பகுதி பத்து: நிழல் கவ்வும் ஒளி- 1
தேர் வரைக்கும் துரியோதனனை கர்ணன் தன் தோள்வல்லமையால் தூக்கிக்கொண்டு சென்றான். துரியோதனனின் குறடுகள் தரையில் உரசி இழுபட்டன. நோயுற்றவனைப்போல மெல்ல முனகிக்கொண்டிருந்தான். துச்சாதனன் இயல்படைந்து துரியோதனனின் மறுகையை பற்ற வந்தபோது அவனை கர்ணன் விழிகளால் விலக்கினான்.
அரண்மனைப்படிகளில் அவர்கள் இறங்கி தேர்முற்றத்துக்கு வந்தபோது துரியோதனன் யானைமூச்சென பெருமூச்சுவிட்டான். கர்ணன் தன் உயரத்தால் துரியோதனனை முழுமையாக தூக்கி நீட்டி தான் தூக்கிச்செல்வதுபோல் தோன்றாவண்ணம் தோளில் கை வளைத்து அழைத்துச் சென்றான்.
துரியோதனனின் தலை தாழ்ந்து தாழ்ந்து வந்தது. கர்ணனின் உள்ளம் தேர் எங்கே என்று தேடி சற்றே தோளில் இருந்து விலகியபோது தூக்கிய விசை குறைய துரியோதனன் மெல்ல முனகி தரையில் அமரப்போவதுபோல் கால் மடித்தான். உதவிக்கு ஓர் அடி எடுத்துவைத்த ஏவலனை விழிகளால் விலகச்சொன்ன கர்ணன் “தேர்!” என்றான். துச்சாதனன் படிகளில் இறங்கி கைவீச அவர்களின் தேர் வந்து நின்றது. துரியோதனனை தூக்கி தேரிலேற்றி அமர வைத்து அருகே அமர்ந்து கொண்டான் கர்ணன். துச்சாதனன் தேருக்குப் பின்னால் வந்த புரவியில் ஏறினான்.
துரியோதனன் உடலுக்குள் அவன் இருப்பது போல் தோன்றவில்லை. தேர் விரிந்த முற்றத்தை சகட ஒலியில்லாமல் கடந்தது. “எங்கு?” என்றான் தேரோட்டி. “நமது மாளிகைக்கு” என்றான் கர்ணன். தேர் பெருஞ்சாலையை அடைந்து விரைவு கொண்டது. இறந்த உடல் அசைவதுபோல் துரியோதனன் ஆடுவதாக ஒரு கணம் உள்ளத்தில் திகிலெழ அவ்வெண்ணத்தை தலையசைத்து விலக்கினான் கர்ணன். புரவிகளின் குளம்போசை தன் தலைமேலேயே அடிகளென விழுவதாக உணர்ந்தான்.
ஒவ்வொரு மாளிகையாக விழிகளால் மெல்ல கடந்து சென்றான். அச்சாலை அத்தனை தொலைவிருக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை. கொடி பறந்த மாளிகைகளுக்கு முன்னால் புரவிகளும் பல்லக்குகளும் தேர்களும் செறிந்திருந்தன. சாலையெங்கும் பெருந்திரளாகச் சுழித்த மக்கள் களிவெறி கொண்டு கூச்சலிட்டு நடனமிட்டனர். காலையிலேயே ஆண்கள் மதுவருந்தி நிலையழிந்திருப்பதை காணமுடிந்தது. வண்ண உடையணிந்த பெண்கள் எளிய உள்ளம்கொண்டோர் கூட்டத்தில் கலக்கும்போது மட்டும் அடையும் விடுதலையில் திளைத்துக்கொண்டிருந்தார்கள்.
“விரைவு!” என்றான் கர்ணன். அவன் உளநிலையை உணர்ந்த சூதன் மெல்ல புரவியை தட்டினான். ஆனால் அச்சாலையில் அதற்கு மேல் விரைவாக செல்ல முடியாதென்று கர்ணனும் அறிந்திருந்தான். புரவிக்கால்களுக்கு நடுவே களிமகன்கள் எவரேனும் விழுந்துவிடக்கூடும். சாலையோரங்கள் முழுக்க ஆட்டர்களின் விடம்பனங்களும் மாயக்களியும் நிகழ்ந்தன. எட்டுகைகளுடன் ஒருவன் தேவன் என நின்றருளினான். உடல் பாம்பாக ஒருவன் நெளிந்தான். தன் தலையை வெட்டி கையில் இருந்த தாலத்தில் வைத்து ஒருவன் புன்னகை செய்தான்.
துரியோதனனிடமிருந்து மெல்லிய குறட்டையொலி கேட்டது. கர்ணன் திரும்பி நோக்கினான். வாயில் எச்சில் வழிய துரியோதனன் துயின்றுகொண்டிருந்தான். உச்சகட்ட உளநெருக்கடியில் மானுடர் துயிலக்கூடும். களத்தோல்விக்குப்பின் நரகாசுரன் குருதிப்படுக்கையில் படுத்து துயின்றதாக பராசரரின் புராணமாலிகையில் வாசித்திருந்தான். அது மூத்தாள் குடியேறும் கணம். அவள் தோழியாகிய நித்ராதேவி வந்து அணைத்துக்கொள்கிறாள். அவள் தோழிகளான வ்யாதியும், ஜரையும், மிருத்யுவும் ஆவல் கொண்ட விழிகளுடன் அப்பால் நோக்கி நின்றிருக்கிறார்கள். ஒரே இரவில் நரகாசுரன் நோயுற்று மூத்து தளர்ந்து மறுநாள் போருக்கு வந்து களப்பலியானான்.
தொலைவில் அவர்களின் அமுதகலசக் கொடி பறந்த மாளிகையைக் கண்டதும் நெஞ்சுக்குள் இறுகி நின்ற வில் ஒன்று தளர்ந்தது. என்னென்ன எண்ணங்கள்! தீய எண்ணங்களை சுவைக்கத் தவிக்கும் உள்ளத்தின் நாக்குகள் பல்லாயிரம். அமுதுக்கென எழுவது ஒன்றே ஒன்று. அப்போதுதான் தன் உடல் நன்கு வியர்த்திருப்பதை கண்டான். உடையின் ஈரம் முற்றிலும் காய்ந்திருந்தது. துரியோதனன் உடைகளும் எழுந்து பறக்கத்தொடங்கின.
தேர் நின்றதும் ஏவலர் ஓடிவந்தனர். தேர் நின்ற சகட ஒலியிலேயே “என்ன? யார்?” என முனகியபடி துரியோதனன் விழித்துக்கொண்டான். “அரசே, இறங்குங்கள்!” என்றான் கர்ணன். துரியோதனன் அதை கேட்கவில்லை எனத்தெரிந்தது. “அரசே!” என்று கர்ணன் அழைத்தான். எடைமிக்க சகடத்தின் ஆணியின் உரசலென ஒரு ஒலி துரியோதனன் நெஞ்சிலிருந்து எழுந்தது. “தெய்வங்களே” என்ற அக்குரல் மானுடனுடையதென தோன்றவில்லை. அல்லது அதுதான் மானுடனின் குரலா? மண்ணில் இடையறாது அதுதான் எழுந்துகொண்டிருக்கிறதா?
“இறங்குங்கள் அரசே!” என்றான் கர்ணன். துரியோதனன் படிகளில் கால்வைத்து இறங்க முற்படுவதற்கு முன்னரே தரையில் இறங்கி அரைக்கண்ணால் அவன் தள்ளாடுகிறானா என்று நோக்கியபடி ஆனால் அவனை பிடிக்காமல் நின்றான். புரவியிலிருந்து துச்சாதனன் இறங்க “மஞ்சத்தறை சித்தமாகட்டும்” என்று திரும்பி அவனிடம் சொல்வதற்குள் கால் தளர்ந்து நிலத்தில் விழப்போனான் துரியோதனன். கர்ணன் இயல்பாக அவனைப்பற்றி நிலைநிறுத்தினான். அரண்மனை முகப்பிலிருந்தும் தேர் நிரைகளிலிருந்தும் ஏவலர் அவர்களை நோக்கி வர திரும்பி விழியசைத்து அவர்களை விலகச்சொல்லிவிட்டு துரியோதனன் தோள்சுற்றி கைவைத்து தூக்கி அவன் கால்கள் நிலம்தொடாமலேயே உள்ளே கொண்டு சென்றான். தொலைவுநோக்கில் அவர்கள் தோள் சுற்றி இயல்பாக நடப்பதுபோல தோன்றச்செய்தான்.
படிகளில் ஏறி இடைநாழியை அடைந்தான். வேங்கை வேட்டைஎருமையை என படிகளில் துரியோதனனின் பேருடலை அவன் தூக்கிச் சென்றான். இடைநாழியின் மறு எல்லையில் மஞ்சத்து அறைமுன் நின்றிருந்த அணுக்கன் ஓடிவந்து “என்ன ஆயிற்று? நோயுற்றிருக்கிறாரா?” என்றான். “ஆம்” என்றான் கர்ணன். “ஆனால் இது களிமயக்கென அறியப்படட்டும்.” அணுக்கன் “ஆம்” என்றான். மறுபக்கம் துரியோதனனை பற்றிக்கொண்டான். கர்ணன் விலகிக்கொள்ள அணுக்கன் அரசனை உள்ளே கொண்டு சென்று மஞ்சத்தில் படுக்க வைத்து அவன் மேலாடையை அகற்றினான்.
கர்ணன் அணுக்கனிடம் “மது” என்றான். “என்ன மது?” என்றான் அவன். கர்ணன் இல்லையென்று கைவீசி “அகிபீனா, அல்லது சிவமூலிப் புகை” என்றான். “அரசே…” என்று அவன் மெல்லிய குரலில் சொன்னான். “அவர் தன்னைமறந்து இவ்விரவில் துயின்றாகவேண்டும்.” தலையசைத்தபின் விரைந்த காலடிகளுடன் அணுக்கன் வெளியே ஓடினான்.
துச்சாதனன் காலடிகள் ஒலிக்க உள்ளே வந்து “மூத்தவரே…” என்று தயங்கி அழைத்தான். கர்ணன் திரும்பி நோக்க, படுக்கையில் மல்லாந்திருந்த துரியோதனனின் மூடிய இமைகளின் விரிசலில் இருந்து விழிநீர் ஊறி இருபக்கமும் வழிந்து காதுகளை நோக்கி சொட்டிக் கொண்டிருந்தது. உதடுகள் இறுக மூடியிருக்க கழுத்துத் தசை வெட்டுண்டதுபோல இழுபட்டு அதிர்ந்து அசைந்தது. “ம்” என்றான் கர்ணன். “ஐவரில் எவரும் ஒரு சொல்லும் சொல்லவில்லையே மூத்தவரே?” என்றான் துச்சாதனன். “தருமன் அங்கில்லை, பார்த்தேன்” என்றான் கர்ணன். “ஆம், அவர் அவையில் இருந்திருந்தால் இவ்வாறு நடந்திருக்காது” என்றான் துச்சாதனன். போதும் என்று கைகாட்டி “புகை விரைவில் வரட்டும்” என்றான் கர்ணன்.
துச்சாதனன் மேலும் ஒரு சொல் கொண்டு தவித்து அதன் பதற்றம் உடல் தசைகளில் தெரிய நிலையழிந்தபின் “இல்லை மூத்தவரே, சொல்லாமலிருந்தால் நான் இறந்துவிடுவேன். மூத்தவரே, என்னால் அத்தருணத்தை கடக்கவே முடியவில்லை. நான் எளியவன் மூத்தவரே. ஒருகணம் பீமனின் விழிகளை பார்த்தேன். அதில் தெரிந்த இழிந்த உளநிறைவை இனி என் வாழ்நாளில் மறக்க முடியாது” என்றான். “இழிமகன்! இழிமகன்!” என்று தன் பெருங்கைகளை ஒன்றுடன் ஒன்று சேர்த்து இறுக்கினான். “அவன் கண்களும் உதடுகளும் புன்னகைத்தன. அங்கரே, அவன் உடலே புன்னகைசெய்தது.”
கர்ணன் மெல்ல உடல் அசைந்தான். “இழிமகன்… கீழ்மகன். அவன் அரசக்குருதியினன் அல்ல. ஏதோ மலையரக்கனின் மைந்தன்…” பற்களைக் கிட்டித்து உடல்தசைகள் வில்நாணென இழுபட உடல் நிமிர்ந்தான். அவன் உடலில் நீர்ப்பரப்புக்குள் இருந்து எழும் யானைகள் போல தசைகள் பொங்கின. எதிர்பாராத கணத்தில் வெடிப்போசையுடன் தன் வலக்கையை ஓங்கி நெஞ்சில் அறைந்து “இன்று நான் இறந்துவிட்டேன் மூத்தவரே. என் நெஞ்சில் ஆலகாலம் நிறைந்துவிட்டது. இனி ஒவ்வொரு கணமும் உமிழ்நீர் என அதை அருந்தியே நான் உயிர் வாழமுடியும்” என்றான்.
“வெளியே செல்!” என்றான் கர்ணன். “மூத்தவரே…” என்றான் துச்சாதனன் நெஞ்சில் அம்பு பாய்ந்தவனின் முனகலாக. “வெளியே செல் மூடா!” துச்சாதனன் தொண்டையில் நரம்புவேர்கள் புடைத்தெழ “முடியாது. செல்லமுடியாது” என்று கூவினான். “இதோ என் தெய்வம் விழுந்து கிடக்கிறது. நீங்கள் அருகிருந்தீர்களே மூத்தவரே! நீங்கள் அருகிருந்தும் எந்தைக்கு இது நிகழ்ந்ததே. இதைத்தானே நாமிருவரும் அஞ்சினோம்!” என்று பற்கள் கிட்டிக்க சொல்லி மெல்ல விம்மினான்.
துரியோதனன் தலையை அசைத்து “யார்?” என்றான். அவனை சுட்டிக்காட்டி “இதோ விழுந்து கிடக்கிறார் என் தேவன். இவர் இனி இக்கணத்தின் நஞ்சிலிருந்து மீள்வாரென நான் எண்ணவில்லை. இக்கணத்தில் இவர் உயிர் துறந்தால்… உயிர் துறக்கட்டும்! அவர் காலடியில் விழுந்து நானும் உயிர் துறக்கிறேன். இத்தருணத்தில் இருவரும் இறந்து விழுந்தால் மட்டுமே எந்தையர் விண்ணுலகில் இருந்து நிறைவுகொள்வார்கள்… ஆம்…” என்றான் துச்சாதனன்.
தாளமுடியா பெருவலியில் என கைகளை விரித்து தலையை அசைத்து அவன் சொன்னான் “குடியவை நடுவே! ஆரியவர்த்தத்தின் ஐம்பத்தைந்து நாட்டு அரசர்களின் விழி நடுவே! ஏவலரும் பெண்டிரும் சூழ்ந்திருக்க…” மறுகணம் தீப்பற்றிக் கொண்டதுபோல் அவன் உடலில் ஒரு துடிப்பு ஏறிக்கொண்டது. மீண்டும் அவன் கை பெருநாகம் பாறையில் பத்தி விரித்து அறைவதுபோல நெஞ்சத்தில் மோதி ஓசையெழுப்பியது. “விழுந்தவர் ஹஸ்தி! பாரதவர்ஷத்தின் முதல் மாமன்னர்! அங்கு பெருந்தோள் ஹஸ்தி விழுந்து கிடந்தார் மூத்தவரே. சிறுமைகொண்டு விழுந்துகிடந்தவர் என் மூதாதை” என்றான்.
மூன்று ஏவலர் நிழல்களென உள்ளே வந்தனர். அவர்களின் கைகளில் புகையும் அனல்சட்டிகள் இருந்தன. அனல்மணம் அத்தருணத்தை மென்மையாக சூழ்ந்துகொண்டது. துச்சாதனன் பெருமூச்சுடன் உடல்தளர்ந்தான். அணுக்கன் அனற்குடுவையை கீழே வைத்து அதனுடன் இணைக்கப்பட்ட குழாயை துரியோதனன் மூக்கருகே கொண்டுவந்தான். பிறிதொருவன் அதனருகே அமர்ந்து அவ்வனலில் சிவமூலிக்காயின் உலர்ந்த பாலை தோய்த்து நிழலில் உலரவைத்த மென்பஞ்சை வைத்து மெல்ல விசிறினான்.
புகை எழுந்து மூச்சில் கலந்ததும் துரியோதனன் இருமுறை கமறி விழித்துக்கொள்ளாமலேயே கையூன்றி எழ முயன்றான். கர்ணன் குனிந்து “படுத்துக் கொள்ளுங்கள் அரசே” என்றான். துரியோதனன் “இல்லை, நான் கிளம்ப வேண்டும். படைகள் நின்றிருக்கின்றன” என்றான். “படுத்துக் கொள்ளுங்கள்” என்று உரத்த குரலில் கர்ணன் சொன்னான். துரியோதனன் குழந்தையைப்போல் தலையை அசைத்து மல்லாந்தான். மீண்டும் அவன் முகத்தில் அணுக்கன் சிவமூலிப்புகையை செலுத்த இருமத்தொடங்கினான். அணுக்கன் குழாயை அகற்றி சற்றே நீரை எடுத்து அருந்தக் கொடுத்தான். நீரை அருந்தியதும் அவன் வாயை மரவுரியால் துடைத்துவிட்டு மீண்டும் புகை அளித்தான்.
பிறகு அவனே புகையை விரும்பி இழுக்கத்தொடங்கினான். குழந்தை முலையருந்துவதுபோல முண்டி முண்டி புகை ஏற்றான். வாய் கோணலாகியது. இமைகள் அதிர்ந்து அதிர்ந்து மெல்ல அடங்கின. இறுகிய விரல்கள் ஒவ்வொன்றாக தளர்ந்து விடுபட்டு விரிவதை கர்ணன் பார்த்தான். கால்கள் இருபக்கமும் சரிந்தன. தாடை விழுந்து வாய் திறந்தது. கைகள் சேக்கை மேல் இனியில்லை என மல்லாந்தன. துரியோதனன் முற்றிலும் தளர்ந்து மஞ்சத்தில் படிந்தான்.
அணுக்கன் குழாயை விலக்கி எடுத்துச் செல்லும்படி கைகாட்ட ஏவலர் குடுவையை அகற்றினார். அணுக்கன் சென்று அறைச்சாளரங்களை திறந்தான். சீரான மூச்சொலியுடன் துரியோதனன் துயிலத்தொடங்கினான். கர்ணன் நீள்மூச்சுடன் அணுக்கனிடம் “பார்த்துக் கொள்ளுங்கள். இங்கு எப்போதும் துணை இருக்கவேண்டும்” என்றான். அவன் தலைவணங்கினான்.
கர்ணன் இடைநாழிக்குச் செல்ல அவனைத் தொடர்ந்து வந்த துச்சாதனன் விம்மலை அடக்கி அம்மூச்சு தொண்டை மீற சிறு கேவல் ஒலி எழுப்பினான். கர்ணன் திரும்பிப் பார்க்கவில்லை. மீண்டும் கமறி மூக்கை அழுந்த சிந்தினான் துச்சாதனன். அவர்களின் காலடிகள் உரையாடல்போல ஒலித்தன. அம்மாளிகையின் நரம்புத்துடிப்பு என. நெடுந்தொலைவில் நகரத்தின் முரசொலி. நாய்க்குரைப்பு போல கேட்டது அது.
கர்ணன் இடைநாழியின் எல்லைக்குச் சென்று படிகளில் இறங்கத்தொடங்க அவனுக்குப்பின்னால் வந்த துச்சாதனன் “தம்பியர் அனைவரும் இந்நேரம் அறிந்திருப்பார்கள். அவர்கள் இங்கு கிளம்பி வந்து கொண்டிருப்பார்கள் மூத்தவரே” என்றான். குரல்தழைய “அவர்கள் விழிகளை ஏறிட்டு நோக்க என்னால் இயலாது. இக்கணம் போல் நான் இறப்பை எப்போதும் விழைந்ததில்லை” என்றான். கர்ணன் அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை. துச்சாதனன் “நான் என்ன சொல்வேன் மூத்தவரே?” என்றான்.
படிகளில் நின்ற கர்ணன் திரும்பி “இன்று மாலையே நாம் அஸ்தினபுரிக்கு திரும்பிச் செல்கிறோம். அவர்களிடம் சித்தமாக இருக்கச் சொல்!” என்றான். துச்சாதனன் “ஆணை” என்றான். பிறகு “மூத்தவர்?” என்றான். “அகிபீனாவின் புகையிலேயே அவர் வரட்டும். அஸ்தினபுரியில் அவர் தன்னினைவு மீண்டால் போதும்” என்றான் கர்ணன். துச்சாதனன் “ஆம், அதுவே நன்று என்று எனக்கும் தோன்றுகிறது” என்றான்.
கர்ணன் படியிறங்கி இடைநாழியில் நடந்து முற்றப்படிகளில் இறங்கி தேர்களை நோக்கி சென்றான். மறுபக்கம் மூன்று தேர்கள் சகடங்கள் பேரோசையிட குளம்புகள் கல்லறைந்தொலிக்க முற்றத்தில் நுழைந்து அச்சு முனக விரைவழிந்தன. அதிலிருந்து குதித்த துர்மதனும் துச்சகனும் பீமவேகனும் வாலகியும் சுபாகுவும் கர்ணனை நோக்கி ஓடி வந்தனர். துச்சகன் வந்த விரைவிலேயே “என்ன நிகழ்ந்தது மூத்தவரே?” என்றான். “அங்கு உண்மையில் என்ன நிகழ்ந்தது?” என்றான் வாலகி.
“நீங்கள் அறிந்ததுதான்” என்றான் கர்ணன். துச்சாதனன் “மூத்தவர் இழிவுபடுத்தப்பட்டார்” என்றான். “அவர் யவனமதுவை மிகுதியாக அருந்தி நிலையழிந்து விழுந்ததாக பாழ்ச்சொல் சூதர் அங்கே பாடிக் கொண்டிருக்கிறார்கள்” என்றான் வாலகி. “ஆம், அப்படித்தான் பாடுவார்கள்” என்றான் கர்ணன். “ஒரு வெற்றி என்றால் அதை முழுமை செய்யவே அரசியல் சூழ்மதியாளன் முயல்வான்.”
“ஆரியவர்த்தத்தின் அரசர்களின் கண்முன்னே நிகழ்ந்திருக்கிறது” என்றான் துர்மதன் கைதூக்கி உரத்த குரலில். “நான்கு பாண்டவர்களும் அங்கிருந்தனர். ஒருவரும் ஒருசொல்லும் சொல்லவில்லை” என்றான் துச்சாதனன். “நிகழ்ந்தது தற்செயல் அல்ல. அது ஒரு சதி. நான் அதை இந்நகரில் கால் வைத்த கணமே உள்ளுணர்ந்திருந்தேன்” என்றான் சுபாகு. “மூத்தவரே, ஜராசந்தரும் அரசரும் தோள்கோத்து களமிறங்கிய கணமே அது முடிவு செய்யப்பட்டுவிட்டது.”
“எங்கள் மூத்தவரை இங்கு ஒரு மாளிகையின் தரையில் விழவைக்கவில்லை. பாரதவர்ஷத்தின் வரலாற்றில் விழவைத்துவிட்டார்கள். அது ஏன் என்று அறிவது கடினமல்ல” என்றான் சுபாகு. பற்களைக் கடித்து தலையை அசைத்து “முற்றொழிக்கிறார்கள். எச்சமின்றி நம்மை அழிக்கிறார்கள். நமது நாட்டின் பாதியை இவர்களுக்கு அளித்தோம். கருவூலத்தை எண்ணிப்பகிர்ந்து அளித்தோம். தேவயானியின் மணிமுடியை அளித்தோம். அவர்களுக்கு அதெல்லாம் போதவில்லை. அவள் அமரவிரும்பும் அரியணை பாரதவர்ஷத்தின் தலைமேல் போடப்பட்டது. அதை அடைய முதலில் அழிக்கப்படவேண்டியது அஸ்தினபுரிதான்” என்றான்.
“மூத்தவரே, அங்கிருக்கும் அத்தனை மன்னர்களும் மூத்தவரை நோக்கி நகைத்த அக்கணம் அவர்கள் திட்டமிட்டு உருவாக்கியது. பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என்று எண்ணி என் தாய் பெற்றெடுத்த மைந்தர் அவர். ஹஸ்தியின் மணிமுடியை சூடியவர். இந்திரனால் சிறகரித்து வீழ்த்தப்பட்ட மாமலை போல அங்கு கிடந்தார். இழிவுற்று சிறுமை கொண்டு… இன்று ஒரு முழுவெற்றியை அவர்கள் ஈட்டினர்” என்றான் சுபாகு.
துச்சகன் “அவள் மூத்தவரை நோக்கி நகைத்தாள் என்று அறிந்தேன். ஒரு முழுநகைப்புக்குக்கூட தகுதியற்றவர் என்பதுபோல் புன்னகைத்து திரும்பிக் கொண்டாள். பாரதவர்ஷத்தின் எந்த அரசனும் இதற்கிணையாக இழிவடைந்ததில்லை. சொல்லுங்கள் மூத்தவரே, நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்றான்.
இரு கைகளாலும் நெஞ்சை ஓங்கி அறைந்து “என்ன செய்வது? நகர் மீண்டு நம் படையனைத்தையும் கொண்டு இங்கு வருவோம். இப்பெருநகரை இடித்தழிப்போம். இங்குள்ள ஒவ்வொரு மாளிகையையும் கற்குவியலாக்குவோம். ஒவ்வொரு ஆண்மகன் தலையையும் அறுப்போம். பாண்டவர்கள் தலைகளைக் கொய்து கொண்டு சென்று அஸ்தினபுரியின் கோட்டை முகப்பில் வைப்போம். அவள் தலை பற்றி இழுத்துச்சென்று நமது உரிமைமகளிருக்கான சாலையில் தள்ளுவோம். ஆண்களுக்குரிய வழி அது ஒன்றே. பிற அனைத்தும் நம்மை மேலும் இழிவடையவே செய்யும்” என்றான் துச்சலன்.
தன்னைச் சூழ்ந்து பற்றி எரிபவர்கள்போல உடல் பதற, விழிகள் நீர்கோர்க்க, தொண்டை இடற, நரம்புகள் கைகளிலும் கழுத்திலும் புடைக்க, கூவிக்கொண்டிருந்த கௌரவரைக் கடந்து முற்றத்தில் இறங்கினான் கர்ணன். மேலும் மேலும் கௌரவர்கள் தேரிறங்கி கூச்சலிட்டபடி அரண்மனை நோக்கி வந்துகொண்டிருந்தனர். கர்ணன் திரும்பிப் பார்க்க அருகே நின்ற வீரன் தலைவணங்கினான். அவன் கையில் இருந்து குதிரையின் கடிவாளத்தை வாங்கி கால்சுழற்றி ஏறி உதைத்துக் கிளப்பி முழுவிரைவில் சாலையை நோக்கி பாய்ந்தான்.