அசோகமித்திரன்-கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன்;

வணக்கம்.
திரு.அசோகமித்திரன் அவர்கள் குறித்த பதிவு படித்தேன் இப்படி யோசிக்க தோன்றியது.

நான் சென்னையிலிருந்து தில்லிக்கு வந்து ஆறு மாதங்கள் கழித்து தில்லியின் கடுங் குளிர் மாதமான ஜனவரியில் பல தொடர் மன்றாடல்களின் பலனாக விடுமுறையில் ஊர் திரும்பி இருந்தேன்.
அந்த நேரத்தில் ஒரு நாள் இரவில் உணவு உட்கொண்டு இன்னும் இரண்டு நாட்களில் விடுமுறை முடியப் போவதை குறித்து யோசித்தபடியே மாடியில் உலவிக்கொண்டிருந்த போது மனம் மிகவும் அடங்கி ஒரே நிமிடத்தில் பளு குறைந்து விட்டதாக தோன்றியது.

இந்த வீட்டின் மாடியில் ஒரு ஆயிரம் முறை நடந்திருப்பேன் அன்றைய இரவில் உண்ட அதே தயிர் சாதத்தையும் வற்றல் குழம்பையும் எத்தனையோ முறை உண்டிருப்பேன் அனால் அன்றைக்கு அவை அத்தனைக்கும் ஒரு அசாதாரணமான அர்த்தமும் வார்த்தைப்படுத்த முடியாத ஆனந்தத்தில் மனம் திளைத்துக் கிடந்தது.

ஒரு வேளை ஆறு மாத விலகலுக்கு பிறகு நிகழ்ந்த இந்த வருகை தான் அந்த ஆனந்தத்தின் காரணமோ?

அதே அனுபவத்தை அசோகமித்திரன் அவர்களின் சிறுகதை தொகுப்பை சென்ற ஆண்டு படித்து முடித்த போது என்னால் மீண்டும் அடைய முடிந்தது.

குறிப்பாக ஒரு சிறுகதை பெயர் நினைவிலில்லை குடிகார நண்பனின் கைவிரல் கதவிடுக்கில் மாட்டிக் கொண்டு காயம் பட்ட போது அவனை வைத்தியத்துக்கு அழைத்து செல்லும் போது அந்த நண்பர்களுக்கு இடையிலான உரையாடல் அந்த நண்பனின் பதில் மறக்க முடியவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் இதை நினைவு கூற வைத்தமைக்கு நன்றி.
அன்புடன்

சந்தோஷ்

அன்புள்ள சந்தோஷ்

நலம்தானே?

அசோகமித்திரனின் அந்தக்கதை ஜி.நாகராஜனைப்பற்றியது என ஒரு இலக்கியநம்பிக்கை உண்டு ‘இனிமே எழுதவே முடியாது’ என்ற அந்த புலம்பல்…

சிலசமயம் இலக்கியவாதிக்கும் நமக்கும் இடையேயான உறவென்பது மிக அந்தரங்கமானது -வகுத்துக்கொள்ள முடியாதது

ஜெ

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் ஆட்கொள்ளல் கட்டுரை வாசித்தேன். அசோகமித்திரன் என்னும் மகத்தான் எழுத்தாளருக்கு நீங்கள் செய்ததுபோலவே அனுதினமும் பாதம் தொட்டு வணங்க வேண்டும் என்று எனக்கும் தோன்றுவதுண்டு. தீவிர இலக்கியம் இத்தனை எளிமையாகவும் எழுதப்பட முடியுமா என்று நான் வியந்ததுண்டு. அவர் கதைகள் ஒவ்வொன்று வாசிக்கும் போதும் கதை சொல்லும் ஒரு பலவீனமான மனிதனின் சித்திரம் மனதில் தோன்றி விடுகிறது. அவரது பிரயாணம் கதை பற்றி நான் எழுதியுள்ளது இங்கே:
நன்றி

ஜெகதீஷ் குமார்.
மாலத்தீவுகள்

http://jekay2ab.blogspot.com/2010/07/blog-post_17.html

அன்புள்ள ஜெகதீஷ்,

அசோகமித்திரனின் மிகச்சிறந்த கதைகளில் ஒன்று அது. ஒரு கொடுங்கனவுபோன்ற கதை

ஜெ

முந்தைய கட்டுரைகிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2
அடுத்த கட்டுரைகாந்தியும் நோபல் பரிசும்