நாளை 3-10-2010 அன்று மாலை அரங்கில் நான் பேசவிருக்கிறேன். நூல் வெளியீட்டு விழா. மலையாள எழுத்தாளர் மதுபால் நெடுங்காலமாக திரைப்படங்களில் பணியாற்றியவர். சிறுவேடங்களில் நடித்துமிருக்கிறார். அவர் இயக்கிய தலப்பாவு என்ற படம் விருதுகள் பெற்றது. நக்சலைட் இயக்கத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரை மேலதிகாரிகளின் வற்புறுத்தலுக்கு இணங்க செயற்கை மோதலில் கொலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டு அதைச்செய்ய நேர்ந்த போலீஸ்காரர் ஒருவரின் பிற்கால வாழ்க்கையின் தீராத துயரங்களையும் வாழ்வின் இறுதியில் அவர் தன் பாவங்களை அறிக்கையிட்டு குற்றவுணர்ச்சியில் இருந்து மீள்வதையும் சித்தரிக்கும் இப்படம் உண்மைச்சம்பவங்களின் அடிப்படையில் உருவானது
மதுபால் குறிப்பிடத்தக்க சிறுகதை ஆசிரியர். வெற்றிகரமான திரைக்கதைகளும் எழுதியிருக்கிறார். ஆனால் தான் இயக்கும் படத்துக்கு இன்னொருவரை எழுதவைப்பது கேரள வழக்கம். தலப்பாவு பாபு ஜனர்தனனால் எழுதப்பட்டது. அடுத்தபடம் நான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மதுபாலின் அனைத்து சிறுகதைகளையும் தொகுத்து மதுபாலின்றெ சிறுகதகள் என்ற பேரில் மாத்ருபூமி வெளியிடுகிறது. அந்நூலை நான் வெளியிட்டு உரையாற்றுகிறேன்
இடம் சந்திரசேகரன்நாயர் ஸ்டேடியம், பாளையம்
நேரம் மாலை ஐந்து மணி