ஈரட்டி புகைப்படங்கள்- கடிதங்கள்

DSC_1928

 

அன்புள்ள ஜெ,

இன்று காலைதான் சென்னை வந்தேன். இப்போதுதான் ஈரட்டி சிரிப்பு படித்தேன். கடைசியில் படங்கள் டாக்டர் தங்கவேல் என்று போட்டிருந்தது சட்டென்று நெருடியது. நீங்கள் எப்போதும்போல் மேலும் படங்கள் என்றே போட்டிருந்திருக்கலாம். நேற்றிரவு உங்களிடம் சொன்னமாதிரி பிரபு காளிதாஸின் செயல் அன்று என்னை வருத்தப்பட வைத்தது. நான் உங்களை எடுக்கும் படங்கள் எல்லாமும் உங்களுக்கு சொந்தமானவை சார். புகைப்படத்தில் (c) gurusamy thangavel என்று போட்டுக்கொள்வது சும்மா ஒரு பந்தாவுக்காகத்தான். நேற்று தங்கை வீட்டிலிருந்து படங்களை இணையத்தில் ஏற்றியதால் அவ்வாறு போட இயலவில்லை.

 

உங்களை இயல்பாக பல்வேறு முகபாவங்களில், உடல்மொழிகளில் படம் எடுக்கவேண்டும் என்பது எனது ஆசை. (அவை பிற்காலங்களில் ஒரு ஆவணமாகும்) இந்த ஆர்வக் கோளாறில் ஈரட்டியில் உங்களை சற்று தொல்லைப்படுத்திவிட்டேன். உண்மையில் நீங்கள் எரிச்சலடையும் முன்னர் உங்களிடம் அனுமதி கேட்டுக்கொள்ளவேண்டும் என நினைத்திருந்தேன். நீங்கள் இடைவெளியில்லாமல் உரையாடிக்கொண்டிருந்ததால் கேட்கமுடியவில்லை. அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள். :-))

 

படங்கள் நன்றாக வந்திருப்பதாக எல்லோரும் சொன்னதில் மிக்க மகிழ்ச்சி. பவானியிடம் (என் மனைவி), சினிமா கலைஞர்கள் பாரட்டியதை சொன்னேன். ஐயையோ சும்மாவே உங்களை பிடிக்கமுடியாது, இனிமே எப்போதும் கேமராவைத் தூக்கிக்கொண்டு அலைவீர்களே என்று சொன்னார். அவரது கவலை அவருக்கு :-)))

எல்லாவற்றிற்கும் நன்றி சார்.

அன்புடன்

தங்கவேல்

 

25277_110331615673506_7962352_n

 

அன்புள்ள தங்கவேல்,

 

உங்கள் புகைப்படங்களில் அனைவரும் படம் எடுக்கப்படும் பிரக்ஞையே இல்லாமல் இருப்பதாகவும் அதேசமயம் அழகிய ஒளியமைப்பும் இருப்பதாகவும் நண்பர்கள் சொன்னார்கள். மகிழ்ச்சியாக இருந்தது.

 

அரங்கசாமி அந்த காப்பிரைட் குறிப்பைப் போட்டிருப்பார். .பாவம் , குலைநடுங்கிப்போயிருக்கிறார். நல்ல மனுஷன்

 

நீங்கள் குறியீட்டு ரீதியாகக்கூட படங்களை எடுத்திருப்பீர்களோ என உங்கள் இயற்கைப்படங்களைக் கண்டு நண்பர்கள் பீதியுடன் சொல்லிக்கொண்டனர்

ஜெ

DSC_1602
அன்புள்ள ஜெ,

ஈரட்டிச் சிரிப்பு புகைப்படங்கள் அருமை. ஒவ்வொருவரும் ஒரு உச்சமனநிலையில் இருந்துகொண்டிருப்பதைக் காணமுடிகிறது. அங்கே அனைவருமே நண்பர்கள். ஒருவரை ஒருவர் நன்கு அறிந்தவர்கள் என்பதுதான் காரணம் என நினைக்கிறேன். உங்களை நன்கு தெரியும் என்பதனால் மட்டும்தான் அதில் குடி இல்லை என நான் நினைக்கிறேன். குடிக்காமல் மக்கள் இப்படிச் சிரிக்கும் ஒரு சந்தர்ப்பமே இப்போதெல்லாம் நம் சூழலில் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது. குடிப்பது தப்பு என்று சொல்லவில்லை. நானே குடிப்பவன். ஆனால் அந்தச்சிரிப்பு வேறு. அது ஒருவகை இண்டியூஸ்ட் சிரிப்பு

ஈரட்டி பங்களாவின் படமும் அருமை. அழகியசூழலில் இருந்தது. இரவில் ஒளியில் அதைப்பார்க்க இன்னும் அழகாக இருந்தது. அந்த நாயைப்பற்றி நீங்கள் எழுதவில்லை. அங்கே உள்ள நாய் என நினைக்கிறேன். உங்கள் அணைப்பில் அது சொக்கி நிற்பது அருமையாக இருந்தது

ஜெயராமன்

 

DSC_1597

அன்புள்ள ஜெயராமன்

அது அங்கே உள்ள நாய். வேட்டையாடி உண்பதனால் உற்சாகமாக இருக்கிறான். பெயர் மணி. நான் சென்றதுமே வந்து ஹாய் என்றான். பொதுவாக நாய்ப்பிரியர்களை நாய்களுக்குத் தெரியும். அத்துடன் என் உடலில் நான் டோராவைக் கொஞ்சிய மணம் சிலநாட்களுக்கு இருக்கும். அது மணிக்குத்தெரியும்

ஜெயமோகன்

 

முந்தைய கட்டுரைகொல்லிமலைச் சந்திப்பு, மேலுமொரு சந்திப்பு…
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’