நஞ்சின் மேல் அமுது

vishnu_0

 

 

ஜெ,

பிராய்டுக்கும் யுங்கிற்கும் ஜோசப் கேம்பல் விஷ்ணு சிலையை பற்றி சொன்னார் என்று படித்தபோதே சரியில்லை என்று தோன்றியது. கேம்பல் மற்ற இருவருக்கும் மிக ஜூனியர். அவர் எப்படி சொல்லியிருக்க முடியும் என்று தோன்றியது. சரி, ஆதாரம் சரி பார்க்காமல் பேசக்கூடாது என்று விட்டுவிட்டேன். ஆனால் மேற்கொண்டு தேடிப்பார்த்ததில் சில விஷயங்கள் தெரிந்தது.

பிராய்டுக்கு விஷ்ணு சிலையை அனுப்பியது India psychoanalytic society. இந்த சொசைட்டி வங்காளத்தில் கிரிந்தரசேகர் போஸ் என்பவர் தலைமையில் நடந்தது. பிராய்டிய உளவியல் கருத்துக்களுக்கு இந்தியாவிலிருந்து வலுவான எதிர்புகளை கிரிந்தரசேகர் போஸ் முன் வைத்திருக்கிறார். பிராய்டிய கருத்துகள் எப்படி கலாச்சார வேறுபாடுள்ள இடங்களில் பிழையாகின்றது என்பதை எடுத்துரைத்துருக்கிறார். போஸுக்கும் அவரது சில சகாக்களுக்கும் பிராய்டுடன் கடித தொடர்பு இருந்திருக்கிறது. பிராய்டின் 75வது பிறந்தநாளுக்கு இந்த சொசைட்டி அவருக்கு தந்தத்தால் ஆன சிறு வெள்ளை விஷ்ணு சிலை ஒன்றை பரிசாக அனுப்பியிருக்கிறார்கள். அதற்கு நன்றி தெரிவித்து பிராய்டு பதில் எழுதினாலும் அந்த சிலையை பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அது அவரிடம் எந்த பாதிப்பையும் உருவாக்கியதாகவும் தெரியவில்லை. அது அவரது மேசையில் பல்வேறு கலாச்சார சின்னங்களோடு ஒரு அலங்கார பொருளாக அமர்ந்திருந்தது.

யுங்கிற்கு இந்தியாவை பற்றியும், ரமணரை பற்றியும் அவர் இந்தியா வருவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. Paul brunton என்பவரும் வீ. சுப்ரமணியம் ஐயர் என்பவரும் அவரை ஐரோப்பாவில் ஒரு கலந்துரையாடலின் போது சந்தித்து அவருக்கு இந்திய தத்துவங்களை பற்றி விளக்கி இருக்கிறார்கள். Heinrich zimmer என்னும் இந்தியவியலாலருடன் யுங்கிற்கு கடித தொடர்பு இருந்திருக்கிறது. சிம்மர் இந்தியா வந்ததில்லை என்ற போதிலும் யுங்கை இந்தியாவுக்கு செல்ல தூண்டியதாகவும். ரமணரை பார்க்க வலியுருத்தியதாகவும் யுங்கின் கடிதங்களிலிருந்து தெரியவருகிறது. ஜோசப் கேம்பல் சிம்மரின் மாணவரே.

1938ல் யுங் பிரிட்டிஷ் அரசின் அழைப்பின் பேரில் கல்கத்தா பல்கலைகழகத்தில் உரையாற்ற வருகிறார். அவரின் இந்திய வருகையில் அவரின் உடல் நிலை கடுமையாக பாதிக்கபடுகிறது. அவர் திருவிதாங்கூர் பல்கலைகழகத்திலும் பேச அழைக்கப்பட்டார் என்று சொல்லப்படுகிறது. யுங் திருவனந்தபுரத்திலிருக்கும் போது Gualthernus H. Mees எனும் டச்சு சமூகவியலாளரை சந்திக்கிறார். இவர் ரமணரின் சீடர்.

திருவனந்தபுரத்தில் மீஸின் அறிமுகத்தின் பேரில் ராமன் பிள்ளை என்பவரை சந்திக்கிறார். அவர் ராமகிருஷ்ணரின் சீடர். ஆனால் யுங் தவறாக ரமணரின் சீடர் என்று நினைத்துவிடுகிறார். மீஸ் அதை கடிதத்தில் சுட்டிகாட்டிய போது மீஸுக்கு இவ்வாறு பதிலளிக்கிறார்.

I’m sorry that I was under the impression when we met in Trivandrum that you introduced your friend Raman Pillai as a remote pupil of Shri Ramana. This however doesn’t matter very much, since the basic coincidence of most of the Indian teaching is so overwhelmingly great that it means little whether the author is called Ramakrishna or Vivekananda or Shri Auroobindo, etc.

இதுவே யுங்கின் இந்திய குருக்களின் மீதான எண்ணமாக இருந்திருக்கிறது. ஒரு குருவை சந்தித்தால் வேறு குருவை பார்க்க தேவையில்லை என்று அவர் கருதியிருக்கிறார். ரமணரை சந்திக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தும் அவர் சந்திக்க செல்லவில்லை. அதற்கு அவர் கொடுக்கும் காரணம்,

I had a chance, when I was in Madras, to see the Maharishi, but by that time I was so imbued with the overwhelming Indian atmosphere of irrelevant wisdom and with the obvious Maya of this world that I didn’t care anymore if there had been twelve Maharishis on top of each other.

ரமணரை சந்திக்காமல் திரும்பியதற்கு சிம்மர் யுங்கிடம் அவரின் ஏமாற்றத்தை தெரிவித்திருக்கிறார். யுங்கிற்கு இந்திய தத்துவங்களில் ஆன்மீகத்தில் விருப்பிருந்தாலும் அதை விமர்சனமும் செய்திருக்கிறார். அதை போன்றே சிம்மரும், பால் பிரான்டனும் விமர்சித்திருக்கிறார்கள். சிம்மர் ரமணரின் எழுத்துக்களை ஜெர்மனில் மொழிபெயர்த்திருக்கிறார். அதற்கு யுங் முகவுறை எழுதியிருக்கிறார்.

யுங்கின் இந்திய பயணம் அவருக்கு உவப்புடையதாக இருந்ததாக தெரியவில்லை. இந்தியர்கள் மீதும் இந்திய குருக்களின் மீதும் அவர் விருப்பம் மற்றும் விமர்சனம் இரண்டையும் கலந்தே முன் வைத்திருக்கிறார். இருந்தும் இந்தியா அவரை கவர்ந்தே இருக்கிறது.

India is marvelous, unique, and I wish I could stand once more on Cape Comorin and know once more that this world is an incurable illusion.

ஆத்மானந்தா பற்றி யுங் எழுதியவைகள் குறித்து எனது தேடலில் எதுவும் கிடைக்கவில்லை. ஜோசப் கேம்பல் தான் ஆத்மானந்தா குறித்து எழுதியிருக்கிறார். (மேற்கண்ட ஆங்கில குறிப்புகள் யுங் மீஸுக்கு எழுதிய கடிதத்தில் இருந்து எடுத்தது.)

 

ஹரீஷ்

 

*

ஜெயமோகன் அவர்களுக்கு

பல முறை என் தந்தையார் கடவுள் எப்படி சந்நிதானத்தில் இருந்து பேசினார் பார்த்தாயா என்று கேட்பதுண்டு. எனக்கு பல சமயம் நம் கனவு போல கடவுளும் என்னுடன் நான் பேசும் வேறு ஒரு தளத்தில் கோணத்தில் ஒரு சம்பாஷணைதான் என்று தோன்றுவதுன்டு.
இந்த பதிவை [ஆதியும் அனந்தமும்]அவருக்கும் பகிர்ந்து இருக்கின்றேன்.
எனக்கு உன்மையான ஒரு கவலை. உங்களிடம் ஒளிக்க ஒன்றும் இல்லைதான் ஆணால் இதை போன்ற பதிவுகள் சங்கரர் போல ‘கடைசியில் ஜெயமோகனும் பக்திக்கு தானே வந்தார்’ என்ற இடத்துக்கு வந்து, இந்துத்துவவாதி போன்ற பட்டங்கள் கொடுப்பவரை விட மோசமாக,  சூட சாம்பிராணியுடன் பக்த கோடிகள் கொண்டு புதைக்க படும் சாத்தியமும் கூடிவிடாதா?இது பத்மஸ்ரீயை விட பெரிய கஷ்டம் இல்லையா?
உங்கள் நண்பர்கள் மற்றும் மகன் ஆகியோருடன் கொஞ்சமே கொஞ்சம் பழகியதை வைத்து உங்கள் மகாபாரத மறு ஆக்க தொடக்கத்துக்குப் பின் கொஞ்சம் பக்த கோடிகள் பற்றிய கவலை அவர்களுக்கும் இருக்கின்றது என்றே தோன்றுகிறது.
நானும் அதை எண்ணி தான் வெண்முரசு தளம் பற்றி உங்களுக்கு ஒரு அஞ்சல் அனுப்பி இருந்தேன். உங்கள் வாசகர்கள் வெண்முரசு தளத்தில் இருந்து உங்கள் தளத்தை அடைய வேண்டும் என்றே தோன்றுகிறது.
மூன்று தெளிவான முகங்கள் ஆத்மானந்தரிடம் இருந்ததை முன்பு குறிப்பிட்டு உள்ளீர்கள்.
வெண்முரசின் முழுமை வரையில்(லாவது) நீங்கள் பூசலார்ஆக இருந்து கட்டி முடிக்க ஏதேனும் ஒருநாள் திருநின்ற ஊர் உங்கள் பெருமை அறியட்டுமே.
நன்றி
வெ. ராகவ்

 

*

ஜெ,

 

இரவுகளில் இவை ரம்மிய வாசனைகளை கிளப்பும். எங்கோ இருக்கும் வாசனை பற்றி எழும்பும். ஆனந்தனுக்கு விளக்குடன் நிற்கும் அந்த கட்டழகு ஆண் உட்பட அந்த வெளிச்சத்தில் இருந்த மர்ம ஈர்ப்பு தான் மல்லாந்து பார்த்து கொண்டு இருக்கும் அனந்தன்.
அப்படியே  சென்றால், தன் அரசின் எல்லாவற்றையும் அனந்தனுக்கு கொடுத்து விட்டு இனி வரும் எல்லோரும் அவன் அடிமைகள் என்பதாக சொன்ன 17வது அணிழம் திருநாள் ராஜ கதை, இந்திர நீலம் என பல வித தங்கம் கிடந்த 1931 வருடத்தின் நிலவறை திறப்பு, “இறுதி நடை” எனப்படும் கதவு, இரண்டாம் சுரங்கத்தை பாதுகாக்கும் உக்ர நரசிம்ஹன், காஞ்சிரோட்டு யக்ஷி கதை……. பல மர்மம்  தாண்டி ஈர்த்தபடி அனந்தன் சுகமுடன் சயனம். உற்று பார்க்க விரிந்தபடி தெரியும் பிரம்மாண்டன் பத்மநாபன் …
லிங்கராஜ்
*
அன்புள்ள ஜெஅகம்பிரம்மாஸ்மி என்றெல்லாம் நினைத்துக்கொண்டு நின்றாலும் நீங்கள் நின்றிருந்தது எல்லையில்லாத அதன்முன்னால்தான். அத்வைதிகளின் சிக்கலே இதுதான். அவர்களால் அழகை ஒதுக்கமுடியாது. அழகு தத்துவத்திலே இல்லை. கலையில் இருக்கிறது. கலை உணர்ச்சிகளில் இருக்கிறது. உணர்ச்சிகள் பக்தியுடன் சேர்ந்தவை. பேசாமல் விசிஷ்டாத்வைதம் பக்கமாக வந்துவிடுங்கள். சரியாகிவிடும்சுவாமி

 

*

அன்புள்ள ஜெமோ

உங்கள் அனந்த ஆதி அனுபவத்தை வாசித்தேன். அதிலுள்ள நக்கல்களுக்கு அடியில் உள்ள அழகின் பேருணர்வை புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு சிலை என்பது சாமானியமானது அல்ல. அதை உருவாக்கியவனின் கனவு. அது அப்படி பல்லாயிரம்பேரின் கனவு. ஒரே கனவு பல ஆயிரம் வருடம் ஒரு மண்ணில் பலகோடி மக்களை கவர்ந்திருக்கிறது என்றால் அதை எளிதில் நாம் கடக்கமுடியாது. நஞ்சணைமேல் துயிலும் அமுதம் உங்களுக்கும் காட்சி அளிக்கட்டும்
பார்த்தசாரதி

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 47
அடுத்த கட்டுரைசென்றகாலங்கள்- கடிதம்-2