மணி -2

1

[ தொடர்ச்சி ]

மிகச்சிறந்த நகைச்சுவையுணர்ச்சி கொண்டவர் மணி. படப்பிடிப்பரங்கில் சில நடிகர்களைச் சுற்றித்தான் கூட்டம் இருக்கும். முக்கியமானவர் கமல்ஹாசன். இன்னொருவர் மோகன்லால். பெரும்பாலான கதாநாயகர்கள் தனிமையை விரும்புபவர்கள். அது அவர்களின் உயரமான இடத்தைத் தக்கவைக்க உதவும். கமல் இருக்குமிடம் நகைச்சுவையால் வெடித்துக்கொண்டே இருக்கும். அவரது நண்பர்கள் அனைவருமே அவரது நகைச்சுவைக்கூற்றுக்களைத்தான் அவர் இல்லாதபோதும் பேசிக்கொண்டிருப்பார்கள். அவ்வகைமையில் ஒருவர் மணி. படப்பிடிப்புக்கு மணி வருகிறார் என்பதே ஒரு பெரிய கொண்டாட்டம்.

பாபநாசம் படத்தின் ’பிரமோ’வில் மணி எனக்காக நடித்துக்காட்டும் ஒரு கணம் வந்துபோவதைக் கண்டிருக்கலாம். அன்று அவர் படப்பிடிப்பில் தங்களை அறியாமலேயே வந்து ‘கலந்துகொள்ளும்’ மிருகங்களின் உடல்மொழியை நடித்துக்காட்டினார். சிரித்துச் சிரித்து ஒரு கட்டத்தில் நான் எழுந்து நின்று இருமத்தொடங்கினேன். மணி நகைச்சுவையை ஆரம்பித்துவிட்டாரென்றால் அதன்பின் அவரால் நிறுத்தமுடியாது. கிருஷ்ணனும் அரங்கசாமியும்கூட அவரது அந்த முகத்தைப்பார்த்து பிரமித்துவிட்டனர்

ஆனால் கமல், மோகன்லால், மணி மூவருமே டேக் என்றதுமே இன்னொருவராக மாறி கிளம்பிச்செல்வார்கள். அங்கே உணர்ச்சிகரமான தருணமாக இருக்கும். அதுவாக மாறி நடிப்பார்கள். கட் சொல்லப்பட்டதும் முகம் மாறி சிரிப்புடன் எஞ்சிய நகைச்சுவையைச் சொல்ல கிளம்பிவருவார்கள். இதை பொதுவாக பலரும் வியப்புடன் சொல்வதுண்டு. எனக்குத்தெரியும், கலையின் உலகம் வேறு. அங்கே சிரமம் இல்லாது செல்ல முடிபவர்களே கலைஞர்கள். நான் வெண்முரசு எழுதுவதற்கு எந்த மனநிலைத் தயாரிப்பும் தேவையில்லை. சிரித்துப்பேசி முடித்ததுமே எழுதமுடியும். நடுவே நண்பர் வருவார். சலவைக்காரர் வருவார். அதற்கும் நாவலுக்கும் சம்பந்தமில்லை

மணியின் சிறப்பு மிருகங்களை நடிப்பது. அவர் மிருகங்களை மனிதமுகபாவனைகளுக்குள் கொண்டுவருவார். நாய் சிரிக்கும். பூனை சந்தேகப்படும். பசு குழப்பம் கொள்ளும். எருமை சலிப்புகொள்ளும். அந்தமுகபாவனைகள் அவரது கற்பனையாகத்தான் இருக்கும். ஆனால் கூடவே அக்கணம் அவை அம்மிருகத்துடையவை என்றும் படும்.

அவரைக்கண்டதும் வயதான தெருநாய் “பார்த்து ரொம்பநாளாச்சே” என்று சோர்வுச்சிரிப்புடன் சொல்கிறது. பெண்நாய் “சோலி கெடக்கு…வரட்டா?” என்று சிரித்தபடிச் செல்கிறது. குட்டிநாய் “அய்யோ, மணிச்சேட்டன்….சேட்டா பின்ன எந்தாணு காரியங்கள்?” என்று வாலைச்சுழற்றி வாய்விட்டுச் சிரித்தபடி ஓடிவருகிறது

2

குற்றாலக் குரங்கு பவ்யமாக வந்து வாலைச்சுருட்டி அமர்ந்து மது கேட்பதும், ரம்மில் நாலைந்து துளியை மூடியில் விட்டுக்கொடுக்கையில் முகம் சுளித்துக்கொண்டு அதை எடுத்து குடிப்பதும், சப்புக்கொட்டியபடி ஊறுகாய் கேட்பதும் போதையேறி நாலுகாலில் மல்லாந்து கிடப்பதும் மறுநாள் காலை தலையைப்பிடித்து அமர்ந்திருப்பதும் அவரது நடிப்பில் காணும்போது சிரித்து உருண்டாலும் பின்னர் சிந்திக்கையில் அந்தக்கலை வேடிக்கைமட்டும் அல்ல என்று தோன்றும்.

மணியின் நகைச்சுவைகளில் பெரும்பகுதி ஆண்களுக்குரியவை, அவற்றை பெண்களிடம் சொல்ல அவருக்கு எந்தத் தயக்கமும் இருப்பதில்லை. ஈரட்டியில் நான் பல ‘மணிக்கதைகளை’ சொல்லி நண்பர்கள் சிரித்தனர். .

மணிக்கு எந்த பேதமும் இல்லை. மலையாளிகளுக்கு நகைச்சுவைக்குரிய நிரந்தரமான ஐந்து கதாபாத்திரங்கள் உண்டு. கத்தோலிக்க ஃபாதர், வயதான முஸ்லீம், நம்பூதிரி, வியாபாரியான சிரியன் கிறிஸ்தவர், மூளையில்லாத நாயர் போலீஸ்காரர். இக்கதாபாத்திரங்களை மணி மலையாளத்தின் வெவ்வேறு நடிகர்களைக்கொண்டு நடிக்கச்செய்து மேலும் விரித்துச் செல்வார். மம்மூட்டி நம்பூதிரியாக வந்தால், மோகன்லால் முஸ்லீமாக வந்தால் என்ன ஆகும்.?

மணி எப்போதுமே தனக்கென ஓர் உலகில் இருப்பார். கழுதைக்கனைப்பு போன்ற அவரது சிரிப்பு பிரபலம். நாய், பூனை, அணில் என விதவிதமான ஒலிகளில் ஆனால் சிரிப்பு போலவே சிரிப்பார். முதலில் அவர் சிரிப்பதாகவும் அடுத்து அது எருமையின் முக்காரை அல்லவா என்றும் தோன்றும் அதிசயம். நான் பலமுறை அவரது சிரிப்பை இயல்பாக எடுத்துக்கொண்டு  அச்சிரிப்பில் உள்ள மிருகத்தை அதன்பின் உணர்ந்து வெடித்துச் சிரித்திருக்கிறேன்.

ஒருமுறை கஸ்தூரி மான் மலையாளப்படத்தின் ஒரு வசனத்தை ஒருவரியை மம்மூட்டி போல இன்னொருவரியை மோகன்லால் போல இன்னொருவரியை சுரேஷ்கோபி போல இன்னொருவரியை திலகன் போல மிகவேகமாகச் சொல்லி நடித்துக்காட்டினார் மணி. “உன்னை மாதிரி சொல்லிக்காட்டுடா” என்றார் லோகி. சட்டென்று குரங்காக ஆகி குரங்கு இளிப்புடன் சொல்லிக்காட்டி அறையை அதிரச்செய்தார்.

மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர் ஃபிணராய் விஜயன் அஞ்சலி
மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர் ஃபிணராய் விஜயன் அஞ்சலி

மணி உறுதியான இடதுசாரி. இந்திய, கேரள அரசியலைப்பற்றி அவருக்கு நல்ல தெளிவு இருந்தது. தமிழக அரசியலைப்பற்றிக்கூட அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் தமிழகத்தில் அவர் அரசியல் பேசியதில்லை. இடதுசாரிகளை அவர் விமர்சிப்பார். ஆனால் அது தன் தாய்வீடு என்பதில் அவருக்கு ஐயமிருந்ததில்லை. எப்போதுமே கட்சிக்குக் கட்டுப்பட்டவர்.

வெளிப்படையான அரசியல் கொண்டவர் மணி. இடதுசாரியாக நின்று ஆளும் அரசை விமர்சிக்க தயங்காதவர். பொதுவாக நடிகர்கள் அப்படி வெளிப்படையான அரசியல் நிலைபாடு எடுப்பதில்லை. இருமுறை சாலக்குடி தொகுதியில் அவர் இடதுசாரி வேட்பாளராக நிற்க வாய்ப்பிருந்தது. உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் அவர்நடிகர் இன்னொசெண்ட் போல முக்கியமான இடதுசாரி எம்.எல்.ஏ ஆகியிருப்பார்.

சாலக்குடியில் அவர் வெல்வார் என்பதில் ஐயமில்லை. அவர் சாலக்குடியின் மைந்தர். அவ்வூரின் அனைத்து சுகதுக்கங்களிலும் இணைந்திருந்தவர். திருவிழாக்களில் அவர் தலையில் சுற்றிக்கட்டிய சிவப்புத்துண்டுடன் முன்னணியில் இருப்பார். மக்கள்போராட்டங்களில் சாலையில் நடப்பார். ஒருமுறை சாலக்குடி நகராட்சி சரிவர குப்பை அள்ளவில்லை என குற்றம்சாட்டி மணி நேரடியாக களமிறங்கி குப்பை அள்ளினார். அது அன்று ஒரு பெரிய செய்தியாகியது. அவர்களுக்கு மணி நடிகர் மட்டும் அல்ல, சாலக்குடியின் ‘பிராண்ட் அம்பாசிடரும்’கூட’

தலைமுறைகளாகப் படகு ஓட்டிவந்தவர் மணி. சாலக்குடி ஆற்றில் அடிக்கடி நடக்கும் படகோட்டும்போட்டிகளில் அவர் பங்கெடுத்து வென்றதுண்டு. பெருவெள்ளத்தில் ஆற்றில் படகோட்டுவது ஒரு பெரிய கொண்டாட்டம். அதில் மணி எப்போதுமிருப்பார். 1995ல் நடந்த தேசிய அளவிலான படகுப்போட்டி ஒன்றில் அவர் சுண்டன்வள்ளம் என்னும் நீண்ட தோணியை வழிநடத்தும் அமரக்காரனாக நின்றார். வெல்லவும்செய்தார்.

DSC_3440

சாலக்குடியே திரண்டு அவரது இறுதிநாளன்று வந்தது அவர் நடிகர் என்பதற்காக மட்டும் அல்ல. அவர் அவர்களில் ஒருவராகவே கடைசிக்கணம் வரை இருந்தார் என்பதனால்தான். நான் அவருடன் காரில்சென்றிருக்கிறேன். கண்ணாடியை தாழ்த்தி கைவீசி ஒவ்வொருவரிடமும் பெயர் சொல்லி வாழ்த்தியபடியே செல்வார். நக்கலடிப்பார். சிரிப்பார். சிலரிடம் அவர் சொல்லும் சொற்கள் நமக்குப்புரியாது. ஆழ்ந்தபொருள் இருக்கும்- வேறென்ன, பலான பொருள்தான்.

மணியுடன் சாலக்குடி வழியாக ஒருமுறை சென்றபோது ஒவ்வொரு கட்டிடத்திற்கும் அவரிடம் கதை இருப்பதைக் கண்டேன். வழியில் ஒருவர் “எந்தாடே மணி?” என்றார். மணி நடுவே கண்ணாடி இருப்பதைப்போல உரக்க ஒலியில்லாமல் பேசி கையசைத்தார். “கண்ணாடியைத் தாழ்த்துடே” என்று சொல்லி அவர் கைகாட்டினார். மணி இல்லாத கண்ணாடியை தாழ்த்த முயன்றார். சிக்கிக்கொண்டது.

”என்ன கார் வச்சிருக்கியோ, சரி சரி, போ” என அவர் சொன்னதும் மணி வெளியே கையைவிட்டு “போய்ட்டு வாறேன் சேட்டா” என்றார். அவர் வெடித்துச்சிரித்துவிட்டார். சாதாரண தொழிலாளர் அவர். மணி அவர்களில் ஒருவராக, அவர்களிடம் தொடர்ந்து விளையாடிய கலைஞராக இருந்தார்.

[மேலும்]

 

முந்தைய கட்டுரைஈரட்டிச் சிரிப்பு – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல்- சென்னை