தங்கள் கடிதம் கண்டேன் மகிழ்ச்சி. உடன் பதிலிட முடியவில்லை.மன்னிக்க வேண்டும் சென்ற மாதம் 29.1.2016 அன்று கொழும்பு ஆசிறி சேர்ஜிகல் பிரத்தியேக வைத்திய சாலையில் எனக்கு சிறு நீரகப் பிரச்சனை சம்பந்தமாக ஒரு சத்திர சிகிச்சை நடை பெற்றது. இப்போது வீடு திரும்பியுள்ளேன்.
இரண்டு கிழமைகள் ஓய்வு அவசியம் எனவும் பிரயாணங்கள் கூடாது எனவும் டாக்டர் உத்தரவிட்டதனால் கொழும்பில் நின்று ஓய்வு எடுக்கிறேன்
வைத்தியசாலை அனுபவங்களும் சத்திர சிகிச்சை அனுபவங்களும் அலாதியானவை.
17 வருடங்களுக்கு முன்னர் 1999 இல் திறந்த இருதய சிகிச்சைக்காக அஞ்சியோகிராம் செய்தபோது சத்திர சிகிச்சைக்கு முன்னர் இருதய அடைப்புகளை அறிய ஒரு சிறிய கமெராவை உடலுக்குள் அனுப்பி எனது இருதயத்தைப் படம் பிடித்தார்கள் அச்சமயம் எனது இருதயத்தை திரையில் பார்த்து வியப்படைந்தேன். இருதய சிகிச்சையைப் பார்க்க முடியவில்லை முழு மயக்க நிலையில் இருந்ததனால்.
8 வருடங்களுக்கு முன்னர் 2008 இல் எனக்கு இரத்தப்போக்கு ஏற்பட்டு வயிற்றில் நோவு ஏற்பட்டபோது என்டோஸ்கொபி எனக் கூறி எனது வாய்க்குள்ளால் ஒரு கமெராவை அனுப்பி என இரப்பையையும் குடலையும் படம் எடுத்தனர். இன்னொரு ஆளாக நின்று அதனையும் பார்த்து வியப்படைந்தேன் 7 வருடங்களுக்கு முன்னர் 2009 இல் மூல வருத்தம் எற்பட்டபோது மல வாசல் வழியாக ஒரு கமெரா அனுப்பிமலக்குடலின் கீழ்ப்பாகத்தைப் படம் பிடித்தனர். என் கீழ் உட்புறத்தைப் பார்த்து வியப்படைந்தேன்
இப்போது ’2016 இல் சிறுநீர்ப் பிரச்ச்சனை ஏற்பட்டபோது சலவாசல் வழியாகக் கமெரா அனுப்பி சலம் வரும் வழியைப் படம் பிடித்ததுடன் சத்திர சிகிச்சையும் செய்தனர். இச்சத்திர சிகிச்சை 29.1.2016 அன்று கொழும்பு ஆசிறி சேர்ஜிகல் பிரத்தியேக வைத்திய சாலையில் நடைபெற்றது
28.1.2016 காலை வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டேன். முழுநாளும் பல பரிசோதனைகள். ஏற்கனவே ஒரு பல பரிசோதனைகள் செய்துமிருந்தனர். 29.1.2016 அன்று இரவு சத்திர சிகிச்சை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். துணை சித்திரலேகா வழமைபோல கூடவே நின்றிருந்தார். நெருக்கமான நண்பர்கள் சிலர் வந்திருந்தனர். கலகலப்பாக அனுப்பி வைத்தனர்.
சத்திர சிகிச்சைக்கான உடை தரப்பட்டது. அணிந்து கொண்டேன், படுக்கையில் கிடத்தினர். நீல நிறத்தில் துணியால் தலைக்கவசம் கால்கவசம் என்பன போடப்பட்டன. ஆபரேசன் அறைக்கு வண்டியில் கொண்டு சென்றனர்.
மயக்க மருந்து தரும் ஒரு பெண் டாக்டர் என்னிடம் வந்து ஆங்கிலத்தில் “பேராசிரியரே வாழ்த்துக்கள்” என்றார். ஏற்கனவே என் வலது கரத்தில் பேராசிரியர் மௌனகுரு என பட்டிட்டப்பட்டிருந்தது. நானும் எனது நன்றிகளைக் கூறினேன். “இன்று பேராசிரியர்கள் தினம்” என்று சிரித்துக்கொண்டு கூறினார்
சற்று முன்னர்தான் ஓய்வு பெற்ற நடனத்துறை சார்ந்த சிங்களப் பேராசிரியருக்கு இதே சத்திர சிகிச்சை நடை பெற்றிருந்தது. “நீங்கள் எத்துறையில் பேராசிரியர்” என வினவினார். “நாடகத் துறை”என்றேன். “,ஓ, இன்று கலைத்துறைக்காரர்களுக்கான சத்திர சிகிச்சை” எனக் கூறிச் சிரித்தார்
“நீங்கள் எல்லாம் எங்கள் நாட்டின் சொத்துக்கள் .உங்களை நாங்கள் பேணி பாதுகாப்போம்.அது எமது கடமை” என்றார். “அப்படியாயின் இலவசமாக இதனச் செய்யலாமே” என்று உதடு வரை வந்த வார்த்தைகளை அடக்கிக் கொண்டேன்
பிரதம சத்திர சிகிச்சை நிபுணரான டாக்டரும் ஒரு பேராசிரியரே. 3 மாதகாலம் தொடர்ந்து அவரிடம் சென்று வந்தமையினால் நெருக்கமாக உரையாடும் நண்பராக மாறியிருந்தார் பேராசிரியர்களின் நாள் என அந்தப் பெண் வைத்தியர் கூறியது ஒரு வகையில் சரிதான்
இம்முறை இடுப்பின் பின் பக்கம் முள்ளம்தண்டில் நோகாமல் ஒரு இஞ்செக்சன் போட்டனர். உடலின் கீழ்ப்பாகம் விறைத்துவிடமேல் பாகம் செயற் பட்டது
அறையில் அதிக குளிரானமையினால் என் உடலை நன்கு போர்த்தி ஒரு வெப்பமூட்டியும் பொருத்தி விட்டனர். இதமாக இருந்தது. ஆப்பரேசன் நடைபெறுகையில் விழித்திருந்தேன். பக்கத்திலே ஒரு கம்யூட்டர் .திரையில் பல வயர்கள் பொருத்த்ப்பட்டு, நடக்கும் ஆப்ரேசனை சிகிச்சை செய்யும் டாக்டர் பார்க்க ஒழுங்குகள் செய்யப்படிருந்தன
என்னொரு உதவியாளரான டாக்டர் சிரித்தபடி என்னை நோக்கி “தைரியம் இருந்தால் உங்கள் ஆப்பரேசனை நீங்களே பார்க்கலாம்” என்று கூறினர்
கட்டிலில் படுத்த படி ஒரு thriller TV Show பார்ப்பதுபோல எனது ஆப்பரேசனை யாருக்கோ நடக்கும் ஆப்பரேசன் போல புற நிலை நின்று பார்த்தேன்.
எனக்குப் பெரு வியப்பேற்படுத்திய கணங்கள் அவை ஒரு High way பாதையில் வளர்ந்திருக்கும் அனாவசிய புற்களைச் செதுக்கிரோட்டைக் கிளீன் பண்ண, புல் டோஸர் கொண்டு சமப்படுத்தி வாகனங்கள் சொகுசாகப் பயணிக்க சொகுசான ஒரு ரோட்டைப் போடுவது போன்ற ஒரு காட்சிக் கோலத்தை எனக்கு அது தந்தது
மருத்துவ அதிசயங்களில் ஒன்றாக எனக்கு அது தெரிந்தது. மனித சாதனையினை, மானுடத்தின் அறிவின் வளர்ச்சியை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பு அது. அனுபவங்களின் திரட்சிதானே வாழ்க்கை .எனது 72 வயதுக்குள் நான் பல அனுபவங்களை பெற்று விட்டேன்.
மறுநாள் உடலின் புறத்தே பல அனுபவங்கள் உடலின் அகத்தே பல அனுபவங்கள் ஒவ்வொரு அனுபவத்திலும் கற்ற படியே வாழ்க்கை ஓடுகிறது.
வள்ளுவர் சொன்னார் ”சாகும் வரைக்கும் கற்கலாம்” என்று ஆம் சாகும் வரையும் நாம் கற்கிறோம். கற்றுக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலே கற்றுக் கொண்டிருக்கிறோம் வாழ்வின் அற்புதங்களுள் இதுவும் ஒன்று
என் உடலின் வெளிப்பகுதிகளைத் தரிசித்த நான் இப்போது உட்பகுதிகளையும் தரிசிக்கிறேன் உடலைக் கருவியாக் கொண்டுதானே அகத்தையும், புறத்தையும் அறிகிறோம்.
அன்புடன்
மௌனகுரு
அன்புக்கும் மதிப்புக்கும் உரிய மௌனகுரு அவர்களுக்கு,
மன்னிக்கவும் சற்றுத்தாமதமாக மின்னஞ்சலைப்பார்த்தேன். நலமாக இருக்கிறீர்கள் என்று அறிந்து மகிழ்ச்சி. அறிவுஜீவி என்பவன் தன் உடலை ஒவ்வொருநாளும் கவனிப்பவன் என காந்தியின் ஒருவரியை முன்பு வாசித்தபோது ஆச்சரியமும் சிறு சலிப்பும் இருந்தது. உடல் எவ்வகையிலும் முக்கியமல்ல என்றும் உள்வேகமே நான் என்றும் நம்பிய நாட்கள்.
ஆனால் பின்னர் மெல்ல மெல்ல அறிந்து கொண்டேன், உடல் என்னும் அற்புதத்தைப்பற்றி. ஒருநாள் தூக்கம் தவறினால் படைப்பூக்கம் அழிவதை, ஒரு நல்ல தூக்கம் புதிய எண்ணங்களை உருவாக்குவதைக் கண்டபோது இவையனைத்தும் உடலின் மாயங்கள் என்றே தோன்றியது
உடலாகி இங்குவந்து நின்றிருப்பது நாம் அறியாத பிரபஞ்சப் பெருவெளியேதான் என்று அறிவதே ஒரு வகையில் அறிதலின் தொடக்கம். அண்டத்திலுள்ளது பிண்டத்திலும் என சாதாரணமாக நம் மூத்தோர் சொல்லிவிடுவதுண்டு
உடல்நலம் பேணுக. இதுவும் ஒரு நல்வாய்ப்பே
ஜெ