அளவுகள்

index

 

டீ குடிக்க வந்த இடத்தில்தான் தையல்காரரைப் பார்த்தேன். செபாஸ்டின் என்று பெயர். நான் அந்தக்காலத்தில் நிறையச் சட்டைகளை அவரிடம் கொடுத்துத் தைத்ததுண்டு. பத்தாண்டுகளாயிற்று அளவெடுத்துச் சட்டை தைத்து.

“காணுகதுக்கே இல்ல?” என்றார்.

”இங்க கட வச்சிருக்கேளா?” என்றேன்.

“ஆமா, பளையகடைக்கு வாடகை கூடுதல். இங்கிண முக்குக்குள்ள ஒரு வீட்டுவராந்தாவிலே வச்சு தைக்கேன். இப்பம் தையலு குறவில்லா?” என்றார்

பாவமாக இருந்தது. ஒருகாலத்தில் தீபாவளிச்சட்டையை பொங்கலுக்குக் கொடுப்பார். கண்ணைப் பார்த்துப் பேசமாட்டார். கைகள் துணியை வெட்டிச்செல்ல காதில் பென்சில் அமர்ந்திருக்கும். விலைமதிப்புள்ள துணி என்றால் நம் கண்முன்னாலேயே நுனியை வெட்டி ,கார்டில் பின் அடித்து வைத்தபின் கரகரவெனச் சுருட்டி, அதிலேயே கிழித்துக் கட்டி ,தூக்கி மூலையிலிருக்கும் குவியல்நோக்கிக் கடாசுவார். தலைநிமிராமலேயே “பொறவு வாருங்க. எப்பம் தாறதுண்ணு சொல்லுதேன்” என்பார்.

நான் அஞ்சிய கேள்வியை அவர் கேட்டார். “சார் இப்பம் தைக்கியதில்லியா?”

நான் “இல்ல, இப்பம் ரெடிமேடாக்கும்” என்றேன். “

”இப்பம் எல்லாரும் ரெடிமேடுதான்.” என்றார் இன்னொருவர்.

“ரெடிமேடுன்னா அது ஒரு பொது அளவாக்கும். நம்ம அளவ நாம அளந்து தைச்சா அதுக்க அளகு வேறல்லா.. தெரிஞ்சவங்களுக்குத் தெரியும்” என்றார் செபாஸ்டின்.

“அதெல்லாம் பளைய காலம். இப்பம் எல்லா அளவிலயும் துணி வருது” என்றார் அவர்.

“எத்தன அளவிலே? இல்ல கேக்கேன். எத்தனை அளவிலே? லோகத்திலே முப்பத்தாறாயிரம்கோடியாக்கும் சனத்தொகை. எல்லாத்துக்கும் அளவுக்குச் சட்டை உண்டா? அவன் நாலஞ்சு அளவு வச்சிருக்கான். நாம வேங்கி போடுதோம்“ என்றார் செபாஸ்டின்

நான் மெல்ல களத்திலிறங்கினேன். “இப்பம் டெக்னாலஜி வளந்தாச்சுல்லா? எல்லா அளவிலயும் சட்டைகள் இருக்கு” என்றேன்.

“எல்லா அளவிலயும்னா?” என்றார்.

“எல்லாம் கம்ப்யூட்டராக்கும். நாம ஒரு சட்டைய அளந்து சரியா எடுத்தா நம்ம பேரும் அட்ரஸும் போட்டோவும் அவனுகளுக்குப் போயிரும். செரியா நம்ம அளவிலேயே சட்டை கடையிலே வந்து இருக்கும். உலகத்திலே உள்ள அத்தனைபேருக்க அளவும் கம்பூட்டரிலே இருக்கும் தெரிஞ்சு எடுத்தாப்போரும்”

“ஆமா, இப்பம் எல்லாருக்க கைரேகையும் ஆதார்ல இருக்குல்லா?” என்றார் ஒருவர்.

“ஆனா சட்டை ஆளு வளருதப்ப அளவு மாறும்லா?” என்றார் செபாஸ்டின்.

“மாறும். ஆனா நம்ம அளவ வச்சு கம்யூட்டர் கணக்குப்போடும். நாம ஒருவருசம் களிஞ்சு கடைக்குப்போய் நம்ம பேரச்சொன்னா நாம அப்ப இருக்கப்பட்ட அளவ ஆட்டமாட்டிக்கா சொல்லிரும். கரெக்டா இருக்கும்”

அவர் குழம்பி பிறரை நோக்கி “அப்பம் நாம தின்னு தடிச்சா?” என்றார்.

நான் உற்சாகமாக “அதுக்கும் சாஃப்ட்வேர் இருக்கு. நாம மளிகை வேங்குத கடைய இண்டர்னெட்ல சேத்துக்கிடுவாங்க. நாம திங்குத சோத்துக்க அளவு அதில கேறிரும். எல்லா தகவல்களையும் ஒண்ணா ஆக்கிட்டா ஒருத்தனுக்கு ரகசியம்ணு ஒண்ணு இல்லல்ல?”

“நம்ம ஏட்டியெம்மிலே போலீஸுகாரன் வந்து போட்டோசிடி எடுத்துட்டு போறான்லா?” என்றார் வாட்ச்மேன். அவர் கிளர்ச்சியடைந்திருப்பது தெரிந்தது.

நான் “அதுக்கும் மேலே இருக்கு. நாம ரோட்ல நடக்குறப்ப நம்மள அறியாம போட்டோ எடுப்பாக. அதை ஒண்ணாச்சேத்து நம்ம அளவுகளை கம்ப்யூட்டரே சொல்லிடும். வே, உம்மகிட்ட நாலு நீலச்சட்ட இருக்கில்லா? பொறவு என்ன மசுத்துக்குவே மறுக்காவும் நீலச்சட்ட எடுக்கேருண்ணு சொல்லிப்போடும்” என்றேன்

செபாஸ்டின் வாயைப்பிளந்தார். “இனிமே ரகசியமே இல்ல. நாம செருப்பு வாங்கப்போனா நம்ம சம்பளம் என்ன, செய்யுத தொளிலு என்ன, பளைய செருப்ப்ப எப்ப வேங்கினோம், அது எப்டி எத்தன மாசத்திலே தேஞ்சுது எல்லாத்தையும் கம்பூட்டரே சொல்லிரும். நாம எடுக்கவேண்டிய செருப்ப அதுவே எடுத்துக்குடுத்திரும். நாம பைசா மட்டும் குடுத்தாப்போரும்”

செபாஸ்டின் பெருமூச்சுவிட்டார்.

“இனியாக்கும் வித்தை கெடக்குதது. நாம எடுக்குத சட்டை செருப்பு எல்லாம் கம்ப்யூட்டரிலே இருக்கும்லா? நம்ம பய கடைக்குப்போனதும் அதைவச்சு அவனுக்க பாரம்பரியத்தையே சொல்லிரும். லே, நீ மத்தவனுக்க மகன்லா. உனக்க லெச்சணத்துக்கு இந்தா இந்தச் சட்டைப்போரும்னு சொன்னா மறுபேச்சு பேச முடியுமா?’ என்றேன்

“காலம்போறபோக்கு” என்றார் செபாஸ்டின்.

நான் டீக்கு காசு கொடுத்து கிளம்பும்போது டிரைவர் முத்துசாமி உடன் வந்தார். “அப்பம் நம்ம பெஞ்சாதிக்க அளவுகல்ள்லாம் நல்லபெருமாளு கடையிலே இருக்கும் இல்லியா?” என்றார்.

ஆமாம் என்றுதலையாட்டினேன்.

“எல்லா பொம்புளையாளுகளுக்க அளவும் இருக்குமா?”

நான் உற்சாகமாக “பின்ன?” என்றேன். அவர் எந்தப்பெண்ணை நினைக்கிறார் என ஊகிக்கமுடியவில்லை.

மறுபிரசுரம்- முதற்பிரசுரம்  Feb 23, 2016 

முந்தைய கட்டுரைஆ.கார்மேகக் கோனார்
அடுத்த கட்டுரைநற்றுணை, கீரனூர் ஜாகீர்ராஜா அரங்கு