என்னிடம் வரும் புதியவாசகர்களில் கணிசமானவர்கள் அவர்கள் என் புனைவுலகுக்குள் நுழைந்தது ஊமைச்செந்நாய் என்னும் கதைவழியாக என்று சொல்வதுண்டு. இணையத்தில் அக்கதை வெளியானது. ஆகவே தொடுப்புக்கள் வழியாக அதை நண்பர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொள்ள முடிந்தது. இலக்கியமறியாத வாசகர்களையும் அது சென்றடைந்தது
அத்துடன் அது ஒரு பொதுவாசகன் உத்வேகமிக்க கதையாக வாசிக்க உகந்த படைப்பு. இலக்கியவாசகன் அதன் நுண்பிரதிகளைத்தேடிக் கண்டடையமுடியும். பொதுவாசகன் தேடும் மாறுபட்ட கதைக்களம், மிகுபுனைவுத்தன்மை, சாகசம் ஆகியவையும் உச்சகட்டப்புள்ளியும் கொண்டது. சாகசம் என்பது மானுடன் தன் உச்சத்த்தில் நிற்கும் ஒரு புள்ளி. அது அவனுடைய சுயமறியும் தருணமும்கூட. ஆகவே அது ஒரு தியானம். நம் மாபெரும் குருநாதர்களின் வாழ்க்கையில் எல்லாம் சாகசம் என்னும் அம்சம் இருப்பதைக் காணலாம்.
ஊமைச்செந்நாய் தொகுதியின் முதலிரு பதிப்புகளும் உயிர்மை வெளியீடாகவும் மூன்றாம்பதிப்பு நற்றிணை வெளியீடாகவும் வந்தது. இது நான்காவது பதிப்பு
இத்தொகுதியில் நான் எனக்கு அணுக்கமானவையாக நினைக்கும் பலகதைகள் உள்ளன. மத்தகம் அதிலொன்று. இன்னொன்று காமரூபிணி. யானையும் யட்சியும் என் அந்தரங்க உலகின் படிமங்கள் என என் வாசகர்கள் அனைவரும் அறிந்திருப்பார்கள். இப்பதிப்பை வெளியிடும் கிழக்கு பதிப்பகத்திற்கு என் மனமார்ந்த நன்றி
ஜெ
(கிழக்கு வெளியீடாக வரவிருக்கும் ஊமைச்செந்நாய் தொகுப்புக்கான முன்னுரை)
***