பிம்பக் கட்டுடைப்பும் ஆசிரியர்களும்

Yathi

அன்புள்ள ஜெ

“இன்னமும் ஊட்டி மனநிலையிலேயே இருக்கிறேன். ஊட்டி குருவின் இடம். மனதில் நினைவுகளாக வளர்ந்துகொண்டே இருப்பவர். என் இயல்பில் காலம்செல்லச்செல்ல அவரது பிம்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறேனே ஒழிய இன்னமும்கூட ஒரு கறாரான மதிப்பீட்டை அவரைப்பற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. மதிப்பீட்டைவிட இந்தப் பற்றே என்னை மேலே கொண்டுசெல்கிறது என உணர்கிறேன்”

பிம்பங்களை உடைத்து, கறாரான மதிப்பீட்டை வைக்க வேண்டும் என்ற தர்க்கத்துக்கும், இந்த உணர்ச்சிக்கும் தலைகீழ் வேறுபாடு இருக்கிறதல்லவா? ஓசோவும், சங்கராச்சாரியாரும் இப்படிதானே பலருக்கு குருவாக இருந்திருப்பார்கள்?? நித்யாவின் பிம்பத்தை நீங்கள் வளர்ப்பது ஏன் என்று புரிந்து கொள்ள முடிகிறது..

எனில் இறுதியில் நமக்கு மன நிறைவை அளிப்பது / முழுமையை தருவது / நம்மை மேலே கொண்டு செல்வது என்பது ஒரு ஆளுமையை / குருவை பற்றிய கறாரான மதிப்பீடுகளா அல்லது பிம்பங்களா?? அல்லது இரண்டுமே தேவை எனில் எப்படி?

உங்களின் வேறொரு கட்டுரையில் வரும் இந்த இடம்,

//நான் சு.ரா.வைப் பற்றி சொல்லி முடித்தேன். அஜிதன் பயங்கரமாக மனம் நெகிழ்ந்துவிட்டான். முகம் கலங்கி கண்கள் பளபளத்தன.

” நீ இப்பல்லாம் அவரை பத்தி பேசினா அவர் எழுதியதைப்பத்தியே பேசறதில்லை” என்றாள் அருண்மொழி.

”உண்மைதான். இப்ப யோசிக்கிறப்ப எழுதினது பேசினது சர்ச்சை பண்ணினது எல்லாமே பின்னாலே போயிட்டுது…மனுஷங்க முழுமையா வாழற சில தருணங்கள் இருக்கு…அது மட்டும்தான் மிச்சம்னு தோணுது” //

பிம்பங்களை உடைப்பது / அகத்தில் அந்தரங்கமாக வளர்ப்பது இரண்டுமே தேவைதானா??

பிரசாத்

DSC_1694

 

அன்புள்ள பிரசாத்,

சிக்கலான கேள்விதான். என்னால் சரியான பதிலைச் சொல்லமுடியுமா என்று தெரியவில்லை. நேர்மையான பதிலைச் சொல்கிறேன்.

எப்பொருள் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவு. ஆகவே பிம்பங்களை அல்ல, உண்மையை நோக்கியே ஒரு நல்ல வாசகனின், சிந்தனையாளனின் பார்வை செல்லவேண்டும். இதில் எந்த ஐயமும் இல்லை.

பிம்பங்களை நாம் ஏன் உடைக்கிறோம்? அது பிம்பம் என்பதனால்தான். பிம்பமே ஒழிய உண்மை அல்ல என்று எங்கோ நம் ஆழம் உணர்ந்திருப்பதனால்தான். ஆகவே அதனுடன் நம் மனம் முட்டிக்கொண்டே இருக்கிறது.

வேண்டுமென்றே ஒரு பிம்பத்தை நம்மால் விட்டுவைக்க முடியுமா என்ன? நாம் அதை விட்டுவைத்திருக்கிறோம் என்று தெரியும்போதே அமைதியிழந்துவிடுகிறோம் அல்லவா? நம்மை அறியாமலேயே நம்முள் கட்டுடைக்க ஆரம்பித்துவிடுகிறோம் அல்லவா?

அப்படிக் கட்டுடைத்தபின்னர் நாம் பொதுவெளியில் அதைச் சொல்லாமலிருக்கலாம். அவ்வளவுதான். அதிலென்ன இருக்கிறது?

ஆனால் ஒருவரை நாம் நம் ஆசிரியராக, நம் ஆழத்துக்கு அணுக்கமானவராக நம்பி ஏற்பதுவரைதான் அவரை நாம் ஆராய்ச்சிநோக்கில் அணுகவேண்டும். அதற்குப்பின்னரும் அந்த ஆராய்ச்சிநோக்கு இருந்தால் ஒருபோதும் உண்மையான உறவு உருவாகாது. அந்த ஆராய்ச்சியே மிகப்பெரிய இடைவெளியை உருவாக்கி நிறுத்திவிடும். அதைக்கடந்து அவரை ஆழ்ந்து அறியவும் முடியாது.

இன்னும் சொல்லப்போனால் ஒருவரை  உறவில் நுணுக்கமாகக் கண்காணிக்கத் தொடங்கினாலே எதிர்மறைப்பிம்பம்தான் உருவாகும். காரணம், ஆராய்ச்சி நோக்கு என்பதே நாம் நம்முடைய இருண்டபக்கத்தால்தான்  அவரை மதிப்பிடுவதுதான். அது குறைகளை மட்டும்தான் கண்டுபிடித்துத் தொகுத்துக்கொள்ளும்

நான் நித்யாவை அணுகுவதற்கு முன் பலகோணங்களில் ஆராய்ந்திருக்கிறேன். மோதியிருக்கிறேன். விவாதித்திருக்கிறேன். அதன்பின்னர் அவரை ஆசிரியராக ஏற்றேன். ஏற்றபின் அவருடனான என் உறவு என்பது முழுமையான அர்ப்பணிப்பே. தங்குதடையற்ற பேரன்பே.

அந்த அர்ப்பணிப்பே அவரை நான் அணுகவும் ஆழமாக அறியவும் செய்தது. அவ்வணுக்கம் இல்லாமல் அவரை எப்படி வாசித்து விவாதித்து அறிந்திருந்தாலும் அது அறிவல்ல. ஆசிரியர் மாணவர் உறவில் அன்பு என்பது மிகமிக முக்கியமான ஊடகம். தாய் முலையூட்டுவதுபோல அங்கே  ஆசிரியரிடமிருந்து மாணவனுக்கு அறிதல்  செல்கிறது.

அது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதைச் சொல்ல எனக்கு வெட்கமில்லை. நான் எழுத்தாளன் என்னும் ஆணவத்துடன்தான் அவரை அணுகினேன். அவருடைய ஆளுமை என்னைச் சீண்டியது. அவர் என்னை மதிக்கிறாரா, எனக்கு அவர் மனதில் என்ன இடம் என்பதை அறிவதிலேயே  தொடக்கநாட்களில் என் மனம் குறியாக இருந்தது

ஆகவே சிறிய விஷயங்களுக்குக் கூடப் புண்பட்டேன். அவரோ என்னை உடைத்து மறு ஆக்கம் செய்ய முயன்றார். ஆகவே கடுமையான அவமதிப்பு இருந்தது.  சீற்றம்கொண்டு  கண்ணீருடன் நான் கிளம்பிச்சென்றிருக்கிறேன். திரும்ப வரவே மாட்டேன் என கடிதம் எழுதியிருக்கிறேன்

ஆனாலும் உள்ளூர ஓர் உணர்வு இருந்தது, என் ஆணவத்துக்காக அவரை நான் இழந்துவிடக்கூடாது என்று. அவரது முதியவயதும் என் ஆணவம் மடங்க ஒரு காரணம். ஒருகட்டத்தில் நான் என்னையறியாமலேயே அவருக்கு ஒப்புக்கொடுத்துவிட்டிருந்தேன். அது நிகழ்ந்ததுமே அவரது உள்ளம் செயல்படும் ஒவ்வொரு அசைவும் எனக்குத்தெரியத் தொடங்கியது. அவரது பலவீனங்கள் எனக்குத்தெரிந்தன. ஆனால் அவை எனக்கு ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. என் தந்தையின், என் மைந்தனின் பலவீனங்கள் போலத்தான் அவை. அவை என் கண்ணிலிருந்து முழுமையாக மறைந்தன.

 

அதன்பின்னர் அவரது சிந்தனைகள் மட்டும் அல்ல, அச்சிந்தனைகளுக்கு அவர் சென்று சேரும் வழியே எனக்குத்தெரிந்தது. அவர் நடந்த பாதைகளில் நான் அவராகவே நடந்தேன். அவரது விருப்பும் வெறுப்பும் என்னுடையதாகியது. நான் அவரிடமிருந்து கற்றவை எல்லாம் மாணவனாக அமர்ந்து கற்றவை மட்டும் அல்ல, அவராக மாறி ஆழத்தில் அலைந்து கற்றவையும்கூட. அவரை இனி நான் விலக்கி மதிப்பிட முடியாது. ஏனென்றால் அவர் நானேதான். நானாக மாறி என்னில் நிறைந்த நித்யாவுக்கு அப்பால் நித்யா  ‘உண்மையில்’ எப்படிப்பட்டவர் என்றுகூட இன்று எனக்குத்தெரியாது.

 

இது ஆசிரிய மாணவ உறவில் மட்டும் அல்ல, எல்லா உறவிலும் செல்லுபடியாகும் விஷயமே. தந்தையைக் கட்டுடைத்தபடி இருந்தால், மனைவியைக் கண்காணித்தபடி இருந்தால் அந்த உறவு எப்படிப்பட்டதாக இருக்கும்?

 

அப்படியென்றால் பிம்பம் என்றால் என்ன? அது நேரடி உறவுக்கு அப்பாற்பட்டது. நித்யா எனக்கு நேரடி உறவுள்ள குரு. ஓஷோ எனக்கு அளிக்கப்பட்ட பிம்பம்தான். பிம்பத்தைக் கட்டுடைக்கலாம். உங்களுள் வாழும் , நீங்கள் உங்களைவிட நன்றாக அறிந்த குருவை கட்டுடைக்க முடியாது. கட்டுடைப்பதாக எண்ணி நம் ஆணவத்தை பேணிப்பெருக்கிக்கொள்ளலாம், அவ்வளவுதான்.

 

ஜெ

 

முந்தைய கட்டுரைதூக்கம்
அடுத்த கட்டுரைமுத்தல்