அழியாக்கனவு

 

v
இனிய ஜெயம்,

விஷ்ணுபுரம் நாவல் மற்றொரு புதிய பதிப்பாக வரும் தருணம் இது. வெய்யோன் முடிந்த இடைவெளியில் விஷ்ணுபுரம்தான் புரட்டிக் கொண்டிருக்கிறேன். இன்றும் பிரமிப்பு குறையாத ஆக்கம்.
அந்த நாவலை முதன் முதலாக கைக்கொண்ட தினங்களை இன்று நினைக்க மனமெல்லாம் தித்திப்பு. அன்றெல்லாம் அதை எப்போதும் கையில் காவிக்கொண்டே திரிவேன். தூங்குகையில் தலைமாட்டில் விஷ்ணுபுரம் இருக்கும் [அதன்மேல் என் கண்ணாடி] . விழித்ததும் ஏதேனும் பக்கத்தை புரட்டி ஒரு வாசிப்பு.நிகழ்த்துவேன். அதே புத்தகத்தைதான் இன்றும் வாசிக்க வைத்திருக்கிறேன். பக்கங்கள் எல்லாம் காக்கி வண்ணம் ஏறி, புரண்டு புரண்டு இரு மடங்கு தடித்து , பார்க்க பாவமாக இருக்கிறது.

கைகளில் கலைத்துத்தரப்பட்ட ரூபிக் க்யூப் போல ஒரு வடிவம். கலைத்து அடுக்கும் உத்தியில் கிட்டத்தட்ட ஐந்தாம் நூற்றாண்டு துவங்கி பதினைந்தாம் நூற்றாண்டு வரையிலான காலம் பகுக்கப்பட்டு செறிவுபடுத்தப்பட்டு நாவலுக்குள் அடுக்கப்படுகிறது . நாவலின் மொழிபின் வழியே அவற்றை ஒரு காலாதீத பாவனை ஒன்று தொகுக்கிறது. ஒரு இலக்கியப் பிரதி ஒரு காலகட்டத்தை சேர்ந்த வரலாறாக மாறும்போது பழகிப் பழகி அதன் வடிவ உத்தி காலாவதி ஆகிறது. ஆனால் விஷ்ணுபுரம் எங்கோ ஒரு புள்ளியில் இந்த இடரலை தாண்டுகிறது. அத்தனை பழைய இத்தனை தர்க்கப்பூர்வமான சதுரங்க ஆட்டம் இன்னும் வசீகர ஆட்டமாக விளங்க என்ன காரணமோ அதே காரணம்தான் விஷ்ணுபுர நாவலின் வடிவத்திலும் இலங்குகிறது என்று தோன்றுகிறது. இன்பினிட்டி[அலகிலாதவை] என அதை வகுக்கலாம்.

பலமுறை உங்களுடன் இதுகுறித்து பேசி இருப்பினும், பேசிச் சலிக்காதது இது. ஆம் விஷ்ணுபுர விவாத சபை. மொத்த நாவலிலும் ஏனோ இது எனக்கு மிக மிக பிடித்த பகுதி. இன்று வாசிக்கையில் அந்த சபையில் விவாதிக்கப்படும் ஒவ்வொரு தரிசனத்தையும் பவதத்தர் விஞ்சும் புள்ளியும் , பவதத்தரை அஜிதன் விஞ்சும் புள்ளியும், மேலும் துலக்கம் பெறுகிறது. சபை விவாதங்களுக்கு இணையாக அந்த சபையின் ஆளுமைகள் நிகழ்த்தும் சோத்துச்சண்டை, அதே சபையில் அமர்ந்திருக்கும் சுடுகாட்டு சித்தனும், அவன் சீடனான சிறுவனும் எச்சில் குப்பையில் உணவு தேடுவது, பவதத்தரின் மகனான விஷ்ணுததன் சுடுகாட்டு சித்தனாக மாறி, பவதத்தர் பட்டமாக சுமக்கும் ஞான அதிபன் என்ற தகுதியை, சுய ஆளுமையாக அடைந்து ,தெருவில் கிடந்து சாவது, அஜிதன் சூழல் கைதியாகி தனது ஆத்மீகப் பயணத்திலிருந்து வீழ்வது என எத்தனை எத்தனை வாழ்வுகள்., நாவல் நெடுக;நீலமூப்பன் உட்பட] வித விதமாக தோற்றம் கொள்ளும் விஷ்ணுவின் பேரழகான தோற்றம் ஒன்று இந்தப் பகுதியில்தான் வருகிறது. சித்தனும் சிறுவனும் காணும் நீர் பிம்பத்தில் கருவில் குழந்தையாக புரளுகிறார் விஷ்ணு. இன்று வாசிக்கும் வெண் முரசின் பல உணர்வு நிலைகளின் விதை விஷ்ணுபுரம். குறிப்பாக பவதத்தரும் அஜிதனும் நேர் கொள்ளும் இடம். பவதத்தரை வென்று அஜிதன் அடைவது என்ன? பவதத்தர் அதுவரை சுமந்த பாரத்தைத்தானே. எனில் பவதத்தர் தோற்கடிக்கப்பட்டாரா அல்லது தன் மகனே போல் என மயக்கும் அஜிதன் முன் தோற்றாரா? சபையில் அஜிதன் இறுதியாகப் பேச எழுவதிலேயே அஜிதனின் வெற்றி பாதி உறுதி ஆகி விடுகிறது. சைவ ஞானியும், நாகனந்தரும் எப்படி தருக்கப் பிழை, செய்தார்கள் அதை பவதத்தர் எவ்விதம் தூண்டி அவர்களை சிக்க வைதார் என முன்பே அஜிதனுக்கு பாடம் கிடைத்து விடுகிறது.
பவதத்தர் முக்கியமாக இரண்டு கேள்விகளை நோக்கி தரிசன விவாதங்களை நகர்த்துகிறார். ஒன்று காணும் இப் பிரபஞ்சம், இப் பிரபஞ்சமாக ஆன பிறகு, இதன் ஆதி காரணம் என்னவாக எஞ்சுகிறது? இரண்டு இந்தப் பிரபஞ்ச அறிதலை அடையவேண்டும் என மனிதனுக்குள் எழும் இச்சை அதே பிரபஞ்ச காரணத்தின் செயல் திட்டமா? உண்மையில் இந்த இரு கேள்விகளுக்கும் பவதத்தரின் வேதாந்தமும் தர்க்கப் பூர்வமாக பதிலளிக்க இயலாது.
ஆகவேதான் எந்த தரிசனத்தின் மையமும் கவித்துவமாகவே உள்ளது. கவிதையை நோக்கி நகரும்தோறும் தர்க்கம் காலிடறும் என்றே ஒரு வரி விவாத சபையில் வருகிறது. அஜிதன் செய்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், பவதத்தர் விட்ட அம்பை, தடுக்கவோ ஏற்க்கவோ செய்யாமல் அதை அவரை நோக்கியே திருப்பி விடுகிறான். குறிப்பாக வேதாந்தம் முன் வைக்கும் மாயையை , பொருட் தொகுதி என ஒன்றில்லை இருப்பதெல்லாம் நிகழ்தலே என அஜிதன் நிறுவும் போதே பவதத்தரின் சரிவு துவங்கி விடுகிறது.


அங்கேயே உதாரணமாக பேசப்படும் பால் அதிலிருந்து மோர் எனும் உதாரணத்தை எடுத்துக் கொண்டால், வேதாந்தம் பால் அதிலிருந்து மோர் என வினை விளைவு கோட்பாட்டை படிநிலையாக வைக்கிறது. அஜிதனோ பௌத்தம் வழியே அதை தர்க்கப்பேரார்வமாக மறு ஆக்கம் செய்கிறான். இருப்பதெல்லாம் நிகழ்வே, பால் பார்த்துக் கொண்டிருக்கும் அதே கணம் மோராகவும் மாறிக் கொண்டிருக்கிறது. முற்ற முடிவான பால் என்றொரு அலகு இல்லை என்கிறான். இங்கே பின்வாங்கும் பவதத்தரை தொடர்ந்து தாக்கி பின் நகர்த்தி, அவர் கேட்கும் கேள்வியை அவருக்கே அளிக்கிறான். சத் வடிவான அந்த ஆதி காரணத்தை, மாயா வடிவான மனிதன் எப்படி அறிந்தான்? அந்த மாயா வடிவான மனிதனின் சத்தை அறிய வேண்டும் என்ற இச்சையை ஏன் அந்த சத் மர்ம்மமாக்கி வைத்தது. பவதத்தர் விழிகளில் சர்ப்ப நா சொடுக்க பின்வாங்குகிறார். வேதாந்தம் உருவகித்த விஷ்ணு என்ற கவிதைக்கு ஈடாக அல்லது மேலாக அஜிதன் கால தரிசனம் என்ற கவிதையை நிறுவுகிறான்.
விஷ்ணுபுரம் பிறிதொன்றிலாத தன்மையை எய்தக் காரணம், அதன் பேசு பேசுபொருள். மொத்த நாவலையும் ஆத்மீக சாதகர்களீன் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் என வகுத்து விடலாம். அஜிதன் மெய்மையை தேடும் பாதை வேறு. திருவடி பிங்கலன் தேடும் பாதை வேறு. அஜிதன் தேடித் தேடி தேடியது கிடைக்கப் போகும் தருணம் மொத்தமாக இழக்கிறான். திருவடி எதையும் தேடவில்லை. தலைக்கு மேல் மின்சாரக் கம்பி அறுந்து விழுவது போல அது அவன் மேல் விழுகிறது. மெய்மையை அஜிதனும் பிரசேனரும் விஷ்ணுதத்தனும் தேடும் விதம் வேறு படுவது போல, மெய்மையை ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்ளும் குணமும் மாறுகிறது. திருவடிக்கு இசையாக, பிங்கலனுக்கு காமமாக, சித்தனுக்கு இன்மையாக, அனைத்துக்கும் மேல் ”அதுவாகவே” இருக்கும் சோலைப் பைத்தியம்.
ஒவ்வொரு தரிசனமும் மார்க்கமாக வளர்ந்து என்ன என்ன நிலையில் இருக்கிறது என வரும் பிரளய காண்டம். காலியாகிக் கொண்டிருக்கும் திருவடி மடம். தாந்த்ரீகமாக வளர்ந்து நிற்கும் பிங்கலனின் தரிசனம்.பிங்கலனின் வழி வந்த குரு, வனத்துக்குள் ஒரு குகைக்குள், தனது துரியத்துக் கன்னியை துளித்துளியாக தியானத்தில் கண்டெடுத்து வடித்த ஓவியத்தின் முன் அமர்ந்து செய்யும் தியானம்,மற்றும் பத்மன் பிரளயதேவியை புணரும் கனவு இப்போதும் யூனிக்கான ஒன்றான புதுமை குன்றாத அமானுடசுவை குறையாமல் இருக்கிறது [வெண் முரசில் இதற்க்கு மேலும் தீவிரமான பல இடங்கள் இருந்தும்]. அஜிதனின் ஸ்தூபியை காண வாழ்வையே அடகு வைத்த யோக விரதர், சிதைந்து கிடக்கும் ஸ்தூபியை கண்டதும், அடையும் தவிப்பு, விஷ்ணுபுரம்பேசும் ஆத்மீக தவிப்புகளில் இது இணையற்ற ஒன்று.
முன்பு ஒரு பதிவில் விஷ்ணுபுரத்தில் பெண்களின் ஆத்மீகம் என்னவாக இருக்கிறது என்று வினவி இருந்தேன். இன்று வாசிக்கையில் விஷ்ணுபுரத்து மாந்தர்களின் அத்தனை ஆளுமையையும் வடிவமைப்பது அதில் இலங்கும் பெண் பாத்திரங்கள்தான் என்று தெரிகிறது. பெண்கள்தான் அந்த நிலத்தின் நிலை சக்தி. மீண்டும் மீண்டும் வாசிக்கையில் ஒரு எல்லையில் நாவலில் அனைத்தும் எழுந்து எழுந்து விழுகிறது. மாறாக நீலியின் சித்திரம் மட்டும் எழுச்சி மட்டுமே கொண்டதாக அமைகிறது.

இன்று வாசிக்கையில் இந்த நாவலின் வடிவம், அதனளவில் கொண்டிருக்கும் தத்துவ பலம் ஆச்சர்யம் அளிக்கிறது. விஷ்ணுபுரம் எனும் கதையை ஹெமந்தன் எனும் பாணன் பாடி முடித்ததும் மீண்டும் வசந்தன் எனும் பாணன் பாடுகிறான்.வசந்தன் முடித்ததும் க்ரீஷ்மன் பாடுகிறான். விஷ்ணுபுரம் எனும் பிரதியின் மையமே பௌத்த வேதாந்த தரிசன மையங்களின் முரண் இயக்க சாரம்தான். பௌத்த தரிசனப் படி இந்த பிரபஞ்ச லீலை என்பது மீண்டும் மீண்டும் தோன்றி மறையும் அலகிலா விளையாட்டு தானே அதையே விஷ்ணுபுரமும் தனது வடிவாகக் கொள்கிறது. விஷ்ணுபுரத்தில் ஒரு எல்லையில் அனைத்தும் துல்லியமாக இருக்கிறது, [ராஜ கோப்ர லிப்ட் போல] மறு எல்லையில் அனைத்தும் குழம்பிக் கிடக்கிறது சித்தன் காணும் பாதாள கிணற்று நீரின் பிரதிபலிப்பு போல, பௌத்தம் இருப்பதெல்லாம் சுழற்சிதான் அதன் மையம் என ஏதும் இல்லை அது ஒரு இன்மை என்கிறது. வேதாந்தம் இருப்பதெல்லாம் மையம்தான் சுழற்சியாகக்த் தோற்றம் தருவது மாயை என்கிறது. ஒரு எல்லையில் இரண்டும் சரி. மற்றொரு எல்லையில் இரண்டும் தவறும் கூட. விஷ்ணுபுரம் தனது சித்தரிப்பில் இந்த தத்துவங்களின் வசீகத்தைக் கொண்டுள்ளது.

இன்னும் எழுத என்னென்னவோ உள்ளே முட்டுகிறது, மொழிதான் சித்தன் குளத்தில் காணும் ராஜ கோபுரம் போல குழம்பத் துவங்கி விட்டது. மொத்தத்தில் இன்றும் வசீகரம் குறையாத கனவு விஷ்ணுபுரம்.
கடலூர் சீனு

 

முந்தைய கட்டுரைதினமலர் – 2: தனிமனிதனின் அடையாளக்கொடி கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு