில் எவரும் அவரை இருவரென்றே அறியவில்லை. தந்தையும் தாயும்கூட அவர்களை ஒருவரென்றே எண்ணினர். இறுதிப்படுக்கையில் ரம்பகரம்பனை நெஞ்சுதழுவி “வாழ்க என் குடி” என்று கண்ணீர்விட்டு தனு மறைந்தான். அவன் சிதையேறி ரம்பை விண்புகுந்தாள். நான்குகைகளும் இரட்டைத்தலையும் கொண்டு அரியணையமர்ந்த பேராற்றல் கொண்ட மன்னரின் ஆட்சியில் அசுரகுலம் வெற்றி ஒன்றையே அறிந்திருந்தது. தானவம் மண்ணின் விழிப்புள்ளியென பொலிந்தது.

கோல்தாழாது நூறாண்டு மண்ணாண்டவன் விண்ணுக்கும் உரிமைகொண்டவன் என்பது நெறி. விண்ணமர்ந்த இந்திரன் நிலையழிந்தான். தன் மாயப்படைக்கலங்களுடன் தானவத்தை அணுகி பொற்சிறைப் புள்ளாகவும் செவ்விழிப் பருந்தாகவும் சுற்றிவந்தான். ஆனால் அருந்தவத்தாருக்கு நிகரான அறிவும் பாதாளநாகங்களுக்கு ஒப்ப தோள்வலியும் கொண்டிருந்த ரம்பகரம்பனை அணுக அவனால்  இயலவில்லை. உளம்சோர்ந்து அவன் தன் நகர்மீண்டு அமர்ந்திருக்கையில் அங்கே வந்த நாரதர் “நாள் ஒன்று வரும் அரசே. அது வரை காத்திருங்கள்” என்றார். “இணைக்கப்பட்டவை அனைத்தும் பிரிந்தே தீருமென்பது இப்புடவியின் பெருநெறி. நாள் என்று காட்டி வாள் என்று எழும் காலமே அவர்களை பிளக்கட்டும்.  உங்கள் படைக்கலம் அதை தொடரட்டும்.”

விண்ணவர்க்கரசனுக்காக கோள் தேர்ந்த நிமித்திகர் “அரசே, அவர்களின் கோட்டை உருகியிணைந்து ஒன்றேயானது. அதில் இன்று நுழைய தங்களால் இயலாதென்றறிக. ஆனால் அவர்களே உங்களை அழைத்து தங்கள் மன்றில் நிறுத்தும் தருணமொன்று அணையும். அன்று நீங்கள் அவர்கள் கொடியில் காற்றாகவும், அனலில்  சுடராகவும், மூச்சில் விழைவாகவும் நுழையமுடியும். அதன்பின்னரே உங்கள் வெற்றிகள் எழும்” என்றனர். உளம் மகிழ்ந்த இந்திரன் “ஆம், அதுவரை அவன் அரண்மனைவாயில் மணியொன்றில் அமைக என் ஆயிரம் விழிகளில் ஒன்று” என்றான். அந்த மணியில் அதன்முன் நடப்பவர்களின் பாவை தெரிவதில்லை என்பதை அங்கிருந்த எவரும் அறியவில்லை. ஆனால் அதை துலக்குபவர்கள் மட்டும் அவ்வப்போது சித்தமழிந்து சிதைவுற்றுப் போயினர்.

கீழ்நிலமான தாருகத்தை ஆண்ட அசுரமன்னர் கும்பரின் இரட்டைமகள்களான ரக்ஷிதையையும் அர்ஹிதையையும் ரம்பகரம்பன் மணந்தான். இருதலை நாற்கரத்து இறைவனின்  அஞ்சும் ஆற்றலை அவர்குலத்துப் பாணர் பாடி அவர்கள் அறிந்திருந்தனர். அவன் சித்திரப்பாவையைக் கண்டு காதலுற்றிருந்தனர். இருவரும் இருபக்கம் நின்று அவன் கைபற்றி அனல்வலம் வரும்போது எண்ணுவது இயற்றும் தெய்வமொன்றை மணந்தவர்கள் என உளம் தருக்கினர்.  ஏழுபுரவிகள் இழுத்த தேரில் அவனுடன் தானவம் வந்தபோது விண்ணெழுபவர்கள் என்றே உணர்ந்தனர்.

எளிய உருவம் கொண்ட அசுரகுடிகளை ரக்ஷிதையும் அர்ஹிதையும் தங்களுக்கு நிகரென எண்ணவில்லை. ரம்பகரம்பனின் பேருடல் சித்திரங்களாகவும் சிலைகளாகவும் அவர்களை சூழ்ந்திருக்கச்செய்தனர். அவன் வெற்றியும் புகழும் பாடல்களென அவர்களின் செவிநிறைத்தது. நாள்போக்கில் இருகை ஒருதலை உருவங்களெல்லாம் அவர்களுக்கு எள்ளலுக்குரியவை ஆகின. குரங்குகள் போல கைவீசி தளர்ந்து நடக்கும் சிற்றுயிர்கள். நோக்கும் செயலும் ஒன்றே என ஆன சிற்றுள்ளங்கள். தங்கள் கரு நிறைத்து நான்குகைகளும் இரட்டைத்தலையும்கொண்டு பிறக்கவிருக்கும் மைந்தரை அகமெழக் கனவுகண்டனர்.

அரசமணம் நிகழ்ந்து நீணாட்களாகியும் மைந்தர் பிறக்காமை கண்டு தானவம் கவலைகொண்டது. குடித்தலைவர் அமைச்சருக்கு உரைக்க அவர்கள் அரசனிடம் சென்று உணர்த்தினர். மைந்தரின்மையை  அப்போதுதான் உணர்ந்த ரம்பகரம்பன் நிமித்திகரை அழைத்து குறிசூழ்ந்து பொருளுரைக்கும்படி ஆணையிட்டான். பன்னிருகளம் அமைத்து அதில் சோழிக்கரு விரித்து நோக்கிய முதுநிமித்திகர் சூரர் “அரசே, நாளும் கோளும் நலமே உரைக்கின்றன. உங்கள் பிறவிநூலோ பெருவல்லமை கொண்ட மூன்று மைந்தர் உங்களுக்குண்டு என்று வகுக்கின்றது. ஆயினும் ஏன் என்றறியேன், மைந்தரை அருளும் தெய்வங்கள் திகைத்து அகன்றே நிற்கின்றன” என்றார். “எங்களுருவில் எழும் மைந்தனால் பொலியவேண்டும் இந்நகர். அதற்குத் தடையென்ன என்று ஆய்ந்து சொல்க!” என்று ரம்பகரம்பன் ஆணையிட்டான்.

சுக்ரரின் வழிவந்த அசுரர்குலத்து ஆசிரியர்  சபரர் ஆய்ந்து இட்ட ஆணைப்படி  ரம்பகரம்பன் தன் தலைநகர் நடுவே அமைந்த ஆயிரத்தெட்டு தூண்கள் மேல் வெண்விதானமெழுந்த வேள்விச்சாலையில் மூவெரி எழுப்பி நூற்றெட்டு நாட்கள் பூதவேள்வி நிகழ்த்தினான். அதன் எரிகாவலனாக இருபுறமும் ர‌க்ஷிதையும் அர்ஹிதையும் உடனமர இருந்தான். நூற்றெட்டாவது  நாள் வேள்வியில் அழகிய பெண்ணுருக் கொண்டு இடைவரை அனலாக எழுந்த கன்னித்தெய்வம் நெளிந்தாடி “நான் அர்ஹிதை. இரண்டாம் அரசியின் பெண்மையை காப்பவள். அவள் பிறந்ததும் முலைமொட்டுகளில் வாழ்ந்தேன். உடல் பூத்ததும் கனிந்தெழுந்தேன். அவள் உள்ளத்தில் இனிமையென உடலில் புளகமென பெருகினேன். அவள் குருதியில் வெண்பாலென ஓடுகிறேன். அவள் கனவுகளில் மைந்தரைக் காட்டி விளையாடுகிறேன். இங்கு எனக்கிடப்பட்ட அவியில் மகிழ்ந்தேன். நன்று சூழ்க!” என்றது.

அப்பால் பிறிதொரு எரிகுளத்தில் இருபெருந்தோள்களுடன்  எழுந்த காவல்தெய்வம் கொழுந்துவிட்டு நெளிந்து “என் பெயர் ரம்பன். நான் முதலரசனின் காவலன்” என்றது. ரம்பகரம்பன் திகைத்து “முதலரசனா? யார் அது?” என்றான். அமைச்சரும் நிமித்திகரும் நடுங்கி ஒருவரை ஒருவர் நோக்கினர். “நான் மூத்தவனாகிய ரம்பனின் காவலன். நான் உமிழும் மூச்சையே அவன் இழுக்கிறான். அவன் எழுப்பும் எண்ணங்களை சொல்லாக்குபவன் நானே” என்றது ரம்பன் எனும் தெய்வம். “நான் கேட்பதென்ன? ஆசிரியரே, இவன் சொல்வதுதான் என்ன?” என்று ரம்பகரம்பன் கூவினான். அமைச்சர்கள் ஒருவரோடொருவர் உடல்நெருங்கி நிற்க சபரர் “அரசே அறிக! ரம்பன் என்பது உங்களில் ஒருபாதி” என்றார். “ஆள்பாதிக்கு ஆட்கொள்ளும் தெய்வங்களுண்டா அமைச்சரே?” என்றான் ரம்பகரம்பன். “நிகழ்வதென்ன என்றறியாது திகைக்கிறேன் அரசே” என்றார் அமைச்சர்.

“நான் இவரை அறிவேன். இவரையே என் கணவனென ஏற்றேன். இவருடன்தான் நான் காமம் கொண்டாடினேன்” என்றது அர்ஹிதையெனும் தெய்வம். உளம்பதறி  கைநீட்டிய இளைய அரசி அர்ஹிதை “இல்லை. இவரை நான் அறியேன்… என் மூதன்னையர் மேல் ஆணை. இந்த அயலானை நான் உள்ளாலும் தொட்டதில்லை” என்று அலறினாள்.  ரம்பன் எனும் தெய்வம் “ஆனால் நான் அறிவேன், நீ நான் புணர்ந்தவளின் நிழல். உன் அனலுக்கும் புனலுக்கும் அடியிலுள்ளவை அனைத்தையும் கொண்டவன் நான்” என்றது.  “இல்லை! இல்லை” என்று இளைய அரசி கதற அப்பால் பிறிதொரு எரிதழலில் படபடத்து எழுந்த ரக்ஷிதை என்னும் தெய்வம் “நான் கரம்பனை காமத்தில் அடைந்தேன்” என்றது. வேறொரு தழலில் பற்றி எழுந்து உடல்கொண்டு நின்றாடி “ஆம், நான் அவளுடன் ஆடினேன். அவளுடன் கலந்தமைந்தேன்” என்றது கரம்பன் எனும் தெய்வம்.

கைகளை ஓங்கி அறைந்து “யாரிவர்? அமைச்சர்களே, நிமித்திகர்களே, இவர்கள்  சொல்வதென்ன?” என்று ரம்பகரம்பன் கூச்சலிட்டான். ஆற்றாதெழுந்த அகவிசையால் நான்கு கைககளாலும் நெஞ்சில் அறைந்து கூவினான். “இவர்கள் சொல்வதென்ன? இக்கணமே சொல்லுங்கள்… என்ன இதெல்லாம்?” கரம்பன் எனும் தெய்வம் “நானறிந்த பெண் இவள்” என முதலரசியை சுட்டியது. “இல்லை! நானறிந்ததில்லை இவனை” என்று கூவியபடி ரக்ஷிதை மயங்கி மண்ணில் விழுந்தாள். ரம்பனெனும் தெய்வம் “என்னை காமுற்று இழுத்தவள் அவள்” என  அர்ஹிதையை சுட்டிக்காட்டியது. “இல்லை! இல்லை!” என்று அவள் நெஞ்சில் அறைந்தறைந்து வீரிட்டாள்.

கைகளை விரித்து எழுந்து ஓடிவந்து நெய்க்கலத்தை உதைக்க கால்தூக்கிய ரம்பகரம்பன் “நிறுத்துக வேள்வியை! இது வேள்வியல்ல. இவை நம் தெய்வங்களுமல்ல. அனைத்தும் நம் மீது அழுக்காறுகொண்ட தேவர்களின் மாயம்” என்று அலறினான். “பூதவேள்வியை இடையறுக்க முடியாது அரசே” என்றார் நிமித்திகர் சூரர். “ஆம், எழுந்த தெய்வங்கள் நிறைவுறாது மண்நீங்கலாகாது. மைந்தரென இங்கு எழவிருக்கும் மூதாதையர் எழுக!” என்றார் சபரர். “எழுக எரி!” என்றார் வேள்வித்தலைவர்.  நெளிந்தாடி எரிகுளத்தில் எழுந்த கரியபேருருவன் “இக்குலத்தின் முதுமூதாதையாகிய கசன் நான். நான் பிறந்தெழும் கருக்கலம் அமையவில்லை. எவர் வயிற்றில் எவர் வடிவில் நான் பிறப்பதென்று அறியாமல் மூச்சுலகில் நின்று தவிக்கிறேன்” என்றான். வெடிப்பொலியுடன் எழுந்த பிறிதொருவன் “ஆம், மூதாதையாகிய தனு நான். இக் கருவறையில் எவரை தந்தையெனக் கொண்டு நான் எழுவேன்?” என்றான்.

2

அவையோர் மூச்சுகள் மட்டும் ஒலிக்க செயலற்று நின்றனர். நான்கு கைகளும் தளர்ந்து விழ ரம்பகரம்பன் பீடத்தில் சரிந்தான். “நிமித்திகர்களே, என் ஒளி எங்ஙனம் வெறும் சொற்களென்றாகியது?” என்று கூவினான். திகைப்புடன் நான்குபக்கமும் கைகளால் துழாவி “அமைச்சர்களே, அருகெழுக! ஆசிரியர்களே,  என் கால்கள் எங்ஙனம் அசைவிழந்தன?” என்று கேட்டான். அவன் உடல் துடித்தது. “என்ன நிகழ்கிறது? எப்படி என் உடல் செயலிழந்தது?”  முழு உயிரையும் திரட்டி அவன் எழுந்தான். “இது வேள்வியல்ல. எங்களை அழிக்கச்செய்யும் வஞ்சம்…” என்று இரைந்தபடி அவிக்கூடையை ஓங்கி மிதிக்க முனைந்தான். அவன் உடல்  நிலையழிந்து ஆடி பேரொலியுடன் மண்ணில் விழுந்து அதிர்ந்து இழுத்துக்கொண்டு விதிர்த்தது. துள்ளிவிழுந்து கைகால்கள் வெவ்வேறாக விலகித்துடிக்க இரண்டாகப்பிரிந்தது.

இரு தேவியரும் பதறி எழுந்து நெஞ்சைப்பற்றியபடி நோக்கி நின்றனர். காலற்ற உடலொன்று ஒருபக்கம் தவித்து மண்ணில் தத்தி விலகிச்செல்ல மறுபக்கம் கண்ணற்ற உடல் கரிய புழுவெனக் கிடந்து நெளிந்தது. “எந்தையரே! அன்னையரே! இவர் இருவர்!” என்று ரக்ஷி‌தை கூவினாள். ஒருகணம் நின்று உடலதிர்ந்தாள். பின்பு  நெஞ்சிலறைந்து அலறியபடி எரிந்தெழுந்த வேள்விப்பெருநெருப்பில் பாய்ந்தாள். “மூத்தவளே…” என்று அலறியபடி  அர்ஹிதை உடன் பாய்ந்தாள். இருவரையும் தழுவி இதழ்குவித்து மேலெழுந்தது எரி. உயிரை அவியெனக்கொண்ட தெய்வங்கள் விண்மீண்டன. தழல் மட்டும் நெளிந்துகொண்டிருந்தது.

முந்தைய கட்டுரைகுருவை ஆராய்தல் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்- என் குரல்