விஷ்ணுபுரம் மீண்டும்…

1

 

 

அன்புள்ள ஜெ

அன்புடன் ஆசிரியருக்கு

கிரீஷ்மன் இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறான். படிக்கத் தொடங்கும் போது ஹேமந்தன் சொல்லி முடிக்கிறான். நான் வசந்தனிடம் கதை கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஏன் குறைத்துச் சொல்ல வேண்டும் என விஷ்ணுபுரம் மௌனமாக உணர்த்திவிட்டது. புதுவகையான இலக்கிய ஆக்கம் என்பதால் விஷ்ணுபுரத்தின் கதை மாந்தர்கள் மனதில் அதிக குழப்பத்தையும் திருப்தியின்மையையும் விளைவிக்கிறார்கள் என்றுதான் எண்ணியிருந்தேன். ஆனால் இப்போது விஷ்ணுபுரத்தின் எந்த அத்தியாயமும் எந்த பாத்திரமும் முற்றுபெறவே இல்லை எனத் தோன்றுகிறது.
தீராத தேடல் கொண்டவர்களின் உலகமாக விஷ்ணுபுரம் வசீகரிக்கத் தொடங்கி பின்பு என்னையும் உள்ளிழுத்துக் கொள்கிறது. மறுபுறம் தலைக்கு மேலே ஒரு பேரிருப்பாக ஆலயமும் விஷ்ணுபுரத்தின் ஆபத்தான பேரெழிலும் சூழ்ந்து கொள்கிறது. ஹரிததுங்காவின் உச்சியில் புலரியின் முதற்கதிரை பிரதிபலிக்கும் அந்த மரம் இன்னும் கண்ணெதிரே தெரிகிறது. அதுபோலவே பரவசம்ற்படுத்தும் எண்ணற்ற வர்ணனைகள். அவற்றில் சற்றே பயமுறுத்தும் தொணி கலந்திருப்பதே விஷ்ணுபுரத்தை மேலும் எழில் கொள்ளச் செய்கிறது.
கனவில் வாழ்ந்த உணர்வு.

மணிமுடிக் காண்டம் படிக்கையில் மனம் அரற்றியது ஏனெனத் தெரியவில்லை. கிரீஷ்மன் மீண்டும் கதை சொல்லத் தொடங்கியதும் ஒரு நிம்மதி ஏற்பட்டது. குறிப்பிட்டு எது குறித்துமே எழுத முடியவில்லை. அனைத்துமே பிண்ணிப் பிணைந்த ஒரு நிகழ்வாகவே விஷ்ணுபுரம் எனக்குத் தெரிகிறது. சில உபவாசிப்புகள் இருந்ததால் இம்முறை விஷ்ணுபுரம் மேலும் விரிவாகப் புரிந்தது. திருவடி தொடங்கி நீலி வரை ஒவ்வொருவரைப் பற்றியும் விரிவாக சிந்திக்குமளவுக்கு மிகக் குறைவாகவும் செறிவாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. வாசிக்கும் ஒவ்வொரு மனதையும் பற்றி விஷ்ணுபுர வாசிகள் வளர்ந்து கொண்டே இருப்பார்கள். மரணமற்றவர்கள்.

அஜிதன் அடையும் ஏமாற்றமும் மனவீழ்ச்சியுமே அவனை சிறந்தவனாகக் காண்பிக்கிறது. அவன் அங்காரகனை பார்க்கும் கணம் அது விடுதலை அடைவது போலவும் அவன் சிறைபடப் போவது போலவும் தோன்றியது. இப்படி இன்னும் பல நிகழ்வுகள் அடர்வாக மனதில் பதிந்து விட்டன. விஷ்ணுபுரம் பிண்ணனி தேடல் குறித்து அறிய ஆவல்

அன்புடன்

சுரேஷ்

 

 

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரத்தை மீண்டும் மீண்டும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். அதை ஒரு விரிவான தத்துவ- வரலாற்றுப்பார்வையில் மட்டும் பார்த்து எழுதிவிட்டேனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது கடிதத்தை மீண்டும் வாசிக்கும்போது. விஷ்ணுபுரம் மீண்டும் ஒரு பார்வையில் தனிப்பட்ட நபர்களின் கதைகளாகத் தெரிகிறது. மனிதர்களின் வெற்றிகள் வீழ்ச்சிகள் ஆகியவற்றின்கதை

எல்லா கதைகளுமே கொஞ்சம் சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிட்ட வடிவில் உள்ளன. ஒருகதையுமே முழுமையாக சொல்லப்படவில்லை. ஆனால் முழுமையடையாத எந்தக்கதையும் இல்லை. முடிவடையாத கதைகூட எங்கோ ஓர் இடத்தில் முழுமையாகச் சொல்லப்பட்டிருக்கும். அந்த மாயத்தை நினைக்க நினைக்க ஆச்சரியமாகவே இருக்கிறது

சித்திரை ஒரு அழகிய இளம்பெண்ணாக வந்து தன்னை எரித்து அழிந்து தெய்வமாகிறாள். தெய்வத்திலிருந்து பின்னால் சென்ரு பார்த்தால் அந்தக்கதை முழுமையான ஒரு கதையாக இருக்கிறது. அத்துடன் அவள் கொற்றவையாக ஆனாள் என்பதை வைத்துப்பார்த்தால் அவளுடைய தொடக்கம் இன்னும் ஆச்சரியம்

விஷ்ணுபுரத்தின் கதைமாந்தர்கள் self immortalization செய்துகொண்டிருக்கிறார்கள் என்ற எண்ணம் வந்தது. எப்படியோ எல்லாரும் ஒரு தேவத்தன்மையை நோக்கிச் செல்கிறார்கள். அங்கே நடக்கும் வாழ்க்கை அப்படியே புராணமாக ஆகிக்கொண்டே இருக்கிறது

 

ஜெயக்குமார்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 74
அடுத்த கட்டுரைஜெ.எம்.நல்லுசாமிப்பிள்ளை: சைவசித்தாந்த முன்னோடி