கவிதையும் ஞானியும்

அன்பு ஜெ.,

அண்மையில் என் எம்.பில் மாணவர் ஒருவர் என்னிடம் கேட்ட வினா: ‘ஏன் மெய்ஞானிகள் அனைவரும் கவிஞர்களாக இருக்கிறார்கள்?’ இதற்கு நான், ‘மெய்ஞானிகள் எல்லோருமே கவிஞர்களாக இருப்பதில்லை. ஆனால் தன் ஞானத்தை மொழியில் வெளிப்படுத்த முனைந்த மெய்ஞானியருள் பலரும் பிற மொழி வடிவங்களை விடவும் கவிதையையே சரியான ஊடகமாகத் தேர்ந்துள்ளர்கள்’ என்று கூறினேன். இதற்குமேல் எனக்கு விடை கூறத் தெரியவில்லை.

ஞான அனுபவத்துக்கும் கவிதைக்கும் அடிப்படையில் ஆழமான தொடர்புகள் உள்ளனவா? அவை என்ன? மேலும், ஓஷோ ஓரிடத்தில், ‘தத்துவத்தைவிடக் கவிதைதான் மதத்தன்மைக்கு நெருக்கமானது’ என்று கூறியுள்ளதும் என் உள்ளத்தில் பல வருடங்களாகச் சுழன்றுகொண்டுள்ள ஒரு கருத்தாகும். இந்தக் கோணத்தில் கவிதையைப் பற்றித் தங்களின் புரிதல்களை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்,
ரமீஸ் பிலாலி,
தமிழ்த்துறை,
ஜமால் முகமது கல்லூரி,
திருச்சி.

அன்புள்ள ரமீஸ்

உங்கள் கடிதத்துக்கு நெடுநாள்கழித்து பதில் சொல்கிறேன். ஏனென்றால் இதைப்பற்றி உடனடியாக சொல்லத்தோன்றவில்லை. அவ்வப்போது சிந்தித்துக்கொண்டிருந்தேன். இப்போதுகூட எழுத்தாளன் வாசகன் மற்றும் ஆன்மீகமான தேடலுடையவன் என்றமுறையில் எல்லைகளுக்கு உட்பட்டு சிலவற்றை சொல்ல முனைகிறேன். ஊகங்கள்தான்.

முதலில் கவித்துவம், கவிதை என் இரண்டையும் நான் பிரித்துக்கொள்கிறேன். கவித்துவம் என்பது ஒரு மனநிலை. அம்மனநிலையின் ஒரு வெளிப்பாடே கவிதை. கவித்துவமனநிலைக்கு பலவெளிப்பாடுகள் உண்டு. கலைகளும் இலக்கியமும் மட்டுமல்ல.

ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இதைப்பற்றிய ஒரு குறிப்பு உண்டு. ஜே.ஜே. எழுதுகிறான். ’அரவிந்தாக்‌ஷ மேனன் பேனாவுக்கு மைவிடுவதை கவனித்திருக்கிறேன். ஒரு துளிகூட சிதறாமல் ஒரு நுண்ணிய கலைநிகழ்வு போல அந்த மையை விடுவார். அந்த மனநிலையே உச்சகட்ட மானுடநிலை. அதை நோக்கித்தான் மனிதர்கள் செல்லவேண்டும்’ என. இங்கே குறிப்பிடப்படுவது கவித்துவமே.

சிறுகுழந்தைகளில், பெண்களில் பலசமயம் இந்த கவித்துவமனநிலையை காணலாம். அக ஒழுங்கு எந்தவிதமான பிரயாசையும் இல்லாமல் புற ஒழுங்காக மாறும் விந்தை. ஒவ்வொன்றிலும் அழகையும் நேர்த்தியையும் காணும் தன்மை. ஒவ்வொன்றிலும் முழுமையை நோக்கிச் செல்லக்கூடிய தன்மை. இப்படியெல்லாம் சொல்லிப்பார்க்கலாம். அது அகவயமான ஒரு உருவகமானதனால் அதை திட்டவட்டமாக வரையறை செய்ய முடியாது. அதை அக்கவித்துவத்தை உணரும்தன்மை கொண்ட ஒருவர் எளிதில் அறிய முடியும்.

கவித்துவம் ஒரு வெளிப்பாடு அல்ல, அது ஒரு நிலை. கவித்துவம் கொண்டவர் செய்யும்செயலில் எல்லாமே கவித்துவம் வெளிப்படும். நான் எளிய விவசாயிகளைக் கண்டிருக்கிறேன். சொல்லும் எல்லா சொல்லிலும் இயல்பான கவித்துவம் மிளிர்பவர்கள். அத்தகையவர்களை கதைமாந்தர்களாக ஆக்க முயன்றிருக்கிறேன். என் ஆக்கங்களில் வரும் பலர் நினைவுக்கு வருகிறார்கள், கண்டன்காணி, குட்டப்பன், நாகம்மை…

மாறாக கவிதை என்பது ஒரு குறிப்பிட்டவகையான கலைவடிவம். மொழிக்குள் நிகழும் ஒரு வெளிப்பாடு அது. மொழியால் தன்னை நிகழ்த்திக்கொண்டு மொழிமூலம் தன்னை தொடர்புறுத்திக் கொள்வது. நல்ல கவிதை கவித்துவ மனநிலையின் வெளிப்பாடு. கவிஞர்கள் அதை எழுதும்போது கவித்துவநிலையில் இருக்கிறார்கள். பெருங்கவிஞர்களின் ஆளுமையிலேயே கவித்துவம் உள்ளது.

ஆனாலும் கவிதை என்பது எப்போதும் கவித்துவம் அல்ல. கவிதை என்பது ஒரு கலை ஆகையால் அதில் கணிசமான அளவுக்கு தொழில்நுட்பம் உள்ளது. மொழித்தொழில்நுட்பம். ஆகவே ஓர் எல்லைவரை அதைப் பயில முடியும். தேர்ச்சிகொள்ள முடியும். உச்சகட்ட கவிதை மட்டுமே தூய கவித்துவ நிலையில் உள்ளது. பலசமயம் நல்ல கவிதைகளில்கூட அவற்றின் உச்சமுனையில் மட்டும் கொஞ்சம் கவித்துவம் உள்ளது. பளபளக்கும் கூரிய உலோகநுனியில் இதயத்தின் குருதி சற்றே படிந்திருக்கும் ஒரு அம்புதான் கவிதை.

ஆன்மீகம் எப்போதுமே கவித்துவமானது. ஆன்மீகத்த்தின் அடையாளமே கவித்துவமும் அங்கதமும் சரியாக இணையும் ஒரு நிலைதான். ஞானியரின் பேச்சுகளும் செயல்களும் எப்போதுமே கவித்துவத்தின் வெளிப்பாடாகத்தான் அமைகின்றன. அவர்களுக்குள் உள்ள கவித்துவத்தை நாம் அவற்றின் வழியாக அடைகிறோம்.

நித்ய சைதன்ய யதி காலையில் தோட்டத்தில் ஒவ்வொரு பூக்களாக பார்த்தபடி மெல்ல நடைசெல்லும் காட்சியை நினைவுகூர்கிறேன். ஒரு மகத்தான கவிதை அளிக்கும் மன எழுச்சியை எனக்களிக்கும் காட்சி அது.

ஏன்? ஒரு நல்ல கவிதை என்ன மன எழுச்சியை அளிக்கிறது? அது ‘சொல்லப்பட்டது’ மட்டும் அல்ல. அது ஓர் அடையாளம். ஒன்றைச்சொல்லி சொல்லப்படாத ஓராயிரம் விஷயங்களை புரியவைக்கும் ஒரு மொழியுத்தியே கவிதை. நம் கற்பனையில் முளைவிட்டு காடாகும் ஒரு விதை. ஒரு துளியில் முழுமையின் சாத்தியத்தைக் காட்டக்கூடியது அது. உள்ளங்கையில் ஒளிவிடும் சூரியன் போன்றது.

நித்ய சைதன்ய யதி கைக்கோலால் ஒரு காய்ந்த இலையை புரட்டி அடியில் பிலுபிலுவென ஊர்ந்த நுண்ணுயிர்களைக் காட்டி ‘பிரபஞ்சம்’ என்று சொல்லிவிட்டு முன்னால்சென்றார். கவிதை அப்படித்தான். அது ’நான் முடிவிலியின் ஒரு துளி! முழுமையின் ஒரு கீற்று!’ என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஒரு நல்ல கவிதை முடிவில்லாத பொருளை அளிக்க வல்லது

அப்படியானால் கவித்துவம் என்பது என்ன? முழுமையை உணர்ந்துகொண்டே இருப்பதுதானா? அப்படித்தான் நினைக்கிறேன். மானுடப்பிரக்ஞை என்பது ’தான்’ என்றும் ’தன்னது’ என்றும் தன்னைச்சுற்றி என்றும் பிரித்துப்பார்க்கும் இயல்பு கொண்டது. அதன் வாழ்க்கைக்கு அது அவசியம். ‘இதம்’
என்ற சொல்லால் வேதாந்தம் அதைச் சுட்டுவதுண்டு. ‘இது’ .

இதுவாகவே நாம் இருக்க முடியும். இதையே அறிய முடியும். அது மனித உடல் மனித பிரக்ஞைக்கு விடுக்கும் எல்லை. அந்த எல்லையை மீறி அகம் விரிந்து ஒட்டுமொத்தத்தை முழுமையை தரிசித்தலே ஆன்மீகம். அதையே ‘அதம்’ என்று வேதாந்தம் சொல்கிறது. ’அது’.

அதை அனைத்திலும் உணரும்நிலையே ஆன்மீகம். அப்படியென்றால் அந்நிலை ஒவ்வொரு துளியில் இருந்தும் ஒட்டுமொத்தம் நோக்கி இயல்பாக, இடையறாது பாய்ந்துகொண்டிருக்கும் பிரக்ஞை. அதையே நாம் கவித்துவம் என்கிறோம்.

ஞானிகள் அந்நிலையில் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் எதையாவது சொல்கிறார்கள். சிலர் எதையும் சொல்வதில்லை. சொல்வனவற்றை நாம் கவிதை என்கிறோம். ஏனென்றால் அவை சொல்லும் அனைத்திலூடும் முழுமையைச் சுட்டி நிற்கின்றன. ஒவ்வொரு சொல்லிலும் படிமத்திலும் முடிவிலியை வாசிக்கச்செய்கின்றன.

ஞானிகள் எவரும் கவிதை எழுத முற்பட்டதில்லை. அவர்கள் ஏற்கனவே நாமறிந்த சொற்களையும் படிமங்களையும் கொண்டு நமக்குச் சிலவற்றைச் சொல்ல முயல்கிறார்கள். அவற்றில் அவர்களின் ஆழமான கவித்துவம் ஏற்றிவைக்கும் முடிவிலாத பொருள் மூலம் அவை கவிதைகளாக ஆகின்றன. ஆனாலும் அவை பலசமயம் முழுமையான கவிதைகளாக ஆவதில்லை. அவை கவித்துவம் கொண்டவை, கவிதைகள் அல்ல.

கவிதைகளாக அவற்றைக் கண்டு, கவிதையின் அளவுகோல்களைக் கொண்டு மட்டுமே அளந்தால் ரமணர் அல்லது பீர்முகம்மது அப்பா போன்றவர்களின் பாடல்கள் நல்ல கவிதைகள் அல்ல என்று நாம் சொல்லக்கூடும். அவை அந்த ஞானியரின் அகத்துக்கான வழிகாட்டிகள் மட்டுமே. அவற்றுக்கு தன்னளவில் முழுமை இல்லை.

இரண்டு காரணங்களால் அவர்களின் கவிதைகள் குறைபாடு கொள்கின்றன. முதன்மையாக: கவிதை ஒரு மொழி வெளிப்பாடு. அதற்கான மொழித்தொழில்நுட்பம் பயின்று அடையவேண்டிய ஒன்று. அதை பல ஞானிகளிடம் காண முடியாது. பெரும்பாலான சித்தர்களிடமும் சூஃபிகளிடமும் மொழித்தேர்ச்சி வெளிப்படுவதில்லை. மிகச்சாதாரண மனிதர்களாக இருந்து ஞானம் நோக்கிச் சென்றவர்கள் அவர்கள்.

இரண்டாவது காரணம்: முழுமையை, நிறைவை நோக்கி மட்டுமே சுட்டுவனவாக அவை இருக்கின்றன. அந்நிறைவு அல்லது முழுமை தன்னை பலவாக வெளிப்படுத்தும் இந்த உலகம் குறித்து அவை கவனம் கொள்வதில்லை. ஆகவே அன்றாட உலகின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் சஞ்சலங்களும் அமைதியின்மைகளும் அவற்றில் இருப்பதில்லை. ஆகவே அவற்றில் கவிதையின் பல்வேறு சாத்தியங்கள் வெளிப்படுவதில்லை.

உச்சநிலையில்கூட கவிஞன் பாதிப்பங்குதான் ஞானி. மீதிப்பங்கு அவன் லௌகீகன். அவன் இந்த உலகையும், இந்த வாழ்க்கையையும், இதன் முடிவிலா இன்பதுன்பங்களையும் விட்டு விலகிச்சென்றவன் அல்ல. இவற்றில் இருந்துகொண்டே அவன் இவற்றை உள்ளடக்கிய முழுமையை காணக்கூடியவன். ’இங்கே’ இருந்துகொண்டு ’அங்கே’ பார்ப்பவன்.

அந்த தத்தளிப்பையும் கொந்தளிப்பையும் நாம் எப்போதுமே பெருங்கவிஞர்களில் காணலாம். மகத்தான கவிதைகள் அந்த அகக் கொதிப்பின் லாவாக்களாகவே இருக்கின்றன. ஞானிகளின் கவிதைகளில் இருக்கும் அசைவின்மை அவற்றில் இருப்பதில்லை. ஆன்மீகத்தின் முழுநிலவு கண்டு கொந்தளிக்கும் லௌகீகத்தையும், கொந்தளிக்கும் அக்கடற்பரப்பில் நடனமிடும் ஆன்மீகத்தின் ஒளிர்வட்டத்தையும் காட்டுவன நல்ல கவிதைகள்.

ஒரு கணக்கில் ‘தோற்றுப்போன’ ஞானியே பெரும் கவிஞன். அல்லது வெற்றியடைய வாய்ப்பில்லாத ஞானி! மிகச்சிறந்த உதாரணங்கள் ஓமர் கய்யாம் அல்லது ஜலாலுதீன் ரூமி.

ஜெ

பி கு

ஓஷோ சொன்னதை நான் இவ்வாறு விரிவாக்கம்செய்வேன். தத்துவம் அதன் கீழ்த்தளத்தில் மதத்துடனும் உயர்தளத்தில் ஆன்மீகத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது. மதத்தின் குறியீடுகளை விளக்க தத்துவம் பயன்படுகிறது. ஆன்மீகத்தின் எல்லைமீறல்களை தர்க்கப்படுத்த முயல்கிறது. ஆன்மீகத்தை நெருங்குகையில் தத்துவம் உருகி கவிதையை நெருங்குகிறது.

முந்தைய கட்டுரைதிருவனந்தபுரத்தில் ஓர் உரை
அடுத்த கட்டுரைகடிதங்கள்