இறுதி இரவு

CSK

 

இப்படி ஒரு சடங்கு உண்மையில் உள்ளதா, இல்லை கற்பனையா என்று தெரியவில்லை. கதைக்கு அது முக்கியமில்லை. ஆனால் ஒரு வலுவான சிறுகதைக்குரிய கரு. வலுவான முடிச்சு. சரவணக்கார்த்திகேயனின் இறுதி இரவு

ஆனால் இது இலக்கியமதிப்பு கொண்ட கதை அல்ல. ஏனென்றால்—

  1. வாரப்பத்திரிகைக் கதைகளுக்குரிய நடை

ரம்யா இப்போது தான் புதிதாய் மலர்ந்த பூந்தளிர். பதினேழு என்பது சாகும் வயதா?

இதைப்போன்ற தேய்ந்து இற்றுப்போன ஒரு சொற்றொடர் ஒரு கதையில் இருந்தால்கூட அது சரியத்தொடங்கிவிடும்

2 வாரப்பத்திரிகைக்கதைகளுக்குரிய தொடக்கம்

“கன்னிப் பொணம் விழுந்திருச்சு!”

ஊர் முழுக்க இதே பேச்சாய் இருந்தது. டீக்கடையில், பொதுக் கழிப்பிடத்தில், வீட்டுத் திண்ணையில், முச்சந்திக் கிணற்றடியில், சீட்டுக் கச்சேரியில், எல்லா இடங்களிலும்.

“குப்பனுக்கு சொல்லி விட்டாச்சா?”

விஷயம் கேள்விப்பட்டவர்களின் முதல் கேள்வி இதுவாகவே இருந்தது.

– இப்படி கதையை ஆரம்பிப்பதே ஒரு குமுதவிகடகுங்குமத்தனம். கதையின் முதல்வரி எப்போதுமே கற்பனையைத் தூண்டுவதாக இருக்கவேண்டும்.

ஓர் உதாரணத்துக்காக

உயிருடன் இருக்கும் பெண்களைப் பற்றி எதிர்மறையாகக் கற்பனை செய்யத் தொடங்கினான் குப்பன். அவர்கள் உடல் மோசமாய் வீச்சமடிக்கும் என்றும், உடலின் வெப்பம் அசௌகர்யமானது என்றும் நம்பத் தொடங்கினான். உயிர் பிரியும் போது தான் உடம்பின் அத்தனை அழுக்குகளும் வெளியேறி அவர்கள் புனிதமடைகிறார்கள் என நினைத்துக் கொண்டான்.

என்று இக்கதை தொடங்கப்பட்டிருந்தால் அடுத்தகணமே அது சிறுகதை

  1. சம்பிரதாயமான சுருக்கிச்சொல்லும் முறை

ராமசாமிக்குப் பேத்தியின் மீது ரொம்பப் பிரியம். அவள் ஆசைகளுக்கு ஒருபோதும் அவர் மறுப்புச் சொன்னதில்லை. எதற்கும் அவள் அடம் பிடிக்க நேர்ந்ததில்லை.

போன்ற வரிகளெல்லாம் சிறுகதைகளுக்குத் தேவையே இல்லை. அவையனைத்துமே வாசகன் ஊகிக்கக்கூடியவை. ராமசாமிக்கு பேத்தியின் மேல் பிரியம் என்பதை ஒரு எளிய குறிப்புணர்த்தலால் காட்டியிருந்தாபோதும். அதுகூட கதைக்குத்தேவை என்றால் மட்டும். சுந்தரத்தைப்பற்றிச் சொல்வது கதைக்கு முக்கியம். அதனாலேயே அது நேரடியாகச் சொல்லப்பட்டிருக்கக்கூடது

4 அலைபாய்தல்

கதை எங்கெங்கோ சென்று உச்சம் நோக்கி வருகிறது. குப்பனின் பிரச்சினை, அவன் அப்பா சொன்னது, சுந்தரம் என பலதிசைகள் ஆசிரியரால் மாற்றிமாற்றிச் சொல்லப்படுகின்றன

சிறுகதை கூர்மையானதாக அமையவேண்டுமென்பதற்காகவே கதையின் உச்சத்துக்கு மிக அருகில் கதையைத் தொடங்கும் வழக்கம் உள்ளது

கதையின் தகவல்கள் அனைத்தும் அதன் உடல்பகுதியில் சொல்லப்பட்டாகவேண்டும். அதற்காகவே நினைவுகள், உதிரிப்பேச்சுக்கள் என பல உத்திகள் உள்ளன. ஆசிரியரே முன்கதையையும் மனநிலையையும் சுருக்கிச்சொல்லவேண்டியதில்லை.

நல்ல கதை. ஆனால் சிறுகதை என்னும் கலைவடிவை கற்றுக்கொள்ளாமையால் சரிந்துவிட்டதெனத் தோன்றுகிறது. சிறுகதை வாசகனின் கற்பனையுடன் உரையாடி அவனுக்குத்தேவையானவற்றை மட்டுமே சொல்லி மிச்சத்தை ஊகிக்கவிட்டு முடியவேண்டும். இது ஆசிரியர்கூற்றாக அனைத்தையும் சொல்லிவிடுகிறது, மெல்லிய இறுதிமுடிச்சைத்தவிர.

தமிழ்ச்சிறுகதை மரபின் முக்கியமான படைப்புக்களை அவற்றின் கூறுமுறை மற்றும் உத்திகளை மட்டும் கருத்தில்கொண்டு சரவணக்கார்த்திகேயன் வாசித்துப்பார்க்கலாம். வலுவான சிறுகதைகளை அவர் எழுதமுடியும்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 45
அடுத்த கட்டுரைஆதியும் அனந்தமும்