https://www.youtube.com/watch?
ஒரு நண்பர் அனுப்பிய சுட்டி இது. பத்மராஜனுடன் ஓர் அந்தரங்கமான உரையாடல் என இந்த சிறியபடத்தைச் சொல்லலாம்.
நான் கவனித்த சில விஷயங்கள். ஒன்று, இந்தப்பையனுக்கு எந்தவகையிலும் மலையாளத்தன்மை இல்லை. அவன்பேசுவதே கேரளத்துக்கு அப்பால் எங்கோ இருந்துகொண்டு எனத் தோன்றுகிறது. ஆங்கிலத்தில் பத்மராஜனிடம் பேசுவதை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது. அவரை எனக்குத்தெரியும்- ஒரு முறை சந்தித்திருக்கிறேன். லோஹியுடன். இந்த ஆங்கிலப்பேச்சைக்கேட்டால் திகைத்திருப்பார்
பத்மராஜன் முழுக்கமுழுக்க கேரளத்தின் வட்டாரப் பண்பாட்டுக்குள் இருந்தவர். ஒற்றப்பாலத்தைச் சுற்றியிருக்கும் வள்ளுவநாடு அவரது களம். அவரது கதாபாத்திரங்கள் அறிவுஜீவிகள் அல்ல. அவர்கள் பேசுவதும் இயல்பான உணர்ச்சிவெளிப்பாடுதானே ஒழிய கருத்துக்கள் அல்ல. அவ்வகையில் செவ்வியல்தன்மை மேலோங்கிய எம்.டி.வாசுதேவன்நாயரின் உலகுக்கு வலுவான மாற்றாக எழுந்தவை பத்மராஜனின் படங்கள்.
ஒற்றப்பாலத்தின் கதைசொல்லியாகவே இலக்கியத்திற்குள் வந்தார். நட்சத்திரங்களேகாவல், ரதிநிர்வேதம், கள்ளன்பவித்ரன், இதா இவிடவரே ஆகியவை அவரது புனைவுலகின் நுணுக்கமான அழகுடன் இன்றும் உள்ளன. நடையையும் கதாபாத்திர உருவாக்கத்தையும் வைத்து அவரை வன்முறை கலந்த கேரள ஜானகிராமன் என்று சொல்லலாம்.
அவர் திரைக்கதை எழுதிய ஆரம்பகாலப் படங்கள் அந்த மண்ணின் காமத்தையும் வன்முறையையும் நேரடியாகச் சித்தரிப்பவை. உதாரணம், இதா இவிட வரே, சத்ரத்தில் ஒரு ராத்ரி, வாடகைக்கு ஒரு ஹ்ருதயம், ரதிநிர்வேதம், தகரா, கரும்பின் பூவினக்கரே. வன்முறையையும் காமத்தையும் நம்பகமாக கலையழகுடன் சொன்னவர் என்பதே பத்மராஜனின் அடையாளமாக இருந்தது. பரதன் – பத்மராஜன் கூட்டு மலையாளத்தில் திரைக்காலகட்டம் ஒன்றைத் தொடங்கிவைத்தது.
பின்னர் அவரே இயக்கிய பெருவழியம்பலம், கள்ளன் பவித்ரன், ஒரிடத்தொரு பயில்வான் முதலிய படங்கள் கூட அந்த மண்ணின் கதைகள்தான். மிகமிக வட்டாரத்தன்மைகொண்டவை. அங்கு மட்டுமே உருவாகும் கதைமாந்தர்கள் அவர்கள் என்று நமக்குத்தோன்றும். பிற்காலத்தில் காமத்தின் உள்ளறைகளுக்குள் சென்று நோக்கும் சில படங்களை எடுத்தார். தூவானத்தும்பிகள், தேசாடனக்கிளி கரையாறில்ல, நமுக்குபார்க்கான் முந்திரித்தோப்புகள். அவற்றிலும் கதைமாந்தரின் ஊர் வள்ளுவநாடுதான்.
நிலமே அற்றவன் போலத்தெரியும் இந்தப்பையனைக் கவர்ந்தது எது? அந்த நிலத்தில் வேரூன்றி எழுந்த புனைவுலகின் மலர்ந்த மலர்களை மட்டுமே இவன் பார்க்கிறான். கலை அப்படியும் சென்றடையக்கூடும் போலும்