நெல்லும் தண்டபாணியும்

 

970225_10204195453764858_160073027844960754_n

அன்பின் ஜெ..

 

நெல்லின் ரகசியம் படித்தேன்

நாங்கள் வேளாண்மை படித்த (க.தோ.மு.தோ காலத்தில்), சாகுபடிக்குறிப்புகள்  வேறு மாதிரி இருந்தன.

1. விதை நேர்த்தியிலேயே மோனொ க்ரோட்டொ ஃபாஸ் கலந்து விடும்.

2. மூன்றாம் நாள் களைக் கொல்லி.

3. பின் பூச்சிகளுக்குத் தக்க மருந்துகள் என.

தண்டபாணியின் சாகுபடிக் குறிப்பில் இவை எதுவுமில்லாமல் இருப்பது கண்டேன்.  விதை நேர்த்தியில் உயிர் உரங்களும், பஞ்ச கவ்யா வும் மட்டும் இருப்பது கண்டு மகிழ்ந்தேன். 40-50 ஆண்டுகளுக்கு முன்பு, வேளாண்மை பரிந்துரைகள், கடவுளின் இடத்தில் இருந்து பூச்சி மருந்துகள் உபயோகிப்பை ஊக்குவித்தன.  இன்று, அறிவியல், அவற்றின் எல்லைகளை உணர்ந்து இவற்றைத் தவிர்க்கிறது. இம்மாற்றத்தில், அதிக உபயோகிப்பினால் உருவான தீமைகள் (கஸரகோட் ) , நம்மாழ்வார் எனப் பல காரணிகள் உண்டு என நம்புகிறேன். மிக முக்கியமாக, அறிவியல் இதை உணர்ந்து தவிர்த்திருப்பது மிகவும் ஆரோக்கியமான விஷயம்.

வேளாண்மைக்கென ஆய்வுக் கட்டமைப்பும், தண்டபாணி போன்ற ஈடுபாடுள்ள விஞ்ஞானிகளும்,  மாதவன் போன்ற முனைவோரும் மிக முக்கியமானவர்கள். மாற்றத்தின், மேம்பாட்டின் முதல் தப்படி, மிக அதிகம் சக்தி பிடிக்கும் தப்படி இவர்களது. எனவே இம்முயற்சி முக்கியத்துவம் வாய்ந்தது.

தனது குறிப்பில், ஒரு ஒருங்கிணைந்த பயிர்ச்சத்து நிர்வாகம் எனக் குறிப்பிடுகிறார். அதில் மண்பரிசோதனை முதலிடம் பிடிக்கிறது.  இது மிக முக்கியமான விஷயம் – இயற்கையான வேளாண்மையோ, அல்லது இன்று மரபாகிவிட்ட வேளாண்மையோ, மண்ணைப் பற்றிய அறிவு மிக முக்கியம். அதில் நவீன அறிவியல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.

சென்னையில், கிருஷ்ணமாச்சார்யா யோக மந்திரம் என்னும் நிறுவனம் உள்ளது.  இந்தியாவின் பாரம்பரியமான யோகப் பள்ளிகளுள் ஒன்று.  அங்கே யோகா பயிற்றுவிக்கும் முன்பு, பயில்பவரின் உடல் நிலை பற்றிய  மருத்துவப் பரிசோதனையை அவதானிக்கிறார்கள். பின் அவர்கள் உடல் நிலைக்கேற்ப, யோகப் பயிற்சிகள் மாற்றப்பட்டுத் தரப்படுகின்றன.  அதனால், யோகா வின் நோக்கம் பழுதுபடுவதில்லை

இன்றைக்கும் மிக முக்கியமான பிரச்சினை, மண்ணை அறிந்து செய்யப்படாத வேளாண்மை.

அவரது லாபக் கணக்கு பார்த்தேன். இரண்டு விஷயங்கள்:

1.  ஒரு கிலோ நெல்லின் விற்பனை விலை ரூ. 14.67 எனக் கொண்டிருக்கிறார்.   இது இன்றைய நெல் விலை. ஆனால், இதைத் தீர்மானிக்கும் சக்தி இன்று அரசின் கொள்முதல் கொள்கையினாலும், அடிப்படைத் தேவையினாலும் இங்கே இருக்கிறது. இதைத் தீர்மானிக்கும் சக்தி இன்று தனி உழவனுக்குக் கிடையாது. அரசு தனது கொள்முதல் வேலையை நிறுத்திக் கொள்ளுமெனில், அறுவடை காலத்தில் நெல்லின் விலை என்னாவாகும் எனத் தெரியாது.

2. 3.5 மாதத்தில், ஒரு ஏக்கர் வைத்திருக்கும் உழவருக்கு, 60 ஆயிரம் லாபம் நல்ல விஷயம். நஷ்டத்தில் இருந்து முன்னேற்றம்.

2. ஆனால், லாப நட்டக் கணக்கில், இரண்டு முதலீடுகள் விடப் பட்டுள்ளன. உழவரின் உழைப்புக்கான ஊதியம் மற்றும் நிலத்தின் விலையின் பேரிலான வட்டி.  3.5 மாதங்கள் பயிர் என வைத்துக் கொள்வோம். நிலத்தின் விலை ஏக்கர் 15 லட்சம் என வைத்துக் கொண்டால்,  உழவரின் உழைப்புக்கு மாதம் 10 ஆயிரம் என கணக்கில் கொண்டால், இந்தக் கணக்கு எங்கே செல்லும் என்பதை ஊகிக்க முடியும். அதனால் தான், வேளாண்மையில் நிறுவனங்கள் வருவது சிக்கல். அதனால்தான், என் தந்தை தன் 2.5 ஏக்கர் நிலத்தை விற்று விட்டு, ஈரோட்டில் வீடுகட்டி, வாடகை வாங்கி, தினமும் தொலைக்காட்சியில் நெடுந்தொடர் பார்த்து நிம்மதியாக இருக்கிறார்.

இயற்கை வேளாண்மை என்பது வெறும் பயிர் நுட்பத்தோடு நின்று விட்டால், அது நிச்சயம் நஷ்டத்தில் தான் முடியும். இதை மதிக்கும் நுகர்வோரிடம் எடுத்துச் சென்று, சரியான விலையில் விற்று பணமாக்கும் போது தான் அதுமுழுமையடைகிறது. இதற்கான சந்தை இன்று உருவாகி வருகிறது.  சென்னையில் மட்டுமே 30 க்கும் மேற்பட்ட அங்காடிகள் உள்ளன. அப்படி ஒரு சந்தை உருவாகி வரும்போது, நல்ல விலை, உற்பத்திக் குறைவை ஈடு கட்டிவிடும்.  இது மரபான வேளாண்மைக்கும் பொருந்தும்.

இயற்கை வேளாண் வழியில் நெல்லில் நிச்சயம் அதிக மகசூல் வராது என்கிறார். மறுத்துச் சொல்ல என்னிடம் தரவுகள் இல்லை. சாகுபடி செய்யும் இளங்கோ கல்லாணை போன்றவர்கள் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை,  கிடைக்கும் மகசூலுக்கு நல்ல விலை கிடைத்தால் போதும்.  நாட்டின் தானிய உற்பத்தியைப் பற்றிக் கவலைப்பட என்னை விட அதிக நெஞ்சகலம் கொண்ட பெருந்தலைவர்கள் இருக்கிறார்கள் :)

பாலா

 

அன்புள்ள பாலா

தண்டபாணி என் வாசகர், நண்பர். வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்றபின் தென்கொரியாவில் ஆய்வு முடித்தவர். இயற்கைவேளாண்மை முறையிலும் ஆய்வுகள் செய்தவர். இப்போது கிருஷ்ணகிரி பையூர் ஆய்வுநிலையத்தில் முதுநிலை அறிவியலாளர்.

ஆய்வின் முடிவுகளை வெறுமே ஆலோசனைகளாக முன்வைக்காமல் அவற்றை நேரடியாக விவசாயிகளின் வாழ்க்கையில் பலதளங்களில் நடைமுறைப்படுத்திக்காட்டி வெற்றிகண்டவர்.  வேளாண்மையின் பொருளியலில் நடைமுறைத் தீர்வுகளை கண்டடைந்தவர்.  அவர் எழுதுவது அவரது சொந்த சாதனைகளைப்பற்றி. அடிப்படையான இலட்சியவாதம் கொண்ட இளைஞர்.ஒருவகையில் நம் நாடு தேடும் செயல்வீரகளில் ஒருவர்

முக்கியமாக, ஓர் உண்மையான அறிவியலாளருக்குரிய வகையில் தனக்குத் தெரியாதவற்றைப்பற்றி பேசாதவர். பேசுவனவற்றை அறிவியல்தருக்கத்துடன், சமநிலைகொண்ட மொழியில் கூறுபவர். வெற்றுச் சவடால்களோ எதிர்மறை நோக்கோ இல்லாமல் நடைமுறை சார்ந்த தெளிவுடன்  அவர் செய்துவரும் பணி இன்று மிகத்தேவையான ஒன்று

நீங்கள் சொல்லும் ஒருவிஷயம் என்னால் ஒத்துக்கொள்ளமுடியாதது. இதெல்லாமே ஊகங்கள்தான். அதாவது விவசாயம் அந்நிலத்தின் சந்தைமதிப்பு கூடுவதையும் ஈட்டித்தரவேண்டும் என்று. அதைச் சொல்பவர் விவசாயியின் மனநிலை கொண்டவர் அல்ல

அப்படிப்பார்த்தால்கூட வேளாண்நிலத்தின் மதிப்பு மறைமுகமாக ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. அதன் லாபம் என்பது அந்த அகவிலை மதிப்புக்குமேலே கிடைப்பதுதான்.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைதினமலர் – 3: குற்றவாளிகள் யார்? கடிதங்கள்-2
அடுத்த கட்டுரைகூட்டமோ கூட்டம்