விமர்சன மதிப்பீட்டில் நம்மாழ்வார்

wa

அன்புள்ள ஜெ,

இக்கட்டுரையில் நம்மாழ்வார் பற்றிச் சொல்லியிருந்த ஒரு கருத்து எனக்கு அதிர்ச்சி அளித்தது. அவர் மேல் மதிப்புள்ளவர் நீங்கள் என்னும் எண்ணம் எனக்கிருந்தது. இந்த நிராகரிப்பு ஆச்சரியமூட்டுகிறது.

செல்வரத்தினம்

*

அன்பின் ஜெயமோகன்,

இன்றைய இடுகையில் ஒரு வரி:

//ஓர் அறிவியலாளராக மாற்று அறிவியலை முன்வைத்துப் பேசத்துவங்கிய நம்மாழ்வார் எளிய வசைபாடிச்சித்தராக எப்படி மாற்றிக்கொண்டார் //
இன்று மாற்று மருத்துவம், இயற்கை வேளாண்மை என்று பல திசைகளில் பயணிக்கும் அன்பர்கள் பலரும் நம்மாழ்வாரை நிச்சயம் ஒரு inspiring ஆளுமையாகவே கொண்டுள்ளனர்.

எனவே நிச்சயம் அவர்களுக்கு “போகிறபோக்கில் உதிர்த்த வரி”யாகவே தோன்றும் அனைத்துச் சாத்தியங்களும் கொண்டது.

இதை விளக்கவியலுமா?
அன்புடன்

வெங்கட்ரமணன்

 

*

அன்புள்ள செல்வரத்தினம், வெங்கட்ரமணன்,

நம்மாழ்வார் 1988 வாக்கில் எனக்கு தர்மபுரியில் அறிமுகமானவர். அன்று அங்கே சூழியல் சம்பந்தமான சில பணிகளைத் தொடங்கியிருந்தார். 1991இல் ஈரோடு ஜீவானந்தம் அமைத்திருந்த ஒரு சந்திப்பு முதல் அணுக்கமானார். இறுதியாக அவர் காலமாவதற்கு சிலமாதங்கள் முன்பு எங்கள் நண்பர்கள் சார்பில் அவரது வானகம் அமைப்புக்கு சூரியசக்திக்கலங்கள் அமைக்க நிதிவசூல் செய்து அளித்தோம்.

அவர் மேல் எனக்கு பெருமதிப்புண்டு. சூழியல், இயற்கைவேளாண்மைத்துறைகளில் அவரது பங்களிப்பை தொடர்ச்சியாக முன்வைத்து எழுதியும் வருகிறேன். சொல்லப்போனால் அவர் விகடன் வழியாக ஒரு பெரிய பிம்பமாக ஆவதற்கு முன்னரே அவரைப்பற்றி விரிவாக எழுதிவந்த ஒரே எழுத்தாளன் நான். அன்று சூழியல் என்பது இடதுசாரிகளால் எதிர்க்கப்பட்டமையால் முற்போக்குக்கு எதிரான முதலாளித்துவச் சதி என கருதப்பட்டது. பெரும்பாலும் அறிவுஜீவிகள் முற்போக்கு முத்திரையை அணிந்துகொள்ள விரும்புபவர்கள்.

ஆனால் அவரது பரிணாமம் எனக்கு மிக மிக ஏமாற்றம் அளிக்கக்கூடியதாக இருந்தது. ஒருவகையில் தமிழகத்தின் சூழியல் செயல்பாடுகளில் மிகப்பெரிய தேக்கத்தை, திசைதிருப்பத்தை அவர் உருவாக்கிச் சென்றார் என்றே எண்ணுகிறேன். உடனடியாக அவர் உருவாக்கிய விழிப்புணர்வை நான் மறுக்கவில்லை. நான் சொல்வது நீண்டகால நோக்கில் உருவாக்கப்பட்ட கருத்தியல் திசைமாற்றத்தை. அதை அவரிடமும் சொல்லியிருக்கிறேன், கேட்கும் செவி அவருக்கிருக்கவில்லை என்றாலும்.

நான் ஆரம்பத்தில் அறிந்த நம்மாழ்வார் ஓர் அறிவியலாளர், அறிவியலின் மொழியில் பேசியவர். அவரிடம் என்னைக் கவர்ந்ததே அதுதான். புறவயமான அறிவியல் நோக்கும், அனுபவம் சார்ந்து பேசும் மொழியும்.

ஆனால் தமிழகம் முழுக்க சென்று மக்களிடம் பேசப்பேச அவர் அவர்களை மாற்றுவதற்குப் பதில் அவர்களால் தான் மாற்றப்பட்டார். ஒரு சித்தர் அல்லது தீர்க்கதரிசியின் தோரணையை மேற்கொண்டார். அதற்கான சீருடை ஒன்றை உருவாக்கிக்கொண்டார். அந்த பச்சைத் தலைப்பாகை, சட்டையற்ற உடல் எல்லாம் குறியீடுகள் என்பதையும் அது தன்னை ஓரு குறியீடாக ஆக்கிக் கொள்வது ஒரு முக்கியமான போராட்ட வழிமுறை  என்பதையும் புரிந்துகொள்கிறேன். காந்தி முதல் கத்தார் வரை அதைச் செய்திருக்கிறார்கள்.

ஆனால் அவர் தன் பேச்சை மேலும் மேலும் பாமரத்தனமாக ஆக்கிக்கொண்டே சென்றார். ’பாமரருக்குப் புரியவேண்டும்’ என எண்ணிக்கொண்டு அறிவியல் நோக்கோ, சமநிலையோ இல்லாத எளிய ஒற்றைவரிகளைச் சொல்பவராக, மனம்போன போக்கில் பேசுபவராக ஆனார். தனக்கு எதிரான தரப்புகளை முற்றாக வெறுத்து ,இழித்து ஒதுக்கினார். ஆகவே விவாதிக்கும் தன்மையே இல்லாமலாகியது

ஒருகட்டத்தில் மழுங்கிப்போன கிராமத்துப் பெரிசுகள் போல ‘அந்தக்காலத்திலே இப்டீல்லாம் இல்ல. இப்ப எல்லாம் கெட்டுப்போச்சு” வகை பிலாக்கணம் மட்டுமே செய்யக்கூடியவராக ஆனார். அவரது தோற்றம் அந்த பிம்பத்தை மேலும் வலுவாக உருவாக்கியது.

அவரது பிற்கால உரை ஒன்றைக்கேட்டு நான் திகைத்து நின்றதை நினைவுகூர்கிறேன். வெறும் மொட்டைவசை. உலகளாவிய பெரும் சதி ஒன்று, தமிழர்களை [ஆம், தமிழர்களை மட்டும்] அழிப்பதற்காக எங்கோ திட்டமிடப்பட்டு நடக்கிறது. உரம், பூச்சிக்கொல்லி, கலப்பினவிதை, பண்ணைகள், அணைகள் எல்லாமே அதற்காகத்தான். அதை அவர் கண்டுபிடித்து சுட்டிக்காட்டுகிறார்- இதுதான் அந்த உரையின் சாரம்

நாகரீகமென்றும் அறிவியல் என்றும் நாம் நினைப்பவை எல்லாமே அந்தச் சதியின் விளைவாக வந்துசேர்ந்தவை என அவர் சொல்லிக்கொண்டிருந்தார். அறிவியலின் அனைத்துத் தரப்புகளும் மோசடிகள் என்றார். தடுப்பூசிகள், நவீன நோயுயிர்முறி மருந்துகள், அறுவைசிகிழ்ச்சை முறைகள் எல்லாமே. ஏன், அன்று அவர் வீட்டுக்கு ஓடுபோடுவதே தவறு, ஓலையே தமிழரின் கூரை என்றுகூடச் சொன்னார். எந்த அறிவியல்பார்வையும் இல்லை. ஒரு எட்டாம் வகுப்பு மாணவனை நிறைவுபடுத்துமளவுக்குக் கூட தர்க்கம் இல்லை.

சூழியல் மற்றும் இயற்கைவாழ்க்கை சம்பந்தமான பேச்சு என்பதே ஒருவகை பழமைவாதம் மற்றும். முதிராஅறிவியல் என்னும் எண்ணத்தை மிக வலுவாக அடுத்த தலைமுறையினரிடம் உருவாக்கிவிட்டார் நம்மாழ்வார் என எண்ணுகிறேன். அது மேலும் வளரவே வாய்ப்பு. நவீனச் சூழியல் என்பது அறிவியலின் மிக வலுவான, மிகமிக நவீனமான  ஒரு தரப்பு என்பதையே அவரது பாவனைகள் மறைத்துவிட்டன. ஒரு அடையாளமாக, சிலையாக, சாமியாக அவர் ஆனார். அதுவே நிகர பலன்.

இன்னொன்று வசைபாடல். அது ஈ.வே.ரா என்னும் மாபெரும் வசைபாடி முதல் தமிழகத்தின் அறிவியக்கத்தில் தொடங்கிய ஒரு மனச்சிக்கல். அவருடைய வழிவந்தவர்கள் வசையால் அன்றி வேறெப்படியும் பேசமுடியாதவர்கள். சமூகசிந்தனையாளன் என்றால் அவன் உச்சகட்ட வெறுப்பை வசைகளாகக் கக்கிக்கொண்டே இருப்பான், சாபம்போடுவான் என ஒரு மனச்சித்திரத்தை ஈவேராவும் மாணவர்களும் இங்கே நிலைநாட்டிவிட்டார்கள்.

இங்கு அத்தனை பிரபல மேடைப்பேச்சாளர்களும் வசைபாடிகள்தான். அதிகமாக மேடையில் பேசப்பேச கைதட்டல்கள் வழியாக தமிழ்ச்சமூகம் அத்தனைபேரையும் வசைபாடிகளாக ஆக்குகிறது. வசை என்பது இங்கு ஒருவகை பிரபலக் கேளிக்கையாகவே ரசிக்கப்படுகிறது. அதிலுள்ள கோபம், ஆங்காரம் எல்லாமே சுவாரசியமான நாடகங்கள். மிக எளிய கருத்தைக்கூட “அட நாசமாப்போறவனுகளா” என்று கூச்சலிட்டுச் சொன்னால்தான் இங்கே ரசிக்கிறார்கள்.

நம்மாழ்வார் அந்த வசைபாடல்முறைமைக்குள் சென்று சிக்கிக்கொண்டார். வசைபாடும் மனம், வெறுப்பைக் கொண்டாடும் மனம் சதிக்கோட்பாடுகளில் சென்றமைகிறது. சதிக்கோட்பாடு ஒரு வசதியான ஆயுதம், ஹிட்லரின் பிரச்சார முறை அது. எதிர்த்தரப்பு என்பது ஒரு உலகளாவியப்பெரும் சதியின் வெளிப்பாடு மட்டுமே எனச் சுருக்கிக் கொள்வது. கொஞ்சம் கொஞ்சமாக அதை நம்பவும் உணர்ச்சிவசப்படவும் தொடங்கினால் அனைத்தும் எளிதாகிவிடுகின்றன.

சதிகள் இல்லை என நான் சொல்லவில்லை. சுட்டிக்காட்டக்கூடாதென்று சொல்லவில்லை. ஆனால் ஒரு சமூக அமைப்பே, ஒரு சிந்தனை முறையே வெறும் சதி என்று சொல்லத் தொடங்குவதையே சிந்தனைவீழ்ச்சி என்று சொல்கிறேன்.

நம்மாழ்வார் தன் செயற்காலத்தின் பிற்பகுதியில் தமிழகச்சூழியல் இயக்கங்களில் சென்ற பத்தாண்டுகளில் வந்துசேர்ந்தவர்களால் சூழப்பட்டு அவர்களால் அடித்துச் செல்லப்பட்டார் என நினைக்கிறேன். அவர்கள் 1990களில் இடதுசாரி உதிரி இயக்கங்களில் இருந்து வெளியேறியவர்கள். அங்கே வசைபாடலை மட்டுமே கற்றவர்கள். சூழியல்செயல்பாடுகளின் அறிவியல்நோக்கை அழித்து அவற்றை வெறும் வெறுப்புக் கொந்தளிப்பாக, மூர்க்கமான எதிர்ப்பாக, அவர்கள் மாற்றினர். தங்கள் எளிய வெறுப்பரசியல்களுடன் அதைக்கலந்தனர்.

கூடவே தமிழ்த்தேசியம், திராவிட இனவாதம் , தமிழர் மதம், தமிழர் மருத்துவம் என பலவகையான உதிரிப்பற்றுகளுடன் செயல்படும் குறுங்குழு ஆசாமிகளின் தொடர்பும் அவருக்கு ஏற்பட்டது. தமிழகத்தில் ’உடைந்தபானை’ சிந்தனையாளர்களுக்குத்தான் எந்தப்பஞ்சமும் இல்லை.

கடைசியாக நான் நம்மாழ்வாரிடம் பேசியதை நினைவுகூர்கிறேன். பூச்சிமருந்துக்களைப்பற்றிய ஒர் எளிமையான கேள்விக்கு “ஐயா நல்லா கேளுங்க. ஐயா அத மருந்துன்னு சொல்றீங்க. மருந்துன்னா நோய் தீக்கணும் இல்லீங்களா? பூச்சிக்கொல்லி எல்லாம் விஷம் அய்யா. விஷம் எதுக்குக் கொடுக்கணும்? கொல்றதுக்குத்தானே அய்யா?. யாரைக்கொல்லறதுங்கய்யா? தமிழனைகொல்ல! எதுக்கு தமிழனைக் கொல்லணும்? ஏன்னா அவன்தான்யா உலகத்துக்கே தலைமகன். அவன் இருந்தா உண்மையை உலகத்துக்குச் சொல்வான் இல்லீங்களா?. யாருங்க கொல்றாங்க? நல்லா பாருங்கய்யா…” என்று ஆரம்பித்து நர்சரிப்பள்ளி ஆசிரியர் போல பேசினார். நான் எழுந்து வந்துவிட்டேன்..

 

சென்ற முந்நூறாண்டுகளாக ஓர் உலக ஒழுங்கு உருவாகியிருக்கிறது. நாம் அனைவரும் அதன் சிருஷ்டிகள். அதற்குள்தான் வாழ்கிறோம். கூட்டான பேருழைப்பு, அறிவை தொகுத்துக் கொள்ளும் முறைமை, பெருமளவிலான பொருளுற்பத்தி, உலகுதழுவிய வினியோகம், ஆகியவற்றை அது கட்டமைத்தது. போக்குவரத்து, பொதுக்கல்வி ஆகியவற்றில் பிரம்மாண்டமான சாதனைகளை அது உருவாக்கியிருக்கிறது. நாம் செல்லும் விமானம், நாம் டைப் அடிக்கும் கணிப்பொறி எல்லாமே அதன் சிருஷ்டிகள்.

அது உலகத்தை இணைத்திருக்கிறது. மானுட ஞானத்தை தொகுத்திருக்கிறது. விளைவாக வரலாறு முழுக்க நடந்து வந்த பெரும்போர்களை இல்லாமலாக்கியிருக்கிறது. கொள்ளை நோய்களை அழித்திருக்கிறது. மானுட சமத்துவத்தை, ஜனநாயகத்தை உலகமெங்கும் கொண்டு சென்றிருக்கிறது.

முதலாளித்துவம் என்றும் நுகர்வியம் என்றும் நாம் சொல்வது இதைத்தான். இதன் முகப்படையாளமே நவீன அறிவியல். அதன் சாதனைகளை எவராலும் மறுக்கமுடியாது. அது பல்லாயிரம் அறிவியலாளர்கள், தத்துவஞானிகள், இலக்கியவாதிகள், அரசியல்முன்னோடிகளின் கூட்டான செயல்பாட்டின் விளைவு.

அதன் விடுபடல்கள் மேல் கடும் விமர்சனத்துடன் எழுந்துவந்தது சூழியல். அதுவும் அந்த ஒட்டுமொத்த உலக ஒழுங்கு உருவாக்கிய ஒரு குரல்தான். நவீன அறிவியலின் அறிதல் முறைமைகளுக்குள் இருந்து உருவான ஒர் அறிவியல்சார்ந்த விமர்சனக்குரலே சூழியல். இன்றைய நவீன அறிவியலின் முடிவுகளை அது நிராகரிக்கக்கூடும், ஆனாலும் அது ஓர் அறிவியல்தரப்பாகவே உலகமெங்கும் செயல்படுகிறது.மூர்க்கமான நம்பிக்கையாக அல்ல.

இன்றுள்ள அமைப்புக்கு மாற்றுக்களை சூழியலும், இயற்கைவாழ்க்கையும் முன்வைக்கலாம். ஒட்டுமொத்தமாகவே நிராகரித்துக்கூட மாற்றுக்களை உருவாக்கலாம். ஆனால் நவீன அறிவியலே ஒரு பெரிய மோசடி, இன்றைய உலக ஒழுங்கே ஒரு பெரிய சதிவேலை என்னும் நிலைபாடு சூழியலை ஒருவகை மூடநம்பிக்கையாக, குறுங்குழுஅரசியலாக மட்டுமே ஆக்கும்

அறிவியல்நோக்கு என்பது புறவயமானது. எல்லா தரப்புகளையும் நோக்கும் சமநிலைகொண்டது. வரையறுக்கப்பட்ட தர்க்கம் கொண்டது. விவாதிக்க முன்வருவது. சோதனைகளுக்கு உட்படுவது. தன்னை மாற்றிக்கொள்ளத் தயங்காதது. அப்படி தன்னை நிறுத்திக்கொள்ளும் போதுதான் சூழியல் பொருளுள்ள செயல்பாடாக ஆகமுடியும். எவரையேனும் அது மாற்றியமைக்கமுடியும், மாற்று முறைமைகளை கொண்டுவரமுடியும்

அவ்வாறன்றி வெறுமே சதிக்கோட்பாடு, வெறுப்புகக்குதல், அரங்கில் வாய்க்குவந்தபடி தீர்க்கதரிசனம் சொல்லுதல் என்றெல்லாம் சென்றால் அது ஒருவகை கேளிக்கையாகவே ஆகும். அதைக்கேட்பவர்களும் பேசுபவர்களும் எவ்வகையிலும் அதை வாழ்க்கையுடன் இணைத்துக் கொள்ளமாட்டார்கள். சூழியல் அப்படித்தான் ஆகிவிட்டிருக்கிறது இன்று.

நம்மாழ்வார் ஒரு முதன்மையான சூழியல்போராளி. ஐயமே இல்லை. ஆனால் அவர் மீதான விமர்சன அணுகுமுறையே நம்மை சூழியல்சார்ந்த அறிவியல்நோக்கை நோக்கிக் கொண்டுசெல்லமுடியும்.

ஜெ

 

முந்தைய கட்டுரைகாரைக்குடி புத்தகக் கண்காட்சி, தத்துவமும் நடைமுறையும் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநம்மாழ்வார் ஒரு முரண்பாடு