வினவு

தோழர் ஜெயமோகன் அவர்களுக்கு,

இந்த இணைய இணைப்பை உங்களுக்கு அனுப்புகிறேன். உங்களுக்கு சுயபரிசோதனை செய்துகொள்ளவும் உங்கள் அடிப்பொடிகளுக்கு மூக்கு சிந்தவும் இது உதவியாக இருக்கும் என நினைக்கிறேன்

சுந்தர ராமசாமி – ஜெயமோகன் : 12,600 வார்த்தைகள் !

தோழமையுடன்

சாம்

அன்புள்ள சாம்,

எங்களூரில் சாந்தப்பன் என்ற ஒரு பூசாரி இருந்தார். பேயோட்டுவதற்கு அவர் சிறந்த ஒரு வழி வைத்திருந்தார். பாரம்பரியமானதுதான். பேயை நோக்கி கண்டபடி வசைபாடுவது. கற்பனைத்திறனும் சொல்வளமும் கம்பனுக்கு நிகராக இருக்கும். வசையின் அதிர்வால் கண்ணாடிச்சன்னல்கள் எல்லாம் உடையும் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஒருநாள் நள்ளிரவில் கொஞ்சம் எரிப்பன் மாந்தி திரும்பும்காலை சாலையோரமாக ஒரு வெண்ணிறப்பேய்! முக்காடுப்பேயை விரட்ட சாந்தப்பன் பூசையை ஆரம்பித்தார். விடியவிடிய. தொண்டை கட்டியதுதான் மிச்சம். வழக்கமாக இரண்டாவது சுற்றில் எந்த மானரோஷமுள்ள பேயும் சரண் அடைவதே வழக்கம். காலையில்தான் ரகசியம் தெரிந்தது. பேய்மீது பேச்சிப்பாறை 45 கிமீ என எழுதியிருந்தது.

சுரண்டலதிகாரம் மீது குசுவிட்டே அதை துரத்தமுடியும் என்ற கொள்கையுடன் தமிழக அதியதிதீவிர இடதுசாரி இயக்கங்கள் நாவாயுதப்போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்து இப்போது ஐம்பதாண்டுகள் ஆகின்றன. நானும் கடந்த இருபதாண்டுக்காலத்தில் எத்தனை இதழ்களை, துண்டுப்பிரசுரங்களை பார்த்திருப்பேன்.

கல்லூரி நாட்களில் எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் எல்லா இதழ்களையும் வாங்குவார். ‘மச்சி இந்த குரூப்புதான் டாப்பு. அவனுகளோடதிலே இந்தளவு மப்பு இல்லை பாத்துக்கோ’ என்று தரம்பிரிப்பார். இதழை பரபரப்புடன் வாசித்து முடித்ததும் மெல்ல வியர்த்து களைத்து அடங்குவார். முகத்தில் நிம்மதி மிளிரும். உங்கள் இதழ்கள் செய்வது ஒரு மாபெரும் உளவியல் சேவை. வாழ்க.

”பிளருவதே வளருவது” என்ற கொள்கைப்படி ஆங்கில எழுத்துக்களில் அனைத்தையுமே பயன்படுத்தி பிரிவுகள் உங்களுக்குள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. புரட்சியில் இந்தளவுக்கு ஊழலுக்கு வாய்ப்புண்டு, இந்த ஆட்டத்தை விட்டு விலகிய எந்த தலைவருமே ஓட்டாண்டியாக விலகியதில்லை என்ற உண்மையெல்லாம் உள்ளே நுழைந்து கொஞ்சநாளிலே தெரிந்ததும் சிலர் சண்டைபோட்டு பிளந்துசெல்கிறார்கள். உளச்சிகிழ்ச்சை அவர்களுக்கும் தேவையாகிறது.

உங்கள் அழைப்பை ஏற்று இணையதளத்தைச் சென்று வாசித்தேன்.

வாசித்தபோது உங்கள் அதியதிதீவிரங்கள் அப்படியே இருப்பதைக் கண்டு புளகாங்கிதம் அடைந்தேன். [ http://www.vinavu.com/2010/10/05/split/ ] நமது பாரம்பரியப் பண்பாட்டுச்சின்னங்களில் குறைந்தது ஒன்றாவது சிதிலமடையாமல் அப்படியே அதே குணங்களுடன் நீடிப்பதறிந்து நிம்மதி.

விளையாட்டுப்போல அரைநூற்றாண்டு தாண்டிவிட்டது. மூன்று தலைமுறையினர் உள்ளே வந்து பயின்று மதிமுக பாமக என்று செட்டில் ஆகிவிட்டார்கள். எந்த கல்விக்கூடமும் போலவே புதியவர்கள் உள்ளேயும் வருகிறார்கள். இன்று இணையதலைமுறைக்கு எத்தனையோ மன அழுத்தம். உங்கள் வசைசிகிழ்ச்சை தேவையான இடம் இது. வினவு தளத்தை சிலமுறை மேலும் பார்த்தேன். அடாடா, என்ன ஒரு தீவிரம், என்ன ஒரு கச்சிதம். அரசு மானியம் கூட அளிக்கலாமென படுகிறது.

என் வாசகர்களுக்கும் அறிமுகம் செய்கிறேன். அவர்களுக்கும் எத்தனையோ மன அழுத்தங்கள்.

ஜெ

புரட்சி வருகுது!

வசைப்புரட்சி

எனது அரசியல்

வெறுப்புடன் உரையாடுதல்

முந்தைய கட்டுரைலோஸா-2
அடுத்த கட்டுரைகடிதங்கள் இணைப்புகள்