தினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-2

Tamil_News_large_1481446

 

அன்புள்ள ஜெ,

மீண்டும் அற்புதமான கட்டுரை. ‘Column’ அல்லது பத்தி எழுத்துகள் மிகக் கறாரான வரையறைக்குள் செயல்பட வேண்டும். விரிவான தர்க்கங்கள், தரவுகள் ஆகியவற்றுக்குள் செல்ல இடமில்லாததால் ஒரு கருத்தை முன் வைத்து, சிந்தனையைத் தூண்டும் ஒரு குறுஞ்சித்திரத்தையே அளிக்க முடியும். அதை இது வரை வந்த கட்டுரைகள் கன  கச்சிதமாக செய்கின்றன. பிஏகே வின் கட்டுரைகள் கட்டுக் கோப்பு மிக நேர்த்தியானவை.

அமெரிக்க வரலாற்றைப் படிக்கப் படிக்க எனக்கு இந்திய சுதந்திர வரலாறும் ஆரம்பகாலத்தில் ஜனநாயக மரபுகள் உருவாக்கிய விதமும் எனக்கு மிக ஆச்சரியமாக விரிந்தது. உங்கள் கட்டுரை இன்று அதை மீண்டும் செய்தது.

‘நான் வரலாற்றாசிரியன் அல்ல. இலக்கியவாதியாகவும் இலக்கியங்கள் ஊடாகவும் பண்பாட்டு சூழலையும் வரலாறையும் புரிந்து  கொள்பவன்’ என்று ஒரு முறை என் குறிப்பொன்றுக்கு மறுமொழி சொன்னீர்கள் (நம்பூதிரி பதிவு). அது இக்கட்டுரையில் தெளிவாகத் தெரிகிறது.

‘மோக முள்’ படித்த போது என்னை உறுத்தியது இளம் பிராயத்தைக் கடந்த பாபுவும் யமுனாவும் தங்கள் வாழ்க்கையின் எதிர்காலத்திற்கு அனுமதி வழங்குமாறு பெற்றோர் மற்றும் ஏனையோரிடமும் எதிர்பார்த்து நின்றது நம் சமூகத்தில் individualism என்பது மிக சமீபத்திய விழுமியமாகத் தோன்றியது.

பெண்களுக்கென்று பெயர் இல்லாமல் இருந்த காலம் பற்றிய குறிப்பு சிலப்பதிகாரத்தில் கண்ணகி வழக்குரை காதையில் தன்னை அறிமுப்படுத்திக் கொள்வதை நினைவுபடுத்தியது.

ஐரோப்பாவில் கிறித்துவத்தின் கருத்தியலுக்கு எதிராக தோன்றியதே தனி மனிதன் பற்றிய கோட்பாடுகள் என்றுக் குறிப்பிட்டுள்ளீர்கள். பரவலான எண்ணமும் அதுதான். ஆனால் சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று கிறித்துவக் கருத்தியலே தனி மனிதன் பற்றிய கருத்தின் பின்புலம் என்று நிறுவுகிறது. அது ஒரு  தொடர் விவாதம்.

ரோமப் பேரரசின் காலம் பற்றிய புத்தகமொன்று சென்ற வருடம் அதிகம் பேசப்பட்டது (SPQR by Mary Beard). அது போன்ற நூல்கள் ஒரு காலக்கட்டம் பற்றிய செய்திகளைத் தொகுத்து ஒரு பண்பாட்டு சித்திரமாக நமக்களிக்கிறது. அப்படி அளிக்கும் போது எது வித்தியாசமாக முன்னெப்போதும் இல்லாமல் நடந்தது அது எப்படி வருங்காலத்தில் சில நிகழ்வுகள் அல்லது மாற்றத்திற்கு வித்திட்டது என வாசகனுக்கு ஒரு ‘வரலாற்றுப் பார்வையை’ கொடுக்கும்.

எந்தத் தேதியில் தேர்தல் நடந்தது, எந்தக் கட்சிகள் பங்கேற்றன என்பவை தகவல்கள். நீங்கள் எழுதியது ‘வரலாற்றுப் பார்வை’ என்று சொல்லத் தக்கது.

இக்கட்டுரைத் தொகுப்பு மிக முக்கியமான ஆக்கமாகவும், மிக அத்தியாவசியமானதுமாகும்.

அரவிந்தன் கண்ணையன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

தனிமனிதனால்தான் ஜனநாயகம் வாழ்கிறது என்பது ஒரு முக்கியமான கருத்து. உங்கள் மூன்று கட்டுரைகளுக்கும் ஒரே கட்டுரை போலத் தொடர்ச்சி உள்ளது. அதாவது முதல்கட்டுரையில் தலையெண்ணி வாக்குரிமை என்பது எவ்வளவு அரிய செல்வம் என்று சொல்கிறீர்கள். இரண்டாவது கட்டுரையில் நாம் கும்பலாக ஏன் வாக்களிக்கிறோம் என்கிறீர்கள். மூன்றாவது கட்டுரையில் குற்றவாளிகளுக்கு வாக்களிப்பதைப்பற்றிச் சொல்கிறீர்கள்.

மூன்றுமே தொடர்ச்சிதான். நாம் கூட்டமாகத்தான் இங்கே இருந்தோம். சாதியாகவும் மதமாகவும். வாக்குரிமை வந்தது. அந்த வாக்குரிமைக்கு ஏற்ப நாம் இன்னும் வளரவில்லை. வளர விடவில்லை அரசியல்வாதிகள். நம்மைக் கூட்டங்களாகவே வைத்து மேய்க்கிறார்கள். அதுதான் அவர்களுக்குச் சௌகரியம். வாழ்க ஒழிக கும்பலாக இருக்கிறோம். அது நவீனஜனநாயகத்துக்கு உரிய குணம் அல்ல. அது பழங்குடிக்குணம். மந்தைக்குணம். அதைநாம் கடந்துசெல்லவேண்டும். அதற்குப்படிப்பு உதவ வேண்டும். ஆனால் உதவவில்லை என்பதையே இன்றைய இளைஞர்களைப்பார்க்கையில் அறிகிறோம். அதைத்தான் சுட்டிக்காட்டுகிரீர்கள்.

அந்த மந்தை மனநிலை இருப்பதனால்தான் ரவுடிகளைத் தேர்வுசெய்கிறோம். அந்த ரவுடி நம்மவராக இருந்தால் மட்டும்போது. சொந்தவாழ்க்கையில் தனிநபராக நாம் அறம் கொண்டவர்கள். ஆனால் கூட்டமாக  நமக்கு எந்த அறமும் இல்லை. இதுதானே நிதர்சனம்?

மகாதேவன்

 

முந்தைய கட்டுரைதினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-1
அடுத்த கட்டுரைநெல்லும் தண்டபாணியும்