வானவன் மாதேவி இயலிசை வல்லபி- இல்லத்திறப்புவிழா

12794528_10205342526593163_158806621050748252_n(1)

வாழ்க்கையின் அபூர்வமான தருணங்களில் நாம் நம்முள் இருக்கும் மாறா அவநம்பிக்கையை மீறி நம்பிக்கையின் ஒளியை கண்டடைகிறோம், அத்தருணங்களைத்தான் பேணிப்பேணி வளர்த்து மேலே கொண்டுசெல்கிறோம். அதன் வழிகாட்டலில் அனைத்தையும் கடந்துசெல்ல முயல்கிறோம்.

இலட்சியவாதத்தை, அன்பை, பெருங்கனவுகளை நம் அனுபவ அறிவின் விளைவான பொதுப்புத்தி நம்ப மறுத்துக்கொண்டே இருக்கிறது. அனைத்து மகாவாக்கியங்களையும் நோக்கி அது முகம் சுளிக்கிறது. அவ்வப்போது ஏதோ ஒன்று நம்மை ஆட்கொண்டு அங்கே கொண்டுசெல்லவேண்டியிருக்கிறது

சென்ற மார்ச் 11 ஆம் தேதி சேலத்தில் வானதி- வல்லபியின் இல்லத்திறப்புவிழாவுக்குச் சென்றிருந்தேன். ஒரு மீட்சிநாள் அது

 

12800338_582796665211031_6285696057676582426_n

சேலத்திற்கு நேரடியாகச்செல்லவேண்டியதில்லை, ஈரோட்டுக்கு வாருங்கள், சேர்ந்துபோவோம் என்று கிருஷ்ணன் சொல்லியிருந்தார். பத்தாம் தேதி மாலை கோவை எக்ஸ்பிரஸில் கிளம்பி அதிகாலை ஈரோடு சென்றேன். ரயில் ஒருமணிநேரம் தாமதம். ரயில்நிலையத்தில் இறங்கி நின்றிருந்தேன். வண்ணதாசனைப்போல ஒருவரைப்பார்த்தேன். வண்ணதாசனேதான். ராஜ சுந்தரராஜனின் கவிதை வெளியீட்டுவிழாவுக்காக வந்து இறங்கியிருந்தார்.

கைகளைப்பற்றியபடி தாழ்ந்தகுரலில் பேசும் வண்ணதாசனின் நேசம் மிகுந்த சிரிப்பு நெடுங்காலமாகவே எனக்கு அறிமுகம். அன்றைய நாளை இனிதாக்கியது அது. திடிரென்று ஒருகுடம் தாமிரவருணித்தண்ணீருடன் ஒருவர் ரயிலிறங்கியதுபோல.

IMG_8671

ரயில்நிலையத்தில் கிருஷ்ணன் மணவாளன் அரங்கசாமி என நண்பர்கள் காத்திருந்தனர். அரங்காவின் காரில் அப்படியே நேராக சேலம்நோக்கிச் சென்றோம். செல்லும்வழியில் ஒரு கடையில் டீ குடித்தோம். எட்டுமணிக்கு சேலம் மருத்துவர் சங்கத்தின் விடுதிக்குச் சென்றோம். அங்குதான் அறைபோடப்பட்டிருந்தது.

வழக்கம்போல நண்பர்கள் மெத்தையில் அமர்ந்து இலக்கியம் பேசத்தொடங்க நான் சவரம் செய்து குளித்து தயாரானேன். நடுவே துண்டுடன் வெளியே வந்து இலக்கியச்சண்டையில் மத்தியஸ்தமும் செய்தேன். இலக்கியவாதிக்கு எதுவும் இலக்கியமே.

 

12805764_10205342525273130_4300575252393167887_n(1)

அரசியல் விமர்சகர் பாமரன் வந்திருந்தார். அவரது மனைவியும் உடனிருந்தார். சென்ற பல ஆண்டுகளாகவே வானதிக்கும் வல்லபிக்கும் அவர் உணர்வுரீதியாக பேருதவி புரிந்தவர். அவர்களால் அப்பா என அழைக்கப்படுபவர். பாமரனைப்பார்ப்பது எப்போதும் எனக்குப்பிடிக்கும். அவரது உற்சாகமான சிரிப்பு, நகைச்சுவை உணர்ச்சி ஆகியவை அபூர்வமான குணங்கள்

பாமரனின் மனைவி சொன்னார், ’இந்தமாதிரி எடத்திலதாங்க உங்கல மாதிரி துருவங்கள் இணைய முடியுது’ .சந்திப்பதற்கான வாய்ப்பு என்ற பொருளில் சரிதான். ஆனால் பாமரனின் அரசியலால் அவர் எனக்கு எதிர்துருவமாக இருக்கவேண்டும் என்பதில்லை. அவருடன் சேர்ந்து பேசிச்சிரித்தது இந்த நாளின் அரிய அனுபவமாக அமைந்தது.

 

12814709_10205342526033149_566561380870078002_n

adhav-2369

வானவன் மாதேவியும் வல்லபியும் கட்டியிருக்கும்  இல்லம் தசையிறுக்க நோயால் அவதிப்படும் மாற்றுத்திறனாளிக் குழந்தைகளுக்கானது. இக்குழந்தைகளின் சிக்கல்களை மிக மிகத் தொடக்கத்திலேயே கண்டறியவேண்டியிருக்கிறது. இல்லையேல் குணப்படுத்த முடியாது. வானதியும் வல்லபியும் அதில்தான் தங்கள் கவனத்தைக் குவிக்கிறார்கள். நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிறப்புக்கவனம் கொடுத்துத் தங்கவைப்பதற்கான இல்லம் அது

வானதியுடன் சேலம் மருத்துவக்கல்லூரியைச்சேர்ந்த மாணவர்களின் ஒரு பெரிய படையே உள்ளது. அவர்கள்தான் நிகழ்ச்சியின் தன்னார்வலர்கள். எப்போதும் அவர்களுடன் இருப்பவர்கள். இந்த அணியின் பலவீனமான அம்சம் என்னவென்றால் படிப்பு முடித்து அவர்கள் செல்வதற்குள் அடுத்த அணி தயாராகியிருக்கவேண்டும் என்பதே. அது நிகழுமென எதிர்பார்க்கிறேன்

adhav-2381

இல்லம் மிகப்பெரியது. 9000 சதுரஅடி பரப்பு. இன்று எத்தனை சாதாரணமாகக் கட்டினாலும் சதுர அடிக்கு ஆயிரம் ரூபாய் இல்லாமல் கட்டமுடியாது. பொறியாளர் ஆனந்தகுமார் ஒரு கொடையாக அதை சதுர அடிக்கு 600 ரூபாய்க்குள் கட்டும் சவாலை ஏற்று செய்துமுடித்திருந்தார். பிரமிப்பாக இருந்தது. இலட்சியவாதம்போல மூளையை முழுவீச்சில் வேலைசெய்யவைப்பது பிறிதொன்றில்லை

வானவன் மாதேவி இயலிசைவல்லபியின் இந்த அமைப்பு சிறந்த நிபுணர்கள் அடங்கியது. குறிப்பாக மூளைநரம்பியல் நிபுணர்பாலமுருகன் இதன் மைய இழை எனலாம்.  புன்னகை நிறைந்த முகத்துடன் அந்த இளைஞரைப்பார்க்கையில் மனநிறைவு ஏற்பட்டது. டாக்டர்கள் மேல் எனக்கு ஒவ்வொரு நாளும் குறைந்துவரும் நம்பிக்கை மீண்டும் எழுகிறது

adhav-2404

நிகழ்ச்சி ஈரோட்டைச்சேர்ந்த தப்பாட்டக்கலைஞர்களின் நிகழ்ச்சிகளுடன் ஆரம்பித்தது. சிலம்பாட்டம் முதலியவை நிகழ்ந்தன. நான் ஒரு மாதுளை மரத்தை நட்டேன். இல்லத்தை திறந்து வைக்கும் கௌரவமும் எனக்குக் கிடைத்தது. உண்மையில் முதியவர்கள் எவராவது அதைச்செய்திருக்கலாம் என்று தோன்றியது. அக்கணம் நம் சிறுமை நம் மேல் கவிகிறது. எழுத்தாளர்கள் செயல்வீரர்கள் அல்ல வெறும் கனவுவாதிகள். அதை இம்மாதிரி பெரிய நிகழ்ச்சிகளின் முன்னால், பெரிய உள்ளங்களுக்கு முன்னால் தூலமாக உணர்கிறோம்

கத்தரியால் நாடாவை வெட்டும்போது ’இது நித்யாவின் மாணவன் என்பதற்காக மட்டுமே’ என நானே சொல்லிக்கொண்டேன். இத்தகைய ஒரு அமைப்பை தொடங்கிவைப்பதற்கான தகுதியாக நான் எனக்குச் சொல்லிக்கொள்வது அதுதான். உண்மையில் மிக உணர்ச்சிகரமாக, அதேசமயம் கூச்சமாக, கூடவே தனிமையாக உணர்ந்தேன்.

IMG-20160311-WA0021

விழாவில் சேலத்தின் முக்கிய ஆளுமைகள் பலர் கலந்துகொண்டனர். நீதிபதியான திருமதி அருண்மொழி வானதி வல்லபியின் நலம்நாடிகளில் ஒருவர். புரவலரான மாதா கிருஷ்ணமூர்த்தி சேலம் சரவணபவன் ஓட்டல் அதிபர் சிவராமன் எனப் பலர் சிறப்புக்குழந்தைகளுக்கான சிகிழ்ச்சைகள் மேல் தொடர் கவனத்துடன் பணியாற்றிவரும் ஊடகவியலாளர் பாலபாரதி பங்கெடுத்தார். தேவதேவனும் யூமா வாசுகியும் பங்கெடுத்தனர்.

நெடுநாட்களுக்குப்பின் ஈரோடு டாக்டர் ஜீவாவை சந்தித்தேன். மேலும் பழுத்திருந்தார். இனிய அழகான முதுமை. உயரிய விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு மட்டுமே உரிய கனிதல் அது. அவரிடமிருந்து எனக்கு நினைவுப்பரிசாக அளிக்கப்பட்ட புத்தர்சிலையைப் பெற்றுக்கொண்டேன். யூமா வாசுகி தலைநரைத்து எப்படியோ தேவதேவனின் தம்பிபோன்ற ஒரு அழகிய தோற்றத்தைக் கொண்டிருந்தார்.

 

IMG-20160312-WA0010

நீண்ட நாட்களுக்குப்பின்னர் பழைய நண்பர் பசலை கோவிந்தராஜை சந்தித்தேன். மனுஷ்யபுத்திரன், சூத்ரதாரி [எம் கோபால கிருஷ்ணன்] பெருமாள் முருகன் ஆகியோருடன் பழைய இடதுசாரி இதழான மன ஓசையில் எழுதியவர். பசலை என ஒரு தொகுப்பு வந்துள்ளது. இப்போது ஹோமியோபதி மருத்துவர். ஜக்கி வாசுதேவ் அமைப்பில் ஈடுபாடுகொண்டவர். மகிழ்ச்சியான சந்திப்பாக இருந்தது.

நான் சுருக்கமாகப் பேசினேன். முன்பொருமுறை காரி டேவிஸுடன் டெஸ்மண்ட் மோரிஸின் நேக்கட் ஏப் நூலைப்பற்றிப் பேசும் வாய்ப்பு கிடைத்தது. மனிதனை பிற உயிரினங்களிடமிருந்து மேலே கொண்டுவந்த அம்சம் என்ன என்று கேட்டார். நான் மொழி என்றேன். ஞானத்தை புறவயமான அமைப்பாக கட்டி எழுப்ப அது உதவியது என்றேன்

 

IMG_9044

ஆம், ஆனால் அதற்கும் அடிப்படையாக அமைந்தது அன்பே என்று சொன்னார். அன்பு என்பது ஒரு கருவி. அதுவே மனிதனை சமூகங்களாகத் தொகுத்தது. அனைவரும் வாழவேண்டுமென எண்ணச்செய்தது. அதன் வல்லமையால்தான் ஞானம் தொகுக்கப்பட்டது. அதுவே மானுடத்திரளை மானுடமாக்கி நிலைநிறுத்தும் விசை என்றார்.

இயல்பான உயிரியல் பாசத்தை மானுட அன்பாக மாற்றிக்கொண்டமையே மானுடனின் தனிபெரும் சாதனை என்றார் காரி டேவிஸ். மானுடம் என முதலில் உணர்ந்தவன், பிறருக்காக தன்னை இழக்க முதலில் எழுந்தவன் வடிவில்தான் கடவுள் மனிதனிடம் பேசத்தொடங்கினார் என்றார். அவரது உணர்ச்சிமிக்க குரலை இன்று உணர்கிறேன்

IMG_9214

அன்பைப்பற்றி பலரும் பேசிக்கேட்டிருக்கிறேன். ஆன்மிகவாதிகள், கலைஞர்கள். ஆனால் ஒரு நாத்திகர் அதை ஒரு புறவயமான உண்மையாகப்பேசிக் கேட்டது என்னில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தியது. சுயநலம், அற்பத்தனமான விழைவுகள் வழியாகவே வாழ்க்கை நகர்கிறது என்பது கண்கூடு. ஆனால் கண்ணுக்குத்தெரியாத பெரிய விசையாக அன்பு நீதியாகவும் கருணையாகவும் தியாகமாகவும் சேவையாகவும் தன்னை மண்ணில் நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது

வானவன் மாதேவிக்கும் வல்லபிக்கும் வாழ்த்தோ நன்றியோ சொல்லவேண்டியதில்லை என்று சொன்னேன். அவர்கள் வடிவில் இங்கே நிகழ்ந்து நம்மைச் சூழ்ந்துள்ள இவ்வாழ்க்கைமேல் மீண்டும் நமக்கு நம்பிக்கையை உருவாக்கிய அதற்கு வணக்கம் என்று சொல்லி முடித்தேன்.

வானதியும் வல்லபியும் மிக அற்புதமாக பேசினார்கள். உணர்ச்சிகரமாக, ஆனால் எந்தச் சொற்சிக்கலும் இல்லாமல். மேடைகளைப் பார்த்துப்பார்த்து அவர்கள் பழகிவிட்டிருக்கிறார்கள்.  மானுடத்தை நோக்கிப்பேசும் குரல் வாய்த்துவிட்டிருக்கிறது. நாம் அறிந்தும் அறியாமலும் தத்தளிக்கும் சத்தியம் அவர்களின் குரலில் ஒலிக்கிறது

 

இந்தநாள் அந்த ’ஒன்றை’ அருகே கண்ட நாள்.

 

 

முந்தைய கட்டுரைஈரட்டிச் சிரிப்பு -கடிதங்கள்
அடுத்த கட்டுரைகடிதங்கள்