அறிவியலும் சூழியலும்

river
அன்புள்ள ஜெமோ

நம்மாழ்வார் குறித்த உங்கள் கட்டுரையின் மையம் இதெல்லாம்தான்

1 ஓர் அறிவியல்கருத்தை அது மக்களிடம் போய்ச்சேர்ந்துவிடவேண்டும் என்பதற்காக அவர்களுக்குப் புரியும் விதமாகச் சொல்லலாமா?

2 ஓரு மாற்றுஅறிவியல்முறையை நிலைநாட்டுவதற்காக அதை அறிவியலுக்கு எதிரான நம்பிக்கையாக ஆக்கி கொண்டுசெல்லலாமா?

ஆனால் உங்களுக்கு வந்த எதிர்வினைகள், நீங்கள் அளித்த பதில்கள் உடனே அதை ஒரு எளிமையான வம்பாக ஆக்கிவிட்டன. அந்தக் கேள்விகளை அவை எதிர்கொள்ளவே இல்லை. நீங்கள் நம்மாழ்வாரைத் தாக்குகிறீர்கள், முன்பு அஞ்சலிக்கட்டுரையில் புகழ்ந்தீர்கள்—இதைத்தவிர ஒன்றும் சொல்வதற்கில்லை.

நம் சூழலில் ஒரு கருத்தையும் பேசி விவாதிக்கவே முடியாதா?

ஆர்.மாதவராஜ்

அன்புள்ள மாதவராஜ்,

அதற்கான காரணம் நாம் எப்போதுமிருக்கும் இயல்பான வம்புமனநிலை. நான் டீக்கடை விவாதம் என்று சொல்வது அதைத்தான். பொழுதுபோவதற்காகப் பேசிக்கொண்டிருப்பது. அதை இப்போது ஃபேஸ்புக் பெருக்கிவிட்டிருக்கிறது. தமிழ்ச்சூழலில் கருத்துக்களை விவாதிப்பது மிக மிகக்கடினம். சந்தேகமிருந்தால் தி ஹிந்து நாளிதழின் கட்டுரைகளுக்குக் கீழே உள்ள எதிர்வினைகளைப் பாருங்கள். மேலே உள்ள கட்டுரையின் மையக்கருத்துக்கு எந்தச்சம்பந்தமும் இருக்காது.

உண்மையில் நேரில் இருவர் பேசினர். ஒருவர் ஆணித்தரமாகச் சொன்னார், அறிவியலை நம் மக்கள் இன்று புரிந்துகொள்ளமுடியாது. அதற்கு இன்னமும் கல்விவளர்ச்சி தேவை. அதற்காகக் காத்திருந்தால் நம் சூழியலே அழிந்துவிடும். ஆகவே சாத்தியமான எல்லா வழிகளிலும் சூழியல்சார்ந்த கருத்துக்களை மக்களிடம் கொண்டுசெல்லவேண்டும். அதற்காக அவற்றை மத, இன, மொழி நம்பிக்கைகளுடன் தற்காலிகமாக இணைப்பதில் தவறே இல்லை.

உதாரணமாக, தாமிரவருணி ஆறு சூழியலால் மாசுபடுகிறது. அதன் அறிவியல் அடிப்படையை மக்களிடம் கொண்டுசென்றால் இன்றைக்கு 5 சதவீதம்பேருக்குக்கூட புரியாது. ஆகவே தாமிரவருணி பற்றிய மத, சாதிய நம்பிக்கைகளைப் பயன்படுத்தலாம் என்றார். எதிர்ப்பு உருவாவதே முக்கியம். அதை நடத்துபவர்களுக்கு மட்டும் அறிவியலுணர்வு தெளிவாக இருந்தால்போதும். இது பட்டறிவு சார்ந்தது, ஆகவே அறிவுத்தள விவாதத்திற்குரியதல்ல- என்றார்

போராட்டம் நிகழ்ந்தாக வேண்டிய காலத்தில் நிகழவேண்டும். அதற்கு நாம் அறிவியல்கல்வியை உருவாக்கிக்கொண்டிருந்தால்போதாது. கூடங்குளம் மீனவர்களுக்கு அணுவுலையின் அறிவியலைப் பயிற்றுவிக்கவேண்டும் என்பது மடமை. அவர்களின் அச்சமும் அவர்களின் மண்மீதான பற்றும் அவர்களின் மதமும் போராட்டத்துக்கு உதவும் என்றால் அதைப் பயன்படுத்துவதில் தப்பில்லை.– என்பது அவர் கருத்து

எனக்கு அது சரியாகத் தோன்றவில்லை. ‘அந்நம்பிக்கைக்கு அறிவியல்சார்ந்துதானே எதிர்ப்பு வரும்? அப்போது சூழியல் X அறிவியல் என்னும் எதிர்மை உருவாகிவிடாதா?” என்று வாதிட்டேன்.

ஆனால் கடைசியில் அவரிடம் “அண்ணாச்சி, அதை ஒரு கடிதமாக எனக்கு எழுதுங்கள். குறைந்தபட்சம் இந்த அளவிலாவது ஓர் அறிவார்ந்த எதிர்தரப்பு வந்தது என நான் பதிவுசெய்கிறேன். இல்லாவிட்டால் வெறும் வம்புஅலைப்பாகவே இந்த விஷயம் முடிந்துவிடும்” என்றேன். ‘இதோ எழுதி அனுப்புகிறேன்’ என்றார். இதுவரைக்கும் வரவில்லை.

ஆகவே நானே பதிவுசெய்கிறேன். வேறென்ன வழி?

ஜெ

 

முந்தைய கட்டுரைவெண்முரசு கலந்துரையாடல்- சென்னை
அடுத்த கட்டுரைமணி-3