அன்புள்ள ஜெ,
எங்களது நினைவை எழுப்பியது
நாங்கள் ஆறு சகோதரர்கள். நான் மூத்தவன்.
முதலில் சிண்டு (chintu) என்கிற கடற்கரை மணல் நிறத்தில் லாப்ரடார். வெகு காலம் எங்களுடன் இருந்தது. (15 வருடம்) பின் நாங்கள் தனி தனியாக பிளாட்டில் (flat) , ஆனால் ஒரே வீடாக கட்டிக்கொண்டு சென்றோம். மூன்று நாய்கள் மட்டும் வைத்துகொள்ள அனுமதி. மூன்றும் லாப்ரடார் தான். (இரண்டு கருப்பு நிறம், ஒன்று வெள்ளை). ஒரு சிறு சமூகம்.
எங்கள் அம்மா வீட்டில் சிண்டு (chintu) ஜூனியர் . அதே நிறம். அதே விஷமம்.
நீங்கள் எழுதியவைகளும் எங்களது அனுபவங்கள் வேறாக இருந்தாலும், நீங்கள் எழுதிய புன்னகை தரும் விவரிப்புகள் எல்லாவற்றையும் ரசித்தோம். ஒவ்வொரு மனிதரிடமும் நாய்கள் காட்டகூடிய ஒரு விசேஷ நட்பும், மொழியற்ற சம்பாஷனைகள் அனைத்தும் நினைவு கூர்ந்தோம்.
எங்கள் வீட்டு குழந்தைகளுடன் நன்றாக விளையாடும்.
திடீரென (இயற்கையாகவே என்று சொல்ல வேண்டுமோ) , எங்கள் குடும்பத்திற்கு, உங்களது குடும்பத்தின் மேல் பாசம் தோன்றிவிட்டது.
அன்புடன்
முரளி – மற்றும் பெரிய குடும்பம் – மிகப் பெரிய பெயர் பட்டியலை தவிர்த்து
—
M.Murali
Consultant
அன்புள்ள ஜெ..
ஒரு நாவலை இலக்கிய ரீதியாக பார்ப்பது வேறு ,… படித்தும் நம் மனதில் ஏற்படும் தாக்கம் என்பது வேறு.,… கன்னியாகுமரி நாவலை படித்து முடித்ததும் என் மனதில் தோன்றிய தாக்கம் என்பது , நீங்கள் முன்னுரையில் சொன்ன்னதை விடவும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது…
என் பார்வையை இதில் காணலாம் ..http://pichaikaaran.blogspot.com/2010/07/blog-post_30.html
மனிதன் என்ற வகையில் படிக்க வேண்டிய நாவல்கள் சில … சமூக உறுப்பினர் என்ற வகையில் படிக்க வேண்டிய நாவல்களும் சில உண்டு..கன்னியாகுமரி நாவல் ஆண் என்ற முறையில் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய நாவல்.. ஆணை புரிந்து கொள்ள வேண்டுமானால் பெண்களும் படிக்க வேண்டிய நாவல்..
1 வழக்கமாக பலரின் கோணங்களில் பிரச்சினைகளை அலசும் நீங்கள், இதில் ஒரே ஆளின் பார்வையில் கதையை கொண்டு செல்கிறீர்கள்.. நேரமின்மையா… முன்னுரையில் சொன்னது போல , விஷ்ணுபுரத்திருக்கு பின், சும்மா அலட்சியமாக எழுதப்ப்படதா ?
2 உங்களுக்கே உரிய நகைச்சுவை இல்லையே ?
3 ஒழுக்கம் சார்ந்த நாவல் என இதை நீங்கள் அடையாலப்படுதுவது தவறு என நினைக்கறேன்.. வேறு பல நுண்ணிய இடங்களை நாவல் தொடுகிறது..அந்த விஷயங்களை அடையாலபடுத்து ஏன்… ஜெயகாந்தனின் அக்னி பிரவேசம் போன்ற கதை என பலர் தவறாக நினைக்க இது காரணமாகிறது .. உங்கள் பதில் என்ன ?
பிச்சைக்காரன்
அன்புள்ள ரவி
ஒரு நூலின் முன்னுரையில் அந்த ஆசிரியர் சொல்வது அந்நூலை முன்வைத்து அந்த தருணத்தில் தோன்றும் சில விஷயங்களை மட்டுமே. அந்நூலின் பொழிப்புரை அல்ல. எழுதியபின் அவனும் அதற்கொரு வாச்கன் மட்டுமே
உண்மையிலேயே மூளையுழைப்பு இல்லாத ஒரு நாவலை எழுத எண்ணி அதை எழுதினேன். நவீனத்துவத்திற்கு பிந்தைய நாவல்களின் பொது இயல்பான கலைக்களஞ்சியத்தன்மை இல்லாத எளிய நாவல் அது
அதேசமயம் எளிமையான நாவல் அல்ல. ஆண் உளவியலின் ஏராளமான நுண்ணிய தளங்கள், தவிர்க்கமுடியாத மானுடத்தீமையின் கூறுகள் வெளிப்படும் பல பகுதிகள் அதில் உண்டு
ஜெ
Philosophy பற்றி இவ்வளவு சிந்தனை செய்கிறீர்களே…Economics பற்றிய உங்கள் கருத்து என்ன ? சுஜாதா சொன்னது போல் வெறும் Fake Science என்பதுதான் உங்கள் மதிப்பீடுமா ? ‘மனிதன் அளவற்ற பேராசையுள்ளவன், அளவற்ற நெஞ்சுரமுள்ளவன், அளவற்ற அறிவாற்றலுள்ளவன் (unbounded desire, unbounded willpower, unbounded rationality என்பதன் தமிழாக்கம் – என்னால் முடிந்த அளவு) என்று தொடங்கும் Classical Economics உலக வரலாற்றின் சென்ற நான்கு நூற்றாண்டுகளை மொத்தமாக
பாதித்துள்ளது. கடவுள், ஆன்மீகத் தேடல் போன்றவற்றைப் பற்றி எல்லாம் கவலையே படாத Economic Model-கள் கொண்டு தான் இன்றைய உலக அரசாங்கங்கள் நிர்வகிக்கப் படுகின்றன. இதன் அடிப்படை தாக்கங்கள் இன்றைய உலக வாழ்க்கையில் எந்த மனிதராலும் தவிர்க்க இயலாதவை (சமீபத்தில் LCD TV வாங்கிய உங்களாலும் கூட !!). Socialism vs Capitalism என்ற மகத்தான போரில் உங்கள் நிலைப்பாடு என்ன ?
நான் உங்கள் வலைப்பூக்களை தவிர உங்கள் புத்தகங்கள் இன்னும் ஏதும் படிக்க ஆரம்பிக்கவில்லை. Blog கூட சமீப காலமாகவே – தேடிப் பிடித்து சில பழைய பூக்களை படித்து வருகிறேன். அதனால் இந்த கேள்விகளை நீங்கள் ஏற்கனவே அணுகி இருந்தால் மன்னிக்கவும்.
மதுசூதனன்
அன்புள்ள மதுசூதனன்,
தத்துவம் என்பது எல்லா அறிவுத்துறைகளிலும் உள்ள அடிப்படைத் தர்க்கங்களின் தொகை. அது ஒரு தனி அறிவுத்துறை அல்ல. அது முழுமைநோக்கை நோக்கிச் செல்கையில் அதை மெய்யியல் என்கிறோம்.
பொதுவாக இன்றைய அறிவுத்துறைகள் அனைத்திலும் எளிய அறிமுகம் கொள்வதுகூட மிக அபாரமான உழைப்பை கோரும் ஒரு செயல். என்னைப்பொறுத்தவரை என்னுடைய துறைகள் இலக்கியம், இலக்கியவிமர்சனம், இந்திய தத்துவம், இந்திய வரலாறு. இவற்றில் நான் ஈடுபடுவதற்கு எந்த அளவு பிற துறைகளை வாசிக்க வேண்டுமோ அந்த அளவுக்கே வாசிக்கிறேன்.
அறிவியலில் அனைவருக்குமான என்று சொல்லப்படும் நூல்களை மட்டுமே என்னால் வாசிக்க முடியும். பொருளியலிலும்
இத்துறைகளில் என்ன நிகழ்கிறதென உங்களைப்போன்றவர்கள் சொல்லலாம்
ஜெ
அன்புள்ள ஜெ..
ஏழாம் உலகம் குறித்து பேச எனக்கு நேரம் ஒதுக்கி, தொலை பேசியில் விளக்கம் அளித்ததற்கு நன்றி..அந்த நாவலை பற்றி என் பார்வை http://pichaikaaran.blogspot.com/2010/07/blog-post_1257.html
“நம் அன்றாட யதார்த்தம் ‘அப்படியே’ ஓர் இலக்கிய ஆக்கத்தில் இருந்தால் நமக்கு அது பெரும் சலிப்பையே ஊட்டும். அந்த யதார்த்தத்தை மீறவே நாம் வாசிக்கிறோம்”
என சொல்லி இ ருந்தீர்கள்..
இதை பற்றி விளக்கவும்… அன்றாடவாழ்வில் இருந்து மீறி செல்லும் பணியாயைதானே சினிமாக்கள் செய்கின்றன…? நாவலும் அப்படித்தான..இல்லை என எனக்கு தோன்றுகிறது
பிச்சைக்காரன்
அன்புள்ள பிச்சைக்காரன்
அன்றாட வாழ்க்கையின் உண்மையை நாம் புனைவுகளில் பார்ப்பதில்லை. அன்றாட உண்மைக்கு உள்ளார்ந்த அர்த்தம் இல்லை. அந்த அர்த்தத்தின் அடிப்படையில் அது செறிவாக்கப்படவில்லை. அது இயல்பானது, தன்னிச்சையானது, தற்செயல்களின் பிரவாகம். இலக்கிய உண்மைக்கு பின்னால் ஓர் எழுத்தாளன் இருக்கிறான். ஆகவே இலக்கிய உண்மை என்பதை ‘அதி உண்மை’ என்றார் அரவிந்தர்
ஜெ
டியர் ஜெய மோகன்
ஓணத்தை ஒட்டி ஏசியானெட் சேனலில் மம்மூட்டி நடித்த ‘லவுட் ஸ்பீக்கர்’ படம் ஒளிபரப்பானது. பணத்துக்காக சிறுநீரகத்தை தானம் கொடுக்க முன்வரும் ஒரு ஏழை, எப்படி அதை தானம் பெறுகிறவரது வாழ்க்கையில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துககிறார் என்பதுதான் கதை. மம்மூட்டியின் அற்புதமான நடிப்பு மனதை நெகிழ வைத்தது. படத்தில் பிரதான பெண் கதாபாத்திரமே கிடையாது. சினிமா நடிப்பில் முன் அனுபவமமில்லத் மீடியா பர்சனாலிடியான சசி குமாரின் நடிப்பு மிக யதார்த்தமாக இருந்தது.
மென்மையான மனித மன உணர்வுகளை டைரக்டர் ஜெயராஜ் காட்டியுள்ள விதம் பிரமிக்கவைக்கிறது. மனிதாபிமானத்துகு முன்னால் இந்த உலகில் வேறு எதுவும் பெரிதில்லை என உணரவைத்தது.
தமிழ் சினிமாவில் மட்டும் ஏன் காதலையே கட்டிக் கொண்டு அழுகிறார்கள் என்ற தார்மீகக் கோபம்தான் வந்தது.
அன்புடன்
எஸ். சந்திர மௌலி
பத்திரிகையாளர், சென்னை
பி.கு. எனக்கு மலையாளம் தெரியாது. என் மனைவிபாரதிக்கும் மலையாளம் தெரியாது என்றாலும் னியைய மலையாள படங்கள் டீ.வி. யில் பார்த்தே புரிதுகொள்ளும் அளவுக்குத் தெரியும். அவளது வற்புறுத்தலின்பேரில்தான் இந்தப் படம் பாத்தேன். படம் பார்த்துவிட்டு, அவளுக்கு நன்றி சொன்னேன்.
—
S Chandra Mouli
அன்புள்ள சந்திரமௌலி
மலையாளா சினிமாக்களுக்கு இரு வசதி. ஒன்று அவை விறுவிறுப்பாக இருந்தாகவேண்டுமென்பதில்லை. இரண்டு அவற்றில் இளம் காதலர்களை மையமாக ஆக்கவேண்டுமென்பதில்லை. நம்முடைய ரசனை எப்படியோ இந்த வரையறைகளைச் சார்ந்துள்ளது
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
நேற்று தான் உங்கள் ” இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் ” படித்து முடித்தேன். தத்துவத்தில் ஆர்வம் உள்ள ஒரு தொடக்க வாசகனுக்கு மிக பயனுள்ள நூல் . மீமாமிசம் மரபு வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.
ஒரு சின்ன கேள்வி, தங்களுக்கு மிக நெருக்கமானத் தரிசன மரபு எது ?
அசோக்
தத்துவ மாணவனுக்கு உதவும் சில நூல்களே தமிழில் உள்ளன. வித்வான் லட்சுமணன் எழுதிய இந்திய சிந்தனை ஒரு நல்ல நூல். டாக்டர் ராதாகிருஷ்ணனின் இந்திய தத்துவ ஞானம் தமிழில் உள்ளது. ஹிரியண்ணா வின் இந்திய தத்துவ மரபு, தேபிபிரசாத் சட்டோபாத்யாயவின் இந்திய தத்துவம் ஆகிய நூல்கள் கிடைக்கின்றன
வேதாந்தம். அத்வைதம்!
ஜெ
அன்புள்ள ஜெ.மோ,
வணக்கம். நலமா?
சிங்காரச் சென்னையை விட்டு, சண்டிகர் நகரின் புதிய சண்டியாக இருக்கிறேன். சென்னையைவிட்டு வரும்போது ‘விஷ்ணுபுரம்’ வாங்கிவந்தேன். வாசிக்கவும் ஆரம்பிச்சாச்சு. அத்தியாயம் 13 வந்ததும் வீரனின் முடிவு மனசைப் பிழிஞ்சுருச்சு. ஐயோ….. யானைன்னு கண்ணில் நீர்வழிய அன்று முழுவதும் மனசே சரியில்லை. மனசை திடம் செய்துகொண்டு தொடர்கின்றேன்.
வாசித்தவரை பிரமிப்பு. இதை எழுதத்தூண்டிய அருணாவுக்கு நன்றிகள் பல.
என்றும் அன்புடன்,
துளசி
அன்புள்ள துளசி
வாசித்து முடித்திருப்பீர்கள் தானே? தாமதமான கடிதம். நன்றி
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..,
நலம் அறிய விருப்பம் சார் .. அனல் காற்று குறுநாவலை வாசித்தேன்.அழகா மேலும் மேலும் காட்சி பிம்பமாக விரித்துக்கொண்டே வாசித்து செல்லும் கதைபோக்கு மற்றும் ஒரு கீழே வைக்க முடியாத ரெப்ரெஷ் ஆன நடை .
சென்னையையை பின்புலமாக கொண்டு நீங்கள் அதிகமாக கதைகளில் எழுதியதில்லை என்று என் வரையில் நினைக்கிறேன் என் ஞாபகம் வரையில் நிழல்வெளி கதைகளில் உள்ள ஒரே ஒரு கதையில் தான் சென்னை வருகிறது.
ஒரு தற்கொலை முயற்சியில் இருந்து விரிகிற கதை என்ன இறுதியில் எனும் பதட்டம் ஒரு பக்கத்தில் இருக்கவே செய்கிறது.
“சுசி”- படித்த உடனே மனதில் ஒட்டிக்கொண்ட ஒரு பெயர் ரெண்டு முறை சொல்லிப்பார்த்தேன். இந்த கதையில் தான் இப்படி ஒரு பெயர முதல் முதலா கேள்விப்படுகிறேன் ரெண்டு எழுத்தில் இவ்வளவு அழகா பெயர் வைக்க முடியுமா என்று நினைக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.
பார்த்த முதல் தடவை , பாண்டி பஜார் பகுதிகளில் சுசிக்கும் அருணுக்கும் நடக்கும் உரையாடல்கள், சண்டை அவ்வளவும் புத்தம் புதுசு கவிதை மாதிரி . நீலி ,கிரிதரன் உரையாடலுக்கு பிறகு நான் ரெண்டாம் இடத்தில் வைப்பேன் அதை.
‘ஐஸ்க்ரீம் சாப்டாட்டிஉனக்கு உடம்புக்கு ஏதாவது ஆகிடுமா , இல்லியே – ஆணுக்கும் பெண்ணுக்குமானா வேறுபாடுகள் அப்போது புரியவில்லை அவர்கள் சிரிப்பது வெவ்வேறு விஷங்களுக்காக”
“சுசி உனக்கு பிடிக்காத எதுமே இந்த உலகத்தில் இல்லை ஏன்னா உனக்கு உன்னை பிடித்திருகிறது . ”
” மூணு பெண்கள் சிரிச்சி பேசிகிட்டு இருக்கும்போது அருண் நினைப்பதாக வரும் வரிகள் “யார் என் அகத்தை அலைகழிக்கும் பெண் ” உள்ளாளத்தில் யாரை நான் விரும்பி நேசிக்கிறேன். அது என் அம்மா தான் “..
ஆஹ அருமை ஜெயமோகன் ஆல்தான் இப்படி எழுத முடியும் என்று நினைக்கும் வரிகள் .
சந்திரா – அருணுக்கு இடையேயான உறவுமுறை அவனும் அவளும் கொள்ளும் காம அலைகலைப்பு கள் ,அருணின் குழப்பங்கள் நம்மக்கு நேர்ந்தால் இப்படிதான் தவிப்போம் குழம்புவோம் எனும் மாதிரி இருந்தது இருவருக்கும் இடையாயான் பகுதிகளை வாசிக்கும் போது . ஏதோ அனுபவித்து மாதிரி எப்படி சார் இவ்வளவு நுட்பமா(வாழ்ந்த மாதிரி ) எழுத முடிந்தது
அருணின் அப்பா இறந்த பின்பு ஒரு விளம்பரத்த பார்த்து அருண் நினைப்பது ,சுசியை ஒரு ஆளுமையாகவும் நினைக்கும் தருணங்கள் அவை .
ரொம்ப நன்றி சார் காட்டிற்கு பிறகு இன்னொரு காதல் தோல்வி ஐ இந்த படைப்பில் சந்திக்க போகிறோமோ என்று பயந்தேன் நல்லவேளை முடிவு ஆயாசமான சுபம்.
எது நிகழ்கிறதோ அதுவே அது – மகத்தான நாவல் என்று உணரும் நாவலின் முதல் வரியாக வைக்க கூடிய, தகுதியான இம்மாதிரியான வரிகளை போற போக்கில் சாதாரணமா உதிர்ப்பது ஜெயமோகனின் ஸ்பெஷல் என்று நினைதது கொண்டேன்.
—
Regards
dineshnallasivam
அன்புள்ள தினேஷ் நல்லசிவம்
நலம்தானே? நெடுநாட்கள் தாமதமாகிவிட்டது பதிலிட. ஒரு நல்ல நாவலில் அந்த மையகக்ருவைச்சுற்றிய வரிகள் வந்தபடியே இருக்கும். அவையே அந்நாவலுக்கான கியூ என்பார்கள்
நன்றி
ஜெ