அன்புள்ள ஜெயமோகன்,
நலமா? சென்ற முறை இந்தியா வந்திருந்த போது உங்களைச் சந்திக்க விருப்பமிருந்தும் என்னுடைய தயக்கத்தால் அது முடியாமல் போய்விட்டது. இருந்தாலும் ஊரில் சும்மா உட்கார்ந்திருக்கப் பிடிக்காமல் நான் நாகர்கோவில் வரை வந்திருந்தேன். உடனடியாக அடுத்த அரை மணி நேரத்தில் மதுரைக்குப் போகிற பேருந்தில் ஏறித் திரும்பிவிட்டேன்.என்றைக்காவது ஒரு நாள் சந்திக்காமலா போய்விடுவோம்? :
ஆறேழு மாதங்களுக்கு முன்னால் நாகர்கோவில்-மதுரை பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். பேருந்தினுள் நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு குடிகாரர் சலம்பல் செய்து கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் பஸ்ஸிலிருந்தவர்கள் தாங்க முடியாமல் தூக்கிப் போட்டு மிதிக்கத் தயாரான சமயத்தில் அவரை என்னருகில் அழைத்து உட்கார வைத்துக் கொண்டேன். மலையாளம் கலந்த கொச்சைத் தமிழில் விடாமல் பேசிக் கொண்டே வந்தார்.
அவர் பேசுவதை முழுமையாக என்னால் புரிந்து கொள்ள முடியாமல், “நீங்கள் மலையாளியா?” என்றேன்.
“நான் நாடாராக்கும்…” என்று பதில் சொன்னார்.
“நீங்கள் மலையாளியா என்று கேட்டால் சம்பந்தா சம்பந்தமில்லாமல் சாதியைச் சொல்கிறீர்களே?” என்றேன் எரிச்சலுடன்.
“ஒவ்வொரு இந்தியனின் அடிமனதிலும் சாதி ஒரு ஆற்றைப் போல ஓடிக்கொண்டிருக்கிறது” என்று மலையாளம் கலந்த கொச்சைத் தமிழில் பதில் சொன்னார்.
என்னை நிரம்பவும் யோசிக்க வைத்த வாக்கியம் அது. சுய சாதி அபிமானம் எனக்கில்லையா என்ன? நிச்சயமாக இருக்கிறது. அதேசமயம் இது உயர்ந்த சாதி, அது தாழ்ந்த சாதி என்று வேற்றுமை பார்க்காமல் எல்லா சாதிக்காரர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கும் பக்குவமும் எனக்கிருக்கிறது. அந்த மனோபாவத்தை எனக்குள் வளர்த்ததற்கு என்னுடைய தகப்பனாருக்குத்தான் நான் நன்றி சொல்லவேண்டும்.
என்னுடைய சாதிக்காரன் யாராவது தனிப்பட்ட முறையில் என்னிடம் உதவி கேட்டால் நிச்சயமாக என்னால் இயன்றதைச் செய்வேன். அதே சமயம் அலுவலகத்தில் என் கீழ் என்னுடைய சாதிக்காரன் ஒருவன் வேலை செய்தால், சாதி அபிமானத்துடன் அவனுக்கு பதவி உயர்வோ அல்லது வேறு நன்மைகளோ நிச்சயமாக செய்து தரவே மாட்டேன். அங்கு தகுதிக்கும், திறமைக்கும்தான் முதலிடம். அங்கு சாதி எனக்கு ஒரு பொருட்டே அல்ல.
ஆனால் இந்தியச் சூழ்நிலையில் அப்படி நடப்பதில்லை. ஒரு அலுவலகத்தில் பணிபுரிகிற ஒவ்வொருவரும் உங்கள் சாதி குறித்த விவரங்களை அறிந்தே இருப்பார்கள். அது தமிழர்கள் நிறைந்த அலுவலகமாக இருந்தால் இன்னும் மோசம். தனிக் குழுக்களாக பிரிந்து ஆளாளுக்கு அடித்துக் கொண்டிருப்பார்கள். அலுவலக வேலையை விடவும் சாதிக் குமைதல்கள், பொச்சரிப்புகள், நச்சரிப்புகள் நம்மை வேலை செய்ய விடாமல் பைத்தியம் பிடிக்க வைக்கும். இதிலிருந்து தப்பிப் பிழைத்திருப்பது பெரும் சாதனைதான். அப்படி இருப்பவர்களையும் எனக்குத் தெரியும்.
என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய பிராமண நண்பரும், தாழ்த்தப்பட்ட நண்பரும் ஒன்றுதான். அங்கு சாதிக் காழ்ப்பு வருவதனை நான் விரும்புவதில்லை. ஒரு சாதிக்காரர் இன்னொரு சாதிக்காரரைக் குறித்து தாழ்வாகப் பேச விடுவதில்லை என்பதனைத் தொடர்ந்து கடைப்பிடித்து வந்திருக்கிறேன். அப்படி இல்லாதவர்களுடன் முரட்டுத்தனமாக வெட்டிக் கொண்டு போவது என்னுடைய வழக்கம்.
எனவே இன்னும் இரு நூறு வருடங்களானாலும் இந்தியாவை விட்டு, இந்தியர்களை விட்டுச் சாதிகள் மறைவது நடக்கப் போவதில்லை என்பது என்னுடைய தனிப்பட்ட, உறுதியான எண்ணம். சாதி இந்தியர்களின் டி.என்.ஏ.வுடன் கலந்துவிட்ட ஒன்று. மதம் மாறினாலும், ஊரை விட்டு கண்காணாத இடத்திற்கு ஓடினாலும் சாதி உங்களைத் துரத்திக் கொண்டே இருக்கும். எனவே மறைய வேண்டியது சாதிகள் இல்லை. மறைய வேண்டியது, மாற வேண்டியது உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்கிற சாதிக்காழ்ப்பு மனோபாவம்தான்.
நான் சாதியே பார்ப்பதில்லை என்று முற்போக்குக் கூச்சல் இடுபவனை கொஞ்சம் சுரண்டிப் பார்த்தால் அவன் எல்லாரையும் விட பெரும் சாதிக் காழ்ப்பு பிடித்தவனாகத்தான் இருப்பான் என்பதே என் அனுபவம். இன்றைய திராவிடக் கட்சிகளே அதற்கு உதாரணம். சாதியை ஒழிக்கப் போவதாக மேடைக்கு மேடை முழங்குபவனே சந்தேகமில்லாமல் பெரும் சாதி வெறியன். இந்த ஐம்பது வருடத்தில் திராவிட புண்ணாக்கர்கள் சாதி பேதத்தை ஒழிக்க என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். நான் சொல்வது உங்களுக்குப் புரிய வரும். அதையும் விட ‘சாதியை ஒழிப்போம்’ என்று முழங்குபவன் பகல் கனவு காண்கிறவன். அப்படிக் கனவு காண அவனுக்கு உரிமை இருக்கிறது.
இன்னதென்று புரியாத வயதில் எங்கள் கிராமப்பகுதிகளில் நடந்த சாதிக் கொடுமைகளைப் பார்த்து வளர்ந்திருக்கிறேன். முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் போக்குவரத்தோ, தகவல் தொடர்பு சாதனங்களோ, தொழில்களோ இல்லாத தென் தமிழ் நாட்டு கிராமங்களில் பெரும்பாலான நிலம் அந்தந்த ஊரிலிருந்த நான்கைந்து பேர்களிடம் மட்டுமே இருந்தது. விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மொத்த ஊரும் அவர்களைச் சார்ந்திருந்தது. அந்த அடுக்கில் தாழ்த்தப்பட்டவர்கள் மிகவும் கடைசி அடுக்கில் இருந்தார்கள். சாதிக் கொடுமைகளைச் சகித்தே ஆக வேண்டிய கட்டாயம் இருந்தது. எதிர்த்தால் கிடைக்கிற அரை வயிற்றுக் கஞ்சியும் இல்லாமல் போய்விடும். பெரும்பாலோர் அந்த ஊரிலே பிறந்து, அங்கேயே வளர்ந்து பின்னர் அங்கேயே இறக்க விதிக்கப்பட்டிருந்தார்கள்.
இன்றைக்கு நிலைமை அப்படி இல்லை. போக்குவரத்தும், கிராமப் பொருளாதாரமும் முன்னேறியிருக்கிறது. வறுமையும், அறியாமையும் தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் குறைந்திருக்கிறது. அரசியல் ரீதியாகவும் அவர்கள் பலம் பெற்றிருக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணமாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சொல்லலாம்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு தமிழ் நாட்டுத் தாழ்த்தப்பட்டவர்களில் வரமும், சாபமுமானதொரு அமைப்பு. முன்பைப் போல தாழ்த்தப்பட்டவர்களைக் கொடுமை செய்ய முடியாது. அதனைத் தட்டிக் கேட்க அவர்களுக்கென்று ஒரு அமைப்பு இருக்கிறது என்பது ஒரு வரம். அதற்கு கட்டைப் பஞ்சாயத்தும், ரவுடித்தனமும் செய்யும், அப்படிச் செய்ய அப்பாவி தாழ்தப்பட்ட இளைஞர்களைத் தூண்டிவிடும்
தொல்.திருமாவளவன் தலைவராக இருப்பது அந்த அமைப்பின் சாபம். கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் விடுதலைச் சிறுத்தைகள் நடத்தும் ரவுடித்தனத்தையும், வன்முறையையும் நேரில் கண்ட பிறகே இதனைச் சொல்கிறேன். அதற்காக பா.ம.க. ராமதாஸ் உத்தமர் என்று அர்த்தமில்லை. அல்லது ஏதாவது தேவர் சாதிக்காரத் தலைவர் உலக மகாஞானி என்றும் நான் சொல்ல வரவில்லை.
இன்றைக்கு அரசியல் கட்டமைப்பு கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் மனசாட்சியுள்ள, தனது சமுதாய முன்னேற்றத்திற்கான, தன் பின்னால் வரும் தாழ்த்தப்பட்ட இளைஞர்களுக்கு நல்லதொரு முன்னேற்றப்பாதையைக் காட்டும் ஒருவரைத் தங்களின் தலைவராக அடையாதது துரதிருஷ்டம்தான். ‘வன்னியப் பெண்ணின் வயிற்றில் சக்கிலியன் குழந்தை வளரவேண்டும்’ அல்லது வேறு சாதிப் பெண்களை தாழ்த்தப்பட்டவர்கள் மணக்கவேண்டும் என்று அப்பாவிகளை உசுப்பேற்றி விடுவதால், ‘அடங்க மறு’ என்று அவர்களை வன்முறையாளர்களாக, அராஜகம் செய்யும் கூட்டமாக மாற்றுவதால் தாழ்த்தப்பட்ட சமுதாயம் வளர்ந்துவிடப் போவதில்லை என்பதனை திருமாவளவன் உணரவேண்டும்.
தாழ்த்தப்பட்டவர்களின் பிரச்சினைக்கு முக்கிய காரணம் திராவிடக் கட்சிகள்தான் என்பதனை திருமா நன்றாகவே அறிவார். ஆனாலும் அவர்களை விட்டு விலக அவர் மறுப்பது ஆச்சரியம்தான். நூறு வருடங்களுக்கு முன்புவரையிலும் தீண்டத் தகாதவர்களாக இருந்த நாடார்கள் இன்றைக்கு பொருளாதாரத்தில் பெரும் சக்தியாக உருவெடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு யாரும் அவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று விலக்கி வைப்பதில்லை. எனவே தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக, கல்வி கற்றவர்களாக மாற்றும் ஒரு தலைவர் கிடைக்கும் வரைக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு விடிவு காலம் இல்லை என்பதுதான் யதார்த்தம்.
பல கோடி மக்கள் வாழ்ந்தாலும், இந்திய சமுதாயங்கள் சாதி என்னும் கண்ணுக்குத் தெரியாத மாயவலையால் பின்னப்பட்டிருக்கிறார்கள். அதனை விட்டு விலகுவதென்பது அத்தனை எளிதில்லை. நேற்றுவரை தன் முன் கைகட்டி நின்ற தாழ்த்தப்பட்டவன் இன்றைக்கு காரிலும், பைக்கிலும் செல்வதனைப் பார்க்கும் தமிழ் நாட்டுக் கிராமவாசி எரிச்சலைந்திருப்பது கண்கூடு. அதற்காக தாழ்த்தப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வேண்டாம் என்று சொல்லவில்லை. அவ்வாறு முன்னேற அவர்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. அதேசமயம் நான் இருப்பைச் சொல்கிறேன். தன்னுடைய மகள் ஒரு தாழ்த்தப்பட்டவனுடன் ஓடிவிட்டாள் என்பது கிராமப்புறத்து அவமானம். அந்தப் பெண்ணைப் பெற்றவன் பிறகெங்கும் தலை நிமிர்ந்து நடக்கவியலாது. சமூக கட்டுப்பாடுகள் அப்படி.
நீங்கள் மறுக்கலாம். ஆனால் அதுவே உண்மை. ஏற்கனவே ‘ஆண்ட’ இனமாகத் தூண்டி விடப்பட்டிருக்கும் எதிர் சாதிக்காரன் தன்னுடைய மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள எதுவும் செய்யும் நிலைக்குத் தள்ளப்படுகிறான்.
நகர்ப்புறங்களில் இந்த நிலைமை மாறியிருக்கிறது. நல்ல பணியில் இருக்கும் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்த ஒருவன் பிற சாதிப் பெண்ணை எளிதாக மணக்க முடிகிறது. ஆரம்பத்தில் முரண்டு பிடிக்கும் பெற்றோர் பின்னர் மெல்ல, மெல்ல சமாதானமடைவதனைக் காணலாம். ஆனால் தமிழக கிராமப்புறங்கள் அப்படியல்ல. தடாலடிகள் அங்கு செல்லுபடியாவதில்லை.
அடுத்த நூற்றாண்டில் எல்லாம் மாறிவிடக்கூடும் என்று நினைக்கிறேன் :)
பி எஸ்.நரேந்திரன்
எண்ணி எண்ணிப் பார்க்கிறேன் …தாங்க இயலவில்லை தனியார் நிறுவனமொன்றில் மேலாளராக இருக்கிறேன் .
இந்த கொடுஞ்செயலுக்கு facebook -இலும் WhatsAPP -இலும் நேரடியாகவோ மறைமுகமாகவோஎழுப்பப்படும் ஆதரவையும் அதன் ஊற்றான சாதிய வக்கிரத்தையும் ..கண்டு மனம் தாள வில்லை.
இரண்டு நாட்களாக தூக்கமில்லை .
அலுவலகத்தில் பேசி பேசி மாய்கிறேன்.அந்த செயலை விட அதிகம் கலவரப்படுத்தியது,அருவருப்பு உண்டாக்கியது BE MBA ME படித்த, அமெரிக்காவில் செட்டில் ஆகிய சக ஊழியர்களின் ஆதரவுப் பின்னூட்டங்கள் ..
எங்கே செல்கிறோம் …? மிகச்சரியாக சொன்னீர்கள் …நாம் நம் நோயைக்கண்டுபிடிக்கவே இல்லை அல்லது கண்டுபிடிக்க விரும்பவில்லை…!!
தாம் ஆதிக்க சாதி என்ற எண்ணத்திற்கு இத்தனை கொலைவெறி வருமென்றால் ,”மனிதம்” என்ற, அறம் என்ற எண்ணத்திற்கு எத்தனை வெறி வரவேண்டும். இவர்களை Encounter செய்தால் என்ன..???
-பிரதீப் ராஜ்குமார்
அன்புள்ள பிரதீப்
செய்யலாம். அதற்கு நாம் இரட்டைக்குழல் துப்பாக்கியை பயன்படுத்தவேண்டும். ஒரு குழல் நம்மைநோக்கி இருக்கவேண்டும்
ஜெ
அன்பின் ஜெ,
ஆம், நிச்சயம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.
இன்றைக்கு இருபது வருடங்களுக்கு முன்பு, எனது நண்பனின் தங்கை ஓடிப்போனபோது கும்பலாக வீச்சரிவாளுடன் அலைந்தவர்களுள் நானும் ஒருவன். இப்போது அந்த குடும்பம் ஒன்று கூடிவிட்டது. என் நண்பனின் தந்தை, எங்கள் இனத்தில், எங்கள் பகுதியின் முக்கியப்புள்ளிகளில் ஒருவர். அதன் பிறகு சில வருடங்கள், அதிகம் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்காதிருந்தவர், பிறகு சகஜமாகிவிட்டார்(கள்).
சில வருடங்கள் கழித்து, சில நண்பர்களின் காதல்(பதிவு) திருமணத்திற்கு சாட்சியாக கையொப்பமளிக்க நேர்ந்தபோது, நானும் அரிவாளுக்கு பயந்த கதை உண்டு.
மிகச்சரியாக சொல்லவேண்டுமானால், 1993, நான் பத்தாம் வகுப்பு கடைசி பரீட்சை எழுதி முடித்து ஊர் திரும்பும்போது, ஊர் கலவர கோலம் பூண்டிருந்தது. எங்கள் ஊர் பெரியதனக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அண்ணன் வேற்று(so called கீழ்) சாதிப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டு சென்று விட்டிருந்தார்.
அதற்கு சில காலம் பிறகுதான், என் நண்பனின் இல்ல நிகழ்வு.
வேலை காரணமாக, ஊர்த் தொடர்பு குறைந்து சில வருடங்களாகி விட்டன. உண்மையில், இப்போது யாராவது, நீங்க யாரு எனக்கேட்டால் மட்டுமே சாதி நினைப்பு வருகிறது. அந்தக் கேள்வியை எதிர்கொள்வதும், சமீப காலங்களில் குறைந்து வருகிறது. குறைந்துதான் வருகிறதே தவிர நிற்கவில்லை.
சமீபத்தில் சேலத்தில் நடைபெற்ற (எண்ணிக்கை காண்பிக்கும்) மாநாட்டிற்கு அழைத்த நண்பர்களை கேட்டேன், என்னடா பண்ண போறிங்கன்னு. சிரித்துக்கொண்டே ‘டாஸ்மாக்’ சிம்பலைக் காட்டிச் சென்றனர்.
ஊரில் ஒரு நண்பனை அழைத்து எண்ணிக்கை என்னவென்று கேட்டேன். சாதி மாறிய திருமணங்கள் 12(7 வருடங்களில்). முக்கிய குறிப்பு, இதற்கு உதவிய அனைவருமே 25 வயதுக்குட்பட்டவர்கள்.
சிவக்குமரன்