ஆட்கொள்ளல்

இன்று ஓர் உரை தயாரிக்க அசோகமித்திரனின் காலமும் ஐந்து குழந்தைகளும் என்ற கதையை தேடி வீட்டு நூலக அடுக்குகளுக்குள் சென்றேன். அசோகமித்திரனின் மொத்தக் கதைகள், நர்மதா பதிப்பக வெளியீடு, இருந்தது. ஆனால் இரண்டாம் தொகுதி அது. முதல் தொகுதியை என் மாமனாருக்கு வாசிக்கக் கொடுத்து அவர் திரும்பித் தரவில்லை என்பது ஞாபகம் வந்தது. இரண்டாம் தொகுதியில் அந்தக்கதை ஒருவேளை இருக்கிறதா என்று பார்த்தேன். கதைகளின் தலைப்புகள் வழியாக கண்கள் தாவிச்சென்றபோது மனதுக்குள் ஒரு புரளல் நிகழ்ந்தது. நினைவுகள். கண்ணீர் மல்கச்செய்யும் ஓர் அக எழுச்சி.

ஓர் உலக இலக்கியமேதையை அவர் எழுதிய மொழியிலேயே வாசிக்க நேர்வதென்பது பேரனுபவம். எனக்கு அந்த அனுபவத்தை அளித்த முதல் படைப்பாளி அசோகமித்திரன். புதுமைப்பித்தனைக்கூட நான் முழுமையாக வாசித்தது அதற்குப் பின்னால்தான். 1984 ல் சிலநாட்கள் நான் சென்னையில் ஓர் அச்சகத்தில் வேலைபார்த்தபோது அங்கிருந்த ஒருவர்தான் அசோகமித்திரனின் இன்று என்ற சிறிய நாவலை எனக்கு அளித்தார். அப்போது நெருக்கடிநிலை குறித்த விவாதங்கள் பரவலாக இருந்த காலகட்டம். நெருக்கடிநிலை குறித்த ஒரு சித்திரம் இந்நாவலில் இருக்கிறது என்று சொல்லி கொடுத்தார்.

நான் இருபத்திரண்டு வயது இளைஞன் அப்போது. ஏற்கனவே நிறைய வாசிக்க ஆரம்பித்திருந்தவன். தமிழின் வணிக இலக்கியங்கள் அனைத்தையுமே ஒருவகையில் தாண்டிவந்துவிட்டிருந்தேன். மலையாளத்தின் முக்கியமான எழுத்தாளர்களின் ஆக்கங்களில் உலவியவன். ஆங்கிலம் வழியாகவும், மலையாள மொழியாக்கங்கள் வழியாகவும் உலக இலக்கியமேதைகள் பரை அறிந்தவன். ஆனால் தமிழில் நவீன இலக்கியம் என ஒன்றிருப்பதையே நான் அறிந்ததில்லை. அப்போது நான் அறிந்தவரை பொருட்படுத்தத் தக்க இரு தமிழ் எழுத்தாளர்கள் ஜெயகாந்தனும் தி.ஜானகிராமனும்தான்.

அந்நாவலை நான் பெரம்பூர் ரயில்நிலையத்தில் வைத்து வாசித்தேன். மிக எளிய நடையில் சர்வசாதாரணமாக நிகழ்ச்சிகளை மட்டும் சொல்லிச் செல்லும் கதை. உதிரிக் கதாபாத்திரங்களும் உதிரி நிகழ்ச்சிகளுமாகச் செல்லும் நூறுபக்க நாவல் ‘அர்த்தம், நாம் தேடிச்செல்லச் செல்ல அது நழுவிக்கொண்டே இருக்கிறது’ என்ற வரியில் சட்டென்று முடிந்தது. நெருக்கடிநிலைக்கு எதிராக போராடி சிறை சென்று அடிபட்டு மீண்ட இருவர் சந்தித்துக்கொள்ளும் தருணம். நெருக்கடிநிலை முடிந்ததுமே அந்த போராட்டம் அர்த்தமிழந்து வெறும் நினைவாக மாறிவிடுகிறது. சலிப்பு வந்து பீடிக்கிறது.

‘அடைதலின் பொருளின்மை’ என்று அசோகமித்திரன் சொல்லும் அந்த மாற்றமில்லா இயற்கைவிதி. அந்த நீங்காத சலிப்பை வெல்லவே போராட்டத்தில் குதித்தோமா என்ற சஞ்சலம் ஏற்படுகிறது. அவர்களில் ஒருவன் சொல்கிறான் ‘ துரத்தப் படும் போதுதான் சந்தோஷமாக இருக்க முடியும்போல’ எதற்கும் பொருளில்லை என்று அவன் சொல்ல இவன் சொல்லும் கடைசி வரிதான் நாவலை ஒரு ஆக்கமாக தொகுக்கிறது. அதுவரைக்கும் அது தனிக்கதைகள்தான்.

அன்று ஆரம்பித்தது அசோகமித்திரனுடன் என் உறவு. அவர் எழுதிய நூல்களை தேடித் தேடி பணம் கொடுத்து வாங்கினேன். ’வாழ்விலே ஒருமுறை’ ’விமோசனம் விடுதலை’ ’காலமும் ஐந்து குழந்தைகளும்’ ’முறைப்பெண்’ ’அப்பாவின் சினேகிதர்’ போன்ற சிறுகதைத்தொகுதிகள். ’பதினெட்டாவது அட்சக்கோடு’, ’தண்ணீர்’, ’கரைந்தநிழல்கள்’ ‘ஒற்றன்’ போன்ற நாவல்கள். அவற்றின் அட்டைகள் அச்சுவடிவம் எல்லாம் நினைவில் இருக்கின்றன.

எனக்கு அவரது நாவல்கள் பெரிதாகப் படவில்லை, அப்போதே நான் நாவலைப்பற்றிய எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொண்டிருந்தேன். அவரது சிறுகதைகள் எனக்கு ஒன்றைச் சொல்லின. உலக இலக்கிய மரபுகளில் நிகழ்ந்துள்ள மிகச்சிறந்த சிறுகதைகளுக்கு நிகரானவை அவை. இன்று அந்த எண்ணத்தை என்னால் உலக இலக்கிய மரபையே முன்னிறுத்தி எவருடனும் விவாதிக்க முடியும்.

சென்னையில் பெரம்பூர் ரயில்நிலையத்திலும் பின்னர் காசர்கோட்டில் மார்க்ஸியத் தொழிற்சங்கத்தின் கம்யூனில் என் கட்டிலிலும் சந்திரகிரி ஆற்றின் கரையின் மணல்மேடுகளிலும் வைத்து நான் மீண்டும் மீண்டும் வாசித்த கதைகள். ஒவ்வொரு வரியும் என் நினைவுக்குள் ஓடுகின்றன. கதைகளின் தலைப்புகளே மொத்தக் கதையையும் முன்னால் கொண்டுவந்து சேர்க்கின்றன. கதாபாத்திரங்கள் உணர்ச்சி நிறைந்த முகங்களுடன் வந்து புன்னகைசெய்து மீள்கிறார்கள். நாட்கணக்காக இந்த மனிதர்களுடன் நான் வாழ்ந்திருக்கிறேன்.

கதை என்ற என் அகச்சித்திரத்தையே உடைத்து வார்த்தார் அசோகமித்திரன். ஒருவன் ஒரு ஓட்டலில் அமர்ந்துகொண்டு காந்தியின் படத்தைக் கண்டு காந்தியைப்பற்றி யோசிக்கிறான். ஒருவன் நூலகத்தில் அமர்ந்துகொண்டு அங்கே நாளிதழ் வாசிக்க வருபவர்களைப்பற்றி யோசிக்கிறான். நூலகத்துக்குச் செல்லும் வழியில் ஒரு கிரிக்கெட்டை பார்க்க நின்றிருக்கும்போது ஒருவனின் எண்ணங்கள் தன்பாட்டுக்கு பிரிந்து பிரிந்து செல்கின்றன.

ஆனால் எவையுமே வெறும் உத்திகள் அல்ல. அவை வாழ்க்கையின் தருணங்கள். அவை வாழ்க்கை என்பதனாலேயே அந்த உத்திகளை அவர்தான் தமிழில் முதன்முதலாக பயன்படுத்தினார் என எவருமே அறியவில்லை. பின்னர் வடிவமற்ற, நேர்கோடற்ற கதைகளை முயன்ற எவருமே முன்னோடியான அவரை உணர்ந்திருக்கவில்லை. அவர்கள் எவரும் அவரது நேர்த்தியை அடையவும் இல்லை.

சட்டென்று ஒரு கதையை பிரித்தேன்.’பிப்லப் சௌதுரிக்கு ஒரு கடன் மனு’ என்ன கதை என ஒருவர் கேட்டால் சொல்வதே கடினம். பிப்லப் சௌதுரி ஒரு ராட்சத உடல்காரன். ஏதோ ஒரு நிறுவத்தின் விற்பனை பிரதிநிதி. அதில் வருடவருமானமே 200 ரூபாய். கூடுதலாக ஸ்டுடியோவில் நடிகன். வருடத்துக்கு ஒரு படம். அதில் பூதமாக வேடம். சும்மா நிற்கும் வேடம்தான். உடம்பெல்லாம் கரிபூசி நிற்கவேண்டும்.

கடன்மனு எழுதுவதில் ராசியானவன் என பெயர் பெற்ற கதை சொல்லியிடம் வருகிறான் பிப்லப் சௌதுரி . அவன் தன்னை அழைத்தபோதுதான் அவனும் தன்னைப்போல தன்னை ஒருமையில்தான் நினைத்திருக்கிறான் என்று கதைசொல்லி அறிகிறான். மனுவில் சம்பளத்தில் கடனை பிடித்துக்கொள்ளும்படி எழுதியதை அப்படி எழுத வேண்டாம் என சிரித்தபடி சொல்கிறான் சௌதுரி. திரும்ப பிடிப்பதை பற்றிச் சொல்ல வேண்டாம் என்கிறான்

ஏன்? அவன் படநிறுவனஅதிபருக்கு தெரிந்தவன். அவனுடைய அப்பா ஒரு குதிரை ரேஸ் ஜாக்கி. பட அதிபர் ரேஸ் பிரியர். அவ்வாறு அவர்களுக்குள் நெருக்கம். பிப்லப் சௌதுரி அப்பாவுடன் ஊரூராகச் சென்று பெரும் ஓட்டல்களில் தங்கி தன் இளமையை கழிக்கிறான். அப்பாவுக்கு பூட்ஸ் பாலீஷ் செய்வது குதிரைகளை கொண்டுவருவது போன்ற வேலைகள். பள்ளிக்கே செல்லவில்லை. அப்பா நாளெல்லாம் சிகரெட்டும் பீருமாக பேசிக்கொண்டிருக்க அவன் சினிமாக்களுக்கு செல்கிறான். பிளாசா அரங்கின் மென்மையான தோலிருக்கைகளின் மணம் அவன் இளமையின் நினைவாக இருக்கிறது

அவன் அப்பா கட்டிய மாபெரும் பங்களா பாழடைந்து இருக்கிறது. அதில்தான் பிப்லப்பும் அவன் சகோதரர்களும் வசிக்கிறார்கள். பிப்லப்புக்கு அவன் பங்காக கிடைத்தது கூடம் மட்டும். அது வீடே இல்லை. கூரையிட்ட முற்றம்தான். அதில் உயரமான சன்னல்கள் வழியாக மழைச்சாரல் உள்ளே வரும். தரையில் ஈரம் படர்ந்திருக்கும். தன் மூன்று பெண்களுடன் அவன் அங்கேதான் தங்கியிருக்கிறான்

‘குழந்தைகள் ரெண்டு செத்துப்போச்சு சார். பால் இல்லை. மருந்து வாங்க பணம் இல்லை’ என்கிறான் பிப்லப். தன் மனைவியைப்பற்றி அடிக்கடி ‘அவ ரொம்ப நல்லவ’ என்கிறான். அந்நிலைமையில் வாழ்பவனுக்கு நல்ல மனைவி இருக்க கூடாது என்கிறான் கதைசொல்லி. பின்பு அவன் இருக்கும் வீடு பூட்டப்பட்டிருக்கிறது. நீதிமன்ற வழக்கு. வீடு பாம்புகள் நிறைந்து பாழடைகிறது. கதைசொல்லி பின் அவனை காணவேயில்லை.

முதல்முறை பிப்லப்பை காணச்சென்று அவன் இல்லாமல் போக கதைசொல்லி செயிண்ட் தாமஸ் மௌண்டுக்கு வந்து வேடிக்கை பார்க்கிறான். குறிப்பாக பார்க்க ஏதுமில்லை என்பதே ஒரு உற்சாகத்தை அளிக்கிறது. ‘என் மன அவசங்களிலெல்லாம் எனக்கு ஆறுதல் அளிக்கும் இடம்’ என அவன் அதைச் சொல்கிறான். அன்றும் குழந்தைகளுடன் அங்கே வருகிறான். புனித தாமஸ் தவம்செய்த இடம் அது. ஒரு சுற்றுலா மையமாக இருக்கிறது.

‘அன்று இந்த இடம் பாம்பும்பல்லியும் அடர்ந்த இடமாக இருந்திருக்கும். இங்கே வந்து எதை எண்ணி எதை எதிர்பார்த்து ஒருவர் தவம் செய்திருக்க முடியும்? மனிதர்களிடம் எதை நம்பினார் அவர்?’ என்கிறது அவன் மனம். அன்று தாமஸ் மௌண்ட் எந்த மன ஆறுதலையும் அளிக்கவில்லை. பிப்லப் சௌதுரியின் நினைவாகவே இருக்கிறது ‘இனி நான் இங்கே வரப்போவதில்லை’ ஆம் அதுவும் துயரமான ஒரு நினைவாக ஆகிவிட்டிருக்கிறது. கடலில் தீவு கரைவது போல அந்த ஆறுதல் மையமும் நினைவின் நிம்மதியில்லா அலைக்கொந்தளிப்புகளுக்குள் மூழ்கிவிட்டது.

என்ன ஒருகதை!. நிம்மதியின்மையை சொல்லால் ஆக்கினால் இப்படி இருக்கும். அற்பமான அபத்தமான வாழ்க்கையின் மீது பரிதவித்து பரிதவித்துப் பறக்கிறது நினைவு. மீண்டும் மீண்டும் கதைகள். இந்திராவுக்கு ’வீணை கற்றுக்கொள்ள வேண்டும்’ ‘மாறுதல்’ .சாதாரண மனிதர்கள் சாதாரணமாக வாழ்ந்து சர்வசாதாரணமாக மறைவதன் மகத்தான, பிரம்மாண்டமான அர்த்தமின்மை.

அன்று நான் அசாதாரணங்களில் ஆழ்ந்திருந்தேன். தத்துவங்களில் இலட்சியங்களில். யோகம் பயின்று கொண்டிருந்தேன். என் வினாக்களே வேறு. நான் அசாதாரணங்களின் எழுத்தாளன். உச்சங்களின், தீவிரங்களின் படைப்பாளி. இந்த சர்வசாதாரண புனைவுலகம் என்னை அப்படி ஆட்கொண்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று இப்போது படுகிறது. அது ஒரு பிரம்மாண்டமான ஆடல் அல்லவா?

இந்த ஒவ்வொரு கதையிலும் என்னுடைய குருதிச்சின்னம் இருக்கிறது. நான் வந்த பாதை இருக்கிறது. மானசீகமாக அந்தப்பாதங்களை இந்த இரவில் தொட்டு வணங்குகிறேன்.

அசோகமித்திரன்- அழியாச்சுடர்கள்


மறுபிரசுரம்- முதற்பிரசுரம் Oct 7, 2010

முந்தைய கட்டுரைநெ.து.சுந்தரவடிவேலு
அடுத்த கட்டுரைதன்மீட்சி நூல்கொடைஇயக்கம்