ஊட்டி புதியவர்கள் சந்திப்பு – கடிதங்கள் – 4

அன்புள்ள ஜெ,

ஊட்டி சந்திப்பிற்கு சில நாட்களுக்கு முன்னர் தான் கொற்றவையை வாசித்திருந்தேன். கண்ணகி நெய்தலில் தன் பயணத்தைத் தொடங்கி நான்கு நிலங்களையும் கடந்து வளர்ந்து மதுரையை எரித்து உயர்ந்த குறிஞ்சி நிலத்தில் ஞானமடைகிறாள்.குறியீடுகள் படிமங்கள் தொன்மங்கள் எல்லாமே எனக்கு கொஞ்சம் குழப்பம் தான். இருந்தாலும் நண்பர்கள் அனைவரும் வெவ்வேறு நிலங்களை கடந்து அவரவர் மதுரையை எரித்து ஊட்டியை அடைந்திருப்பார்கள் என நினைக்கிறேன். இரண்டு நாட்கள் புதிய உலகத்தின் கதவுகள் திறக்கப் பட்டிருக்கிறது. முதல் அடியை உங்கள் கரம் பற்றி எடுத்து வைத்திருக்கிறோம். இதுவரை நூல்களை வாசித்துக் கொண்டிருந்த எங்களை சிந்திப்பதை நோக்கிய பயணத்தில் ஆரம்ப பாடமான விவாதத்தின் முறைமைகளை பற்றி உங்களிடம் நேரடியாக கற்றுக்கொள்ள வாய்ப்பளித்தீர்கள். கடுமையான பயிற்சிக்குப் பின் ஏராளமான பிழைகளை கடந்து நாங்கள் பயின்று கொள்ள வேண்டிய மிக முக்கியமான ஒன்று என்பதை அறிந்து கொண்டேன்.

நீங்கள் முதல் நாள் முழுக்க இது பற்றியே பேசிய போதும் இரண்டாம் நாள் காலை நடை பயணத்தில் அதிகாரத்தை பற்றி நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் போது நீதியைப் பற்றி சம்பந்தமில்லாமல் கேட்டு உங்களிடம் குட்டு வாங்கிக் கொண்ட தருணம் மறக்க முடியாதது. அதன் பின் நீதி இழப்புகளால் அல்ல தார்மீகத்தால் நிலை நாட்டப் படுகிறது என்பதை வெகு நேரம் சிரத்தை எடுத்துக்கொண்டு விளக்கி எனக்கு புரிய வைத்தீர்கள்.எப்போதுமே நூலகத்திற்குள் நுழையும் பொது ஒருவித பதற்றம் ஒட்டிக்கொள்ளும் எங்களை சூழ்ந்திருந்த நூலகத்தில் நான் இதுவரை பெயர்களைக் கூட கேட்டிராத சிந்தனையாளர்களின் படங்களுடன் அவர்கள் உலகுக்கு அளித்த சிந்தனைகள் உறைந்திருக்கும் நூல்கள் நிறைந்திருக்க அதன் நடுவே உங்களுடன் பேசிக்கொண்டிருந்தோம் என்பதை நினைக்கும் போதே இனிய நிகழ்வாக இருக்கிறது.

உங்களின் நகைச்சுவையால் எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டே இருந்தீர்கள். எப்போதும் எங்காவது அலைந்து கொண்டே இருக்கும் மனம் நிகழ்வின் பெரும்பாலான தருணங்களில் இணைந்திருந்தது எனக்கே வியப்பளிக்கும் விஷயம். சில நேரங்களில் நீங்கள் மிக நெருக்கமாக இருப்பதாகவும் சில நேரங்களில் நான் அறிந்திராத தொலைவில் இருப்பதாகவும் தோன்றிக் கொண்டே இருந்தது, இருக்கிறது. கற்றலின் இனிமையை, அது தரும் கனவுகளின் உலகத்தை, கதைகளை கவிதைகளை நோக்கிய பயணத்தில் இது இன்னும் தீவிரத்தையும் வேகத்தையும் தரும் மிக முக்கிய நிகழ்வாக இருந்தது.

ஊட்டியின் குளிர், மலைகளின் அமைதி, எங்கும் நிறைந்த பசுமை வானைத்தொடும் உயர் மரங்கள், இரு பெரும் ஞானிகள் வாழ்ந்த குருகுலம், குரு நித்யா கடைசியாக இந்த உலகத்திற்கு விட்டுச் சென்ற உடல் அடக்கமான சமாதி. அவருக்காக வெண்மையும் ஊதாவுமாக அன்று மலர்ந்த பூக்கள், இனிய நண்பர்கள், ஒலித்துக்கொண்டே இருந்த உங்கள் வார்த்தைகள்
என இனிய நிகழ்வாக என் நினைவெனும் புத்தகத்தில் பொன் எழுத்துக்களால் நிறைந்திருக்கும்.

இந்த நிகழ்வினை மிகுந்த சிரத்தையோடு ஒருங்கிணைத்த திரு.விஜய சூரியன், திரு.நிர்மால்யா, மற்றும் திரு.மீனா அவர்களுக்கும் நன்றி.

மிக மிக சாதாரண மனிதர்போல் இருந்து எங்களுக்காக அனைத்தையும் ஏற்பாடு செய்திருந்த நிர்மால்யா அவர்கள் தான் உங்களை குருவிடம் அழைத்துச் சென்றவர் என்று நீங்கள் சொல்லிய போது அவர் வேறெங்கோ உயரத்திற்குச் சென்று விட்டார். அமைப்பாளர்களான விஜய் சூரியன் அவர்களுக்கும், “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிதுவயிற்றுக்கும் ஈயப் படும்” எனும் வள்ளுவரின் குறளை இடங்கையால் புறந்தள்ளி வேளாவேளைக்கு காலந்தவறாமல் நினைவூட்டி உணவிட்டு கனிவோடு கவனித்துக்கொண்ட மீனா அவர்களுக்கும் மேலதிக நன்றிகள்.

அன்புடன்
விஷ்ணு

 

அன்புள்ள விஷ்ணு

நன்றி

சந்திப்பு என்பது அடிப்படையில் ஒரே நோக்கம் கொண்டது, இலக்கியப்பரிமாற்றம் என்பதற்கு அப்பால் ஒவ்வொருவரும் ஒரு சிறு நண்பர்குழுவை உருவாக்கிக்கொள்வது. அதனூடாக ஒரு நீண்ட உரையாடலைத் தொடங்குவது, அது நிகழுமென்றால் மகிழ்வேன்.

ஜெ

***

அன்புள்ள ஜெ,

ஈரோடு சந்திப்பு பற்றிய பதிவை படித்தவுடன் என்னிடம் இருந்த தயக்கம் மறைந்து இயல்பான மன நிலையிலேயே நான் ஊட்டி வந்தேன்.

முதல் நாள் குரு நித்யாவுடனும் உங்களுக்குமான உறவு, மற்றும் விவாதங்களை எப்படி அணுக வேண்டும், எப்படி விவாதங்கள் விதண்டாவாதம் ஆக்கப்படுகிறது என்ற விளக்கம் எங்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்தின.

நாங்கள் ஒவ்வொரு நிமிடத்தையும் உபயோகப்படுத்தி கொண்டு மதிய உணவு, தேனீர் குடிக்கும் போதும், நடை பயணத்தின் போதும் தங்களை சுற்றி ஒரு musical chair போல ஆடிக்கொண்டிருந்தோம் :)

இரண்டாம் நாள் கதை,கவிதை மற்றும் கட்டுரை விவாதங்கள் வாசிப்பில்/ஆக்கத்தில் எங்கள் அனைவருக்கும் புதிய திறப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்த, உணவு மற்றும் தங்கும் இட ஏற்பாடுகள் செய்த மீனாம்பிகை, நிர்மால்யா மற்றும் விஜயசூரியனுக்கு என் நன்றிகள். எந்தவித எதிர் பார்ப்புமன்றி, எந்தவித கட்டணமும் புதியவர்களுக்கு இல்லாமல், உங்கள் நேரத்தை/பணத்தை செலவழித்து, இலக்கியத்தை இயக்கமாக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு கொண்டிருக்கும் உங்களுக்கும் என் கோடான கோடி நன்றிகள்.

நீங்கள் போட்ட விதைகள் செடிகளாகி, மரமாகி வனமாகும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

என்றும் அன்புடன்

பாலசுப்ரமணியம்

***

அன்புள்ள பாலசுப்ரமணியம்

நான் இன்னமும் ஊட்டி மனநிலையிலேயே இருக்கிறேன். ஊட்டி குருவின் இடம். மனதில் நினைவுகளாக வளர்ந்துகொண்டே இருப்பவர். என் இயல்பில் காலம்செல்லச்செல்ல அவரது பிம்பத்தை வளர்த்துக்கொண்டே இருக்கிறேனே ஒழிய இன்னமும்கூட ஒரு கறாரான மதிப்பீட்டை அவரைப்பற்றி உருவாக்கிக்கொள்ளவில்லை. மதிப்பீட்டைவிட இந்த பற்றே என்னை மேலே கொண்டுசெல்கிறது என உணர்கிறேன்

ஏதோ ஒருவகையில் அவரது இருப்பை நண்பர்களும் உணர்ந்திருப்பார்கள் என நினைக்கிறேன்

ஜெ

***

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
அடுத்த கட்டுரைஉள்ளும் புறமும் -மௌனகுரு