ஈரட்டி சந்திப்பு

1

 

சத்தியமங்கலம் அருகே நண்பர்களும் நானும் இணைந்து உரிமை கொண்டுள்ள வனத்தங்குமிடம் ஒன்றுள்ளது. ஈரட்டி நீர்வீழ்ச்சிக்கு நேர்மேலே உள்ளது. நண்பர் விஜயராகவன் அதை பார்த்துக்கொள்கிறார். அங்கே நண்பர்கள் அவ்வப்போது தங்குவதுண்டு. நான் ஒரேஒருமுறை சென்றதுடன் சரி.

புதியவர்களின் சந்திப்புக்கு நிகராக பழையவர்களின் சந்திப்பையும் நடத்தவேண்டும் என்று நண்பர்கள் கோரியமையால் நாளை மார்ச் 5, மறுநாள் மார்ச் 6 தேதிகளில் அங்கே பழையோர் சந்திப்பு. நான்காம் தேதி மாலை கிளம்பி ரோடு சென்று ஈரட்டி செல்கிறேன். அங்கே பழந்தலைகளைக் கண்டு பழைய பேச்சுக்களை முன்னெடுக்கவிருக்கிறேன்.

“ஊருக்கு வந்து குண்டி அமையவில்லை, அதற்குள் மறுபடியும் பயணமா, என்ன செலவானாலும் பரவாயில்லை ஈரோடு கிருஷ்ணனுக்கு ஒரு திருமணத்தைச் செய்துவைக்கவேண்டியதுதான்” என்று அருண்மொழி வஞ்சினம் சொன்னாள். அதைவிட அவருக்கு நடத்த ஒரு வழக்கை ஏற்பாடு செய்யலாமே என்று சொன்னேன். அதற்கெல்லாம் அவரை நம்பி எவரும் வரமாட்டார்கள் என்று சொல்லிவிட்டாள்.

ஒரு வனநடைக்குத் திட்டமுண்டு. நண்பர்களில் பாதிப்பேர் குண்டுடல் கொண்டவர்கள். கணிப்பொறியர்கள். என்ன ஆகிறதென்று பார்க்கலாம். வீரமரணங்கள் நிகழ்ந்தால் ஒரு அஞ்சலிக் கட்டுரைதானே செலவு என்று அரங்கசாமி சொன்னார். அதுவும் சரிதான்.

கோடை காலமாதலால் யானை நடமாட்டம் இருக்கும். யானை எதிரில் வந்தால் அதை இந்திய ஞானமரபின் அடிப்படையில் எப்படி வரையறுத்துக்கொள்வது என்று நண்பர்களில் ஒருசாரார் ஐயமெழுப்பினர். அதற்கு ஆறுதரிசனங்களில் ஆறுவழிகள் உள்ளன என்று விளக்கம் அளித்தேன்

சாங்கியதரிசனப்படி அது யானை என்ற ஒன்றிலிருந்து பிரிந்த ஒருபகுதி. ஒன்றாக இணைவதற்கு அது பிற யானைகளைத் தேடிக்கொண்டிருக்கிறது. அந்த விழைவை அதன் உடலிலேயே நாம் கண்கூடாகக் காணமுடியும். குருடர்கள் அதைத் தடவிப்பார்த்து அறிவதென்ன என்பதை கபிலர் சொல்லவில்லை.

யோகமுறைப்படி ஒருயானையை நாம் காணும் கணத்தை பின்னால் கொண்டு சென்று யானையைப்பற்றி நாம் முதலில் எப்போது அறிந்தோம் என்பது வரைச் செல்லவேண்டும். அதன்பின்னரும் யானை நம்மை ஒன்றும் செய்யாவிட்டால் நாம் யோகி.

வைசேஷிக முறைப்படி யானை என்பது யானைத் தன்மையால் ஆனது. யானையின் ஒவ்வொரு பகுதியின் அதனதன் தன்மைகளால் ஆனது. யானையின் கொம்புத்தன்மை நம்முடைய உடம்புத்தன்மையை ஊடுருவி உயிர்த்தன்மையை அழிப்பதே முக்தி. அதற்கு முன் யானையுடன் ஒரு செல்ஃபி எடுக்கலாம் என கணாதர் சொல்கிறார்.

நியாயமுறைப்படி யானையை எதிர்கொள்வது இரண்டாம்பட்சமானது. யானையை தெளிவாக வகுத்துக்கொள்வதே முக்கியமானது. அதற்கு யானையைப்பற்றிய ஃபேஸ்புக் விவாதங்களில் ஈடுபடலாம். அதற்கு முன் அதனிடமிருந்து ஓடிவந்து அறையைப் பூட்டிக் கொள்ளவேண்டும்

பூர்வமீமாம்ச முறைப்படி யானை என்பது அதன் பிளிறல் மட்டுமே. அதை நாமும் திரும்ப எழுப்பும்போது யானை நம் கட்டுப்பாட்டில் வருகிறது. அதற்கு நமக்கு திறமையான நாபியும் கிழியாத பின்துளையும் தேவைப்படும். கடும் பயிற்சியால் அதை அடையலாம். அதைவிட யானைக்கு நம் மொழியைக் கற்றுக்கொடுப்பது எளிது என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல

வேதாந்த முறைப்படி யானையே இல்லை என்பதே யானை நம் முன் இருக்கச் சாத்தியமான ஒரே நிலை. இதை அந்த யானை ஏற்றுக்கொள்வதற்காக விவாதிப்பதே ஞானமார்க்கம்

யானை வராமலிருக்கவேண்டும். பொதுவாக அவை தத்துவத்தை விரும்புவதில்லை

 

தொடர்புள்ளதாக கருதப்படுபவை 

மேலைத்தத்துவம் ஓரு விவாதம்

இந்து தத்துவ மரபு – ஒரு விவாதம்

இந்திய இலக்கியம் ஒரு விவாதம்

தமிழிலக்கியம் ஒருவிவாதம்

தமிழியம் ஓர் ஆய்வு

 

முந்தைய கட்டுரைகனக செல்வநாயகம் நினைவுப்பேருரை
அடுத்த கட்டுரை’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 79