ஆதவ் சகோதரிகள் – கடிதங்கள்

12794528_10205342526593163_158806621050748252_n(1)

அன்பு ஜெயமோகன்,

ஆதவ் சகோதரிகளான வானவன் மாதேவியையும், இயல் இசை வல்லபியையும் குக்கூ சிவராஜ்தான் முதலில் அறிமுகம் செய்து வைத்தார். தசைச்சிதைவு நோய் என்றால் என்னவென்று தெரியாத காலம் அது. வானதியும், ரேவதியும் பலமுறை விளக்கி இன்றளவும் அந்நோயை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை என்பது தனிச்செய்தி. ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கென வந்திருந்த அவர்கள் இருவரையும் சக்கர நாற்காலியில் அமர வைத்தே கூட்டி வந்தனர். பிறர் உதவியின்றித் தன்னிச்சையாக செயல்படமுடியாத நிலையிலும் அச்சகோதரிகள் முகத்தில் அளவுக்கதிகமான மகிழ்ச்சியும், புன்னகையும். அப்புன்னகைதான் இன்றைக்கு வரை அவர்களோடு தொடர்பில் வைத்திருக்கிறது.

சமீபமாய் அவர்கள் கட்டியிருக்கும் மருத்துவ இல்லத் திறப்பு விழாவுக்கு அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர். வந்துவிடலாம் என்றுதான் நினைத்திருந்தேன். ஏனோ, முடியாமல் போய்விட்டது. அது தொடர்பாக வானதியுடன் நேற்று முன்தினம் பேச முடிவு செய்து தொடர்பு கொண்டேன். வல்லபிதான் எடுத்தார். வானதி மருத்துவமனையில் உடல்நலச்சோகை காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். மனதுக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. நான் மெளனமாக இருப்பதைக் கண்ட வல்லபி, “ஒண்ணும் இல்லன்னா.. விழா அலைச்சல்ல கொஞ்சம் அசதி ஆயிட்டா..அவ்வளவுதான்” எனச் சொன்னார். “சீக்கிரம் சரியாயிடுவாங்க. அதிகம் அலட்டிக்காதீங்க” என்று அறிவுரைத்தேன். நேற்று மறுபடியும் அழைத்தேன். வானதியே அலைபேசியை எடுத்தார். மனதுக்கு நிறைவாக இருந்தது. “சிரித்து ரொம்ப நாளாயிற்று.. நீங்க வந்தீங்கன்னா சிரிக்கலாம்னு வல்லபி சொல்றா” என்றும் சொன்னார்.

அச்சகோதரிகளின் விடாப்பிடியான செயல்பாடுகள் என்னைப் போன்றோருக்கு இன்றுவரை ஆச்சரியமளித்துக்கொண்டே இருக்கின்றன. அவர்கள் இன்னும் பல்லாண்டு, பல்லாண்டு வளமுடன் வாழ எம் குருநாதன் பழனிமுருகனிடம் வேண்டிக்கொள்கிறேன்.

பல மாதங்களுக்கும் மேலாய் அவர்களைச் சந்திக்காத குற்ற உணர்வு வாட்டுகிறது. வரும் நாட்களில் ஒருநாள் அவர்களைச் சந்தித்து மனதாரச் சிரித்துக்கொண்டு உரையாட வேண்டும் எனத்திட்டமிட்டிருக்கிறேன். பார்ப்போம்.

முருகவேலன்,

படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை,

கோபிசெட்டிபாளையம்.

 

அன்புள்ள ஜெ

ஆதவ் அறக்கட்டளைச் சகோதரிகளை பற்றி நீங்கள் எழுதிய குறிப்பைக் கண்டேன்.  முதன்முதலில் அவர்களை சிறந்த வாசகிகள் என்று சொல்லி நீங்கள் அறிமுகம் செய்திருந்தீர்கள்.  அவர்கள் இப்படி ஒரு பெரும் சாதனையைச் செய்திருப்பது நிறைவளிக்கிறது. நம்மைச்சுற்றி மகத்தான விஷயங்களும் நடைபெறுகின்றன என்னும் உணர்வுதான் வாழ்க்கையைப் பொருள் உடையதாக ஆக்குகிறது.

ஊழல், நேர்மையின்மை என்று நம்மைச்சூழ்ந்து எங்கும் சிறுமை நிறைந்திருக்கிறது. வானதி வல்லபியும் அவற்றை பலவகையிலும் பார்த்துக்கொண்டுதான் இருப்பார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.  அவற்றை மீறி வாழ்க்கைமேலும் இலட்சியம் மேலும் நம்பிக்கை வைக்க் அவர்களால் முடிகிறது என்பது நமக்கெல்லாம் ஒரு பெரிய செய்தி

 

சகோதரிகளின் பாதம்தொட்டு பணிகிறேன்

செல்வராஜ்

 

அன்புள்ள ஜெ

வானதி வல்லபி இருவரின் சேவையைப்பார்த்தேன். எனக்கு ஓர் எண்ணம் வந்தது. நமக்கெல்லாம் ‘நாளை’  என்பதுதான் மிகப்பெரிய அச்சுறுத்தல். ‘நாளைக்கு நம்மள யாரு கவனிச்சுக்குவா?” என்னும் குழப்பம் “நாளைக்கு நாம தெருவில நிக்கணும்’ என்னும் பயம் தான் நாம் பெரும்பாலும் அடிச்சுப்பிடிச்சு சேக்க வைக்கிறது. எந்த நல்லவிஷயத்தையும் செய்யாமலிருக்கவைக்கிறது

நாளை இல்லாமல் இன்றில் வாழக் கற்றுக்கொண்டிருக்கிறார்கள் சகோதரிகள். நோய் அவர்களுக்கு ஒவ்வொரு நாளையும் அழகாக ஆக்கிகொடுத்திருக்கிறது. ஆகவேதான் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்

 

வாசுதேவன்

 

முந்தைய கட்டுரைமுத்தல்
அடுத்த கட்டுரைகனவில் படுத்திருப்பவன்