அமர்தலும் அலைதலும்

1

 

இத்தனை நாட்கள் தொடர்ச்சியாக நாகர்கோயிலில் இருந்ததில்லை. சென்ற ஏழாம்தேதி கோவையிலிருந்து வந்தபின் ஒருமாதமாக இங்கேதான் இருக்கிறேன். வெண்முரசு எழுதினேன், இருபது அத்தியாயங்கள் முன்னால் சென்றுவிட்டேன். ஜன்னலுக்கான கட்டுரைத்தொடர், குங்குமத்துக்கான கட்டுரைத்தொடர்.

மீண்டும் பழைய வாழ்வொழுங்கு அமைந்துவிட்டதனால் மலரும் நினைவுகள். இந்த வீடுகட்டிய காலகட்டத்தில் மாடியில் ஒரு கொட்டகை இருந்தது. மாலையில் அதில் உடற்பயிற்சி செய்வதுண்டு. பிள்ளைகள் உடன் விளையாடும். அங்கே அமர்ந்தால் வெயிலும் மழையும் மலையிறங்குவதைக் காணமுடியும். இந்த பகுதியின் ஆழமான அமைதி எனக்கு மிக உகந்தது. பறவையொலிகள் சூழ்ந்த குமரிமாவட்ட நிலம் இது.

காலை ஏழு மணிக்கு ஒரு காலை. மதியத்தூக்கம் முடிந்தபின் மாலை ஆறுமணிக்கு இன்னொரு விடியல் . உண்மையில் சினிமாவில் அஸ்தமனம் உதயம் இரண்டையும் ஒன்றாகவே எடுப்பார்கள். வித்தியாசம் தெரியாது. நான் மாலையில் துயிலெழுவதனால் எனக்கும் வேறுபாடே தெரியவில்லை. எழும்போது அடாடா இன்றைக்கு ஆபிஸ் போகவேண்டியதில்லையே என்னும் பரவசம் பணிவிடுபட்டு பத்தாண்டுகளுக்குப்பின்னரும் இருக்கிறது

தினம் தேங்காய் அரைத்த மீன்கறிச்சாப்பாடு. இரவுணவு கொய்யாப்பழம். ஆனால் தினமும் பழம்பொரி என இங்கே சொல்லப்படும் வாழைப்பழ பஜ்ஜி சாப்பிட்டு கொஞ்சம் தொப்பை போட்டுவிட்டேன். வீட்டில் மாமனார் மாமியார் கீழ்ப்பகுதியில் இருப்பதனால் கீழே செல்வதே இல்லை. மாமியார் என் முன்னால் நிற்காத பழங்கால வேளாளப் பண்பாடு கொண்டவர். அவர்கள் பெற்றோரும் மகளும் ஓரு தனி உலகம். நான் வெளிப்பாதையின் வழியாக வந்துசெல்வேன்.

சிலநாட்களாக அஜிதனும் உடனிருக்கிறான். இருமுறை திருவரம்புக்குச் சென்றோம். பயலுடன் நடைசெல்வதென்பது என் வாழ்க்கையின் இன்பங்களில் ஒன்று. தீவிர விவாதம். கூடவே கொஞ்சல். மூன்று ஜெர்மானியர்களுக்கு அடிமை அவன். வெர்னர் ஹெர்ஷாக்,  ரிச்சர்ட் வாக்னர், ஆர்தர் ஷோப்பனோவர். நான் அவனிடமிருந்து கேட்டுத்தெரிந்துகொள்ளவேண்டிய காலம்.

வழியில் ஒருவர் சந்தித்து வணங்கி வெண்முரசில் வெய்யோன் பற்றி விவாதிக்கத் தொடங்கினார். கடந்துசெல்லும்போது “அப்பா என்னப்பா நடக்குது நாட்டிலே?” என்றான்.”எனக்குத் தெரியலை. டீக்கடையிலே கூட ஒருவர் பாத்து வெண்முரசு பத்தி பேசினார்” என்றேன்.கர்ணன் படவிவாதத்திற்காக விமலுடன் கன்யாகுமரி சென்றேன். அங்கே ஒருநாள்.

கோடை அணுகிக்கொண்டிருக்கிறது. வயல்கள் பொன்னிறமாகிவிட்டன. மலையும் மஞ்சளாகி அந்திவெயிலில் அனல்குவியல் போல சுடர்விடுகிறது. இருவேளை வேளிமலையைப் பார்த்தபடி நடைசெல்வதென்பது வாழ்க்கையின் இனிமைகளில் ஒன்று.

இன்றுமாலையுடன் மீண்டும் பயணங்கள். கோவை ரயிலில் ஈரோடு செல்கிறேன். நாளை அங்கே புதியவாசகர்களின் சந்திப்பு. 11 அன்று சென்னை. குமரகுருபரனின் கவிதைநூல் வெளியீடு. 12 ஊட்டி. 13,14 அங்கே இன்னொரு புதியவாசகர் சந்திப்பு. 19 ஆம் தேதி கோவை. இருபதாம்தேதி அங்கே ரோட்டரி கிளப்பில் ஒரு பாராட்டு விருதுவிழா.

20 அன்றே மாலை கிளம்பி மும்பை. அங்கே கேட்வே இலக்கியவிழா. மலையாளிகள் நடத்தும் வட்டார இலக்கிய கொண்டாட்டம். 22 சென்னை. அங்கிருந்து மீண்டும் சினிமாப்பயணம். மார்ச் முதல்வாரம் திரும்பி உடனே ஈரட்டியில் எனக்கும் நண்பர்களுக்கும் சொந்தமான வனத்தங்குமிடத்தில் பழையவாசகர்களுக்கான சந்திப்பு. 5,6 தேதிகளில். மார்ச் இரண்டாம்வாரம் தான் இனி கொஞ்சம் மூச்சுவாங்கமுடியும்.

ஈரோட்டுக்கு 25 பேர் வருகிறார்கள். பழையவர்களுக்கு அனுமதியில்லை. ஈரோட்டில் என் நண்பர்களே இருபதுபேர் தேறுவார்கள். அவர்களைப்பார்த்தால் அவர்களிடம் மட்டும்தான் பேசத்தோன்றும். காலை ஐந்துமணிக்கு கண்விழித்து மறக்காமல் ஈரோட்டில் இறங்குவது மட்டும்தான் சிக்கலே.

நான் விடியற்காலையில் இறங்கவேண்டிய பயணங்களை முடிந்தால் தவிர்த்துவிடுவேன். தூக்கமே வராது. தூங்கினால் கடைசி நிறுத்தம்தான். ஈரோடு ரயிலில் பலமுறை திருப்பூர் சென்று இறங்கியதுண்டு. இதற்காகவே பேருந்தில் செல்வதும் உண்டு. வெண்முரசுக்குப்பின் அமர்ந்துசெல்லும் பயணங்களை தவிர்க்கவேண்டியிருக்கிறது, முதுகுவலி.

நாளை சந்திக்கப்போகும் புதிய முகங்களை எண்ணிக்கொள்கிறேன். நானும் ஒரு புதியமுகம் கொள்ளமுடிந்தால் நன்றாக இருக்கும்

 

முந்தைய கட்டுரைமிச்சம்
அடுத்த கட்டுரை’புதியவிதி’ இதழில் இருந்து…