இலக்கிய அரங்குகளில் பெண்கள்

221

பேரன்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,
நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இது. என்னைப் பற்றியும் நான் உங்களிடம் பேச நினைக்கும் பல விஷயங்கள் பற்றியும் விரிவாக மற்றொரு முறை எழுதுகிறேன். இப்போது ஒரு quick question.
ஊட்டி புதிய வாசகர் சந்திப்பு படங்களை உங்கள் வலை தளத்தில் பார்த்தேன். முதலில் தோன்றியது – பெண் வாசகியர் எங்கே? என்றோ ஒரு நாள் நானும் இந்த மாதிரி ஒரு சந்திப்பில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.  இது போன்ற சந்திப்புகளில் வாசகியர் பெரும்பாலும் கலந்து கொள்வதில்லையோ? நிறைய பெண்கள் இருந்தால்தான் கலந்து கொள்ள முடியுமா என்றால் அப்படி இல்லை. என்னவோ கேட்கத் தோன்றியது.
P S :  இது ஒரு நேரடியான, நேர்மையான கேள்வி மட்டுமே. குற்றச்சாட்டு அல்ல. இன்னொன்று, அமெரிக்காவில் இருந்து கொண்டு, அநேகமாக ஒவ்வொரு தினமும்  உங்களுடன் மானசீகமாக விவாதம் நடத்தும் எனக்கு இப்போதைக்கு இந்த மாதிரி சந்திப்பில் கலந்து கொள்ள நினைப்பது ஒரு கனவு மட்டுமே.
சாரதா

அன்புள்ள சாரதா

கடிதத்துக்கு நன்றி

இதே கேள்வியை முன்பு குறைந்தது பத்துபேர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு விரிவான பதிலும் அளித்துள்ளேன். மீண்டும்

தமிழகத்தில் பெரும்பாலான பெண்கள் கணவன் துணையில்லாமல் இத்தகைய முகாம்களுக்குச் செல்லமுடியாது. இலக்கிய ஆர்வம் கொண்ட பெண்கள் மிகமிகக்குறைவு. அவர்களில் இப்படி செல்லும் வாய்ப்புள்ளவர்கள் மேலும் குறைவு. அவர்களின் கணவர்களுக்கும் ஆர்வமிருந்தால்தான் அவர்கள் வரமுடியும்

எங்கள் நிகழ்ச்சிகள் அனைத்திலும் பெண்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் வருவதற்கும் வசதியாகத் தங்குவதற்கும் அனைத்துவகையான வசதிகளையும் ஏற்பாடுசெய்து அளிப்போம். ஆனாலும் ஓரிருவரே ஒவ்வொரு சந்திப்பிலும் கலந்துகொள்கிறார்கள்

இது இங்குள்ள எல்லா இலக்கியக்கூட்டங்களுக்கும் உள்ள பொதுவிதி. சமீபகாலத்தில் இது மாறப்போவதுமில்லை. இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது நம் சமூக மனநிலை. குறிப்பாக தமிழக மனநிலை.

இங்கே பொது இடங்களில் பெண்கள் சீண்டப்படுவதும் அவமதிக்கப்படுவதும் மிகமிக அதிகம். படித்த இளைஞர்களின் மனநிலைதான் மிக மோசம். ஒருநாள் குற்றாலம் போன்ற ஒரு சுற்றுலாமையத்தில் இருந்து பாருங்கள் தெரியும். கணவனுடன் செல்பவர்களுக்கே பாதுகாப்பில்லை.

அத்துடன் இலக்கியம்போன்ற பொதுத்தளங்களில் வரும் பெண்களை ‘அணுகுவது’ இங்கே நம்ப முடியாத அளவு அதிகம். இலக்கியச்சூழலுக்கு வந்தால் தினம் காலை ‘ஸாரி நான் அந்தமாதிரி கிடையாது’ என்று சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். நிறையப்பேரிடம் சொல்வதற்குள் ‘அவள் ஒருமாதிரி’ என்ற பெயர் வந்துவிடும். இலக்கியச்சூழலின், ஃபேஸ்புக்கின் அதியதிதீவிர பெண்ணிய ஆதரவெல்லாம் மிக மேலோட்டமானவை . உள்ளே இருப்பது அடக்கப்பட்ட காமம் மட்டுமே

ஆகவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கிறார்கள். அது ஒருவகையில் சரிதான். முன்பெல்லாம்  எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கெடுத்துக்கொண்ட பெண்களின் படங்களை வலையேற்றுவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கொஞ்சம் நிலைமை பரவாயில்லை.

ஜெ

 

பழைய கட்டுரை. ஊட்டி ,பெண்களுக்கு இடமுண்டா?

 

முந்தைய கட்டுரைவெய்யோன், எண்ணை, மரபு
அடுத்த கட்டுரைஈரட்டிச் சிரிப்பு…