அன்புள்ள ஜெமோ
விஷ்ணுபுரம் நாவலை பலமுறை வாசிக்கமுயன்று அப்படியே வைத்திருந்தேன். அதன்பின்னர் அதை வாசிக்க ஆரம்பித்தபோது உங்கள் தளத்திலுள்ள கடிதங்களையும் விஷ்ணுபுரத்திற்கான இணையதளத்தில் உள்ள கடிதங்களையும் வாசித்தேன். மெல்லமெல்ல அதை வாசிப்பதற்கான மனப்பயிற்சி கிடைத்தது
அதை நான் இப்படியாகச் சொல்கிறேன். ஒன்று இதெல்லாம் எங்கே நடக்கிறது, இப்படி நடக்குமா என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. ஒரு கனவுக்குள் எல்லாம் நடக்கலாம். கனவு என்று நினைத்துக்கொண்டால் பிரச்சினை இல்லை
இரண்டு வாசிக்க ஆரம்பித்தபின்னர் மேலே போய்க்கொண்டே இருக்கவேண்டும். ஓரளவு உள்ளே சென்றபின்னர்தான் அதுவரை வாசித்ததைப்பற்றி தொகுத்துக்கொள்ளவேண்டும். ஸ்ரீபாதம் பகுதியைப் பாதிவாசிக்கையில் நமக்கே ஒரு தெளிவு ஏற்படத்தொடங்குவதைக் காணலாம். அதன்பின்னர் கதையின் சிக்கலுக்குள் நாம் சென்றுவிடுவோம்
நம் மனசுக்குள் உள்ள வழக்கமான கதைக்கட்டமைப்புதான் விஷ்ணுபுரம் வாசிக்கத்தடையாக அமைகிறது. அதை மட்டும் கொஞ்சம் suspend செய்து வைத்துக்கொண்டால் போதும் என நினைத்தேன்.
விஷ்ணுபுரத்தின் இரண்டு அம்சங்கள் எனக்கு முக்கியமானவை என்று தோன்றியது. அது இந்திய ஞானமரபை ஒரு ஞானசபை விவாதமாகவும் அதன் மீதான எதிர்வினைகளாகவும் வகுத்துக்கொள்கிறது. ஞானசபை விவாதம் நடந்த ஒரு காலகட்டம். அந்த ஞானம் விழாக்களாக கொண்டாடப்பட்ட ஒரு காலகட்டம். அந்த ஞானம் வெறும் நினைவுகளாக உதிரி உதிரியாகத் தொகுக்கப்பட்ட இன்னொரு காலகட்டம். இந்திய ஞானமரபுக்கே இப்படி மூன்று யுகங்கள் உண்டு என நினைக்கிறேன்
அதேபோல் இந்திய சரித்திரமும் மூன்று காலகட்டங்களாக பிரிந்துள்ளது இதில் விஷ்ணுபுரம் கட்டமைக்கப்படுவது ஒரு காலகட்டம். அதில் பிராமணியம் ஒரு பெரிய சக்தி. அதன்பின் அதை பௌத்தமும் ஜைனமும் அசைக்கின்றன. அது இன்னொரு காலகட்டம். இடிபாடுகளாகவும் நினைவுகளாகவும் பழங்காலம் இருக்க மக்கள் அதை அறியாமல் அதன் மேல் வாழ்கிறார்கள். இது மூன்றாம் காலகட்டம்.
இந்த மூன்றாம் காலகட்டம்தான் இன்றைக்கு. இன்றைக்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் பழங்காலத்தை அறிந்தால்தான் புரிந்துகொள்ளமுடியும். திருவடியாழ்வார் ஏன் மரமல்லி இலையை தலையை வைத்துக்கொள்கிறார் என்று அறிய ஒரு பெரிய மூன்றடுக்கு சரித்திரத்தை அறியவேண்டும். இதைத்தான் விஷ்ணுபுரம் காட்டுகிறது
ஒரு பெரிய நாவல். மடித்து மடித்து வைக்கப்பட்ட நாவல். சொல்லப்போனால் தமிழில் விஷ்ணுபுரம் போல ஒரு multilayered நாவல் வேறு இல்லை. இன்னும் பலமுறை நான் வாசிக்கவேண்டும்
ஜெயக்குமார்
அன்புடன் ஆசிரியருக்கு
ஊட்டி பதிவினை படித்தேன். ஈரோட்டினை விட இந்த சந்திப்பு உங்களுக்கு அதிக நிறைவினை தந்திருக்கும் என நினைக்கிறேன். உடல் தேறி வருகிறது. கொல்லிமலை சந்திப்பு உறுதியானால் வந்துவிடுகிறேன்.
ஸ்ரீபாதம் வரையில் படித்திருக்கிறேன். நிறையவே எழுதத் தோன்றுகிறது. முழுமையாக படித்த பின்பு எழுதலாம் என கட்டுப்படுத்திக் கொள்கிறேன். ஒன்று மட்டும் சொல்லியாக வேண்டும்.
முதன்முறை விஷ்ணுபுரம் படித்தபோது எழுந்த ஒரு கனவு மனநிலை இப்போது வடிந்திருக்கும் என நினைத்தேன். ஆனால் அது அப்படியே தொடர்கிறது. ஒரு மாற்றம் எனில் கதை மாந்தர்களின் மீதான தீர்ப்பு சொல்லும் குணம் இல்லாமலாகிவிட்டது. யார் மீதும் கோபமோ கழிவிரக்கமோ வெறுப்போ மரியாதையோ தோன்றவில்லை.
ஒவ்வொருவரையும் இயக்கும் விசையை உச்சியில் நின்று இம்முறை பார்க்க முடிந்தது. எனினும் நாமதேவர் ராஜகோபுரத்தை விளக்கும் போது மேகங்களில் வியர்த்து நிற்கும் கருஞ்சிற்பங்களும் உஷை மகாபத்மனை காணும் தருணமும் பிரசேனர் கோபுர உச்சியிலிருந்து தத்தளிக்கும் தருணமும் விஷ்ணுபுரத்தை கனவாகவே நிறுத்திவிடுகின்றன. மேகங்களில் மின்னும் ராஜகோபுர கலசங்கள் போலவே விஷ்ணுபுரம் மனதில் மிளிர்கிறது.
நன்றி
அன்புடன்
சுரேஷ்