மலையாளச் சிந்தனையாளர் எம்.கோவிந்தன் கேரள நவீன இலக்கியமறுமலர்ச்சிக்குக் காரணமாக அமைந்தவர். என் கட்டுரைகளில் அடிக்கடி அவரை குறிப்பிடுவதுண்டு. 1919ல் பொன்னானியில் பிறந்தவர். முழுநேர அரசியல் செயல்பாட்டாளராக இருந்தார். கம்யூனிஸ்டுக் கட்சியிலும் பின்னர் எம்.என் ராயின் ரேடிக்கல் ஹ்யூமனிஸ்ட் கட்சியிலும் பணியாற்றினார்.
கேரள சிந்தனையை ஆழமாக பாதித்தவை கோவிந்தனின் நேரடி உரையாடல்கள். கதைகள் கட்டுரைகள் கவிதைகள் என நிறையவே எழுதியிருக்கிறார். சமீக்ஷா என்ற அவரது சிற்றிதழே கேரளத்தில் நவீன இலக்கியத்தை உருவாக்கியது. இன்றைய முதல்தலைமுறை நவீன எழுத்தாளர்கள் பெரும்பாலும் அவரால் தூண்டுதல் கொண்டவர்கள். சுந்தர ராமசாமியும் அவரை தன் வழிகாட்டியாகச் சொல்வதுண்டு
சென்னை ஹாரீஸ் சாலையில் வாழ்ந்த கோவிந்தன் 1989ல் மறைந்தார். அவரது நினைவாக பய்யன்னூர் அருகே ஒரு நாட்டுப்புறக்கலைகளுக்கான மையம் செயல்படுகிறது. திரிச்சூரில் ஓர் ஆய்வுமையமும் செயல்படுகிறது
திரிச்சூர் ஆய்வுமையத்தின் சார்பில் நாளை [10-10-2010] அன்று திரிச்சூர் சாகித்ய அக்காதமி கூடத்தில் நிகழும் ஆய்வரங்கில் ‘தென்னக நாத்திக இயக்கங்கள்’ என்ற தலைப்பின் நான் கோவிந்தன் நினைவுப்பேருரை ஆற்றவிருக்கிறேன். காலை பத்துமணிக்கு நிகழ்ச்சி.