கிறிஸ்து,கிருஷ்ணன்,பகுத்தறிவு…2

இடமறுகுவின் நூல் ‘கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்கள் அல்ல’ கடந்த ஐம்பதாண்டுக்காலத்தில் தொன்மங்களை ஆராய்வதில் என்னென்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன என்பதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் பிடிவாதமான நம்பிக்கை ஒன்றையே ஆயுதமாகக் கொண்டு எழுதப்பட்டது. அதை ’நாத்திக மதநம்பிக்கை’ என்று சொல்வேன். எந்த மதநம்பிக்கையும் ஒற்றைப்பார்வையை அளிக்கும். புறப்பார்வைகளை மறைக்கும். அந்த ஒற்றைப்பார்வை மிகையான தன்னம்பிக்கையை அளித்து உலகிலுள்ள எதைப்பற்றியும் பேசும் ஊக்கத்தை வளர்க்கும். இடமறுகுவின் நூல் அத்தகையது.

இடமறுகுவின் நூலில் கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருந்தவர்கள் அல்ல, அவர்கள் காட்டுமிராண்டிமனத்தின் கற்பனைகளே என்பதை நிறுவ அவர் முன்வைக்கும் ஆதாரங்களை அப்படியே ஏற்றுக்கொண்டால் கிருபானந்தவாரியார் உண்மையில் வாழ்ந்தவரல்ல, அவர் ஒரு கற்பனைக் கதாபாத்திரம் என்றுதான் சொல்லவேண்டியிருக்கும். எல்லா காரணங்களும் அப்படியே இருக்கின்றன

ஒன்று, வாரியாரின் வாழ்க்கை குறித்து இன்று நூல்கள் வழியாக கிடைக்கும் தகவல்களில் பெரும்பகுதி எவ்வகையிலும் தர்க்கத்துக்கு உகக்காத புராணங்கள். அவர் ஒருசமயம் இரு இடங்களில் இருந்ததாகக் கூட கதைகள் உள்ளன. அவர் உண்ட எச்சிலை வாங்கி உண்ட பலர் அது தித்தித்தாகச் சொல்லியிருக்கிறார்கள். அவர் வெண்பா எழுதி நோய் தீர்த்திருக்கிறார். கோயில் நடை திறக்கச் செய்திருக்கிறார். ஏன், இப்போது இறந்தபின்னர் கூட வானிலிருந்து செய்யுட்கள் எழுதி மணமக்களை வாழ்த்துகிறார்.

இரண்டு, வாரியார் பற்றிய தகவல்கள் எவையுமே புறவயமான ஆதாரங்கள் கொண்டவை அல்ல. அவர் பிறந்த தேதிகூட ஊகமே. இறந்ததைப் பற்றி புராணம் போன்ற ஒரு கதையே கிடைக்கிறது.

மூன்று, வாரியாரின் வாழ்க்கைப் பற்றிய கதைகள் எவையும் புதியவை அல்ல. அவை சின்ன சின்ன மாற்றங்களுடன் ஏற்கனவே பல சைவநாயன்மார்களின் வரலாற்றில் வந்தவையே.

ஆகவே சைவ நாயன்மார்களின் கதைகளை ஒட்டி இருபதாம் நூற்றாண்டில் கற்பனைசெய்து உருவாக்கப்பட்ட ஒரு நவீன நாயனாரின் கதையே வாரியாரின் வாழ்க்கை வரலாறு — இப்படிச் சொல்வது எந்த அளவுக்கு உண்மையாக இருக்கும்?

சுருக்கமாகச் சொன்னால் இடமறுகுவின் நூலுக்குள்ளே சொல்லப்படும் வாதங்கள் இவையே. 1. கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தகாலகட்டத்து தகவல்கள் திட்டவட்டமாக இல்லை. 2. கிறிஸ்து கிருஷ்ணன் இருவருடைய கதையிலும் பெரும்பகுதி ஒன்றுபோல் உள்ளது. 3 அதைப்போன்ற வேறுகதைகள் அக்காலத்தில் புழக்கத்தில் இருந்தன. ஆகவே உண்மையில் அவர்கள் வாழவில்லை. அவர்களின் வாழ்க்கை அன்றைய தொன்ம மரபில் இருந்து கற்பனைமூலம் உருவாக்கப்பட்டது என்கிறார் இடமறுகு.

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்திருக்கக்கூடிய காலம் நவீன வரலாற்றுப்பதிவுக்கு முந்தையது. அதிலும் கிருஷ்ணன் வாழ்ந்த காலகட்டமே வரலாற்றுக்கு முந்தையது. அன்று வாழ்ந்த எவருக்குமே வரலாற்றுப்பதிவு இல்லை. கிருஷ்ணன் இருக்கட்டும், கபிலர், பாதராயணர்,கௌதமர், பதஞ்சலி, மகதிகோசாலன், வர்த்தமான மகாவீரர், சங்கரர் – யாருக்கு ’நம்பகமான’ வரலாற்றுப்பதிவு இருக்கிறது? அவர்கள் அனைவருமே இல்லாதவர்கள், கற்பனைகள் என்று சொல்லிவிடமுடியுமா? ஒட்டுமொத்த இந்தியச் சிந்தனைகளுமே ‘அந்தரவெளி’யில் இருந்து வந்தனவா? என்னவகையான பகுத்தறிவு இது?

அன்றைய வரலாற்றுப்பதிவு என்பது வேறுவகையானது. கறாரான தகவல்களினாலான புறவயமான வரலாற்றுப்பதிவு என்பது காலத்தில் மிகவும் பின்னால் வந்தது. ஒரு மன்னனோ அல்லது நூலாசிரியனோ வரலாற்றுணர்வுடன் பதிவுசெய்தால் மட்டுமே அத்தகைய வரலாறு கிடைக்கும். இந்தியமரபில் அத்தகைய வரலாறு கிடையாது. நம் மன்னர்களின் கல்வெட்டுகள் கூட நேரடியான வரலாறுகள் அல்ல. அவைகூட காலத்தால் மிகவும் பிந்தையவை

ஒரு முப்பது வருடம் முன்பு வரை தமிழகத்தின் சங்ககாலகட்டம் பற்றி தொல்பொருள் ஆதாரங்கள் , கல்வெட்டுகள் எவையும் கிடைக்கவில்லை. ஆகவே சங்ககாலகட்டமே பல்லவர் காலத்தில் சில சபைக்கவிஞர்கள் உருவாக்கிய கற்பனைதான் என்று வரலாற்றாசிரியர்கள் சிலர் வாதிட்டார்கள். இத்தனை நுட்பமான தெளிவான தகவல்கள் எந்த நோக்கத்துக்காக அப்படி கற்பனையாக உருவாக்கப்பட்டிருக்கும் என அவர்கள் யோசிக்கவில்லை.

பழங்காலவரலாறு என்பது மக்களின் நினைவில் இயல்பாக நிலைநிற்பது. அவர்களின் கவிஞர்களாலும் கதைசொல்லிகளாலும் சொல்லப்படுவது. அவ்வாரு நினைவில் நிற்கும்வரலாறு என்பது நேரடியான தகவல்களாக இருக்காது. அந்த வரலாற்றில் இருந்து அவர்கள் எதை அறிகிறார்களோ, எதை தலைமுறைகளுக்குச் சொல்லிச்செல்ல விரும்புகிறார்களோ அதுவாகவே இருக்கும். அதை மதிபீடுகள் கலந்த வரலாறு [ Value added history] எனலாம். தொன்மங்கள் அத்தகைய வரலாறுகளே. வரலாற்றுடன் கற்பனையும் கலந்து அவ்வரலாறு மூலம் திரண்டுவரும் ஞானம் அல்லது அகஉண்மைக்கு முக்கியத்துவம் உருவாகும்படி அமைக்கப்பட்டவை அவை.

இந்தியாவின் தொல்வரலாறுகள் தொண்ணூறுசதம் இவ்வாறே நமக்குக் கிடைக்கின்றன. ‘பண்டைய இந்தியா’ என்ற தன் புகழ்பெற்ற நூலின் முன்னுரையில் கோசாம்பி இதை விரிவாக விளக்குகிறார். தொன்மங்களை வரலாறு அல்ல என்று சொல்வோமென்றால் நாம் ஒட்டுமொத்தமாக வரலாறற்றவர்களாக ஆகிவிடுவோம். ஆகவே தொன்மங்களை நவீன வரலாறாக மாற்றிக்கொள்ள முடியுமா என அவர் தன் ஆய்வுகளில் முயல்கிறார். அதற்கான சில அளவுகோல்களை, வழிமுறைகளை செவ்வியல்மார்க்ஸிய நோக்கில் உருவாக்குகிறார். அவ்வழிமுறைகளை நிராகரிப்பவர்கள் இருக்கலாம். ஆனால் இன்றைய ஆய்வுமுறை அவ்வாறான ஒன்றாகவே இருக்கமுடியும்.

கிருஷ்ணனின் வரலாறு நமக்கு தொன்மமாகவே கிடைக்கிறது. அந்த தொன்மத்துக்குள் தெளிவாகவே ஒரு வரலாறு அடங்கியிருக்கிறது. கிருஷ்ணன் யாதவ மன்னன் என்பதும் அவர் தன் மாமனைக் கொன்று ஆட்சிக்கு வந்தார் என்பதும் கிட்டத்தட்ட எண்பதாண்டுக்காலம் ஆண்டார் என்பதும் தத்துவஞானியான அரசனாக இருந்தார் என்பதும் அவரது தலைநகரம் இன்றைய கட்ச் பகுதியில் இருந்த துவாரகை என்பதும் கிட்டத்தட்ட துல்லியமாகவே புராணங்களில் உள்ளது.

ஆனால் தொன்மங்கள் வரலாற்றுத்தகவல்கள் போல ஒற்றைநோக்கு கொண்ட உறைந்த தரவுகள் அல்ல. அவை விழுமியங்கள் கொண்டவை. அவ்விழுமியங்களை வளர்க்கும்பொருட்டு அந்த தொன்மம் காலப்போக்கில் வளர்த்தெடுக்கப்படும். பாகவதம் போன்ற நூல்கள் வழியாக பிற்காலத்தில் கிருஷ்ணன் என்ற வரலாற்றுநாயகனின் சித்திரம் மேலும் மேலும் வளர்த்தெடுக்கப்பட்டது.

மேலும் பிற்காலத்தில் புஷ்டிமார்க்கம் போன்ற கிருஷ்ணபக்தி இயக்கங்கள் வழியாக அந்த தொன்மம் இன்னும் அடுத்தபடிக்கு சென்றது. யாதவமன்னனாகிய கிருஷ்ணன், கீதாசாரியனாகிய கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் என இந்திய வரலாற்றில் கிருஷ்ணனின் தொன்மம் சீராக வளர்ந்தபடியே இருப்பதை நாம் காணலாம்.

இந்த பரிணாமத்தின் இந்த எல்லையில் நின்றபடி ஒட்டுமொத்தமாக மொத்த சித்திரத்தையும் பார்த்து கிருஷ்ணன் என்ற இந்த தொன்மம் வெறும் கற்பனைப்பிம்பமே என்று வாதிடுவதைத்தான் இடமறுகு செய்கிறார். அதாவது கிருஷ்ணனின் தொன்ம சித்திரம் பரிணாமம் அடைவதையே அது தொன்மம் மட்டும்தான், உண்மைமனிதர் அல்ல என்பதற்கான ஆதாரமாக அவர்கொள்கிறார். தொன்மங்களை ஆராய்வதற்கான நவீன ஆய்வுமுறைகள் எதையுமே அறிமுகம்செய்துகொள்ளாத மோட்டாவான அணுகுமுறையே தெரிகிறது.

தொன்மங்கள் வரலாற்றை உள்ளடக்கியிருக்கும் விதத்தை ஆராய அவர் கோசாம்பியை பயன்படுத்தியிருக்கவேண்டும். இங்கே சுவாரசியமான ஒரு விஷயம் உண்டு. கிருஷ்ணனை ஒரு வரலாற்று நாயகனாகக் கொள்ள வாய்ப்புகள் மிகக்குறைவென்றே கோசாம்பி கூட நினைக்கிறார். பகவத்கீழ்தை கிபி ஐந்தாம் நூற்றாண்டில் சில அறிஞர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என ஊகிக்கிறார். ஆனால் அவரது அணுகுமுறையைக் கொண்டே அதை நிராகரிக்க முடியும். கிருஷ்ணனைப்பற்றிய அடிப்படைத்தகவல்கள் எந்த நூலிலும் மாறுபடாமல் நீடிப்பது மட்டுமே போதுமானதாகும்.

தொன்மங்களின் உலகுதழுவிய தன்மையை புரிந்துகொள்ள ஜோசஃப் கேம்பலை இடமறுகு பயன்படுத்தியிருக்கவேண்டும். ஒரு தொன்மம் என்பது பழமையான மக்கள் வாழ்க்கையையும் பிரபஞ்சத்தையும் புரிந்துகொள்ள பயன்படுத்திக்கொண்ட குறியீடு. குறியீடுகள் என்பவை ஒரு பொதுமொழியின் சொற்களைப்போல. அந்த மொழியைக்கொண்டே மக்கள் ஒருவரை ஒருவர் தொடர்புகொண்டார்கள். ஆகவே மக்களிடமிருந்து மக்களுக்கு குறியீடுகள் கைமாறப்பட்டு சென்றன.

உதாரணமாக ஆசீவக- சமண மதங்களில் இருந்தே வழிவழியாக வரும் தீர்க்கதரிசிகளின் வரிசை என்ற கருதுகோளை மத்திய ஆசிய மக்கள் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பது எளிதில் ஊகிக்கக்கூடியதே. ஆபிரகாமிய மதங்களின் தீர்க்கதரிசிகள் அவ்வாறு உருவானவர்களே. இவ்வாறு உலகம் முழுக்க தொன்மங்கள் கொண்டும் கொடுத்தும் பெருகி வளர்ந்தன. கிருஷ்ணனின் தொன்மக்கதை கிறிஸ்துமீது படிந்திருக்கலாம். திருப்பியும் நிகழ்ந்திருக்கலாம்.

கிறிஸ்துவுக்கும் கிருஷ்ணனுக்கும் இருக்கும் பொதுத்தன்மைகள் இரு தொன்மங்களும் ஒன்றுடன் ஒன்று உரையாடின என்பதற்கு ஆதாரம். இரு மக்களும் இவ்விரு மனிதர்களுக்குள்ளும் பொதுவான பலவற்றை கண்டார்கள் என்பதற்கான ஆதாரம். இரு தொன்மங்களும் பொய் என்று எவர் சொல்ல முடியும்?

அத்துடன், ஒருவரோடு ஒருவர் தொடர்பே இல்லாத மக்கள்கூட சமானமான தொன்மங்களை உருவாக்கியிருப்பதை கேம்பல் அடையாளம் காட்டுகிறார். தொன்மங்கள்மூலம் பிரபஞ்சத்தை அறியமுயல்வது ஒரு மனநிலை. தொன்மையான மக்களின் வழிமுறை அது. அம்மனநிலை ஒரே சித்திரங்களை எளிதில் உருவாக்கிக்கொள்ளும்.

இடமறுகுவின் நூல் அவர் செய்த ஆய்வுக்கு தேவையான கருவிகளை அவரது தரப்பிலேயே உருவாக்கிக்கொள்ள தவறிவிட்ட ஒன்றாகும். இன்றைய வரலாற்றுக்கும் அன்றையவரலாற்றுக்கும் இடையேயான வேறுபாடே அவர் கவனத்துக்கு வரவில்லை. ‘கிருஷ்ணனின் பிறந்தநாள் சான்றிதழ் கிடைக்கவில்லை, ஆகவே அவர் பிறக்கவில்லை’ என்று சொல்லுவதுபோன்ற முதிர்ச்சி இல்லாத ஆய்வு அது.

பொதுவாக தமிழில் இந்தியசிந்தனைத்தளத்தில் நிகழ்ந்துள்ள முக்கியமான ஆய்வுநூல்கள் எளிதில் வந்துசேர்வதில்லை. கோசாம்பி மறைந்து கிட்டத்தட்ட முப்பதாண்டுகள் கழித்தே அவரது ஒரு நூல் தமிழில் வெளிவந்தது. [ஆர் எஸ் நாராயணன் மொழியாக்கத்தில் ‘பண்டைய இந்தியா’. நியூ செஞ்சுரி புத்தகநிலையம்] ஆனால் எந்த விதமான ஆய்வுநோக்கும் இல்லாத எளிய பரபரப்புநூல்கள் உடனடியாக தமிழில் வெளிவந்து கவனம் பெறுகின்றன. உதாரணம் பிரேம்நாத் பஸாஸின் ‘இந்தியவரலாற்றில் பகவத்கீதை’

காரணம் நம் சிந்தனையை வடிவமைத்திருப்பது திராவிட இயக்கத்தின் எளிய இருமைநோக்கு , பரபரப்பு மனநிலை என்பதே. நம்மால் ஒரு முழுமையான, சிக்கலான வரலாற்று நோக்கு கொண்ட நூலை அதன் அணுகுமுறையை புரிந்துகொண்டு வாசிக்க முடிவதில்லை. திராவிட இயக்கத்துக்குச் சாதகமான நூல்களைக்கூட திராவிட இயக்கத்தவரால் வாசிக்க முடிவதில்லை. முக்கால் நூற்றாண்டு தாண்டியும்கூட இன்னும்கூட அவர்களுக்கான சிந்தனையாளர்கள் பலர் தமிழுக்கு வந்துசேரவில்லை. உதாரணம், எம்.என்.ராய்.

நம்முடைய மனம் வெறுப்புகமழும் வசைகளை சிந்தனைகள் என எண்ண ஈவேராவாலும் அவரது வாரிசுகளாலும் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் நாம் சிந்தனை என்றால் அதையே செய்துகொண்டிருக்கிறோம். அதிலிருந்து மீள நம்மை எஸ்.வி.ராஜதுரைகளும் அ.மார்க்ஸுகளும் அனுமதிக்கவும்போவதில்லை.

கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வாழ்ந்தவர்களே என்று நான் அறுதியிட்டு சொல்வேனா? அப்படிச் சொல்லுமளவுக்கு எனக்கு அறியாமை இல்லை. ஆழமாக மதநம்பிக்கை அல்லது இடமறுகு போல ஆழமான எதிர்மதநம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி எதோ ஒன்றை உறுதியாகச் சொல்ல துணிவுவரும். நான் வரலாற்றையும் தத்துவத்தையும் ஆராய்பவன் மட்டுமே. ஆகவே இவ்வாறு சொல்வேன். கிறிஸ்துவும் கிருஷ்ணனும் வரலாற்று மனிதர்களாக இருந்திருக்கக்கூடிய வாய்ப்புகளே பெரும்பாலும் உள்ளன. பண்டைய நூல்கள் கூறும் தகவல்களைக்கொண்டு அந்த ஊகத்துக்கே செல்ல முடியும்

அவ்விருவருடைய வரலாறுகளும் தொன்மமாகவே பதிவாயின. தொன்மமாக நீடித்தன. தொன்மங்கள் அடையும் எல்லா பரிணாமத்தையும் அவை அடைந்தன. தொன்மங்கள் கொள்ளும் எல்லா உரையாடல்களையும் அவை மேற்கொண்டன. அந்த வளர்ச்சிப்போக்கின் உச்சநிலையில் நமக்கு அவை இன்று கிடைக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைநக்கலும் நாஞ்சிலும்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன்-கடிதங்கள்