புதிய வாசிப்புகளின் வாசலில்…

WP_20140112_007

வணக்கம் ஜெயமோகன்,

உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் முன்னர், உங்களைப்பற்றிய விமர்சனங்களை கொஞ்சம் அதிகமாகவே வாசித்துவிட்டேன். சிலகாலம் தயக்கமிருந்தது உண்மை. அதற்கான விளக்கத்தை முன் வைக்க இப்போது விரும்பவில்லை.

விசும்பு அறிவியல் புனைகதைகள் எனக்கான உங்கள் எழுத்துக்களின் தொடக்கம். வலசை பறவைகளைப் பற்றிய விசும்பு கதை மிக சிறந்தது எனக்கூறுவேன். கதை முடிவு என்னை மிகவும் ஈர்த்தது.

தொடர்கிறேன்

அன்புடன்

ஜெ.பாண்டியன்

***

அன்புள்ள பாண்டியன்

உண்மையில் என்னைப்பற்றிய எதிர்மறை விமர்சனங்கள் நல்லவை. அவை என்னை அறிமுகம் செய்கின்றன. எதிர்மறை எண்ணத்துடன் வாசிப்பவர்கள் ஓர் இனிய திறப்பை அடைகிறார்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகிவிடுகின்றன

எதிர்மறை விமர்சனங்களால் சிலகாலம் வாசிக்காமல் இருப்பவர்கள் இருக்கலாம். நல்ல வாசகன் ஆக வாய்ப்புள்ள ஒருவன் முற்றிலும் வாசிக்காமல் இருக்கவே மாட்டான். அப்படி இருப்பவர்கள் என்னை வாசித்தாலும் ஒன்றும் தெரிந்துகொள்ளப்போவதில்லை

நல்ல தொடக்கம் அமைக

ஜெ

 

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

தங்களுக்கு நல்ல உடல்நலனைத் தரவேண்டி இறைவனிடம் முதலில் வேண்டிக் கொள்கிறேன். கொற்றவை, அறம் வாசித்த பிறகு தங்களின் மத்தகம், ஊமைச்செந்நாய், காமரூபிணி கதைகளைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொரு கதையிலும் கதைசொல்லிகள் இயல்பாக இருப்பதிலும் நடப்பதிலும் பேசுவதிலும் செய்வதிலும் இயற்கை வர்ணிக்கப்பட்டுவிடுகிறது. ஒருமனிதனின் இயல்பு என்னுள் ஏறிக்கொள்கிறது. ஒவ்வொரு கதாபாத்திரமாகவும் அதிலும் என்னை பாதிக்கும் கதாபாத்திரமாக அதிகமாக மாறி யோசனையில் ஆழ்ந்துவிடுகிறேன். ஒரு எழுத்தாளருக்கு ஒருவரின் இயல்பை மாற்றக்கூடிய வல்லமை இருப்பதாக உணர்கிறேன். மேற்சொன்ன கதைகளைப் படிக்கும்போது நான் என்ன நினைத்தேன்; எனக்கென்ன தோன்றியது என்று கூறிவிடுகிறேன்.

மத்தகம்

பரமு எப்படி கேசவனி்ன் மத்தகத்தில் ஏறி உட்காரலாம்? பரமுவுக்கு என்ன தகுதியிருக்கிறது? தவறு செய்தால் தண்டனை கிடையாதா? கேசவனால் அனைத்தையும் உணரும் ஆற்றல் இருந்தும் பரமுவை ஏற்றுக்கொள்ளும்படி செய்ததன்மூலம் கையாலாகாதத்தனம் மனிதருக்கு மட்டுமல்ல எப்பேர்ப்பட்ட யானைக்கும் உண்டு என்று சொல்ல வருவதைப்போல இருக்கிறது. என் மனம் ஆறவேயில்லை.
ஆனால், சங்கிலியால் பிணைத்தெல்லாம் என்னைக் கட்டிப்போடமுடியாது, அன்பிற்கு மட்டுமே நான் அடிமை என்று சரியாக ஒன்றாம் தேதி இளைய தம்புரானுக்கு தரிசனம் தந்த கேசவனின் சூறாவளி்ப் பயணத்தை மேற்கொண்டு கொட்டார ஊழியர்களின் மத்தியில் ஆசானும், அருணாச்சலம் அண்ணனும், பரமுவும் கதறி அழுததைக் கண்டபோது உண்மையில் என்னால் கலகலவென வாய்விட்டுச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

ஊமைச்செந்நாய்

ஏன் துரைக்கு இவ்வளவு பெரிய தண்டனை கிடைக்க வேண்டும்?  கீழ்க்குடியினரை இழிவுபடுத்திக் கொல்லும் அளவுக்கு வெறுப்புள்ளவன்,  ஊமைச் செந்நாயின் பொறுமையினாலும் சகிப்புத்தன்மையினாலும் அன்பினை உணர்ந்து குற்ற உணர்வுக்கு ஆட்பட்டு சிறிது சிறிதாக மனம் மாறி, அவனை மிக உயர்ந்த இடமாகிய நண்பன் என்ற ஸ்தானத்திலே கொண்டு போய் நிறுத்த விரும்பியவன், தான் சாகும் காலம் வரையில் இத்தண்டனையால் மன்னிப்பு பெற்று எந்த மனிதனையும் தாழ்வாகக் கருதாது அவனுக்கும் தன்னைப்போல மனசு உள்ளது என்று நினைத்துத் தன் வாழ்வை கீழ்க்குடியானவரின் நன்மைக்காக அர்ப்பணித்து ஒரு பெரிய மாறுதல் நடைபெற வழிகோலுவான் என்ற நம்பிக்கையை என் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டுவந்த பிறகுதான் என்னால் துரையை விட்டு நகர முடிந்தது.

காமரூபிணி

திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை நினைப்பதன்மூலம் சொல்வதன்மூலம் அந்த விஷயத்தை நம் ஆழ்மனதில் பதியவைக்கலாம். அல்லது அதன்மீது ஒரு சலிப்போ வெறுப்போ தோன்றும்படி செய்யலாம். முலை, தொடை, புட்டம்….முலை, தொடை, புட்டம் என்று அதையே திரும்பத் திரும்பப் படிக்கும்போது எனக்கே எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் கண்கள் அளவெடுக்கச் சொல்கிறது. பின்பு இதில் என்ன இருக்கிறது, எல்லாருக்கும் இப்படித்தானே இருக்கும் என்று சலிப்பு வந்துவிடுகிறது.
மதிமயக்கும் உறுப்புக்களை பெண்ணிடம் கொடுத்து ஆணை மயக்கி நீ தெய்வமாகிவிடு என்றே பெண்ணுக்கு ஆணை இருக்கிறதோ? எந்தச் சூழ்நிலையிலும் ஆண் பெண் இருபாலரும் ஐம்புலன்களையும் கட்டிக் காத்தால் ஒரு பெண்ணைக்கூட தெய்வமாகவிடாமல் செய்துவிடலாம் என்று நினைக்கத் தோன்றியது.

அவ்வளவுதான். சொல்லிமுடித்துவிட்டேன்.

ஒவ்வொரு கதையும் என்ன கருத்து சொல்கிறது என்று என் இயல்பின் எல்லைக்குள்ளேயே நின்று சிந்திப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. நான் சிந்திக்கும் வழிமுறைகள் நெறியானவையா என்று கூட எனக்குத் தெரியவில்லை. படைப்பூக்கத்தின் தற்செயல், செவ்வியல் என்ற வார்த்தைகளுக்கு அர்த்தமும் தெரியாத வாசகியாக தங்கள்முன் தங்கள் வழிகாட்டுதலுக்காகத் தலைவணங்கி நிற்கின்றேன். மேலும் மேலும் தங்களின் நூல்களைத் தேடித் தேடிப் படிக்க ஆரம்பித்துள்ளேன், சிறந்த வழிகாட்டுதல் இப்படிப்பட்ட உன்னத படைப்புக்களால் எனக்குக் கிடைத்துக் கொண்டிருப்பதால்.

இப்படிக்கு,

தங்களின் அன்பு மாணவி,

பி. மேரி எர்னஸ்ட் கிறிஸ்டி.

***

அன்புள்ள மேரி,

தொடர்ச்சியாக வாசிக்கிறீர்கள் என்பதில் மகிழ்ச்சி. ஒரு கதையை வாசிக்கையில் அது என்ன சொல்கிறது என்று யோசிக்கவேண்டியதில்லை.  நாம் கல்வித்துறை சார்ந்து அப்படிப் பழகிவிட்டிருக்கிறோம். கதைகளை உண்மையில் நடக்கும் ஒரு வாழ்க்கைச்சித்திரமாக எடுத்துக்கொள்ளுங்கள். உண்மையில் அப்படி ஓர்  அனுபவத்திற்குள் நீங்கள் சென்றால் அந்த அனுபவத்திலிருந்து எதை புரிந்துகொள்வீர்கள், எந்த திசைகளில் எல்லாம் சிந்திக்கிறீர்கள் என்று பாருங்கள். அப்படியே கதைகளையும் அணுகுங்கள். அதாவது கதை அளிக்கும் சிந்தனைகள் கதையில் உள்ளவை அல்ல கதையால் உங்களுக்குள் உருவாக்கப்படுபவை மட்டும்தான்

இக்கதைகளைப்பற்றி நீங்கள் எண்ணிச்செல்லும் சிந்தனைகளையும் அப்படித்தான் நான் எடுத்துக்கொள்கிறேன். அவை உங்கள் சிந்தனைகள். உங்களை அவை முன்னெடுத்துச்செல்கின்றன. முழுமை கொள்ளச்செய்கின்றன. இலக்கியத்தின் நோக்கமே அதுதான்

வாழ்த்துக்கள்

ஜெ

 

Untitled

 

 

பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களுடைய புதிய வாசகன் நான். நீங்கள் விரும்பாத முகப்புத்தகத்தில் நீங்கள் விரும்பாத செயல்களை ‘சிந்தனை’ என்று எண்ணி கிறுக்கி கொண்டிருந்தவன். ‘ஒடுக்கப்படுகிறார்களா பிராமணர்கள்’ என்ற கட்டுரை சரியாக 1 வருடம் முன்பு அதே முகப்புத்தகத்தின் வழியாக என்னை வந்து அடைந்தது. எனக்குள் ஓடிக்கொண்டிருந்ததையும் அதற்கும் மேலே நான் சிந்திக்காத எதார்த்த வாழ்வியல் நடைமுறைகளையும் உங்கள் எழுத்தில் கண்டு உங்கள் வலைதளத்தில் விழுந்தேன்.

அதன்பிறகு உங்கள் வலைதளத்தில் குறைந்தது 500 கட்டுரைகளாவது படித்திருப்பேன். ‘காந்தியும் தலித்தியமும்’ ‘உப்பு வேலி’ போன்ற கட்டுரைகளை படித்து, எப்படிபட்ட தீர்க்க தரிசியை நாம் பெற்றிருந்தோம் என்ற உணர்வுடன் காந்தியை நினைத்து கண்ணீர் விட்டிருக்கிறேன். அவர் என்றும் மகாத்மா தான்.

என் பெயர் பாண்டியன் சதிஸ்குமார். வயது 28. நான் தென்கொரியாவில் வசித்து வருகிறேன். மின்னியல் துறையில் ஆராய்ச்சி மாணவன். சொந்த ஊர் மதுரை. தந்தை தெய்வத்திரு.பாண்டியன், தாயார் ராமலக்ஷ்மி. அண்ணன் சங்கர்குரு, தங்கை சங்கீதபிரியா. எங்கள் குடும்பமே தினமணியின் தீவிர வாசகர்கள். எங்கள் ஊர்காரர் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணனின் பசுமை நடையில்  ஆரம்ப காலங்களில் பங்கெடுத்தவன். கடந்த 5 வருடங்களாக மதுரையை விட்டு வெளியே இருப்பதால் என்னால் அதில் தொடர முடியவில்லை.

என்னைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால் ‘கோவில்கள் தனி உடைமை ஆக்கப்பட்டு அவற்றின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்’ என்ற காரல் மார்க்ஸ் -ன் வரியை 8ஆவது பாடப் புத்தகத்தில் படித்து அந்த 13 வது வயதிலயே பித்து பிடித்து அலைந்தவன். அவ்வரிகளை என் பள்ளியில் எந்த இடத்தில் அமர்ந்து படித்தேன் என்பதை இன்று கூட என்னால் காட்டமுடியும் என்றால் அதன் தாக்கம் எப்படி என்பதை புனைவு படுத்தி கெள்ளுங்கள். பெரிய மனக்குழப்பங்களுக்கு பிறகு ‘கடவுள் கோவிலில் இருக்க, கோவிலுக்கு வெளியே ஏன் பிச்சைக்காரர்கள்’ என்ற கேள்வியை  என் மனதிற்கு அளித்து அதையே காரணம் கொண்டு நாத்திகனானேன்.

அதன்பிறகு 12 வருடங்கள் அதாவதுஎன் 25வது வயது வரை நாத்திகம், கம்யூனிசம் இரண்டையும் இரு கண்களாக்கி மட்டையடி தர்க்கங்களில் ஈடுபட்டவன். இதை ஏற்காத மற்ற அனைவரும் அழிக்கப்படவேண்டிய சுயநலக்காரர்களாகவும் அல்லது இரட்சித்து மீட்கப்பட வேண்டிய முட்டாள்களாகவும் மட்டுமே என்கண்களுக்கு தெரிந்தனர்.ஆனால் நீங்கள் குறிப்பிடும் ‘வாசிக்காத கொள்கையாளன்’ அல்ல நான், அதிகமான புத்தகங்களை முடிந்தவரை படித்திருந்தேன். அதைவைத்து தான் அனைத்து விவாதங்களிலும் அகந்தையுடன் தர்க்கத்தை முன்வைப்பேன். ‘பகுத்தறிவு வாதி’ என்ற பட்டத்தை கீழான தற்பெருமையுடன் சுமந்து அலைந்தேன்.

என் நண்பர்கள் மத்தியிலும் என் வீட்டிலும் கூட நான் நாத்திகன் என்று தான் அடையாளப்படுத்தப்  பட்டேனே ஒழிய கம்யுனிஸ்ட் என்று அல்ல. ஆனால் என்னால் எந்த நாத்திகவாதிகளின்  புத்தகத்திற்கு  உள்ளேயும் முழுமையாக சென்று படிக்கமுடிய வில்லை பெரியாரின் எழுத்துக்கள் உட்பட. ஆனால் நான் விழுந்து விழுந்து படித்த கம்யூனிசப் புத்தகங்கள் தான் அதிகம், அவர்கள் கூடத் தான் இருந்தேன், அவர்களுடன் தான் சென்று உண்டியல் குலுக்கினேன், அவர்களின் எளிமை என்னை நொறுக்கி போட்டது. இன்றளவும் கம்யுனிச சித்தாந்தங்களில் அதிக மதிப்பு கொண்டவன் நான். அரசியல் களங்களில் அவர்கள் மரப்பாச்சி பொம்மையாக ஆக்கப்படுகிறார்கள் என்ற வேதனை இன்னும் உள்ளது. அவர்களின் அரசியல் நிலைப்பாடு தவிர்த்து, எளிமைக்காகவும், சிந்தனைக்காகவும் அவர்களின் பாதம் பணியும் மாணவனாக என்றும் இருப்பேன்.

நண்பர் கொடுத்த விவேகானந்தரின் ‘ஞான யோகம்’ என்ற புத்தகம் தான் என் சிந்தையை உலுக்கியது. அதுவரை என் அடி மனதில் இருந்து எழும்பும் கேள்விகளுக்கு நானே முடிந்தவரை நாத்திக பார்வையில் இருந்து பதில் உருவாக்கி வைத்திருந்தேன். (சிறுபிள்ளைத்தனம் என்றாலும் கூட சொல்கிறேன் உயிர், பிறப்பு, இறப்பு, பிரபஞ்சம் போன்றவற்றை பற்றிய கருத்துகளை   நாத்திக சிந்தனையில் முற்றிலும்  ஆத்திகத்திற்கு எதிராக பிற்காலத்தில் ஒரு புத்தகம் எழுதவேண்டும் என்ற எண்ணம் கூட இருந்தது). ஆனால் ‘ஞான யோகம்’ புத்தகத்தில் விவேகானந்தரின் பார்வையே எனக்கு புதியதாக இருந்தது. அது வரை நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் மட்டும் கொடுக்காமல் அதைவிட அறிவுபூர்வமான பல கேள்விகளை கேட்டு கலகம் செய்திருப்பார் விவேகானந்தர். அதன்பிறகு அவரின் ‘எழுந்திரு விழித்திரு’ புத்தகம் 11 பாகங்கள் வாங்கி வெறி கொண்டு படிக்க ஆரம்பித்தேன், மீண்டும் மீண்டும் படித்தேன். அத்வைதத்தால் ஈர்க்கப்பட்டேன், ஆத்திகன் ஆனேன். குருவாக விவேகானந்தரை ஏற்றுக்கொண்டு மீண்டும் இப்பக்கம் நின்று நாத்த்திகர்களிடம் தர்க்கம் புரிய ஆரம்பித்தேன்.

இங்கு தான் நீங்கள் எனக்கு அறிமுகமானிர்கள். உங்களை அப்பா என்று அழைக்க விழைந்ததும் இதனால்தான். நான் என்ன தான் நாத்திகத்திலிருந்து நேர் தலைகீழாக ஆத்திகத்திற்கு மாறினாலும், ’12 வருட மட்டையடி தர்க்க பயிற்சி’ என்னை விட வில்லை போலும், அது என் சிந்தனையில் ஒன்றாக மாறி இருந்தது. நண்பர்களுடன் விவாதம், முகப்புத்தக சண்டை என்று செல்ல செல்ல, ‘ இந்துக்கள் இந்தநாட்டில் கைவிடப்படுகிறார்கள்’ என்ற எண்ணம் என் மனதில் முளைக்க ஆரம்பித்து நீண்ட தூரம் சென்று இருந்தேன். உங்கள் பார்வையில் சொல்லப்போனால் ‘இந்துத்துவா’ பக்கம் சரிய ஆரம்பித்திருந்தேன். ‘அனைத்தையும் ஏற்றுக்கொள்ளும் இந்து பாரம்பரிய மரபு’-க்கும், ‘அரசியல் சுயநலன்களுக்காக பேசும் இந்துத்துவா’ -க்கும் உள்ள வேறுபாட்டை பிரித்தறிய முடியாத இயலாமையில் தான் இருந்துள்ளேன் உங்களை படிப்பதற்கு முன்னால்.   விவேகானந்தருக்கு பிறகு  உங்கள் எழுத்துகளின் உக்கிரம் தான்  என்னை மறுபடியும் நிலை குலைய செய்தது. ‘முரணியக்கம்-அறம்-அகிம்சை’ போன்ற கருத்துகளில் வாசகர்கள் மீது நீங்கள் செலுத்தும் ஆளுமைக்கு நானும் இலக்கானேன். மதுரை பாசையில் சொல்லவேண்டும் என்றால் உறுத்தா, பக்காவா, மிரட்டி விடுறிங்க போங்க…

இந்து மரபை இந்துத்துவாவிலிருந்து பிரித்து பார்க்க உதவியதற்கும், “ஒன்று இங்கு நின்று என்னை ஏற்றுகொள்,  இல்லை என்றால் அங்கு நின்று என்னை எதிர்”  என்ற இரு நிலைப்பாடுகளை தாண்டி முரணியக்கம் மூலம்  நமக்குரிய இடம்நோக்கி புதிதாக சிந்திக்க வைத்ததிற்கும், காந்தியின் அகிம்சையை அவரின் எளிய சித்திரத்தை கொண்டே ஆழ்மனதில் பதிய வைத்தமைக்கும், நாவல் படிப்பதே வெட்டி வேலை என்று கருதி வெறும் கட்டுரைகளைமட்டுமே படித்து கொண்டிருந்த எனக்கு, அகம் நோக்கி பேசும் மெல்லிய படைப்பாக நாவலை அறிமுகம் செய்ததற்கும், அறம் சிறுகதை எழுத்தாளர் ‘அப்பா ஜெயமோகன்’ அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள்.

(தங்களின் ‘செவ்வியல்’ நாவலான விஷ்ணுபுரம்  தற்பொழுது தான் இருமுறை படித்து முடித்தேன். அவற்றை பற்றி கடிதம் கடிதம் எழுதுவேன், சற்று அவகாசம் வேண்டும். கொஞ்சம் சிந்தை செய்ய வேண்டி உள்ளது, சில பக்கங்களை மீண்டும் படிக்க வேண்டும் என்று உள்மனம் சொல்கிறது. கொற்றவையை ஆரம்பித்து விட்டேன்.  என்னவோ, வெண்முரசு  படிக்க மனம் ஏங்குகிறது)

தங்கள் நலம் விரும்பும்

பாண்டியன் சதிஷ்குமார்

தென்கொரியா

***

அன்புள்ள சதீஷ்குமார்

வாசிக்கும்பழக்கம் உள்ள எல்லா இளைஞர்களும் வரும் வழிதான். முதலில் மரபுக்கு, தந்தைக்கு எதிரான ஒரு கலகம். அதன் பின் சில அடிப்படைக்கேள்விகள். அதன்பின் சுயத்தைக் கண்டடையும் பயணம்.

இந்த வழியில் ஏதேனும் ஓர் அடையாளத்தை வலிந்து ஏற்றுக்கொண்டு, அதை சுமந்து அலையும்போதுதான் வழி மூடிக்கொள்கிறது. தொடர்ந்து வாசிக்காமல் எளிய கருத்துக்களுடன் முன்னால் செல்லும்போது ஆளுமையே சிறுத்துவிடுகிறது

தொடர்ந்து வாசிக்கிறீர்கள். உங்கள் வழி தெளிந்து வரும், வாழ்த்துக்கள்

ஜெ

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8
அடுத்த கட்டுரைகொல்லிமலைச் சந்திப்பு -கடிதங்கள் 2