நகைச்சுவை,காந்தி ,நம்மாழ்வார்- கடிதம்

116

அன்புள்ள ஜெயமோகன்,
வேலை பளு காரணமாகச் சில நாட்கள் தள்ளிப் போய்விட்டது இந்தப் பதில்.
முதலில் ஈரட்டி சிரிப்பு: அந்தப் புகைப்படங்களைப் பார்த்த போது வித்தியாசமாக இருந்தது. என் வீட்டில் தங்குமாறு அழைத்த போது நீங்கள் “நான் நகைச்சுவையாகப் பேச விரும்புபவன்” என்று சொன்னீர்கள். அப்படித்தான் 48 மணிநேரமும் கழிந்தது, இடையிடையே சீரியஸ் பேச்சுகள் இருந்த போதும். You are a very easy person to host and you have very few needs, if any. என் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் நாம் தொலைபேசியில் பேசிய போது நான் சொன்னேன்”நீங்களும் உங்கள் மனைவியும் மிக மகிழ்ச்சியாகவும் ஒருவித intimacy தெரியும் வண்ணம் இருக்கும் புகைப்படங்களைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறதென்று”. என்ன இருந்தாலும் ‘pursuit of happiness’ என்பதைக் கொண்டாடும் நாட்டின்குடி மகனாயிற்றே நான். :-). அமெரிக்கா உண்மையிலேயே மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஊர். முக்கியமாக நாம் பொதுவாகத் தலைவர்கள், வாத்தியார்கள் ஆகியவர்கள் சாதாரணர்களாகவும் நகைச்சுவை அனுபவிப்பவர்களாகவும் நினைப்பதில்லை.
நான் அமெரிக்கா வந்தது 1998-இல். 2000-ஆம் ஆண்டுப் பில் கிளிண்டன் பங்குப் பெற்ற ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி பரவலாகப் பேசப்பட்டது. ஒவ்வொரு வருடமும் வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி பற்றிய செய்திகளைச் சேகரிக்கும்செய்தியாளர்கள் ஒரு கோலாகலமான நிகழ்ச்சியை நடத்துவார்கள். அந்நிகழ்ச்சியில் ஒரு comedian எல்லோரையும் சகட்டுமேனிக்கு வறுத்தெடுப்பார். எதிர்க்கட்சி, ஆளும் கட்சி, தலைவர்கள், ஜனாதிபதி என்று யாரும் விலக்குக் கிடையாது.முடிவில் ஜனாதிபதியே ஒரு பத்து நிமிடத்திற்குத் துணுக்குகளை அள்ளி வீசுவார். பில் கிளிண்டனின் ஆட்சியின் கடைசி நிகழ்ச்சியில் கிளிண்டன் தன் ஓய்வு நாள்கள் பற்றி, எப்படிச் சாமானியனாக வாழ்வது என்பது பற்றி வெளுத்துக்கட்டினார். ஜார்ஜ் புஷ்ஷும், ஒபாமாவும் நல்ல டைமிங் சென்ஸோடு காமெடி செய்பவர்கள். இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது சுய எள்ளல் இதில் முக்கியமாக இருக்கும். சமீபத்தில் தன் தம்பிக்காகப் பிரசாரம் செய்ய வந்த ஜார்ஜ்புஷ் தன் ஓய்வு நாட்களில் எழுதிய இரண்டு புத்தகங்களைக் குறிப்பிட்டு “ஹ்ஹ்ஹ்ம்ம்ம் எனக்குப் படிக்கவே தெரியாதென்று நினைக்கும் பலருக்கு நான் புத்தகம் எழுதியது ஆச்சர்யமாக இருக்கும்” என்றார். இது ஒரு கலாசாரம்.

அதன் இன்னொரு பக்கம் அமெரிக்கர்கள் தங்கள் ஜனாதிபதிகள் பெருந்துயர் நிகழ்வுகளில் கண்ணீர் சிந்தினால் அதையும் வரவேற்கிறார்கள். சொமாலியாவில் இருந்து பிணமாக வந்த அமெரிக்கப் படை வீரர்களின் சடலத்தைப் பெற்றுக்கொண்ட கிளிண்டன் அழுதார், 9/11 போது புஷ், ஒரு பள்ளியில் சிறுவர்கள் கொல்லப் பட்டதை நினைவு கூர்ந்த போது ஒபாமா கண்ணீர் உகுத்தார். அல் கோரின் தேர்தல் சம்பந்தப் பட்ட தீர்ப்பு அவருக்கு எதிராக வந்த போது அவர்அழுதாரா என்று CNN நேர்காணல் செய்பவர் கேட்டார். ஆமாம் அழுதேன் என்றார் அல் கோர்.
வரலாற்றெழுத்து பற்றி நீங்கள் விவாதித்ததாக ஒரு கடிதம் குறிப்பிட்டது. சலபதி எழுதிய “கவிஞனும் காப்புரிமையும்” புத்தக விமர்சனத்தை எழுதி விட்டு எனக்கு வரலாற்றெழுத்து பற்றி விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியது.சலபதியின் அந்தப் புத்தகத்திலும் சரி அவர் ஜெயகாந்தன் பற்றி எழுதிய ஒரு கட்டுரையிலும் வரலாற்றாசிரியரிடம் இருக்க வேண்டிய கவனமும், சொற் தேர்வும், சில இடங்களில் ஒரு அஜாக்கிரதையோடு கையாளப் பட்டதைக் கண்டேன்.BA Tamil literature படித்தவர்கள் எல்லாம் இலக்கியவாதியல்ல, வரலாற்றில் பட்டம் பெற்றதாலேயே ஒருவர் வரலாற்றாசிரியரும் கிடையாது. இங்கே வெகு ஜன தளத்தில் நிகழும் வரலாற்றெழுத்துப் பல்வகைப் படும் அவற்றில் மிகச் சிலவகைகளே நம்மூரில் நடக்கிறது. பார்பரா டக்மேன் ஒரு வகை, புகுயாமா போன்றோர் ஒரு வகை, ஹண்டிங்டன் போன்றோர் ஒரு வகை, Mary Beard ஒரு வகை. தாபரும், நீலகண்ட சாஸ்திரியும் J.B. Bury, V.A. Smith வகையில்எழுதுபவர்கள்.

நம்மாழ்வாரரும் காந்தி பற்றிய அவதூறும்: அது என்ன உங்களுக்குக் கடிதமெழுதியவர் அடைப்புக் குறிக்குள் ‘நண்பர்’ என்று குறிப்பிடுகிறார்? (‘நண்பர்’ அரவிந்தன் கண்னையன்). படித்த மாத்திரத்தில் எனக்கு முரண்பாடு இருப்பது போல்தோன்றியது ஆகவே பதிவிட்டேன். ஆச்சர்யம் நான் பதிவிட்ட அடுத்த நாளே உங்களிடம் கோள் சொல்லிவிட்டார்கள் :-). நான் அவ்வப்போது நீங்கள் ஆமோதித்தும் பதிவிடுவதுண்டு. சுகிர்த ராணி என்பவரின் கவிதையைப் பேஸ்புக்கில்படித்து விட்டு நீங்கள் பேஸ்புக் பெண்ணியவாதிகள் குறித்து எழுதியது நினைவுக்கு வந்தது. சற்றே கடுமையான சொற்கள் ஆனால் அவர் கவிதையைப் படித்து விட்டு அது தான் நினைவுக்கு வந்தது.
நம்மாழ்வாரின் சதி வலை நம்பிக்கைகளைப் பற்றி மேலும் சொல்வதற்கு முன். உங்களுடைய “இன்றைய காந்தி” புத்தகத்தை வேறு சில தமிழ் நூல்களுடன் சமீபத்தில் வாங்கினேன். அக்கட்டுரைகளை உங்கள் தளத்தில் படித்திருந்தாலும்ஒரு புத்தகமாகப் படிக்க வேண்டுமென்று வாங்கினேன். அது வந்து சேர்ந்த இரண்டு நாட்களுக்குள் நண்பர் போகன் பேஸ்புக்கில் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அக்காணொளியில் அம்பேத்கர் “காந்தி ஒரு ஏமாற்றுக் காரர் அவரைப்பற்றி எழுதிய பலருக்கும் ஆங்கிலம் மட்டுமே தெரியும் என்பதால் அவரின் குஜராத்தி எழுத்துகளில் பரிச்சயமில்லை. காந்தி ஆங்கிலத்தில் சமத்காரமாகவும் மேன்மையாளரகாவும் தோன்றும் கருத்துகளை எழுதி விட்டு வேற்று மொழியில்அவரின் உண்மையான கீழ் தரமான எழுத்துகளை எழுதினார் ஆனால் அது பலருக்குத் தெரியாது” (எனும் பொருள் வரும் பேச்சு அது). போகன் மற்றவர்கலைப் போல் காந்தி வெறுப்பாளர் அல்ல (என்றே நினைக்கிறேன்). “இல்லை இதுஉண்மையில்லை. காந்திக் காலத்திலேயே அவர் மிகக் கடுமையாக விமர்சிக்கப் பட்டார் அதுவும் நம்மூர் ஆட்களாலேயே, அவர்களில் பலருக்கு இரு மொழிப் புலமையுண்டு. காந்தியை எதெதற்காகவோ தூற்றியவர்களுக்கு அவர் இப்படிஒவ்வொரு மொழியிலும் ஒவ்வொரு முகம் காட்டியிருந்தால் சும்மா விட்டிருப்பார்களா” என்றேன். விவாதம் தரவுகள் தேவை என்று நீண்டது. “குற்றச்சாட்டை ஆதாரமில்லாமல் வீசி விட்டு அதை மறுப்பவர்களிடம் தரவுகள் வேணுமென்றால்எப்படி. நடக்காத ஒன்றை நடந்ததாகக் கூறி விட்டு அப்படி நடக்கவில்லையென்று குற்றம் சாட்டப் பட்ட தரப்பு நிரூபிக்க வேண்டுமென்பது தர்க்க முறையல்ல. மேலும் இவ்விஷயத்தில் inferential ஆக அப்படி நடக்கவில்லை என்று தான்அதிகப் பட்சம் சொல்லலாம் இப்போதைக்கு” என்று முடித்துக் கொண்டேன்.

மனித மனம் சதிகளை நாடும், எளிதில் நம்பும். இங்கே இப்போது நடக்கும் அதிபர் தேர்தலில் நான் அதை அதிகம் காண்கிறேன். மேலும் சில நம்பிக்கைகள் அல்லது சார்புகள் தொகுப்புகளாகவே நடக்கும். முதலாளித்துவத்தின் மேல்சார்புடையவர்கள் தனி மனித சுதந்திரத்தை போற்றும் நிலைக் கொள்வார்கள். வில் டுரண்ட் ஹெர்பர்ட் ஸ்பென்ஸர் பற்றிய கட்டுரையில் ஒரு முக்கியமான கருத்தை முன் வைப்பார். மனித அறிவு வகைமைப் படுத்தித் தொகுத்துக்கொள்வதையே விரும்பும். அத்திறன் இல்லையெனில் நம் அன்றாட வாழ்வு சிக்கலாகிவிடும். காந்தியத்தில் பற்று என்று ஒருவர் சொன்னால் அவரின் மற்ற சார்பு நிலைகளை யூகிக்கலாம். சிறு தொழில் ஈடுபாடு, பெரு நிறுவனங்கள் மீதானநம்பிக்கையின்மை, இந்திய மரபு வைத்திய முறைகள் என்று பட்டியலிடலாம்.
மேற்சொன்னவைகளின் இன்னொரு முகம் தான் தமிழ்ப்பற்று, தமிழ் தேசியம், பிராமண எதிர்ப்பு, திராவிட அரசியல் என்று கலந்துக் கட்டிய ஒரு கூட்டு நம்பிக்கை. இயற்கை முறைகள், விவசாயத்திலும் மருத்துவத்திலும், பற்றிய நம்பிக்கைக்கொண்டவர்களுக்கு உலகமே மாபெரும் வணிகச் சூழ்ச்சி வலையைப் பின்னி தங்களைச் சிறைப் பிடிக்கிறது என்ற எளிய நம்பிக்கையுண்டு.
பல புதிய வாசகர்களோடு உரையாடி நீங்கள் மகிழ்வாக இருப்பது காண மகிழ்ச்சி.

அன்புடன்

அரவிந்தன் கண்ணையன்
http://contrarianworld.blogspot.in

அன்புள்ள அரவிந்தன்

‘நண்பர்?’ என்று எழுதியிருக்கவேண்டும் என நினைக்கிறேன்.
இங்கே சிரிப்பதைக் கண்டு பெரும்பாலானவர்களுக்கு ஓர் ஒவ்வாமை வருகிறது. ஏனென்றால் சிரிப்பு என்பதே ‘ஓட்டுவது’ என்றுதான் இங்கு பொருள். பலவீனமான ஒருவரை, கூட்டத்தில் இல்லாதவரை கேலிசெய்துகொண்டே இருப்பதுதான் இங்கு நகைச்சுவை. ஆகவே எவரேனும் சிரித்தால் எவரை கேலிசெய்கிறார்கள் என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது.
காந்தியைப்பற்றிய அவதூறுகளை கவனித்தால் ஒன்று தெரியும். சம்பந்தப்பட்டவர்கள் எத்தனை விளக்கம் சொன்னாலும், எத்தனை ஆதாரம் காட்டினாலும் ஏற்கத்தயாராக இருப்பதில்லை. ஏனென்றால் காந்தியை அவதூறு செய்வதன் வழியாக அவர்கள் தங்களுக்குள் இருந்துகொண்டு தங்கள் செயல்களை விமர்சிக்கும் ஒழுக்கவாதி ஒருவரை கொல்ல முயல்கிறார்கள்.

காந்தியை எளிதாகக் கொன்றுவிடமுடியாது என்பதையே நூறாண்டுக்கால வரலாறு காட்டுகிறது

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும். ஒரு கேள்வி
அடுத்த கட்டுரைஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-1