உரையாடல்களின் வெளி

1

அன்பின் ஜெயமோகன்

தமிழ் மற்றும் இந்திய சூழலில் முஸ்லிம், கிறிஸ்தவர்களின் மனோபாங்கில் ஏற்பட்ட மாற்றம் பொதுப்புத்தியில் ஒரு அன்னியத்தன்மையை உருவாக்கியிருக்கிறது. ஒவ்வொரு பண்பாடும் கொள்வினை, கொடுப்பினைகளால் மாற்றம் கண்டு செழுமை அடைவதை வரலாற்றில் பார்த்து வருகிறோம். இஸ்லாத்தின் தாக்கத்தால் இந்திய,தமிழ் மதிப்பீடுகள் முற்றிலுமாக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. அரபு சூழலில் சித்தப்பா மகளை திருமணம் செய்வது மரபான ஒன்று. ஆனால் தமிழ் சூழலில் சித்தப்பா மகள் தங்கை முறையாகிறது. தமிழகத்தில் மேலப்பாளையம் மற்றும் இன்னும் சில ஊர்களில் இஸ்லாத்தின் பெயரால்சித்தப்பா மகளை திருமணம் செய்யும் போக்கு காணப்படுகிறது.

இது பண்பாட்டு ஊடாட்டத்தில் அதிர்ச்சிமிக்கதாக நான் பார்க்கிறேன். அடுத்ததாக பர்தாபண்பாடு. இப்படி பலவற்றை பட்டியலிட முடியும். மையநீரோட்டத்தை விட்டுவிலகிப்போகும் முஸ்லிம், கிறிஸ்தவர் பண்பாட்டு நடவடிக்கைகள் அறம், ஒழுக்கம், நீதி போன்ற மரபார்ந்த மானுட விழுமியங்களை சிக்கலுக்கு உள்படுத்தாதா? அப்படியென்றால் பண்பாடு சிதைவாக்கம் ஏற்படுமல்லவா? இது குறித்து என்ன நினைக்கிறீர்கள்??

எச்.முஜீப் ரஹ்மான்

தக்கலை

 

1[கேரள இஸ்லாமியநடனம். ஒப்பனப்பாட்டு]

அன்புள்ள முஜீப்

நலம்தானே?

எந்த ஒரு பண்பாடும் இன்னொரு பண்பாட்டின் தொடர்பால் வளரவே செய்யும். போர்வழியாக வரும் பாதிப்புகள்கூட நன்மையையே செய்கின்றன. புறத் தொடர்பில்லாத சமூகம் நோயுற்றிருக்கும். காலப்போக்கில் அழியும்.

இஸ்லாம் தென்னகத்தில் வணிகம், குறிப்பாக கடல்வணிகம் சார்ந்து அறிமுகமான ஒரு மதம். நெடுங்காலமாகவே கடல்சார் வாழ்க்கையுடன், கடலோடிவணிகத்துடன் அன்னியப்பட்டிருந்த இந்திய சமூகத்திற்கு அவ்வகையில் முடிவின்மையின் ஒரு பெரிய வாசலை இஸ்லாம் திறந்திருக்கிறது. அதன் செல்வாக்குகள் மிக விரிவானவை.

உண்மையில் ‘மையநில’ தமிழகத்தில் அந்தச்செல்வாக்குகள் எவ்வகையானவை என பெரிதாக எனக்குத்தெரியாது. நான் சொல்வது கேரளத்தின் வாழ்க்கையில் உள்ள செல்வாக்கை மட்டும்தான்.

பொதுவாக ஒழுக்கம், நடையுடைபாவனைகள் ஆகியவற்றிலுள்ள தனித்தன்மைகள் பெரிய தாக்கத்தை செலுத்துவதில்லை. செலுத்தினாலும் அது ஒரு பெரிய விஷயம் அல்ல. இஸ்லாமிய வணிகச்சமூகம் சிறிய குழுக்களாக இருந்த காலகட்டத்தில் தங்களுக்குள் அமையும் இறுக்கமான மணவுறவுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிட்டது அதிலொன்று. அது பெரிய அளவில் அதிர்ச்சியையோ பாதிப்பையோ உருவாக்காது.

இந்தியாவில் எல்லா சமூகங்களும் அப்படி தங்களுக்குள் மணவுறவுகளை உருவாக்குவதற்கான வழக்கங்களை கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் பல சாதிகள் தாய்மாமன்கள் மருமகள்களை மணம்செய்துகொள்கிறார்கள், கணவனை மாமா என்றழைக்கிறார்கள். கேரளத்தில் அது மிகப்பெரிய பாவம். மாமன் என்பவன் தந்தைக்கு நிகரானவன். ஆனால் அவ்வழக்கம் இங்குள்ள போர்ச்சாதிகளுக்கு தேவையாக இருந்திருக்கிறது. இதேபோன்ற பலவகையான மணவுறவுகள் இங்குள்ளன.

உடைபோன்றவற்றில் இஸ்லாமியத்தாக்கம் பற்றி விரிவாகப் பேசவேண்டும். உதாரணமாக கேரளத்தின் ஆலயக்கலையான கதகளியில் உள்ள ஆடைகள் இஸ்லாமிய ஆடைகளின் பாணியில் அமைந்தவை. 17-ஆம் நூற்றாண்டில் கோட்டயத்து தம்புரான் காலகட்டத்தில் இம்மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. பாஞ்சாலியும், லட்சுமிதேவியும் கதகளியில் இஸ்லாமிய ஆடையில் தலைக்கு முக்காடு போட்டபடிதான் வருகிறார்கள். ஏன், இங்கே பல தெய்வங்களுக்கான பட்டு அலங்காரமே இஸ்லாமியப்பாணியில்தான் செய்யப்படுகிறது.

கேரளத்தை 15-ஆம் நூற்றாண்டு வாக்கில் சுல்தான் முகமது பின் துக்ளக்கின் படைத்தலைவர்கள் ஆட்சி செய்தபோது இங்கிருந்த அரசகுடியினரும் நாயர்களும் இஸ்லாமியராக மதம் மாறி அவ்வாட்சி முடிந்தபின்னர் இந்துக்களாக மீண்டுவந்தனர் என்று ஒரு தரப்பு உண்டு. கேரள நாயர்களின் உடைகள், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றிலுள்ள இஸ்லாமிய அம்சம் இதை காட்டுகிறது என்பார்கள். உதாரணம், மங்கலமான செயல்களை தலையை மறைக்காமல் செய்யமாட்டார்கள்.

ஆனால் இத்தாக்கங்களைவிட முக்கியமானது இஸ்லாமினூடாக வந்த சகோதரத்துவம் என்னும் கருத்து. ஒருவகையில் அது கடலோடிகளின் கருத்து. இன்னும் விரிவான வகையில் பாலைமக்களின் கருத்து. அது மதவிழுமியமாக தொகுக்கப்பட்டுள்ளது. நான் நமீபியாவில் பயணம்செய்யும்போது மூலவடிவில் அதைக்கண்டு வியந்திருக்கிறேன். உணவும் நீரும் எதிரிலுள்ளவனுடன் சமமாக பங்கிடப்பட்டாகவேண்டுமென்பது அங்குள்ள நெறி. முன்பின் அறியாத பலர் ’உங்கள் நலனுக்காக’ என சொல்லி ரொட்டியை பாதியாகப் பிய்த்து எனக்கு அளித்தபின்னரே சாப்பிட்டனர். உணவை விற்கலாகாது என்பது இன்னொரு நெறி, கெத்தேல் சாகிபை நினைவுகூர்க!

இங்குள்ள நிலம் உருவாக்கிய வாழ்க்கை வேறு. தங்களை சிறிய குழுக்களாக பிரித்துக்கொண்டு, ஒருகுறிப்பிட்ட நிலத்துடன் முழுமையாக இணைந்து வாழும் வாழ்க்கை இங்கிருந்தது. அது வலுவான எல்லைகளை உருவாக்கியது. எல்லைகள் பிறனை உருவாக்கின. ஆனால் அவ்வாழ்க்கை ஒரு நிலத்தை முழுதறிந்து அதனுடன் ஒன்ற உதவியது. சிலப்பதிகாரம் சொல்லும் ‘பதி எழு அறியா பழங்குடி’ மனநிலை இதுவே.

கேரளத்தில் முன்பு ஆற்றுவிலக்கு, குன்றுவிலக்கு முறைகள் இருந்தன. ஒரு சாதி ஓர் ஆற்றையோ குன்றையோ கடக்கலாகாது. கடந்தால் சாதிநீக்கம் செய்யப்படுவர். அவ்வாறு எல்லைக்குள் வாழும் வாழ்க்கை இன்றுகூட குமரிமாவட்டத்தில் உள்ளது. பல பெரியவர்கள் அதிகபட்சம் பதினைந்து சதுர கிலோமீட்டருக்குள் வாழ்பவர்கள். இங்குள்ள நிலத்தின் நீர்வளம் அதை அவர்களுக்கு சாத்தியமாக்கியது.

பதிஎழுந்தேயாகவேண்டிய பாலைநில வாழ்க்கையின் பண்பாடு அவர்களை வந்து தொட்டு உலுக்குவது ஒரு பெரிய மாற்றமே. அது வெளியுலகாக அவர்களுக்கு அறிமுகமாகியது. அவர்களுக்கு சாளரங்களை திறந்துவிட்டது. மாற்று விழுமியங்களை காட்டியது. நூற்றாண்டுகளாக இந்த பண்பாட்டு கொடுக்கல்வாங்கல் நிகழ்கிறது. இந்தியாவுக்கு இஸ்லாமின் பண்பாட்டுக்கொடை முதன்மையாக இதுவே. அதிலுள்ள சகோதரத்துவம்.

இந்தியப்பண்பாடு நிகராகவே இஸ்லாமிய வாழ்க்கைக்கும் பல முக்கியமான பங்களிப்புகளை ஆற்றியிருக்கிறது. இரு விஷயங்களை சுட்டிக்காட்டலாமென நினைக்கிறேன். ஒன்று, ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்களை தெய்வத்துள் வைக்கும்’ தொல்மரபு. அதுவே இங்குள்ள சூஃபி மரபின் வேர். இத்தனை இறைநேசச்செல்வர்களின் விளைநிலம். இன்னொன்று, அன்னையருக்கு இருக்கும் அதிகாரம். தக்கலைபகுதியில் இஸ்லாமியரிடம் ஏழு ஹூறிகள் [சப்தகன்னியர்] வழிபாடுகூட உண்டு. மேலும் பல இருக்கலாம்.

_NALACHARITAM_1_1783180f

[நளசரிதம் கதகளி]

இந்த உரையாடல் தொடர்ந்து நடந்து வந்துள்ளது. நம் பண்பாடு இவ்வுரையாடலின் விளைவு. இவ்வாறுதான் இஸ்லாமியரும் இந்துக்களும் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்டிருக்கின்றனர் இன்றுவரை. தர்காக்களுக்குச் செல்லும் இந்துக்களும் ஆலயங்களில் பல்வேறு வகைகளில் பணிகளாற்றும் இஸ்லாமியரும் அந்தப்பண்பாட்டின் இரு முகங்கள்.

இன்று நிகழ்வது இந்த வாயிலை முழுக்க இறுக்கி மூடும் முயற்சி. புர்க்கா போடுவதோ, குறிப்பிட்ட வகையில் தொழுவதோ ஒன்றும் அல்ல உண்மையில் பிரச்சினை. நாங்கள் வேறு என வாசலை மூடுவது அது. இஸ்லாமுக்குள் இந்தியப் பண்பாட்டின் அத்தனை பாதிப்புகளையும் ஷிர்க் என்று சொல்லி கிள்ளி வெளியே போடுவதிலுள்ள வன்முறை அவ்வாறுதான் நீண்டகால அளவில் மிகமிக மோசமான விளைவுகளை உருவாக்கக்கூடியதாக ஆகும்.

அந்த வாயில் மூடும் போக்கின் உள்ளடக்கம் இஸ்லாமியரல்லாதவர்களை எதிரிகளாக கட்டமைப்பது. இந்த நாட்டை எதிரிமண்ணாக, வென்றெடுக்கவேண்டியதாக கட்டமைப்பது. அதன் இலக்கு ஒரு சிறிய வட்டத்தின் அரசியல் லாபமே ஒழிய இஸ்லாமிய சமூகத்தின் வளர்ச்சி அல்ல.

இங்குள்ள முற்போக்கினரின் போலி ஆதரவுடனேயே இது செய்யப்படுகிறது. இங்குள்ள இடதுசாரிகள்கூட இஸ்லாமியரில் உள்ள முற்போக்கினரைவிட அதிலுள்ள அடிப்படைவாதிகளை அரசியல்காரணங்களுக்காக ஆதரிப்பது மிக ஆபத்தான போக்கு.

இந்த விலகிப்போகும் மனநிலை ஏற்கனவே பெந்தெகொஸ்தே போன்ற குறுங்குழு கிறித்தவர்களிடம் மிக அதிகம். சிஎஸ்ஐ கிறித்தவர்களும் சென்ற பத்தாண்டுகளாக அந்தப்பாதையில் செல்கிறார்கள். இந்துக்களைப் பொறுத்தவரை விலக்கத்துக்கான அழைப்பு அரசியல்வாதிகளிடமிருந்து எழுவதே ஒழிய மதம்சார்ந்து அல்ல என்பது மிகமுக்கியமான நல்ல கூறு என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைவானதி வல்லபி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைசென்னை வெண்முரசு கலந்துரையாடல் பதிவு