வணக்கம் ஜெ மோ சார்,
உங்களோட இன்னையோட தூக்கம் பத்தின பதிவு படிச்சேன்.
நானும் இந்த தூக்கம் இல்லாம கடந்த சில வருடங்களா அவஸ்தைப் பட்டுக்கிட்டு இருக்கேன். நீங்க சித்ரா மருத்துவ கல்லூரியில் எடுத்த ஸ்லீப் டெஸ்ட் போல நானும் இங்க சென்னையில் ஒரு மருத்துவமனயில் அந்த டெஸ்ட் எடுத்திருக்கேன். எனக்கு OSA – Obstructive Sleep Apnea சோக்கேடுன்னு சொல்லிட்டாவோ.
CPAP ன்னு ஒரு மெசினு , தெனம் ராத்திரி உறங்கும் போது மாட்டிக்கிட்டு தூங்க சொல்லிருக்காங்க. இன்னும் அந்த மெசினு வாங்கல. சரியான முடிவு எடுக்க தெரியல.
அந்த OSA காரணமா எனக்கு ரத்த அழுத்தம் நோயும் இருக்கு, அதுக்கும் தெனம் ரெண்டு மாத்திரை முழுங்கிட்டு இருக்கேன்.
இன்னைக்கு உங்க பதிவு படிச்சா பெறவு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. எனக்கு உங்க அட்வைஸ் வேணும் சார். இந்த நோய்க்கு சித்ரா மருத்துவ கல்லூரியில் நல்ல சிகிச்சை கிடைக்குமா? எந்த மருத்துவர பாக்கணும்? அறுவை சிகிச்சை செய்யணுமா ? இல்ல மூச்சு பயிற்சியில் சரி ஆயிடுமா ?
தயவு செய்து எனக்கு நல்ல பதில் கொடுத்தால் தேவலாம் சார். முடிந்தால் உங்க போன் நெம்பர் கொடுத்தால் கூப்பிட்டு பேசறேன்.
எனக்கும் நாகர்கோயில் தான் சொந்த ஊரு, இப்போ சென்னையில் வசிக்கிறேன். தனியார் கணிப்பொறி நிறுவனம் ஒன்றில் மனிதவள மேலாளர் பணியில் இருக்கேன்.மனைவி, இரண்டு குழந்தைகள். நாலரை வயது மித்ரா , ஒன்னரை வயசு தேவ் கதிர்.
தொந்தரவுக்கு மன்னிக்கணும்!
பின் குறிப்பு: உங்களோட எல்லா வாசகர் சந்திப்புக்கும் வரணும்னு நெறைய ஆசை உண்டு. ஆனா என்னோட குறட்டை சத்தம் ஊட்டி, ஈரட்டி காட்டு விலங்குகளையும் நம்ம வாசக நண்பர்களையும் தூங்க விடாது.
இந்த நோயிலிருந்து ஒரு விடிவு காலம் கெடச்சுதுன்னா கண்டிப்பாக அடுத்த பெண்கள் இல்லாத ஒரு சந்திப்பில் சந்திக்கவேணும். நெறைய சிரிக்கணும் சார்!
நன்றி.
முத்து வளவன்.
அன்புள்ள முத்துவளவன்
ஒரு நிபுணன் என்று அல்லாமல் சொந்த அனுபவம் சார்ந்து சாதாரணமாக எழுதப்பட்ட அக்குறிப்பை வாசித்துவிட்டு வரும் மின்னஞ்சல்கள் ஆச்சரியப்படச்செய்கின்றன.
பலருக்கு அவர்களின் பிரச்சினை என்ன என்றே தெரியவில்லை. அதீதத் தூக்கம் என நினைத்திருப்பவர்களும் இருக்கிறார்கள். உண்மையில் இரவில் சரியான தூக்கம் இல்லாமலிருப்பதனால் பகல் முழுக்க தூக்கக் கலக்கம் இருந்துகொண்டிருக்கிறது. உண்மையில் அது ஆழ்ந்த தூக்கமில்லாமல் இரவை அரைத்தூக்கத்திலேயே கழிப்பதன் விளைவு. எட்டுமணிநேரம் தூங்கியதுபோலத் தோன்றும். ஆனால் தூங்கியிருக்கமாட்டோம். அரைமயக்கத்தில் கனவும் நினைவுகளுமாக ஓடிக்கொண்டிருக்கும். எழுந்ததும் அனைத்தும் மறந்துவிடுவதனால் தூங்கிவிட்டதாக நினைத்துக்கொண்டிருப்போம்
பகலில் எழும்போது உடல் கனமாகவும் சோர்வாகவும் இருந்தால், இமைகள் கனத்து மேலும் தூங்கவேண்டும் என்று தோன்றினால், எங்கு அமர்ந்தாலும் படுக்கவேண்டும் என்று தோன்றினால், அமர்ந்த இடத்திலெயே எப்போதுவேண்டுமென்றாலும் ஐந்து நிமிடங்கள் தூங்குகிறீர்கள் என்றால், பேச்சுநடுவிலேகூட சிலநிமிடத் தூக்கம் வந்து குரட்டை எழுகிறது என்றால், உங்களுக்கு இரவில் ஆழ்துயில் இல்லை என்று பொருள். நீங்கள் தூக்கநோயாளி.
தூக்கமின்மைக்குப் பல காரணங்கள் இருந்தாலும் முக்கியமான காரணம் தூங்கும்போது கழுத்துக்குள் தசைகள் தளர்ந்து மூச்சுப்பாதையை அடைத்துக்கொள்வதுதான். குட்டையான கனத்த கழுத்துகொண்டவர்களிடம் இப்பிரச்சினை அதிகம்
இதில் பலவகைகள் உள்ளன. முதல்நிலையில் எளியபயிற்சிகள் போதும். இரண்டாம்நிலையில் வாய்க்குள் வைக்கும் கிளிப் போன்ற கருவிகள் தேவை. மூன்றாம்நிலையில்தான் இயந்திரம். இயந்திரம் தேவை என்றால் அதை பொருத்தித்தான் ஆகவேண்டும். அதை மருத்துவர்கள் போதிய பரிசோதனைக்குப்பின்னர்தான் சொல்லவேண்டும்
பொதுவாக காதுமூக்கு தொண்டை நிபுணர்கள் இதற்கு சிகிழ்ச்சை அளிக்கிறார்கள் என்றாலும் இதற்கான சிறப்புச் சிகிழ்ச்சை அளிக்கும் இடங்களை அணுகுவதே நல்லது. திருவனந்தபுரம் ஸ்ரீசித்திரா மருத்துவக்கல்லூரியில் மிகக்குறைவான செலவில் சிகிழ்ச்சை அளிக்கிறார்கள்.
ஆனால் ஒரு சிக்கல். வழக்கமாக குடிப்பவர்களுக்கு இப்பிரச்சினை உண்டா என்பதைக் கண்டுபிடிப்பது மிகக்கடினம். அவர்கள் தூங்கும்போது மதுமயக்கம் ஒருவகை ஆழ்துயிலை கொஞ்சநேரத்துக்கு அளிக்கிறது
நேற்று கூப்பிட்ட ஒரு நண்பர் அக்கருவியை வைத்துக்கொண்டால் அதுவே பழகிவிடும் என்று பயந்து அடிக்கடி பயன்படுத்துவதில்லை என்றார். அது மருந்து அல்ல, அடிமைப்படுத்துவதற்கு. அதைப் பயன்படுத்தாமலிருந்தால் வரும் ஏராளமான உடல்நிலைக் கோளாறுகளுடன் ஒப்பிடுகையில் அதைப்பயன்படுத்துவது மிகபெரிய விடுதலை
நான் தூக்கப்பிரச்சினை இல்லாதவன் என்று தெரிந்தாலும் அங்கு சென்றது எனக்கு ஒரு விழிப்புணர்வை அளித்தது. அக்கருவியைப் பல சினிமா பிரபலங்களுக்கு நான் பரிந்துரைத்திருக்கிறேன். தங்கள் நாட்களே பிரகாசமாகிவிட்டன என்று அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்
ஜெ