திரு ஜெயமோகன்
நான் வெகு வழக்கமான வாழ்க்கை வாழ்பவன், 9-6 அலுவலக வேலை, 10-6 தூக்கம், தினசரிகள் (வணிக) வாசிப்பது, உங்கள் தளம் வாசிப்பது, சில சமயங்களில் புத்தகம் படிப்பது என்று.
சொல்லுமளவிலான எந்த கற்பனையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாதவன். இருந்தும் என் நினைவில் கனவுகளின்றி நான் தூங்கியதாய் ஒரு நாளும் நினைவில் இல்லை, ஒவ்வொருநாளும் சரியாக தூங்காத அதிருப்தியுடன் தான் எழுகிறேன். மூளை அணையாத தூக்கம். இந்த அரைகுறை தூக்கத்தால் என் பகல் பொழுதின் செயல்திறன் வெகுவாக குறைவதாக உணருகிறேன். நிஜத்தில் நடப்பது போலவே இந்த கனவுகள் இரவெல்லாம் என்னில் மகிழ்ச்சியையும், துயரையும், பதட்டத்தையும் நிறைக்கிறது
இப்படியிருக்க, மிக பெரிய, செறிவான புனைவுகளை எழுதும் நீங்கள், நிறைய பயணம் செய்யும் நீங்கள், நிறைய புதியவர்களை நேரிலும், கடிதங்கள் வழியாகவும் சந்திக்கும் நீங்கள் எப்படி நல்ல தூக்கத்தை அடைகிறீர்கள்?!(கனவுகளற்ற), எப்படி தூங்கும் முன் மூளையை அணைக்கிறீர்கள்?! எவ்வளவு நேரம் தூங்குகிறீர்கள்? எனக்கு உதவும் வகையில் விரிவாக சொல்ல முடியுமா? உங்கள் பணியின் காரணமாக உங்கள் மனதை கனவுகள் நிறைக்க வாய்ப்பதிகமென்பதால் உங்களிடம் கேட்கிறேன்.
பா சதீஷ்
அன்புள்ள சதீஷ்,
நான் இரவு ஒருமணி அல்லது இரண்டுமணிக்குத் தூங்குவேன். காலை ஏழுமணிக்கு எழுவேன். மதியம் படுத்து இரண்டு மணிநேரம் தூங்குவேன். எப்படியும் எட்டு மணிநேரம். அதிகபட்சம் 10 மணிநேரம்கூட.
நல்ல தூக்கம் படைப்பூக்கத்தன்மைக்கு, சிந்திப்பதற்கு அவசியமானது. தூக்கமின்மை என்பது சோர்வை, எரிச்சலை உருவாக்கும். செயலில் ஒருமை கூடாமலிருக்கும். வேலைகளை ஒப்பேற்றலாமே ஒழிய சிறப்பாகப் பணியாற்றமுடியாது. புனைவு எழுத்து என்பது உச்சகட்ட மூளைக்கூர்மை தேவையாக இருப்பது. அதற்கு தூக்கம் தேவை.
ஆகவே தூக்கத்தை சிறப்பாக அமைக்க என்ன செய்யவேண்டுமென்பதை தொடர்ந்து அவதானித்து வருகிறேன். இப்போதெல்லாம் மாலைக்குப்பின் டீ, காபி அருந்துவதில்லை. இரவில் பழங்கள் மட்டுமே உணவு. கண்டிப்பாக ஒரு மாலைநடை. அப்போது நண்பர்களுடன் உற்சாகமான உரையாடல். முக்கியமாக, குடல் எப்போதுமே சுத்தமாக இருக்கவேண்டும் என்பது என் அறிதல். ஆகவே பழங்கள்.மது அருந்துவது, பலவகை மாத்திரைகள் போன்றவை தூக்கத்தை அழிப்பவை.
எழுதுவது தூக்கத்தை இல்லாமலாக்குவதே. புதிய எண்ணங்கள் வருவதும் சரி, பழைய எண்ணங்களின் நீட்சிகளும் சரி தூக்கத்தை கெடுப்பவை. ஆகவே முடிந்தவரை தூங்குவதற்குமுன் அவற்றை ரத்துசெய்வேன். இசைகேட்பதும் நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பார்ப்பதும் எனக்குப்பிடித்த சில நகைச்சுவை எழுத்தாளர்களை வாசிப்பதும் வழக்கம். நகைச்சுவையின் நூறாண்டுகள் என்னும் பெரிய தலைகாணி நூல் ஒன்று வைத்திருக்கிறேன். தொகுப்பு பி. ஜி .வோட்ஹவுஸ்] நான் பைபிள் போல வாசிப்பது அது.சிரிப்பு நல்ல தூக்கமருந்து.
அதன்பின்னரும் அவ்வப்போதும் துயில்நீப்பு உண்டு. அது இந்த ஆட்டத்தில் ஒரு பகுதி. அந்தநாட்களெல்லாம் மிகமிகப் படைப்பூக்கம் கொண்டவை. இரவெல்லாம் பாட்டு கேட்பது, வாசிப்பது, அலைவது.
உளவியல் ரீதியாக மட்டும் துயிலிழப்பு வருவதில்லை. பெரும்பாலான தருணங்களில் அது உடல் சார்ந்தது. எளிய ‘மெக்கானிக்கல்’ பிரச்சினையாகக்கூட இருக்கலாம். எனக்கு அப்பிரச்சினைகள் இல்லை. ஆனால் பலருக்கு உள்ளது.
பெரும்பாலும் மூச்சுவழியில் தசை தளர்ந்து மூடி குறட்டை வருவதனால் நாம் இரவில் ஆழ்துயிலை அடைவதில்லை. எட்டுமணிநேரம் படுத்திருப்போம். ஆழ்துயில் ஒருமணிநேரம் கூட இருப்பதில்லை. இதுவே கணிசமானவர்களின் பிரச்சினை
என் நண்பருக்கு ஒருமுறை அதற்கான சிகிழ்ச்சை எடுக்கவேண்டியிருந்தது. ஆர்வமாக நானும் சென்று சோதித்துக்கொண்டேன். திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவக்கல்லூரியில். எங்களை இரவில் படுக்கவைத்து நம் உடலில் வெவ்வேறு எலக்ட்ரோடுகளைப்பொருத்தி புகைப்படங்கள் எடுத்துச் சோதித்தார்கள்.
எனக்கு நூறுசதவீதம் சிறந்த தூக்கம் என்று சொல்லிவிட்டார்கள். நண்பருக்கு சுவாசம் அடைபட்டு துயில் கலைந்தபடியே இருந்தது. மூச்சுப்பயிற்சிகள் அளித்தார்கள். சரியாகிவிட்டது.சிலருக்கு வாய்க்குள் பொருத்தும் கருவிகள் அளிக்கிறார்கள்.