காந்தியும் சாதியும்

திரு ஜெயமோகன்,

காந்தியாரைப்பற்றிய உங்கள் புகழ்மாலைகளை வாசித்துக்கொண்டிருக்கிறேன். காந்தியார் சாதியைப்பற்றி என்ன சொன்னார் என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்தால் மழுப்பாமல் பதில்சொல்ல உங்களால் முடியுமா? வருணமும் சாதியும் இந்துமத்தை காத்தவை என்றுதானே அவர் சொன்னார்? சாதியமைப்பு இந்தியாவுக்கு தேவை என்று சொல்லவில்லை என்று நீங்கள் சொல்ல முடியுமா? இதோ நான் அனுப்பிய மேற்கோள்களை வாசியுங்கள். இன்னும் வேண்டுமென்றால் ஒரு நூறு பக்க மேற்கோள்களை உங்களுக்கு அனுப்புகிறேன்.

பூசைசெய்பவன் பூசைசெய்ய வேண்டும் , மலம் அள்ளுகிறவன் மலம் அள்ளவேண்டும் என்று சொன்னவர்தானே அந்த பனியா? அதற்காகத்தானே அவரை சாதி இந்துக்கள் மகாத்துமா என்று தூக்கி வைத்துக் கொண்டாடினார்கள்? இந்த உண்மையை மழுப்பிவிட்டு பூமாலைபோட்டு தெருவில் நிற்கவைத்தால் நம்புவதற்கு இன்னும் மக்கள் தயாராக இல்லை.

மனிதனை மனிதனாக மதிக்கத்தெரியாத ஒருவரை, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்திய ஒருவரை மகாத்துமாவாக எப்படி ஏற்பது? நல்ல மனுஷனாகக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு மோசடிப்பேர்வழியை அயோக்கியனை மகாத்துமாவாக ஆக்க நீங்கள் என்ன சப்பைக்கட்டு கட்டினாலும் தீராது.

சாதியை முன்வைத்து நியாயப்படுத்திய காந்தி இந்தியாவுக்கு என்ன நன்மை செய்தார். உங்களுக்கு நேர்மை இருந்தால் இதற்கு மட்டும் பதில் அளியுங்கள் பார்க்கலாம்

K.ஜெபமாணிக்கம்
**
அன்புள்ள ஜெபமாணிக்கம்,

காந்தியைப்பற்றிப் பேசும்போது சிற்பி லாரி பேக்கர் சொன்ன ஒருவரி என் நினைவில் நின்றது, அவர் சமகாலத்து காங்கிரஸ்தலைவர்கள் அனைவரையும்விட மேற்கத்தியர்களுக்கு நெருக்கமானவராகத் தோன்றினார் என்று. பேக்கரின் அந்த மனப்பிம்பத்தில் முக்கியமான ஓர் உண்மை மறைந்துள்ளது.

அந்த உண்மையை வேறு ஒரு கோணத்தில் சுந்தர ராமசாமி அவரது உரையாடலில் என்னிடம் சொன்னார், காந்தியின் மனம் என்பது ஒரு நவீன மேற்கத்திய மனம் என்று. கிட்டத்தட்ட ஓர் அறிவியலறிஞனின் மனம். காந்தி எல்லாவற்றையும் ‘சோதனை- விளைவுகளை அவதானித்தல்- பிழை திருத்தல்- மீண்டும் முயல்தல்’ என்ற தூய அறிவியல் நோக்கிலேயே செய்தார். இந்திய விடுதலைப்போராட்டம் முதல் தன் சொந்த மலக்குடலை சுத்தம்செய்வதுவரை.

ஆகவே காந்தியைச் சரிவரப்புரிந்துகொண்டவர்கள் மேலைநாட்டினரே என்று சுந்தர ராமசாமி வாதிட்டார். அது உண்மைதான் என நான் நினைக்கிறேன். காந்தி எப்போதும் எதையும் நடைமுறை சார்ந்துதான் புரிந்துகொள்ள முயன்றார். அவரே இந்தியகிராமங்கள் தோறும் அலைந்தார். மக்களின் வாழ்க்கையை அவரே கண்டார். அந்த வேறுபாடு அவரை பிற காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் மற்றும் அறிவுஜீவிகளிடம் இருந்து பிரித்தது. அவர்கள் கட்சி ,அமைப்பு சார்ந்து பயணம் செய்திருப்பார்களே ஒழிய மக்களிடையே சென்றவர்கள் அல்ல. அவர் பேச்சைக்கேட்டு அவரைப்போல மக்களிடையே செல்ல துணிந்த அறிஞர்களில் மேலைநாட்டினரே அதிகம். லாரி பேக்கர் அவர்களில் ஒருவர்.

இன்னொரு விஷயத்தையும் நான் கவனித்தேன். அக்கால இந்திய அரசியல்வாதிகள் மற்றும் அறிவுஜீவிகளில் உள்ளூர வெள்ளையன்மீது தாழ்வுணர்ச்சி இல்லாத ஒரே மனிதரும் அவர்தான்.  காந்தியைத்தவிர பிறருக்கு வெள்ளையர்களின் பழக்கவழக்கங்களில், உடைகளில், அவர்களின் மொழியில், சிந்தனைகளில் இருந்த வெளிப்படையான பக்தியை நாம் சாதாரணமாகவே காணலாம். காந்தி அவற்றுக்கு அப்பாற்பட்டவர். அதனால்தான் பிற எவரையும் விட அவர் மேலைநாட்டினரைக் கவர்ந்தார்.

இந்தத் தாழ்வுணர்ச்சி இத்தியமறுமலர்ச்சியின்போதே உருவாகி இந்திய விடுதலைப்போராட்டகாலத்தில்கூட நம் சிந்தனைகளை ஆழமாகப்பாதிக்கும் அம்சமாக இருந்தது. மிகச்சிறந்த ஆரம்பகாலகட்ட உதாரணம் என்றால் பிரம்ம சமாஜத்தை தோற்றுவித்த ராஜா ராம் மோகன் ராயைத்தான் சொல்லவேண்டும். அவர் இந்தியமரபு சார்ந்த எல்லாவற்றையும் மேலைநாட்டினரின் பார்வையில்தான் பார்த்தார். அவர்கள் புரிந்துகொண்ட விதத்தையே பகுத்தறிவுமிக்க நவீன நோக்காக எண்ணி அதை அப்படியே தானும் ஏற்றுக்கொள்ள முயன்றார்.

மேலைநாட்டினருக்கு இந்தியாவில் பிரம்மம் என்ற கருத்துருவும் உபநிடதங்களும் ஏற்புடையதாக இருப்பதைக் கண்டு ராஜாராம் மோகன் ராய் அதை மட்டும் இந்திய மெய்ஞான மரபில் சிறந்த பகுதி என்றும் மையம் என்றும் என்று வகுத்துக்கொண்டார். அதன் அடிப்படையில் ஒரு புதிய இந்துமதத்தை கட்டி எழுப்ப எண்ணி பிரம்ம சமாஜத்தை உருவாக்கினார்.

பிரம்மசமாஜம் அப்படியே கிறித்தவர்களின் கூட்டுப்பிரார்த்தனை, பிரசங்கம் போன்ற மதவழிமுறைகளை பின்பற்றியது. பரிசுத்த ஆவியை அது பிரம்மம் என்றது, அவ்வளவுதான். ஆகவே வெள்ளையர்களுக்குப் பொதுவாக பிரம்மசமாஜம் மிகவும் அறிவார்ந்ததாக, நெருக்கமானதாக இருந்தது. இக்காரணத்தால் ஆங்கிலேயருடன் நெருங்க விரும்பிய கல்கத்தாவின் படித்தவற்கத்துக்கு பிரம்மசமாஜம் ஒரு அடையாளமாக ஆகியது. ஆங்கிலேயர் போனதும் அதுவும் போனது.

இந்தியாவை வெள்ளையரின் கண்ணால் பார்த்தல் என்பதையே நவீன நோக்காக கொள்ளுதல் என்பதை நாம் ஜவகர்லால் நேரு வரை மீண்டும் மீண்டும் காணலாம். அந்த நோக்கே அம்பேத்காரிலும் ஆரம்பத்தில் இருந்தது என்றாலும் தன் அபாரமான கல்வியால் சுயமான சிந்தனைக் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டு அம்பேத்கார் பின்னர் விலகிச்சென்று வளர்ந்தார்.

இவ்வாறு  ஐரோப்பியரின் நோக்கை கடன்வாங்கித்தான் இந்தியாவின் தனித்தன்மைகளான சாதியமைப்பு, மத ஆசாரங்கள், பண்டைய இலக்கியங்கள், இந்திய மெய்யியல்மரபுகள் அனைத்தையும் நம் அறிவுஜீவிகள் ஆராய்ந்தார்கள். கோட்பாடுகளை மட்டுமல்ல தரவுகளைக்கூட ஐரோப்பியரின் நூல்களில் இருந்தே பெற்றுக்கொண்டார்கள். நேருவின் புகழ்பெற்ற நூல்களில் இவ்வியல்பைக் காணலாம். இன்றுவரை  இந்திய அறிவுத்தளத்தில் நிகழ்ந்துகொண்டிருப்பதும் இதுவே.

இதன் விளைவாக ஓர் வியக்கத்தக்க நிகழ்வை நாம் இந்திய மறுமலர்ச்சிக்காலகட்டத்துச் சிந்தனைகளில் காணலாம். நூற்றாண்டுகளாக உருவாகிவந்து கோடானுகோடி மக்களின் வாழ்க்கையின் பகுதியாக இருந்துவந்த பல விஷயங்கள் அந்த மக்களின் அறிவுஜீவிகள் நடுவே எந்தவகையான விவாதமும் இல்லாமல் உடனடி நிராகரிப்புக்கு உள்ளாயின. சாதிமுறை அதில் ஒன்று.

சாதி என்ற அமைப்பு இந்திய சமூகத்தின் முக்கியமான ஒரு கூறு. அதன் வரலாற்றுப் பரிணாமம், சென்றகாலத்தில் அதன் சமூகப்பயன்பாடு, அதன் நிகழ்காலப்பணி எதைப்பற்றியும் எந்த ஆய்வும் இந்தியாவில் நடக்கவில்லை. இந்தியாவை நோக்கிய ஆங்கிலேயர் அதை இந்திய சமூகத்தைப் பீடித்திருக்கும் ஒரு நோய் என்று சொன்னார்கள். இந்திய படித்த வர்க்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு சொல்ல ஆரம்பித்தது. வெள்ளையனே சொல்லிவிட்டான் என்ற தாழ்வுமனப்பான்மையே காரணம்.

ஆனால் உண்மையில் இந்த நிராகரிப்பு என்பது நம் படித்தவற்கத்தின் நாக்குகளில் மட்டுமே இருந்தது. நெஞ்சில் நிகழவில்லை. இக்கணம் வரை அப்படித்தான். ஏன் என்றால் அவனுக்குள் சாதியைப்பற்றிய எந்த விவாதமும் நிகழவில்லை. அவ்வாறு விவாதம் நிகழ்ந்திருந்தால் சாதியின் சமூகப்பங்களிப்பு குறித்து அவன் சிந்தனை செய்திருப்பான். இப்போதும் சாதியைச் சுமக்க அவனுக்கு என்ன காரணங்கள், கட்டாயங்கள் உள்ளனவோ அந்தக் காரணங்கள் எல்லாமே விவாதத்துக்கு வந்திருக்கும். அவற்றை வேறு எவ்வகையில் தாண்டிச்செல்ல முடியும் என்று பார்த்திருப்பான். அந்த வழிமுறைகள் அவனுக்கு உதவியிருக்கும்.

காந்தியைப் பொறுத்தவரை அவர் அந்த தாழ்வுணர்ச்சி முற்றிலும் இல்லாதவர். இந்தியாவைப்பற்றிய மேலைநாட்டு நோக்கை அவர் எவ்வகையிலும் கடன் பெற்றவர் அல்ல. மேலைநாட்டின் தத்துவஞான மரபில் அன்று மிகுந்த படைப்பூக்கத்துடன் உருவாகிவந்த ஒரு தரப்புடன் அவருக்கு தீவிரமான உறவிருந்தது — தோரோ, ரஸ்கின், டல்ஸ்தோய் மரபில். ஆனால் அவர் சிந்தனைகளைக் கடன்கொண்டவரல்ல.

காந்தியின் தனித்தன்மை அவர் தன் சிந்தனைகளை நூல்களில் இருந்து பெறவில்லை என்பதே. அவர் தன் சொந்தச் சிந்தனைகளுக்கு  தேவையான அளவுக்கு மட்டும் நூல்களை பயன்படுத்திக்கொண்டார்.  அவர் நடைமுறைவாதி. சமூகம் குறித்த தன் தரவுகளை தன் சொந்த அவதானிப்புகளில் இருந்தே அவர் பெற்றுக்கொண்டார். தன் பகுத்தறிவுக்கு ஒரு விஷயம் உண்மையிலேயே திருப்தி அளிக்காத வரை அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

தன் தரப்பு முற்போக்காக, நவீனமாகக் கருதப்படுமா இல்லையா என்பதைப்பற்றி ஒருபோதும் கவலைப்பட்டவரல்ல காந்தி. எளிதாக ஒரு முற்போக்குக் கருத்தை வாயளவில் ஏற்றுக்கொண்டு  அதைப்பற்றி சொந்தவாழ்க்கையில் கவலையே இல்லாமல் முன்னால்செல்வதும் அவருக்கு உடன்பாடான விஷயம் அல்ல. அவர் ஒருபோதும் தன் கருத்தில் பிடிவாதமாக இருக்கவில்லை. தன் கருத்துக்களை பிறர் மாற்றும்பொருட்டு எப்போதுமே திறந்துவைத்திருந்தார். தன் பகுத்தறிவு எப்போது திருப்தி அடைகிறதோ அப்போது ஒரு முன்னுதாரண அறிவியலாளன் போல தன்னை அவர் மாற்றிக்கொண்டார்.

*

இந்தக் கோணத்தில்தான் நாம் காந்தி சாதியைப் பற்றி என்ன நினைத்திருந்தார் என்று பார்க்க வேண்டும். காந்தி அக்காலத்தில் ஒரு இந்து சாதியைப்பற்றி இயல்பாக என்ன நம்பிக்கை கொண்டிருந்தாரோ  அந்த நம்பிக்கையையே தானும் கொண்டிருந்தார். அவர் காலத்தில் ஐரோப்பியரை வழிமொழிந்து சாதிக்கு எதிராகப் பேசியவர்கள் அந்தரங்கத்தில் கொண்டிருந்த நம்பிக்கைதான் அது. காந்தியின் உண்மையுணர்ச்சியே அவரை அதை நேர்மையாக பதிவுசெய்ய வைத்தது.

காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள் இவை. வருணப்பிரிவு என்பது சமூகத்தில் ஓர் ஒழுங்கை உருவாக்கும்பொருட்டு இயல்பாக பரிணாமம் அடைந்துவந்த ஒன்று. அது சமூகத்தின் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறது. தந்தையரின் தொழிலை மகன் செய்யும்போது இயல்பாகவே அவனுக்கு அதில் திறமை உருவாகி வருகிறது. இந்திய சமூகம் உள்மோதல்களினால் அழியாமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட அது பலநூற்றாண்டுகளாக உதவி வந்திருக்கிறது.

இந்திய சமூகம் மீது நெடுங்காலமாக நிகழ்ந்த பல அன்னியத் தாக்குதல்களை வெல்லவும் தாக்குபிடிக்கவும் அது உதவியிருக்கிறது. மக்கள் பிறப்பின் அடிப்படையில் ஒரு தொழில்குழுவாகத் திரண்டு ,ஒரே உடலாக தங்களுக்கு வாழ்க்கை விடுத்த கடுமையான சவால்களை சமாளிக்க சாதியமைப்பு வழியமைக்கிறது. ஆகவே மையப்படுத்தப்பட்ட அரச அதிகாரத்தின் உதவி இல்லாமலேயே மக்கள் தங்களை சிறிய சுயநிர்வாக அமைப்புகளாக தொகுத்துக்கொண்டு தங்கள் வாழ்க்கையை தாங்களே அமைத்துக்கொள்ள சாதி உதவியிருக்கிறது. சாதியாசாரங்களும் சாதிவிதிகளும் அவ்வாறு உருவாகி வந்தவையே.

ஆகவே வர்ண அமைப்பும் அதில் இருந்து உருவாகி வந்த சாதியும் முழுக்க நிராகரிக்கத்தக்கவை அல்ல. அவை காலப்போக்கில் பல சிதைவுகளையும் திரிபுகளையும் அடைந்திருக்கலாம். அந்தத் திரிபுகளைக் களைந்து சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்வதே முறை. சாதி உருவாக்கும் ஏற்றத்தாழ்வுகளைக் களையலாம். சாதிமோதல்களை இல்லாமல் ஆக்கலாம். ஆனால் இந்தியாவில் அதிகாரப்பரவலாக்கத்துக்குச் சாதி இன்றியமையாதது. சாதி என்பது மைய அதிகாரங்களுக்கு எதிராக மக்கள் தங்களை தாங்களே நிர்வகித்துக்கொள்ள உதவுகிறது– இவையெல்லாம்தான் காந்தியின் ஆரம்பகால எண்ணங்கள்.

காந்தி 1908 ல் அவரது இளமைப்பருவத்தில் தென்னாப்ரிக்காவில் இருக்கும்போதே எழுதிய ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற சிறிய நூலில் இந்தக் கருத்துக்களை முதலில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த முதல்நூலை காந்தி தன் தாய்மொழியான குஜராத்தியிலேயே எழுதியிருந்தார். அந்நூலில் காந்தி ஐரோப்பாவில் உருவாகி வந்த தொழில்புரட்சியையும் அதன் விளைவான நவீனத்துவத்தையும் ஆழமாக சந்தேகப்படுகிறார். அவை உலக வளங்களைச் சுரண்டி தேவையற்ற போட்டியை உருவாக்கி அழிவுக்கே வழிவகுக்கும் என்கிறார். வலிமையான மையஅதிகாரம் அற்ற ஒரு தேசத்தை உருவகிக்கிறார். அது சுயநிர்வாகம் செய்துகொள்ளும்  தன்னிறைவுகொண்ட தொழில்கிராமங்களினால் ஆனதாக இருக்கும் என்றார்.

அதில் சொல்லியிருந்த சாதி குறித்த தன் அவதானிப்பை  காந்தி தன் நேரடியான இந்திய அனுபவத்தில் இருந்தே பெற்றுக்கொண்டிருக்க வேண்டும். இயல்பாக அவருக்கு அவரது சூழல் அளித்த புரிதலை அவர் தன் அவதானிப்புகள் மூலம் நிறுவிக்கொண்டார். வெள்ளையர் சாதியமைப்பை இந்தியாவின் நோய் என்று சொல்லிவந்தாலும் நடைமுறையில் அது அப்படி இருக்கவில்லை என்று காந்தி கண்டறிந்த்¢ருப்பார். சாதியமைப்புக்கு இந்திய சமூகத்தில் மிக ஆக்கபூர்வமான ஒரு பங்களிப்பு இருப்பதை அவர் உணர்ந்திருப்பார். அந்த நடைமுறை அறிவையே அவர் முன்வைத்தார்.

இன்றைய இந்தியாவை வைத்தே அவர் கண்டதென்ன என்று நாம் ஊகிக்க முடியும். உயர்சாதியினர் மட்டுமல்ல ஏழை அடித்தள மக்களும்கூட தங்கள் சாதியடையாளத்தை மிகுந்த உணச்சிகரத்துடன் முன்னிறுத்துவதைக் காந்தி கண்டிருப்பார். அந்தச் சாதி அடையாளம் அவர்கள்மேல் திணிக்கப்பட்டதாக, அவர்கள் மேல் வைக்கப்பட்ட நுகமாக, இருந்திருந்தால் அவர்கள் அதை அவ்வாறு தழுவிக்கொண்டிருக்க மாட்டார்கள். மாறாக அது அவர்களின் தனித்தன்மையின் சின்னமாக, அவர்களுக்கு பாதுகாப்பளிக்கும் குழு அடையாளமாக உள்ளது.

சாதி என்பது மக்களை திரட்டி இயல்பான ஒரு கிராமசமூக அமைப்பை உருவாக்குகிறது என காந்தி அறிந்தார். அது அவர்களுக்கு சேர்ந்து பணியாற்றவும் சேர்ந்து போராடவும் இன்றியமையாததாக இருந்தது. சாதி பெரும்பாலும் இந்திய சமூகத்தில் தொழிற்குழுக்களாகவே இருந்தது. தொழிலில் உள்ள சவால்களை மக்கள் சாதியின்மூலமே சேர்ந்து எதிர்கொண்டார்கள். போர் காரணமாகவோ பஞ்சம் காரணமாகவோ இடம்பெயரும்போதுகூட ஒருசாதியாக, கூட்டமாகவே அவர்கள் இடம்பெயர்ந்தார்கள். சென்ற இடங்களில் போராடி வேரூன்ற சாதியின் ஒற்றுமையே உதவியது.

இன்றும்கூட நவீன இந்தியாவில் சாதி மக்களை இயல்பான, வலிமையான, குழுவாக திரட்டி அவர்களின் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கிறது. தொழில்களில் வணிகங்களில் ஈடுபடுவதற்கும் உரிமைகளுக்காக போராடுவதற்கும் ஜாதியாகத் திரள்வது அவர்களுக்கு உதவுகிறது.  உதாரணமாக தமிழ்நாட்டில் கொங்குவேளாளரையும் நாடாரையும் சொல்லலாம். சுதந்திரத்துக்குப் பின் வந்த கல்வியும் நவீனமயமும் சாதியை மேலும் வலுவடையச்செய்தன. காரணம் சாதிக்கு சமூகத்தின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய  பங்களிப்பு இருக்கிறது. அந்த பங்களிப்பு இருப்பது வரை சாதி அழியாது

ஆகவே சாதி வெள்ளையர் சொன்னதுபோல இந்திய சமூகத்தில் ஒரு முற்றிலும் எதிர்மறையான ஒரு கூறு அல்ல. மிக ஆக்கபூர்வமான பங்களிப்பை ஆற்றிய, ஆற்றி வருகிற ஓர் அமைப்பு. ஆகவேதான் சாமானிய இந்தியன் சாதியைக் கைவிடத் தயாராக இல்லை. இதுவே இன்றும் இந்தியாவின் யதார்த்தம் என்பதை வழக்கமான கோஷங்களை கொஞ்சம் ஒத்திவைத்துவிட்டு கொஞ்சம் திறந்தமனத்துடன் நோக்கினால் புரிந்துகொள்ள முடியும்.

கிராம சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசிய காந்தி இந்திய மக்கள் அவர்களின் நெருக்கடிகளை எல்லாம் தாண்டிவர உதவிய சாதி என்ற அமைப்பை தக்கவைத்துக்கொள்ள எண்ணியதில் என்ன பிழை இருக்கிறது? இன்று கொங்குவேளாளரும் நாடாரும் எப்படி ஒருங்கிணைந்து முன்னேறினார்களோ அப்படி எல்லா சாதியும் திரண்டு உழைத்து முன்னேறவேண்டும் என்றே அவர் கனவு கண்டார். காந்தி மக்களுக்குக் கற்றுக்கொடுக்க முற்பட்டவர் மட்டும் அல்ல, மக்களிடமிருந்தும் கற்றுக்கொண்டவர். சாதி அவர்களுக்கு உயிர்போன்றது என அவர் அறிந்திருந்தார்.

ஐரோப்பிய சிந்தனையை கடன்வாங்கிக்கொண்டு, இந்திய யதார்த்தத்தைப் பற்றி கொஞ்சம்கூட பிரக்ஞை இல்லாமல், தன்னிடம் விவாதிக்க வந்த அன்றைய ஆங்கில கற்ற முற்போக்கு வற்கத்திடம் காந்தி மீண்டும் மீண்டும் விவாதித்தார்.மக்களிடம் சென்று அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கச் சொன்னார். சாதியின் வரலாற்றுப்பங்களிப்பை, நடைமுறைத் தேவையை விளக்கினார்.

காந்தி சாதியைப்பற்றி பேசிய அந்நாட்களில் இந்திய சமூகத்தில் சாதி உருவாகி வந்த விதத்தைப் பற்றிய ஓர் அறிவியல்பூர்வமான ஆய்வே நடக்கவில்லை. இந்தியாவை மதவிழிப்பற்ற காட்டுமிராண்டி நாடாகச் சித்தரித்த கிறித்தவ மதப்பரப்புநர்கள் உருவாக்கிய சித்திரமே பிரபலமாக இருந்தது. அதன்படி, சாதி என்பது இந்திய சமூகத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கான கொடிய வழக்கங்களில் ஒன்று.  அது இந்து மதத்தாலும் பிராமணர்களாலும் அவர்களின் ஆதிக்கத்துக்காக ஒரு சதிவேலையாக உருவாக்கப்பட்டது. ஆகவே வேருடன் கெல்லி எறியப்பட வேண்டியது…

இன்றுவரை தமிழ்நாட்டில் அறிவுஜீவிகள் என்பவர்களிடையே பிரபலமாக இருப்பது இந்த ஒற்றைவரிப் புரிதல் மட்டுமே. இந்த மேலோட்டமான புரிதலை மக்களிடையே கொண்டுசெல்ல முடியாது, ஏனென்றால் அடிப்படையான ஒரு பயன்பாடு இருப்பதனால்தான் அவர்கள் சாதியை ஆரத்தழுவிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே சாதிநிராகரிப்பு என்பது மேடையில் செய்யப்படும் வெற்றுபாவனையாக நின்றுவிடுகிறது. நடைமுறை யதார்த்தத்துக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இருப்பதில்லை.

தமிழ்நாட்டு யதார்த்ததையே பார்ப்போம். இங்கே கொஞ்சமாவது சாதியை விட்டு வெளியே வந்தவர்கள் ‘உயர்மட்ட’ சாதியினரே. இன்றும் ‘கீழ்மட்ட’ சாதியினரிடம் சாதிப்பற்று என்பது ஆழமாக வேரோடி இருக்கிறது. சாதிமறுப்பை மேடையில் கக்குபவர்கள், சாதியை உருவாக்கிய உயர்சாதிச்சதியை எதிர்த்து பொங்குகிறவர்கள் அனைவருமே சாதிக்குள்தான் வசதியாக இருந்துகொண்டிருக்கிறார்கள்.

காந்தி இறந்தபின்னர், டி.டி.கோஸாம்பியைப் போன்ற மார்க்ஸிய ஆய்வாளர்கள் மார்க்ஸிய சமூக ஆய்வுச் சட்டகத்தை இந்தியச் சமூகம் மீது போட்டுப்பார்த்தபோதுதான் சாதியின் உருவாக்கத்தைப் பற்றிய முதல் அறிவியல்ரீதியான விளக்கம் இந்தியச் சூழலில் உருவாகி வந்தது. அந்த விளக்கத்தை ரத்தினச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

இந்திய நிலப்பகுதி வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட வளர்ச்சிப்படிகளில் நின்ற பலவகையான மக்கள்கூட்டங்களினால் ஆனதாக இருந்தது. அந்நிலையில் நிலவளம் நீர்வளம் போன்ற காரணங்களினால் வளர்ச்சிபெற்ற மக்கள்கூட்டங்கள் பிற கூட்டங்களை வென்று தனக்குள் இழுத்துக்கொள்ள ஆரம்பித்தன. இவ்வாறு உள்ளிழுக்கும் போக்கின் விளைவாக உருவானதே சாதி என்ற அமைப்பு.

வெற்றிபெற்ற மக்கள்கூட்டமான ஆரியர்கள்  தங்களை தொழிலின் அடிப்படையில் நான்கு வருணங்களாக பிரித்துக்கொண்டிருந்தார்கள்.  தன்னுடன் இணைத்துக்கொண்ட மக்கள்கூட்டங்களை அவர்களின் தொழில் மற்றும் வளர்ச்சியின் அடிப்படையில் தங்களில் ஏதேனும் ஒரு வர்ணத்துடன் இணைத்துக்கொண்டார்கள். இவ்வாறுதான் வர்ண அமைப்பு பலநூறு சாதிகளால் ஆனதாக மாறியது. சாதி என்பது பழங்குடி இனக்குழுக்களே.

ஆக, சாதிகள் என்பவை உண்மையில் ஒரு சமூகம் சிலரால் ஆதிக்க நோக்குடன் திட்டமிட்டு பலவாக பகுக்கப்பட்டு உருவானவை அல்ல. மாறாக, பலநூறு சிறிய இனக்குழுக்கள், பழங்குடிச்சமூகங்கள் ஒரு பொது சமூகமாக தொகுக்கப்பட்டதன் விளைவாக உருவானவை. ஒருசாதிக்குள் உபசாதிகள், உபசாதிக்குள் சிறிய குலக்குழுக்கள், குலக்குழுவுக்குள் கூட்டங்கள் என உள்பிரிவினைகள் இருப்பதை இவ்வாறுதான் புரிந்துகொள்ள முடியும்.

பல்வேறு மக்கள்கூட்டங்களை ஒன்றாகத் தொகுத்து ஒரே அமைப்புக்குள் கொண்டுவருவதன் வழியாகவே அரசுகள் உருவாயின. மேலும் மேலும் அதிக மக்கள் அந்தச் சமூக அமைப்புக்குள் வருவதன் விளைவாகவே அரசுகள் பேரரசுகள் ஆக முடியும். ஆகவே அந்த உள்ளிழுக்கும் போக்கு மன்னர்களால் ஊக்குவிக்கப்பட்டது. அந்தச் சாதித்தொகுப்புக்கு தத்துவ விளக்கமும் புனிதத்தன்மையும் அளிக்கப்பட்டது. அவ்வாறாக அச்சமூகத்தில் அனைவரும் அந்த சமூக அடுக்கை ஏற்றுக்கொள்ள வைக்கப்பட்டார்கள்.

கண்டிப்பாக இந்த அமைப்பு ஆதிக்க நோக்கம் கொண்டதே. நிலப்பிரபுத்துவ காலத்தில் உருவான இந்த அமைப்பு சமூகக் கூறுகளை கீழ் கீழாக அடுக்கி ஒரு ஆதிக்க கட்டுமானத்தை உருவாக்கியது. நிலப்பிரபுத்துவத்தின் அமைப்பு இது என்பதனால் யாரிடம் நிலம் இருக்கிறதோ அவர்கள் மேலே இருந்தார்கள். யார் நிலமில்லாதவர்களோ அவர்கள் கீழே சென்றார்கள். நிலத்தை அடைந்த கீழ்சாதிகள் மேலே சென்றமைக்கும் நிலமிழந்த மேல்சாதி கீழே வந்தமைக்கும் இந்தியாவில் உதாரணங்கள் பல உள்ளன.

இந்த சித்திரம் இந்தியாவின் எளிய மக்கள் ஏன் சாதியடையாளத்தை விட மறுக்கிறார்கள் என்பதற்கான விளக்கத்தை அளிக்கிறது. சாதி என்பது அம்மக்களின் புராதனமான குல அடையாளம்.  அது அவர்களுக்கு தனித்தன்மையை அளிக்கிறது. ஒரு குழுவாக உணரச்செய்கிறது. ஆகவே எந்நிலையிலும் அதை அவர்கள் இழக்க முடியாது. இன்று வரை இந்தியாவில் அது சாத்தியப்படவும் இல்லை.

இந்தக் கோணத்தில் பார்த்தால் காந்தி அவருக்கே உரிய நுண் அவதானிப்பால் சாதியின் சமூக முக்கியத்துவத்தையும் பங்களிப்பையும் கிட்டத்தட்ட இதே அளவுக்கு  உணர்ந்துகொண்டிருப்பதை காணலாம். அவர் அக்காலத்தில் சாதியை தூக்கிப்பிடித்த இந்து சனாதனிகளின் குரலை எதிரொலிக்கவில்லை. பழைமைவாதத்தை பேசவும் இல்லை. அவர் மிக அறிவியல்பூர்வமாகவே சாதியை அணுகியிருக்கிறார்.

[[மேலும்]

முந்தைய கட்டுரைகாந்தியும் சாதியும் 2
அடுத்த கட்டுரைகனடா இலக்கியநிகழ்ச்சி