ஜெவை சந்தித்ததால் இழந்தது ஒரு சோப்பு டப்பா, துண்டு மற்றும் அன்டர்வேர் (அதை அடக்கம் செய்தவர்களுக்கு நன்றி கூற கடைமைபட்டுள்ளேன்). பெற்றது சில திட்டுக்கள், வாழ்க்கையின் உன்னத நிமிடங்கள், நிறைய சந்தோசம், இலக்கியம், அரசியல், கேளிக்கை இன்னும் பல. ஒருவித பயம் காரணமாகவே இந்த இன்னும் பல என்ற வார்த்தையை பள்ளியிலிருந்து பயண்படுத்துகிறேன். நானும் எனது நன்பர்களும் அப்துல் கலாம் அவர்களை சந்திக்கலாம் என முடிவெடுத்து கடந்த வருடம் ஜுலை முப்பதாம் தேதி அவரது ஊருக்கு சென்றோம். அவரை கண்டதும் கண்கள் கலங்கிவிட்டது, ஒருவித வெறுமை உணர்வுக்கு ஆளானோம். உடனே நாங்கள் ஒரு தீர்மானத்திற்க்கு வந்தோம். யார்யாரையெல்லாம் கொண்டாடுகிறோமோ அவர்களை சந்திப்பது என்று. அந்த வரிசையில் முதலில் ஜெ இருந்தார். அதை நண்பர்களும் சத்தியமாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.
‘நண்பர்களே!’ என அழைப்பது இல்லை இல்லை வரவேற்பதும், அல்ல என மறுதளிப்பதுமென ஜெவின் பேச்சுக்கள் மனதிலே ஓடியது. கிரியை நான் ஜெ என்றே ஊகித்ததும், அவருக்கு ஒரு பிம்பத்தை என்னுள்ளே தந்திருந்தது. இரயிலிலிருந்து அவசரமாய் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்க்கு நுழையும் போது ஜெவின் குரல் கேட்டது. நவீன இலக்கியத்தின் அறிமுகம் கிட்டி காட்டுக்குள்ளே சென்றுவிட்டேன். காட்டை சுற்றி பார்க்கும் போதுதான் தெரிந்தது அது வளருமென்று. நாளுக்கு நாள் அது விரிந்து கொண்டே செல்கிறது அகத்திலும், புறத்திலும்.
சரி ஊர் பக்கம் போய் பாக்கலாம் என்று முடிவெடுத்து விஷ்ணுபுரம் போகலானேன். காட்டிலே இருந்து பழகி, ஊருக்குள் செல்வது இயலாத காரியமென்றே தோன்றிற்று.வழியில் அறமுன்னு சிற்றூர் கண்டு, கொஞ்ச நாள் வசித்து, மீண்டும் பயணப்பட்டேன். ஜெவின் குரல் அந்தரங்கமாக என்னுள்ளே ஒலித்துக்கொண்டேயிருந்தது. வாசலில் தலைப்பட்ட என்னை வரவேற்றார்கள். என்னுள்ளே ஒலித்த கற்பனைக் குரலும், வெளியே ஒலித்த நிஜக்குரலுமாய் ஜெ. மனம் ஊசலாடியது.
மதமும் உலக வரலாறும் பிண்ணி அவரது வாயிலிருந்து கொட்டியது. திடுமென கோபம் கொண்டு சபை விவாதத்தை பற்றி விளக்கினார். விவாதம் கருப்பொருளிருந்து விலகிவிட்டதென்பது அவரது கோபம். ஆங்கில நாவலில் ஆரம்பித்து ஆங்கில நாவலிலே வலம் வந்தது விவாதம். நல்லவேளை சாப்பாடும் வந்தது. ஓர் எழுத்தாளனை சந்தித்து அவரது படைப்பைப் பற்றி மிக குறைவாக பேசியது ஒரு மனக்குறையே.
சாப்பிட்டு முடித்ததும் கட்டுரை படிக்க கிட்டியது. ஒன்றாம் வகுப்பிலிருந்து படிக்கிறோம், இன்னும் எப்படி படிப்பதென்று தெரியவில்லை. எப்படி படிப்பதென்றும், கவனிப்பதென்றும் ஆழமாய் விவரித்தார். பின்பு தலைவர்களைப் பற்றின சூடான விவாதம, சூடு டீ வரும் வரை தொடர்ந்தது. வாக்கிங் போகலாமென்று நினைத்து அரசியல்வாதி போல நடைபயணம் சென்றோம். பொதுவாக பேசிக்கொண்டதும் அரசியல்தான். நடைபயணம்னா சத்தியாகிரகத்தை பற்றியா பேசுவார்கள் பின்ன?
கோயிலை சுற்றிவிட்டு தொடர்ந்தோம். வேடிக்கை பார்க்க மின்மினிப் பூச்சிகள் வந்திருந்தது. கேளிக்கையோடு நாள் முடிவுக்கு வந்தது. அப்படி சிரித்து பல நாட்களாயிருந்தது.
மறுநாள் விழிக்கும் போது சோர்வு என்னை தழுவியிருந்தது, போர்வை விலகி கிடந்தது. பல் விளக்கி பம்புசெட்டில் குளித்தேன், ஜெ எனக்கு முன்னே அதில் குளித்திருந்தது சற்றே ஆச்சரியமூட்டியது. சிலைகளைப் பற்றின விவாதம் ஏழு மணிக்கே தொடங்கியது . சிறுகதை பற்றின விவாதம் மிக பயனுள்ளதாக இருந்தது. தொடர்ந்து படைப்புகளின் மீதான விமர்சனம். சிறுகதை மீதான என் கோட்பாட்டை மாற்றினீர்கள். ஓர் சிறந்த சிறுகதையை எழுத வேண்டும் என்ற வைராக்கியம் வந்தது. கூடவே சோகமும் வந்தது. பிரிவு பெரும்பாலூம் அதைத்தானே தரும்.
ஜெ ஒன்று நிச்சயம், உங்களைப் போன்றோரை வரலாறு அடிக்கடி தருவதில்லை. நீங்கள் எழுத்தால் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியுள்ளீர்கள்.அது காட்டிலிருந்து சென்னைக்கும், விஷ்ணுபுரத்திலிருந்து சென்னைக்கும், இதுமாதிரி பல கற்பனையிலிருந்து, நிஜத்திற்க்குமான ஊசலாட்டம்.
மகேந்திரன்.க
அன்புள்ள மகேந்திரன்
இத்தகைய சந்திப்புகளில் உத்தேசித்த ஒன்று வாசகர்கள் தங்களுக்குள் உறவுகளை உருவாக்கிக்கொள்ளவேண்டும், இலக்கியவிவாதத்திற்கான ஒரு அந்தரங்கக்குழுவை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பதுதான். அது நிகழ்ந்துள்ளது எனத்தெரிகிறது.
ஜெ
அன்புள்ள ஜெ,
எழுத்தில் பெறாத புது அனுபவம் சொல்லில் கேட்டலில் நேரில் பிரியமானவருடன் பெறுவதென்பதை எப்படி விளக்கியும் முடியாது. கேள்விகள் டீக்கடை விவாதத்தினின்று வேறுபடுத்தி கேட்கப்படுவது எவ்வாறு என்பதை அறிந்த துல்லிய சந்தோஷம் கிடைத்தது. ஒரு பயம் மனதினுள் ஓடிக்கொண்டிருந்தது தவறாக கேள்வி கேட்டு நிகழ்விலிருந்து வெளியேற்றப்படுவோமோ என்று. சகஜமானதே நகைச்சுவைகளிலிருந்து தான். கொஞ்சம் கொஞ்சமாய் மனதில் ஊடுருவல் நிகழ்ந்தது கண்டேன் இனி பழக்கம் சகஜமாகிவிடும் என்ற நம்பிக்கையுடன்,
கண்ணன்
கோவை
அன்புள்ள கண்ணன்
நன்றி.
பொதுவாக இத்தகைய சந்திப்புகளில் நேர்மையான எல்லா கேள்விகளும் சரியானவைதான். வலியுறுத்திச் சொல்லும்பொருட்டு எதையாவது கடுமையாகச் சொல்லி இளைய நண்பர்களைப் புண்படுத்திவிட்டேனா என்னும் ஐயமே என்னை அலைக்கழியச்செய்கிறது.
ஜெ
அன்புள்ள ஜெ,
ஈரோடு சந்திப்பு முடிந்து மூன்று நாட்களாகியும் தங்களை சந்தித்த, உரையாடிய பரவசநிலையிலிருந்தும் நெகிழ்ச்சியிலிருந்தும் மீளமுடியாமல் அவ்விரு தினங்களின் ஒவ்வுரு கணங்களையும் நினைவில் மீட்டியபடியே உள்ளேன்.
இச்சந்திப்பில் கிருஷ்ணன், செந்தில், மீனாம்பிகை, அரங்கா, ஈரோடு சிவா மற்றும் புதிய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி.
நான் பெங்களூரில் இருந்து கிளம்பும்போது சரியான நேரத்தில் சந்திப்புக்கு வந்து சேரவேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் இருந்த மனம் ஈரோட்டை அடைந்ததும் பதட்டம் கொள்ள ஆரம்பித்தது. சரியாக பேசுவோமா இல்லை ஏதாவது பித்தாக உளறிவிடுவோமோ என்ற பதட்டம் தங்களை கண்டு கை குலுக்கியதும் மறைந்தேபோனது. ஏதோ நெடுநாள் அறிந்த ஒருவரிடம் உரையாடியது போன்றே இருந்தது.
கேள்விகள் பல தளத்தில் தரத்தில் இருந்த போதிலும் நீங்கள் பொறுமையுடன் பதிலளித்ததை பற்றியும் உங்கள் நகைச்சுவை, நையாண்டி உணர்வு பற்றியும் மனைவியிடமும் நன்பர்களிடமும் சிலாகித்து தீரவில்லை. Seriously ஜெ, 6-ஆம் நாள் இரவில் சிரித்ததை போல் சிரித்து வெகு நாட்களாகிறது.
நண்பர் ரிஷி கூறியது போல தெரிந்ததை சொல்லி காட்டுவதிலும், அதில் உங்களது பார்வையை பெறுவதிலுமே நேரம் செலவிட்டு விட்டோமோ என்றும் சினிமா மற்றும் சமகால அரசியல் சார்ந்த கேள்விகளை தவிர்த்து இலக்கியம், வரலாறு, தத்துவம் சார்ந்து நிறைய கேள்விகள் நாங்கள் கேட்டிருக்கலாமோ என்கிற வருத்தம் இருந்தாலும் தங்களுக்கு இச்சந்திப்பு மிகுந்த நிறைவளித்தது குறித்து மகிழ்ச்சி. இச்சந்திப்பில் பங்கெடுத்தவர்கள் அனைவரும் எவ்வகையிலேனும் பயனடைந்திருப்பார்கள். அடுத்த சந்திப்பில் எங்கள் அனைவரிடமிருந்தும் இன்னும் தீவரமான உரையாடலை நீங்கள் எதிர்பார்க்கலாம்.
தங்களை விட்டு பிரிந்த வெறுமையை கார் பயணத்தின் போது பெங்களூரின் புதிய நண்பர்களுடன் சந்திப்பு மற்றும் இலக்கியம் பற்றிய உரையாடல் வழியாக கடத்தினேன். அடுத்த சந்திப்பை நோக்கி காத்திருக்கிறேன்.
நன்றி.
என்றும் அன்புடன்,
சிவா,
அன்புள்ள சிவா
இச்சந்திப்பு நிகழ்ச்சிகளே எழுத்தாளன் வாசகன் நடுவே இருக்கும் மாயத்திரையை விலக்கத்தான். இத்திரை எப்படி உருவாகிறது என்று பார்த்தால் எழுத்திற்கு அவசியமான சுருக்கம் அடர்த்தி வகுத்துரைக்கும் தன்மை ஆகியவற்றால்தான் எனத்தெரிகிறது. அதையொட்டி இறுக்கமான ஓர் ஆளுமையை நம் மனதில் உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால் நானறிந்தவரை இறுக்கமான ஆளுமைகள் என எவரும் பெரிய அளவில் படைப்பூக்கத்துடன் இருந்ததில்லை.
ஜெ