கலையறிதல்

Hoysala_Javagal_Lakshmi_Narashimha_temple-3104

திரு ஜெயமோகன் அவர்களுக்கு அ மலைச்சாமி எழுதுகிறேன்.

நம் கோயில்கள் ஞானக் கருவூலங்கள் என்பதை என்னால் உணர முடிகிறது. ஆனால் பெரும்பாலும் கோயில்கள், சிற்பங்கள் என்னை இன்றுவரை பயமுறுத்தியே வருகின்றன. என் பெற்றோர்கள் என்னுள் உருவாக்கிய தெய்வங்கள் குறித்த அச்சங்கள் காரணம் என்று நினைக்கிறேன்.

இறைவன் அன்புமயமானவன் என்பது திருவாசகம், திருமந்திரம், வைணவ இலக்கியங்கள் எல்லாம் சொல்கின்றன. ஆனால் எந்த மூர்த்தமும் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அந்த ஆயுதங்கள் பக்தனை பயமுறுத்தவா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. அப்படியானால் அந்த ஆயுதங்களுக்கு என்னதான் பொருள்? எதை உணர்த்துவதற்காக அந்த ஆயுதங்கள் வடிக்கப்பட்டன என்று அறிந்து கொள்ளும் போது அது கொலைக்கருவியாக அல்லாமல் ஞானபூர்வமாக தென்படும் என்று நம்புகிறேன்.

அதை மீறி சிற்பங்களை கலா பூர்வமாகவோ, தத்துவார்த்தமாகவோ நான் அறிந்து கொண்டால் கலையின், தத்துவங்களின் குறியீடுகளே சிற்பங்கள் என்ற தெளிவு பிறக்கும் என நம்புகிறேன்.

ஒரு சிற்பி தான் வடித்த சிலையை தெய்வம் என்று நினைப்பானா? அல்லது கலை, தத்துவம் என்று நினைப்பானா?

கண்டிப்பாக ஒரு சிற்பிக்கு ஒரு சிற்பத்தை தொடுவதில் எந்த தயக்கமும் இருக்காது என நம்புகிறேன். அப்படியானால் என்னை தயக்கப்படுத்துவது அறியாமையே.

இந்த தயக்கத்தால் நான் பெரும்பாலும் கோயிலுக்கு செல்வதே இல்லை. மேலும் நான் வெண் முரசிலும், பக்தி இலக்கியங்கள் வழியாக உணரும் இறைவனை கோயில்களுக்குள் உணர முடியவில்லை. அதை மீறி எந்த கோயிலுக்கு சென்றாலும் வாசலோடு திரும்பி விடுகிறேன்.

இது போன்ற இன்னும் சில ஐயங்களை தமிழக அரசின் தொல்லியல் துறையில் ஓய்வு பெற்ற இயக்குனர் ஒருவரை சந்தித்து கேட்டேன். அதற்கு முன் ஒரு ஓவிய வல்லுனரிடமும் கேட்டேன். அவர்கள் பதில் சொல்லவில்லை. மாறாக திருவாவடுதுறை ஆதினத்தில் சிற்ப தத்துவங்கள் குறித்து புத்தகங்கள் வெளியிட்டிருப்பதாக அந்த தொல்லியல் துறை அதிகாரி சொன்னார்.

தங்களை நீலகிரியில் சந்தித்த பின் அடுத்த சனி, ஞாயிற்றுக் கிழமைகளில்  திருவாவடுதுறை செல்லலாம் என தீர்மானித்துள்ளேன்.

நான் எவ்வழியில் சென்று தெளிவது?

தாங்களும் ஏதேனும் வழிகள் சொன்னால் அதையும் முயன்று பார்க்க காத்திருக்கிறேன். புத்தகங்களை பரிந்துரைப்பதானால் தமிழ்ப்புத்தகங்களை பரிந்துரைத்தால் நலம். எனக்கு அவ்வளவாக ஆங்கிலம் தெரியாது.

தங்களை மின்னஞ்சல் வழியே தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். நான் வேறு போக்கறியேன்.

என் பயத்தை அல்லது தயக்கத்தை தங்களின் வழிகாட்டுதல்கள் வெல்லும் என்ற நம்பிக்கையோடு

 

அன்பன்

அ மலைச்சாமி

 

555

 
அன்புள்ள மலைச்சாமி

’என் நண்பர் ஒருவரின் மனைவி வடமாநிலத்தைச் சேர்ந்தவர். அவரது மனைவியின் உறவினர்கள் மதுரை ஆலயத்துக்கு வந்து அங்குள்ள சிலைகளையும் கருவறையையும் பார்த்தபோது திகிலும் அருவருப்பும் அடைந்ததாக சொன்னார்கள். அவர்களுக்கு மதுரைக்கோயில் இருண்ட, வௌவால் வாடைநிறைந்த , குகைகளைப்போலத் தோன்றியது. சிற்பங்கள் கன்னங்கரிய பூதங்கள் போலத் தோன்றின

காரணம் அவர்களின் ஆலயங்கள் சலவைக்கல்லால் ஆன புதிய கட்டிடங்கள். தெய்வங்களும் சலவைக்கல். பலவண்ண ஆடை அணிந்தவை. நமக்கு அவை வெறும் பொம்மைகள் என்று தோன்றும். அவர்களைப்போலவே வெள்ளைய கலைவிமர்சகர் பலருக்கு நம் கலைப்பொக்கிஷங்கள் அச்சமூட்டும் கரிய பேய்வடிவங்களாகத் தெரிந்தன, பதிவுசெய்திருக்கிறார்கள்.

கலை என்பது குறியீடுகளால் நம்முடன் தொடர்புகொள்வது. பெரும்பாலான குறியீடுகளுக்கு நாம் இளமையிலேயே பழகிவிட்டிருக்கிறோம். நம் ஆழ்மனத்தில் அவை உறைகின்றன. அவற்றின் அடிப்படையிலேயே இவை நல்லவை, இவை அழகானவை என நாம் எண்ணுகிறோம். நம் மனதுக்குள் ஒரு சிலையோ ஓவியமோ ஒரு சொல்லுருவகமோ அர்த்தங்களின் அலையை அவ்வாறுதான் உருவாக்குகிறது.

எனக்கு ஏசுவின் ஓவியங்கள் அளிக்கும் உணர்வெழுச்சியை என் மனைவிக்கு அளிப்பதில்லை. நான் இளமையிலேயே கிறிஸ்த்தவம் சூழ்ந்த பண்பாட்டில் வளர்ந்தவன் என்பதே காரணம்,

அதேபோல உங்களுக்குச் சிலைகள் குறித்த ஓர் அச்சம் அல்லது விலக்கம் இளமையிலேயே சூழலில் இருந்து அளிக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் அழகு என்றும் தெய்வம் என்றும் நினைக்கும் சிற்பம் இன்னொருவருக்குக் கொடூரமானதாகத் தெரியலாம்.

ஆனால் பயிற்சியின்மூலம் நாம் எந்தக்கலைக்குள்ளும் நுழைய முடியும். நம் மூளையை அல்ல ஆழ்மனதை அதற்குப்பழக்கவேண்டும். அது படிப்படியாக அக்கறையுடன் செய்யவேண்டிய ஒருபணி. என் அனுபவத்தையே சொல்கிறேன். எனக்கு கர்நாடக சங்கீதம் என்பது துன்புறுத்தும் ஒலியாகவே என் 30 வயதுவரை இருந்தது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாகக் கேட்க ஆரம்பித்தேன். இரண்டுவருடங்களில் இசையை நன்கு ரசிக்கக்கூடியவனாக ஆனேன்.

ஒரு கலைக்குள் செல்வதற்கான வழி ஒன்றே. அதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தொடர்ந்து ஈடுபடுவது. தொடர்ச்சியாக அதை கற்று அறிந்துகொண்டே இருப்பது. நாளடைவில் நம் ஆழ்மனம் அக்கலையின் குறியீடுகளை நம்முள் அனுபவங்களாக ஆக்கிக்கொள்ள ஆரம்பித்துவிடும்

சிற்பங்ககளைப்பற்றிய நூல்களை படியுங்கள். சிற்பங்களின் மதப்பின்னணி, வரலாறு, குறியீடுகளின் சிறப்புகள், அவை சுட்டிநிற்கும் செய்திகள் என கற்றுக்கொண்டிருக்கும்போதே அச்சிற்பங்களை நேரில் காணுங்கள். தொடர்ச்சியாக இது நிகழட்டும். கற்கக்கற்க உங்கள் சித்தம் அதை ஏற்றுக்கொள்ளும். மறுப்பு விலகும். கூடவே பார்த்துக்கொண்டும் இருந்தீர்கள் என்றால் சித்தத்துக்கு அடியிலுள்ள கனவுவெளி சிற்பங்களை பொருள்கொள்ளத் தொடங்கும்

என்னுடன் வரும் நண்பர்களில் பலர். உதாரணமாக கிருஷ்ணன், இன்று சிற்பக்கலைப் பைத்தியங்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர்களே சிற்பங்கள் மேல் மிகப்பெரிய மனவிலக்கம் கொண்டிருந்தார்கள். அவற்றைப்பார்ப்பது வீண்வேலை என்றும் அவை உடைசல்கள் மட்டுமே என்றும் எண்ணினார்கள். அவர்களின் மாற்றம் இவ்வகையில் நிகழ்ந்ததே

கலையை ‘பழகிக்கொள்ள’த்தான் முடியும். அதுவே ஒரே வழி

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஐராவதம்- அழகியசிங்கர்
அடுத்த கட்டுரைஇவான் இல்யிச்சின் மருத்துவ சிந்தனைகள்: இன்றைய வாசிப்பு