ஈரோட்டில் என் நண்பர் வழக்கறிஞர் செந்தில் புதியதாக வாங்கியிருக்கும் பண்ணை வீட்டில் புதியவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தோம். உண்மையில் ஊட்டியில் ஒரு சிறிய சந்திப்புதான் என் மனதிலிருந்தது. அதற்கு அறுபது பேருக்குமேல் வர விரும்பினர். அங்கே நாற்பத்தைந்துபேர் அதிகபட்சமாக தங்கலாம்.
ஆகவே ஈரோட்டில் முன்னதாகவே ஒரு நிகழ்ச்சி ஏற்பாடுசெய்தோம். இப்போது மேலும் முப்பது பேர் வர விரும்பியிருக்கிறார்கள். அவர்களுக்காக இன்னொரு புதியவர்களின் நிகழ்ச்சியை நடத்தவேண்டும், நேரமில்லை.
ஈரோட்டில் காலை ஐந்து மணிக்கு ரயிலிறங்கினேன். நண்பர்கள் கிருஷ்ணன், சந்திரசேகர், மணவாளன் வந்து வரவேற்றனர். ஈரோட்டிலிருந்து வந்தவர்களுடன் பத்துப்பேர் காத்து நின்றிருந்தோம். சென்னைக் கும்பல் ஒன்று நீலகிரி எக்ஸ்பிரஸில் வந்தது. அனைவருடனும் கார்களில் காஞ்சிகோயிலருகே இருந்த பண்ணைவீட்டுக்குச் சென்றோம். எட்டுமணிக்குள்ளாகவே அத்தனைபேரும் வந்துவிட்டனர். குளித்துத் தயாராகி விட்டோம்
மொத்தம் முப்பதுபேர். உண்மையில் அத்தனைபேர் தங்க அங்கே இடமில்லை. இருபதுக்குமேல் செல்லக்கூடாதென்றே நினைத்திருந்தோம். ஒவ்வொருவரையாகச் சேர்த்து முப்பதாகிவிட்டது. இந்தச்சந்திப்பின் இயல்பை சிலவகையாக வகுத்துவைத்திருந்தேன்.
இது ஒருவகை Meet the Author நிகழ்ச்சி மட்டுமே. புதியவாசகர்கள் வகுக்கப்பட்ட பேசுபொருட்களுடன் அமையும் சந்திப்புக்களில் முழுமையாகக் கலந்துகொள்வதில்லை எனக் கண்டிருக்கிறேன். ஆகவே அப்படி எதையும் வகுத்துக்கொள்ளவில்லை. கேள்விகள், பதில்கள் அதிலிருந்து விவாதங்கள் என்று அமைத்திருந்தேன். அத்துடன் தனிப்பட்டமுறையிலான இயல்பான உரையாடல் நகையாடல் ஆகியவற்றுக்கும் நேரமிருக்கவேண்டும் என நினைத்திருந்தேன்.
இந்த வகையில் அமைக்கப்படும்போது நிகழ்ச்சியே வெற்று அரட்டையாக ஆகிவிடும் என்னும் அச்சத்தில்தான் முன்பெல்லாம் பேசுபொருட்களை வகுத்துக்கொண்டிருந்தோம். இம்முறை அரட்டையாக ஆகுமிடங்களிலெல்லாம் முன்னதாகவே ஒரு மானசீகமான தடையை நானே போட்டுக்கொண்டேன்.
இலக்கியம், வரலாறு, தத்துவம் சார்ந்து பலகோணங்களில் விவாதங்கள் நிகழ்ந்தன. பேசிக்கொண்டவற்றை இங்கே தொகுத்துச் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன். நண்பர்களின் கேள்விகளுக்கான பதில்களில் இருந்து பேச்சுகளுக்குச் சென்றோம். அனேகமாக அனைவருமே பேசினார்கள். புதியவர்கள் எழுதிவந்த படைப்புகளைப்பற்றி பொதுவான விமர்சனங்கள் நடந்தன.
இரவு நெடுநேரம் வேடிக்கைப்பேச்சுக்கள். தங்குமிடம்தான் கொஞ்சம் கஷ்டம். நெருக்கியடித்துக்கொண்டு படுக்க வேண்டியிருந்தது. பயணக்களைப்பு இருந்தமையால் அனைவருமே உடனடியாகத் தூங்கிவிட்டனர்
ஆறாம்தேதி மாலையில் எட்டுகிலோமீட்டர் மாலைநடை சென்றோம். காலையில் பம்புசெட்டில் குளித்தேன். நெடுநாட்களுக்குப்பின். ஏழாம்தேதி மதியமே சந்திப்பு முடிந்தபின்பும் இரவு ஏழரை மணிவரை நான் அங்கிருந்தேன். நண்பர்களுடன் வந்து இரவு பத்துமணிக்கு ரயிலைப்பிடித்தேன்.
புதியநண்பர்கள் அனைவருமே உற்சாகமான மனநிலையில் முழுக்கவனத்துடன் இருந்ததும் பலர்தீவிரமாகப் பேசியதும் மிகுந்த நிறைவளித்தது.