அன்புள்ள ஜெ,
தேய்ந்து கொண்டிருக்கும் முழுநிலவு உச்சியைத் தாண்டி விட்ட பொழுதில்.
தேவதேவனின் கவிதைத் தொகுப்பை வாங்கச் சென்று அது இல்லாமல் போக, கொஞ்சம் கழித்துப் படிக்கலாம் என தள்ளிப் போட்டிருந்த பின் தொடரும் நிழலின் குரல் கண்ணுக்குப் பட்டது. உதவியாளர் முதல்பக்கதைத் திருப்பி விலை சொல்ல முயல்வதற்குள் பில் எழுதி முடித்திருந்தார் வசந்தகுமார். நேர்த்தியான வடிவமைப்பு! அவருக்கு படைப்பின் மேலிருக்கும் அன்பையே காட்டுகிறது! அவருக்கு நன்றி!
நாவலின் பல உவமைகள், விவரணைகள் படித்துக் கொண்டிருக்கும் போதே திரையைத் தாண்டி உள்ளே சென்றதை உணர முடிந்தது எனக்கு புதிய அனுபவமாய் இருந்தது. உலகப் படத்தின் ஆப்செட் பிரிண்டை உற்று பார்த்தல் ஒவ்வொரு புள்ளியும் இழுபடும்/இழுக்கப்படும் கயிற்றின் நடுப்புள்ளிகள் என்று வரும் அந்த வரி அது வரை நிகழ்ந்திருந்த தர்கப்பூர்வ உரையாடலை ஒரு அடி முன்னால் கொண்டுவந்தது! எல்லாத்தையும் தாண்டி நீதின்னு ஒரு சரடு தான் எல்லா மனுஷங்களையும் இணைக்குது! அது மட்டும் தான் மனுஷன் போட்டது. அது தான் கலாச்சாரம்னு ராமசாமி சொல்றதா வருகிற வரியில இருந்து நாவல் என்னை முழுமையாக உள்ளிழுத்துக்கொண்டது.
வரலாறு எப்படி ஒவ்வொரு மானுடனின் கால் வழியே வழிந்து முன்னோடுகிறது என்பதும், ஒவ்வொரு காலத்திலும் நீதிக்காகவும், நீதிமறுக்கப்பட்டும் சிந்தப்படும் இரத்ததின் வழியாகவும், வரலாற்றையும் வாழ்வையும் பற்றிய ஏராளமான கேள்விகளை என்னுள் எழுப்பியது. நீங்கள் குறிபிடுவது போல இதுவரை உடைக்கப்பட்டு கட்டப்பட்டவையும் திரும்ப உடைக்கப் பட்டதை ஒவ்வொரு பகுதியிலும் உணர்ந்தேன்.
உரையாடல்களாகவும் நாடகங்களாகவும் வரும் பகுதிகளை அதிகவும் ரசித்தேன். கிறிஸ்துவைப் பற்றிய ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுத்தது. “சாத்தான் தான் தர்க்கம் பேசும்”. “உலகம் கிறிஸ்துவின் ரத்தத்தினால் கழுவப்பட்டது; வார்த்தைகளால் அல்ல” போன்ற சொற்றொடர்கள் கணநேர அமைதியின்மையை கொண்டுவந்தன. மொத்த நாவலிலும் என்னை நிலைகுலைய வரிகள் “வடுக்கள்” கவிதையின் வரிகள். “ஐந்தல்ல ஐயாயிரம் என் புனித வடுக்கள்” என்கிற அந்த வரி மந்திரம் போல ஓடிக்கொண்டே இருக்கிறது.
எல்லாக் கருத்துக்கும் நாவலிலேயே எதிர்கருத்து இருந்தது. முதலில் சொல்லப்படுகிற கருத்துக்கு மனம் இணங்கி நிற்கும் போது, அடுத்த பகுதியிலேயே அடித்து துவம்ஸம் பண்ணிவிடுகிறது.அது ஒரு பெரும் விவாத்தில் அமைதியாய் பங்கு பெரும் ஒரு பரவசத்தைத் தந்தது! ரொம்ப நேரம் காந்திய பெருசா அட்டாக் பண்ணலியேனு இருந்தா, கடைசியில நூல் வலைக்குள்ள தள்ளி விட்டும்,ஜோனியை வைத்தும் ரெண்டு சாத்து அவருக்கும் கொடுக்கப்பட்டு விட்டது!
ரொம்ப நன்றி ஜெ!
பிராஸ்பர் மிராண்டா
அன்புள்ள ஜெ
பின்தொடரும் நிழலின் குரலை இன்றுதான் வாசித்துமுடித்தேன். சொல்லப்போனால் வாசிக்க ஆரம்பித்து நீண்டநாட்கள் ஆகின்றன. நடுவே விட்டுவிட்டேன். வாசித்து மீண்டும் வந்தபோது அங்கதநாடகம் திசைதிருப்பி விட்டுவிட்டது. மீண்டும் ஆரம்பம் முதல் வாசித்தேன்.
நாவல் என்றால் கோவையான கதை என்ற என் முன்முடிவுதான் இதை வாசிப்பதில் இத்தனை கஷ்டத்தைக்கொடுத்தது என நினைக்கிறேன். அந்த எண்ணத்தை உடைத்து உடைத்து மீண்டும் நாவலுக்குள் மூழ்கவேண்டியிருந்தது.ஆகவேதான் நாவலை வாசிக்க இத்தனை உழைப்பு. ஆகவேதான் நான் இவ்வளவு யோசிக்கவும் முடிந்தது
நாவல் என்றால் கோவையான கதை என்ற என் முன்முடிவுதான் இதை வாசிப்பதில் இத்தனை கஷ்டத்தைக்கொடுத்தது என நினைக்கிறேன். அந்த எண்ணத்தை உடைத்து உடைத்து மீண்டும் நாவலுக்குள் மூழ்கவேண்டியிருந்தது.ஆகவேதான் நாவலை வாசிக்க இத்தனை உழைப்பு. ஆகவேதான் நான் இவ்வளவு யோசிக்கவும் முடிந்தது
பலதிசைகளுக்குச் செல்கிறது நாவல். கிறிஸ்துமுதல் காந்தி வரை. டால்ஸ்டாய் டாஸ்டாயெவ்ஸ்கி என பலர் தங்கள் ஆளுமைகளுடன் வருகிறார்கள். சுந்தர ராமசாமி வருகிறார். எல்லா சித்திரங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்து ஒரு பெரிய சித்திரமாக ஆகின்றன
கே.கே.எம் ஒரு கனவு காண்கிறார். அவரது பழைய ரேடியோவில் கம்யூனிச எழுச்சி இசையுடன் ருஷ்யப்படைகள் இந்தியாவை மீட்பதற்காக வருவதைப்போல. அந்தப்பகுதிதான் இந்நாவலிலேயே மிகமிக கிரியேட்டிவான இடம். அந்தக் கொந்தளிக்கும் கனவு ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ என்று முடியும்போது ஏனோ நான் அழுதுவிட்டேன்
மனிதன் பெரிய பெரிய கனவுகளில் வாழ்கிறான். கனவுக்குள்ளேயே செத்துமடிய வாய்ப்புகிடைத்தவன் பாக்கியவான். சாகாமல் எஞ்சி அக்கனவை வெளியே நின்று பார்க்கக்கூடியவன் அபாக்கியவான். ஒருவகையில் இந்த நாவலை வாசிப்பதே எதார்த்ததை நேருக்குநேர் நின்று பார்க்கும் பெரும் துன்பியல் அனுபவம்தான்எம்.ஆர்.முருகேசன்