இன்றைய தினமலர் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. தன் தலைவன் ரவுடியாக இருந்தாலும் தன் குடும்பம் அறம் சார்ந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணம் தவறு. ஆனால் பயமாக இருக்கிறது. வெகு தூரம் சென்று விட்டு திரும்பும் வழி கண்ணுக்கு தெரியவில்லை
நம்பிக்கை ஓரமாக இருக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.
நடராஜன்
அன்புள்ள ஜெ
இன்றைய தினமலர் கட்டுரை வாசித்தேன். குற்றவாளிகளை அரசியலுக்குள் கொண்டுவருவதென்பது ஓர் அரசியல் உத்தி, அதை மேலிடம் கட்டுப்படுத்தினால் போதும் என்ற நினைப்பு என்னிடமிருந்தது. ஆனால் உங்கள் கட்டுரை அது குறியீட்டுரீதியாக எவ்வளவு முக்கியமானது என்பதைக் காட்டுகிறது. சுருக்கமான கட்டுரை ஆனால் நேரடியாக நம்மை வந்து தொடுகிறது
இன்றைய இளைஞர்களிடம் பொதுவாகவே ஒரு அத்துமீறி அறமில்லாமல் போகும் தன்மை உள்ளது. அதைத்தான் சினிமாவிலே காண்கிறோம். அதற்கெல்லாம் ஊற்றாக இருப்பது நாம் ரவுடிகளை அரசியலுக்குள் கொண்டுவருவதுதான் என்பதை சொல்லிய கட்டுரை
அருள் .எஸ்
அன்புள்ள ஜெ
நான் நெடுங்காலமாக உங்களை வாசிப்பவன் . தொடர்ச்சியாக நீங்கள் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். ஆனால் தினமலரில் எழுதும் இந்தத் தொடர் மிக உதவியானது என நினைக்கிறேன். ஏன் என்றால் இது மிகச்சுருக்கமாக உள்ளது லட்சம்பேர் இதை வாசிக்கிறார்கள். தேர்தல்நேரம் அரசியலை எல்லாரும் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த விஷயங்கலையும் சேத்து உரையாடினால் நல்லது. நம் பேச்சில் இதெல்லாம் கலந்துவந்தாலே போதுமானது. ஒரு விவாதமாகக்கூட இதெல்லாம் பேசப்படாத நிலைமையை அது மாற்றும் என நினைக்கிறேன்
அருணாச்சலம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
உங்கள் தினமலரின் கட்டுரை வாசித்தேன். அதைத்தான் நான் முதலில் வாசித்தேன். அதற்கு முன்பாக உங்களைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். உங்கள் இணையதளத்தையும் வாசித்தேன். சுருக்கமான கட்டுரை. ஆனால் இணையதளத்திலே கட்டுரைகள் வேறுமாதிரியாக உள்ளன. அவற்றையும் படிக்கவேண்டும். குற்றவாளிகளுக்கு வேறுவழியில்லை என்று நினைத்து வாக்களிப்பதில் உள்ள முக்கியமான குறைபாட்டையும் அறச்சிக்கலையும் சொல்லியிருக்கிறீர்கள். நன்றி
எஸ். சிவலிங்கம்