ஓ.என்.வி

1

அண்மையில் காலமான மலையாளத் திரைப்படப் பாடலாசிரியர் ஓ.என்.வி.குரூப்புக்கு நீங்கள் ஏன் அஞ்சலி எழுதவில்லை? அவரைப் பிடிக்காதா? அல்லது வேறு ஏதாவது காரணங்களா?

அன்புடன்,
ஜி.சுந்தர்

 

அன்புள்ள சுந்தர்

 

ஓ.என்.வி என அழைக்கப்படும் ஓ.என்.வேலுக்குறுப்பு [ஒற்றப்பிலாக்கல் வீட்டில் நீலகண்டன் வேலுக்குறுப்பு] மலையாளத்தில் புகழ்பெற்ற கவிஞர். எனக்கு அவருடன் நேரடியான உறவோ நட்போ இல்லை. ஒருமுறை சந்தித்திருக்கிறேன். அவருக்கு ஞானபீடம் கிடைத்தபோது அதற்கு அவர் எவ்வகையிலும் தகுதியானவர் அல்ல, இடதுசாரிகளுடன் கொண்டுள்ள உறவால் அவ்விருதைப்பெற்றிருக்கிறார் என்று கடுமையாக கருத்துத் தெரிவித்திருந்தேன். அதில் அவர் வருந்தியதாக என்னிடம் சொல்லப்பட்டது.

ஆகவே அஞ்சலியாக எதை எழுதினாலும் சரியாக இருக்காது. அவர் மேல் எனக்குள்ள கூரிய மதிப்பீட்டை மட்டுமே எழுதவேண்டியிருக்கும். அதை பிறிதொரு தருணத்தில் எழுதலமென நினைத்தேன்

ஓ.என்.வி ஒருவகையில் மலையாளத்தின் பிரபலப்படிமம். அவர் கல்லூரிப்பேராசிரியர். மலையாள- சம்ஸ்கிருத அறிஞர். இடதுசாரிகளின் நாடக அமைப்பான கெ.பி.ஏ.சிக்காக பாடல்கள் எழுதியபடி அறிமுகமானவர். ‘பொன்னரிவாள் அம்பிளியில் கண்ணெறியுந்நோளே’ போன்ற பாடல்கள் இன்றும் நினைவில் நிற்பவை. சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளைக்கும் வயலார் ராமவர்மாவுக்கும் பின்னால் அவரே மலையாளத்தின் புகழ்பெற்ற மக்கள்கவிஞர்

ஆனால் புரட்சியை கற்பனாவாதத்திற்குள் கொண்டுசென்றவர் என்பதே அவரது பங்களிப்பு. அரிவாளை ’பொன் அரிவாள் அம்புலி’ என வர்ணிப்பதே மிகச்சிறந்த உதாரணம். தனிவாழ்க்கையில் அசல் நாயராக வாழ்ந்தார். மரபார்ந்த பேராசிரியராகப் பொலிந்தார். ஓய்வுபெறுவதுவரை பாலமுரளி என்றபேரிலேயே திரைப்பாடல்களை எழுதி ஊதியம்பெற்றார். ஓய்வுக்குப்பின்னரே ஓ.என்.வி என அறியப்படலானார்.

கொல்லம் மாவட்டத்தில் சவறா அருகே ஒற்றப்பிலாக்கல் என்னும் நாயர்குடும்பத்தில் ஓ.என்.கிருஷ்ணக்குறுப்புக்கும் கே.லட்சுமிக்குட்டியம்மாவுக்கும் மகனாக 1931 மேய் 27 அன்று பிறந்தார். கொல்லம் சங்கரமங்கலம் பள்ளியில் ஆரம்பக்கல்வி. திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரில் 1948 ல் இண்டர்மீடியட் படித்தார். கொல்லம் எஸ்.என் கல்லூரியில் பொருளியலில் இளங்கலை பட்டம்பெற்றார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் மலையாளத்தில் முதுகலை. 1955ல் படிப்பை முடித்து 1957 முதல் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தார்.

1958 முதல் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் கோழிக்கோடு கலைக்கல்லூரியிலும் திருவனந்தபுரம் மகளிர்க்கல்லூரியிலும் மலையாளப்பேராசிரியராகப்பணியாற்றினார். பணி ஓய்வுக்குப்பின் கேரள கலாமண்டலம் தலைவர், கேந்திர சாகித்ய அக்காதமி உறுப்பினர், கேரள சாகித்ய அக்காதமி உறுப்பினர் பதவிகளில் இருந்தார். பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் பட்டங்களைப் பெற்றார். 2006ல் ஞானபீட விருது கிடைத்தது

1946ல் வெளியான முன்னோட்டு என்னும் கவிதை முதல் தொடர்ச்சியாக எழுதிவந்தார். 1949ல் பொருந்துந்ந சௌந்தர்யம் என்னும் முதல் தொகுதி வெளிவந்தது. 2010ல் வெளிவந்த சூரியனின் மரணம் இறுதித்தொகுதி.

புரட்சிகரக் கவிதை வழியாக சினிமாவுக்குள் வந்தார் ஓ.என்.வி. தேவராஜன், சலீல் சௌதுரி, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, பாம்பே ரவி இசையில் மலையாளத்தின் மறக்கமுடியாத பல பாடல்களை எழுதியிருக்கிறார்.

ஓ.என்.வி யின் கவிதையின் இயல்பு என்ன? ஒன்று அபாரமான மொழியாளுமை. அழகிய சொற்களை அடுக்குவதில் அவரை முன்னோடிகளான சங்ஙம்புழா, வயலார் ஆகியோருக்கு நிகராகச் சொல்லலாம். சம்ஸ்கிருதத்திலுள்ள ஆழ்ந்தபுலமையிலும் அவர்களுக்கு நிகரானவர். அவரது பலவரிகள் மக்களின் நினைவில் இன்றும் நிற்பதற்குக்காரணம் மொழியழகே

எதிர்மறை அம்சம் என்ன? முன்னோடிகளைப்போலவே அவரும் சுயமான வாழ்க்கைநோக்கோ கவித்தரிசனமோ அற்றவர். சங்கம்புழாவின் கவிதையிலாவது காதலும் தன்னிரக்கமும் அசலான உணர்வுகள். வயலாருக்கும் ஓ.என்.விக்கும் அவை சமையற்பொருட்கள் மட்டுமே. அவ்வரிகளுக்குள் அவர்களின் வாழ்க்கை இல்லை. எனவே அவை அழகிய எதிரொலிகளாகவே இருந்தன.

தேய்வழக்குகளின் அரசன் என ஓ.என்.வி குறுப்பை நான் ஒருமுறை மலையாளக்கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அழகிய தேய்வழக்குகள். அவை அவரது கவிதைகளை சலிப்பூட்டுபவை ஆக மாற்றின. கவிதைவாசகனுக்கு அவற்றில் அடைய ஏதுமில்லை

ஆனால் அந்த அழகிய தேய்வழக்குகள் திரைப்பாடலுக்கு அற்புதமான வரிகளாக அமைந்தன. இசையுடன், கதைத்தருணங்களுடன் இணைந்தபோது அவை மறக்கமுடியாதவையாக ஆயின. வயலார் ராமவர்மா, பி.பாஸ்கரன், ஸ்ரீகுமாரன் தம்பி ஆகியோருடன் ஓ.என்.வியையும் மலையாளத்தின் தலையாய பாடலாசிரியராகச் சொல்லலாம்.

தமிழ்ப்பாடலாசிரியர்களைப்போல கதைத்தருணத்திற்குள் நிற்கும்பாடல்களை எழுதவேண்டிய நிலை மலையாளப்பாடலாசிரியர்களுக்கு அமையவில்லை. பாடல்களை சினிமாவுக்குள் புகுத்தப்பட்ட தனித்த கலை என்றே அவர்கள் எண்ணினர். ஆகவே பாடல்கள் நல்ல மலையாளத்தில், தனித்த கவிதையாக அமைந்தன. இவ்வாய்ப்பால் மலையாள சினிமாப்பாடல்கள் படங்கள் மறைந்தபின்னரும் நீடிக்கின்றன.

ஒரு மகத்தானபாடலாசிரியர் என ஓ.என்.வியை தயங்காமல் சொல்வேன். அவ்வளவுதான், கவிஞர் என்பது மேலும் பெரிய பீடம்

ஜெ

 

 

பொன்னரிவாள் அம்பிளியில் கண்ணெறியுந்நோளே

 

ஓ என் வி நாடகப் பாடல்கள் தொகுதி

 

இந்து புஷ்பம் சூடி நில்கும் ராத்ரி – பாம்பே ரவி ஓ என் வி

 

இவிடே காற்றினு சுகந்தம் — சலீல் சௌதுரி ஓ என் வி

 

 

 

 

 

 

 

 

முந்தைய கட்டுரைஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 2
அடுத்த கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 65