புதுயுக நாவல்

6343

 

ஜெ

பின் தொடரும் நிழலின் குரல் நாவலை வாசித்து இப்போதுதான் முடித்தேன். விஷ்ணுபுரம் வாசிக்கும்போது மெல்லிதாக தோன்றியது. பின்பு வெண்முரசு நாவல்தொடர் வாசிக்கும்போதும் தோன்றியது. [கொற்றவை இன்னும் வாசிக்கவில்லை] இந்நாவல்கள் எல்லாமே சிதறிக்கிடக்கின்றன. ஒரு மையத்தொடர்ச்சியை நாமேதான் கொஞ்சம் கஷ்டப்பட்டு உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது.

விஷ்ணுபுரமும் வெண்முரசுநாவல்களும் அவற்றின் மைத்தாலஜிக்கல் பின்னணி காரணமாக ஒரு குறிப்பிட்ட சூழலைக் கையாள்வதனால் அது ஒரு ஒருமையை உருவாக்குவதுபோலத் தோன்றுகிறது, உண்மையில் அப்படி இல்லை. சொல்லப்போனால் உங்கள் நாவலின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை மறுக்கிறது. பலபகுதிகள் தனியாக மைய யூனிட்டிக்கு எதிராக நின்றுகொண்டிருக்கின்றன.

நீங்கள் ஒரு நாவலுக்குள்ளேயே நாலைந்து மொழிநடைகளைக் கையாள்கிறீர்கள். பொதுவாக வெண்முரசின் நாவல்களைப்பார்த்தால் அவை ஒருபக்கம் ரியலிஸ்டிக் நெரேஷனுடன் இருக்கின்றன. இன்னொருபக்கம் ரொமாண்டிக் நெரேஷனுடன் இருக்கின்றன. இன்னொரு பக்கம் சிறுவர்களின்கதைகளின் சாகஸங்களுடன் இருக்கின்றன. இந்தத்தன்மையை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை. இதை எப்படி உள்வாங்கமுடியுமென்றும் தோன்றவில்லை. அது பின் தொடரும் நிழலின் குரல் வாசிக்கும்போது மேலும் தெளிவாகத்தெரிந்தது. ஒரு நாவலை வாசிக்கையில் அதில் மொத்ததில் என்ன சொல்லவருகிறீர்கள் என்றுதான் கேட்கத்தோன்றுகிறது. Sorry, if I am offensive.

அருண் ராம்

63

அன்புள்ள அருண் ராம்,

நான் ஒரு கொள்கையின் அடிப்படையில் வடிவக்கற்பனையின் அடிப்படையில் இதையெல்லாம் எழுதவில்லை. நான் எழுத ஆரம்பித்தபோது இப்படியெல்லாம் வடிவம் சார்ந்து யோசிப்பவனாக இருக்கவுமில்லை.

பதினாறு கட்டுரைகள் அடங்கிய Reinventions of the Novel [Karen-Margrethe Simonsen, Marianne Ping Huang, Mads Rosendahl Thomsen ]  என்னும் நூலை சமீபத்தில் [பெரும்பாலும்] வாசித்தேன். பெரும்பாலான கட்டுரைகளின் சாராம்சமாக உள்ளது ஒரே நோக்குதான். நாவல் ஒரேமொழியில், ஒற்றை மையத்துடன், ஒன்றைச் சொல்வதற்காக உருவாக்கப்படுவது அல்ல. ஒற்றைப்படையான மொழிதல் அல்ல அது. பல்வேறுவகை மொழிதல்களின் தொகுதியாகவே அது இருக்கமுடியும்.பேசுபொருளை நோக்கிப் பலகோணங்களைத் திறந்து வைப்பது மட்டுமே அதன் வேலை.

ஆகவே அது ஒற்றைமொழிநடை கொண்டதாக இருக்கமுடியாது. ஒருநாவலில் அதன் மையச்சரடை ஊடறுக்கும் குறுக்குச்சரடுகள் முக்கியமானவை. அவை நாவலை மறுக்கும் உள்நாவல்கள். அந்த நெசவைத்தான் நவீனநாவல் என்கிறோம். ஆகவே ஒரு நாவல் எதைச் சொல்கிறது என்ற கேள்விக்கே கூட இடமில்லை. அது சிந்தனைகளின், உள்ளுணர்வுகளின் ஒரு ஊடுபாவு வெளியை உருவாக்குகிறது அவ்வளவுதான்.

வரலாறு, பண்பாட்டின் ஆழ்படிமவெளி, பொதுப்படிமங்கள் ஆகியவற்றில் உடைவுகளை உருவாக்கி அவற்றை மறுதொகுப்பு செய்வதே நாவல் செய்யக்கூடியது. நாவல் வரலாற்றை நிகர்வரலாறாக மீண்டும் கட்டி எழுப்புகிறது. வரலாறு எப்படி மையமற்று குறுக்குநெடுக்கு ஓட்டங்களாக இருக்கிறதோ அப்படித்தான் நாவலும் அமையமுடியும்.பண்பாட்டை ஒருவகையில் திருப்பிச்சமைக்கிறது. அதன்விளைவாக பொதுப்படிமங்களை மறுவரையறைசெய்கிறது.

அந்நூலில் மிலன் குந்தேரா வாழ்க்கைவரலாறு, நினைவுக்குறிப்பு போன்றவை சரியான தகவல்கள், ஆசிரியரின் தொகுப்புநோக்கு ஆகியவற்றால் மேலான நூல்களாகின்றன என்றும் நாவல் அவ்வியல்புகள் கொண்டதல்ல என்றும் சொல்கிறார். அது தகவல்களால் ஆனது அல்ல. உள்ளுணர்வுகளின் சிதறலான பரப்பு மட்டும்தான் அது.

என் நாவல்களை நியாயப்படுத்தி நான் வாதிடவில்லை. எப்படியோ நவீனநாவல் [அல்லது நவீனத்துவத்திற்குப்பிந்தைய நாவல் ] என்பது வரலாற்றைக் கலைத்து அடுக்குவதாக, பண்பாட்டை ஊடுபாவுகளால் சிதறடித்துக்காட்டுவதாக ஆகிவிட்டிருக்கிறது. என் கோணத்தில் என் நாவல்களில் அதையே செய்திருக்கிறேன்

நீங்கள் சொல்வதுபோல விஷ்ணுபுரம், பின்தொடரும்நிழலின்குரல் எல்லாம் ’ஒன்றையும் குறிப்பாகச் சொல்லாத’ நாவல்கள்தான். மையச்சரடை பிற சரடுகள் சிதறடித்து உருவான பரப்புகள் அவை.  வெண்முரசின் எல்லா நாவல்களிலும் பலநாவல்கள், ஒன்றுடனொன்று இணையாத முரண்படக்கூடிய ஏராளமான துணைநாவல்கள் உள்ளன. அந்தத் துணைக்கதைகள் மையக்கதையை எப்படி குறுக்காக வகுந்து செல்கின்றன , எப்படி மையக்கதையைச் சிதைவுறச்செய்கின்றன ,என்பதே அவற்றை என் நோக்கில் ஆழ்பிரதிகள் கொண்ட களமாக ஆக்குகிறது.

இது என் வடிவம். ஐம்பது வருடத்தில் இதுவும் பழையதாக ஆகும்.  இன்னொரு வடிவம் எழுந்துவரும். இலக்கியத்தின் சாராம்சமாக நீடிப்பது அது வாழ்க்கையின் நுண்வடிவம் என்னும் அம்சம் மட்டுமே. இந்தவடிவத்தை என் இளமையின் தேடலும் அலைக்கழிப்புகளும் எனக்குரிய வழியாக ஆக்கியிருக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு
அடுத்த கட்டுரைஆணவகொலைகளும் தன்பரிசோதனையும்