தினமலர் – 1 ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-1

Tamil_News_large_1481446

 

இன்றைய (19.3.2016) தினமலர் தேர்தல் களம் பக்கத்தில் தங்களது கட்டுரை பார்த்தேன். நல்ல கட்டுரை. வோட்டுக்காக யாரோ தரும் பணத்திற்கு ஆசைப்படும் பெண்கள் ஏற்படுத்தும் ஒழுக்கம் சம்பந்தமான அதிர்ச்சி முற்றிலும் உண்மை. வோட்டுக்காக மட்டும் ஏற்பட்டதல்ல இந்த தாழ்வு என்பதே உண்மை. எப்படியாவது பணம் வேண்டும் என்ற அவா பெருகி வருகிறது. ஒரு அரசு அலுவலகத்தில் ஒரு பெண் ஊழியர் லஞ்சம் கேட்டதை அளித்து விட்டு அந்த நண்பர் என்னிடம் ‘கொஞ்சம் கூட கொடுக்கிறேன்னா அந்த அம்மா படுக்கவே வருவாங்க போல இருக்கே’ என்றார்.

இத்தகைய இழிவுநிலை இங்கே மிக மெதுவாகவும் உறுதியாகவும் நிலைபெற்றுக் கொண்டிருக்கிறது. பணம் மட்டுமே காரியம் சாதிக்கவல்லது என்ற நிலை மாறினாலொழிய, பணத்தை மட்டுமே சார்ந்த சமூக அமைப்பு முறை மாறினாலொழிய இழிநிலை இயல்பான நிலையாக மாறுவதைத் தடுக்க இயலாது. பணம் என்ற ஒரு சக்தி பரிமாற்ற உதவிக் கருவிக்கு பதிலாக ஏற்கத்தக்க ஒரு செயலி நடைமுறை, முன்னர் இருந்த பண்ட மாற்று போல, மனிதனுக்கு மனிதன் மட்டுமே தேவை என்ற அடிப்படையில் ஒரு மாற்று சமுதாயம் அமைய வேண்டும். இப்போது இது பிதற்றலாக இருக்கலாம். ஆனால் மனிதர்களிடையே பரஸ்பர உறவு பலப்படவேண்டிய அவசியம் விரைவில் உணரப்படும். அப்போது கட்டாயமாக பணத்தின்பலம் குறையும். அதுவரை இலஞ்சம் என்பது கவுரப்பிச்சை என்பதையும் விபசாரத்திற்கிணையானது என்பதை ஒரு வெகுஜன கருத்தாகப் பரப்புவதே இப்போதைய ஒழுக்கச் சரிவின் வேகத்தைக் குறைக்க உதவும்.

அன்புடன்,

கிரிதரன் பிரான்

மடிப்பாக்கம் மூவரசம்பேட்டை.

***

அன்புள்ள ஜெ,

தினமலரில் தேர்தல் குறித்த உங்கள் கட்டுரை படித்தேன். மட்டற்ற மகிழ்ச்சி. சில நாட்களுக்கு முன்பு தான் நண்பர் நிர்மலுடன் பேசிக் கொண்டிருந்த போது திமுக நடத்திய “திருமங்கலம் பார்முலா” என்பது மிகப் பெரிய ஜனநாயகப் படுகொலை என்றுக் கூறிக் கொண்டிருந்தேன். ஒரு தேர்தலை விலைக்கு வாங்குவதென்பது ஒரு ஜனநாயக நாட்டில் மிக வெட்கக்கேடானது மட்டுமல்ல மிக அபாயகரமானதும் கூட. பணம் கொடுத்த அப்போதைய ஆளுங்கட்சியை விட பணம் வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம் என்று ஒத்துழைத்த வாக்காளர்கள் ஒரு சமூக வீழ்ச்சியின் அடையாளமே.

நண்பரிடம் சொன்னேன் அமெரிக்காவில் ஒவ்வொரு குடிமகனும், குறிப்பாக கறுப்பினத்தவர்கள், ஓட்டுரிமையை பொக்கிஷமாக எண்ணுவர் ஏனெனில் அதற்கு கொடுத்த விலை அதிகம். அப்பிரிக்க-அமெரிக்கர்கள் தங்கள் ஓட்டுரிமையை மிக மிக உயரிய உரிமையாக, ஏனைய உரிமைகளின் ஆதாரமாக, நினைப்பர். ஒரு ஜனநாயகப் படுகொலையை என்னமோ விஞ்ஞானப் பார்முலா ரேஞ்சிற்கு அதற்குப் பெயர் வேறு கொடுத்தார்கள். இவையெல்லாவற்றினுக்கும் மேலாக இந்தக் கீழ்மையை அமெரிக்க தூதரக அதிகாரியிடம் விலாவாரியாக விளக்கி வேறு சொன்னார்கள். அந்த அதிகாரி இப்படி தமிழகத்தில் நடக்கிறதென்று அமெரிக்காவிற்கு தகவல் அனுப்பியது விக்கிலீக்ஸ் வெளிவந்த போது தெரிய வந்தது.

திமுகவின் வேட்பாளர் நேர்காணல் என்று ஸ்டாலினின் நேர்காணல் வெளியானது. உடனே திமுக அனுதாபிகள் “பார்த்தீர்களா திமுகவில் மட்டும் தான் இப்படி உட்கட்சி ஜனநாயகம் இருக்கின்றது” என்று பூரிப்படைந்தனர். எனக்கு அருவருப்பு தான் வந்தது. துரைமுருகன் “இதெல்லாம் கண் துடைப்பு, நீ ராஜா வீட்டு கன்றுக் குட்டி உனக்கு இல்லாததா” என்ற தொனியில் ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தார், ஏனையோரும் இந்த கண்துடைப்பில் அவரவர்க்கு உரிய பங்கினை மகிழ்ச்சியோடு செய்தனர்.

அதிமுகவில் இந்த பம்மாத்து எல்லாம் கிடையாது. என்னைப் பொறுத்தவரை “ஆமாம் எங்கள் கட்சியில் ஜனநாயகம் கிடையாது” என்று வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் அதிமுகவே மேல். ஜனநாயகம் என்ற பெயரில் கண்துடைப்புகள் கடைவிரிக்கப்படும்போது அது அந்த கருதுகோளையே கேலிக்குரியதாக்குகிறது. அது தான் ஆலகால விஷம்.

அரவிந்தன் கண்ணையன்

***

அன்புள்ள திரு ஜெயமோகன்,

இன்றைய தினமலரில் உங்கள் கட்டுரை (’ஜனநாயக ஒழுக்கம்’)  படித்தேன். நன்றாக இருக்கிறது.

கர்நாடகா, ஆந்திரா போல் இல்லாமல் தமிழ் நாட்டில் பெண்கள் ஓட்டுக்குத் தயங்காமல் பணம் வாங்கிக் கொள்வது நியாயப்படுத்தக் கூடிய செய்கை இல்லைதான். ஆனாலும் ஒன்று சொல்கிறேன். வீட்டு வேலை செய்யும் பெண்கள் கூட “ரண்டு கட்சியிலும்தான் குடுக்கறாங்க. வாங்கிப்போம். ஆனா நாங்க யாருக்குப் போடணுமோ அவங்களுக்குத்தான் போடுவோம்” என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் பாகுபாடும் ஓட்டுக்குப் பணம் வாங்குவதை சரி என்றாக்காது. ஒருவேளை தமிழ் நாட்டில் பொதுப் பணம் மிக அதிகமாகக் கொள்ளை போவதாக எண்ணி, ‘அடித்த கொள்ளை பூராவும் உங்களிடமே இருக்க வேண்டாம். எங்கள் பணம் எங்களுக்கும் துளியாவது வந்து சேரட்டும்’ என்று தமிழ் நாட்டு ஆண்களும் பெண்களும் தேர்தலின் போது நினைக்கிறார்களோ?

அன்புடன்,

ஆர். வீர ராகவன்

வழக்கறிஞர், சென்னை

பி,கு; தமிழிலும் ஆங்கிலத்திலும் ப்ளாக் எழுதுகிறேன். அம்புஜம் பாட்டி அலசுகிறாள்: மல்யா மகாத்மியம், கன்னையா, என்னையா சொல்றீங்க? Behind the National Herald Case, Lies a Tragedy ஆகியவை நான் சமீபத்தில் வெளியிட்டவை. ப்ளாக் விலாசம்;rvr-india.blogspot.in. உங்களுக்கு நேரம் கிடைத்துப் பார்த்தால் மகிழ்ச்சி, நன்றி.

***

அன்புள்ள எழுத்தாளருக்கு,

வாக்களிக்கும் உரிமை வந்த 60 ஆண்டுகளில் பணம் பழகப்பட்டது எப்படி? ஊழல் அந்த ஒழுக்கத்தை உதைத்து தள்ளிவிட்டதே, அது எப்படி? அரசியல் பணத்தை ஊரே பங்கிட்டுக்கொள்ளும் படிப்பினை வந்தது எப்படி? பணத்தின் பின்னே ஓடவைத்து விட்டனர்! பணத்தின் நற்பணிகள் பின்தங்கி விட்டது. இதோ ஒரு சோறின்பதம்:இந்த ஊரில் எட்டுகழிவறைகள் கட்டிக்கொள்ள 4 ஆண்டுக்கு முன் ONGC நலன்நல்கிய பணம் 4.6 லட்சத்தை தட்டிக்கேட்கவேண்டிய ஊராரே ஊத்தி மூடிவிட்டனர் என்றால் எந்த ஊடகமும் என்ன செய்யமுடியும்? ஊடகம் சமுக விழிப்புணர்வை நோக்கிப் பயணிக்கிறதா? இல்லை அரசியல்பழி (தீர்க்கும்) உணர்வை நோக்கியா?

இவண்
மங்கள நாதன்.

கட்டுரை இணைப்பு

1-ஜனநாயக ஒழுக்கம்

முந்தைய கட்டுரைமரபை மறுஆக்கம்செய்தல்
அடுத்த கட்டுரைதினமலர் – 1: ஜனநாயக ஒழுக்கம் கடிதங்கள்-2